ராஜதரிசனம்

வேதமந்திரங்களாலும், வாசனை திரவியங்களாலும், யுகம் யுகமாய் மலர்ந்த மலர்களாலும், முற்றிலும் தீர்க்கமான ஆசாரங்களாலும் மெருகேற்றப்பட்ட பேரதிர்வு கொண்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு கோவில் கருவறை போலிருந்தது அந்த இடத்தின் அதிர்வு.

பன்னெடுங்காலத்திற்கு முன்பு முதன்முதலில் நுகர்ந்த காட்டு நிஷாகந்தியின் மணத்தை இன்றளவும் என்னால் மறு நினைவாக மீட்டெடுத்து அது இன்னவென்று சொல்லிவிடமுடியாத தத்தளிப்பு இருக்கிறது. அதே போன்ற ஒரு நறுமணம் அந்த இடத்தில் முற்றிலும் பல்கிப்பெருகியிருக்கிறது.

ஏற்கனவே தயக்கத்தாலும், பேரார்வத்தாலும் நடுங்கியிருந்த மனது அந்த மோனநிலைக்கு தன்னை சமர்ப்பித்திருந்தது. கதவைத்திறந்தவுடனேயே எந்த நந்தியின் இடையீடின்றி பெருமான் தரிசனம் சித்தித்தது.

இப்போதுதானா இவரை முதன்முதலில் பார்க்கிறேன். இல்லை. இல்லவே இல்லை. எத்தனை வருடங்கள், எத்தனை யுகங்கள் இவரை எனக்குத்தெரியும். எத்தனை மழைக்காலங்கள் இவரின் அணுக்கத்தில் ஈரமாக்கியிருக்கின்றன. எத்தனை வசந்தகள் இவரின் மலர்க்கரங்கள் பூ வாரிச்சொரிந்திருக்கின்றன. எத்தனை இலையுதிர்காலக்காற்றில் இவரின் சவாரி இதம் தந்திருக்கிறது. எத்தனை பனிக்காலக்குளிருக்கு இவரின் இசை வெம்மை கூட்டியிருக்கிறது. எத்தனை சோக நாள்களைத்தேற்றி மேலிழுத்துக்கொண்டு வந்திருக்கிறது, எத்தனை சந்தோஷ தினங்களுக்கு கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது.

அந்த ஒரு நொடிக்குள் அத்தனையும் நினைவுக்கு வந்தது. இருகரங்கள் கூப்பி யுகம் யுகமாய் பல நினைவுகளால் கூட்டிச்சேகரித்திருந்த இந்த கணத்தின் நிகழ்வின் பரிபூரணத்தை உணர்ந்து கைகூப்பினேன். கூப்பின கரங்களை கீழே இறக்கவிடாமல் செய்தது அவரின் அண்மை.

இந்திரன் ஒரு மின்னல்வடிவில் பூமிக்கு இறங்கிவந்து காட்சியளித்ததுபோல் அமர்ந்திருந்தார். வெள்ளை ஜிப்பா, லேசாக பச்சைக்கரை இறங்கிய வெண்வேட்டி, வெண்ணிறக்காலுறை என ஒரு பெருவெண்மலர் புன்னகையெனும் மகரந்தம் தூவி வணங்குகிறது.

ஆசிரியர் பாரா, லாசரா வை சந்தித்த கணத்தைப்பத்தி என்னிடம் ஒருமுறை சொன்னார். அவரின் கண்களின் தீக்ஷண்யத்தை நேரில் காணமுடியாது தவித்தேன் என்று. அதே கணம்தானா இது எனக்கு. ஐயனின் கண்கள் தீப்பிழம்புகள் அல்ல, ஊடுருவிச்செல்லும் ஒரு பேரொளிர்ச்சுடர்கள், அல்ல பல்லாயிரம் தீபச்சுடர்த்தொடர்களின் அணிவகுப்பை நொடிக்கொன்றாகச்செலுத்தும் அம்புகள். அத்தனை தீக்ஷண்யம், அத்தனை கருணை, அத்தனை ஞானம், அத்தனை பேரருள் தோய்ந்த கண்கள்.

`உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம்` என அமைந்த சிவந்த நெற்றிப்பொட்டு, சிறிய ருத்ராக்ஷங்கள் கோர்த்த மணிமாலை இவையெல்லாவற்றையும் தாண்டிய அணி நகையாகிய புன்னகை என தீர்க்கமாக வரவேற்றது அப்பேரொளி.

ரிபு கீதையின் வரிகள் அவர் குரலிலேயே ஒலிக்க, அவரருகில் அமர்ந்திருக்கும் பேறு வாய்த்தது. ஞானத்தின் உச்ச ஸ்தாயியை உணரும் கணம் அதுவென மனது சொல்லிக்கொண்டிருந்தது. லெளகீகத்தின் அத்தனை அக, புறச் சாத்தியங்களையும் குப்புறக்கவிழ்த்து அதன் மேலமர்ந்து சிரிக்கும் ஒரு ரிஷியின் கனிந்த முகம் எப்படி இருக்கும் என்பதை உணரமுடிந்தது. முற்றும் கனிந்த ஒரு ஞானியின் தரிசனத்தில் அமிழ்ந்து போயிருந்தோம்.

ஒரு கலைஞனுக்கே உரிய யோசனையுடன் அலைபாயும் பார்வை இருந்தது. ஆனால் அவற்றில் எதிலும் சற்றும் சிக்கல்களோ, தடங்கல்களோ இல்லாத தீர்க்கம் இருந்தது. மொத்த அமர்வின்போதும் அவரின் இரு கரங்களையும் கோர்த்து மடிமீது இருத்தியிருந்தார். ஒரு ஞானியின் கரங்களின் வாஞ்சையும், அனுபவமும் ஒருசேரக்கலந்திருந்தன.

அவரின் உரையாடல்கள் அனைத்திலும் அந்த extreme level of supremacy வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. கேள்விகளுக்கு பதில் வந்தது. ஆனால் அது போதவில்லை. அல்லது அதன் பொருள் தெரியவில்லை. சில கேள்விகளுக்கு மெளனமே பதிலாயிருந்தது. அது உள்ளே இன்னும் பயணம் செய்துவிட்டு வா என்று சொல்வதுபோலவே இருந்தது.

மெளனம், மந்திரம், பேச்சு, தியானம் எல்லாவற்றிலும் தீர்க்கமாய் இடையூடாடிக்கொண்டிருந்தது காலமெனும் பெருவெளியின் மீதமர்ந்து கொண்டிருந்த ஒரு ஒளிக்கற்றையின் பொன்னூஞ்சல். அது வருடங்களை முன்னும் பின்னும் அகழ்ந்து இவரால் நான் பெற்ற பேறுகளை கால நிர்ணயமின்றி அகழ்ந்து செலுத்திக்கொண்டேயிருந்தன.

அந்த பெரும்பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லான இன்றைய நிறைவை பெரும் பிரயத்தனப்பட்டு வார்த்தைகளாக்கி, நிறைந்த கண்ணீருடன் அவரிடம் சமர்ப்பித்தபோது சிறிய தலையசைப்புடன் அதைக்கேட்டுக்கொண்டார். `ஏன் மலைலேர்ந்து இறங்கிவந்தீங்க?’ என்பது மட்டுமே அவரிடமிருந்து எனக்கு வந்த ஒரே கேள்வி. என் லெளகீகக்காரணத்தைச்சொன்னேன். ஆனால் அந்தக்கேள்வி இனி என்றும் நினைவிலிருக்கும். என்றும் உறங்கவிடாத கேள்வியாய்.

பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு, தேர்ந்த பூக்களால் அர்ச்சிக்கப்பட்ட கல்வெட்டென நேற்றைய ஒரு மணி என்றென்றும் வாழ்ந்திருக்கும் எப்போதும்.

ஆனந்தம் என்னும் ஒற்றைச்சொல்லை எப்போதும் என்னுள் செலுத்தி, அதன் வழி என் செயலையும், உடலையும், மனதையும் மெருகேற்ற பயிற்சி செய்யும் குரு, யோக ஆசிரியர் Raguram Annur அவர்கள் அருகமர்ந்து இன்னொரு ஞான ஆசானை அனுபவிக்கும் தருணம் வாய்த்தது, காலம் எனக்களித்த இன்னொரு பரிசு. இந்த வாய்ப்புக்கு அவரையும் வணங்குகிறேன்.

நீலகண்டம் – சிறுகதை

(அக்டோபர் 1 தேதியிட்ட குங்குமம் இதழில் வெளியானது)

குன்னூருக்குச் செல்லும் பிரதானச்சாலையிலிருந்து விலகி, ஒரு ஒற்றையடிப்பாதையில் கார் சற்றே குலுங்கித் திரும்பியபோது தூக்கத்திலிருந்து விழித்தேன். மழைச்சாரல் நனைத்த ஒரு குறுகிய புற்பாதை அது. இருபுறமும் நெடிய மரங்கள் வளர்ந்து மழைக் குளுமையை இரட்டிப்பாக்கிக்கொண்டிருந்தன. ஸ்வெட்டர் போட்டிருந்தும் குளிர் தாக்கியது. சற்று நகர்ந்து டிரைவ் செய்துகொண்டிருந்த அவன் தோளில் சாய்ந்துகொண்டேன். ”மழைப்பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே” என்று ஸ்பீக்கரில் வழிந்துகொண்டிருந்த பாடல், இயல்பாகவே அவன் நெருக்கத்தை வேண்டியது. சற்றுத்தள்ளி அமர்ந்து,  எனக்கு மிகவும் பிடித்த அவன் கழுத்தோரத்தில் அழுந்த முத்தம் வைத்தேன்.

நீல் என்ற கார்பரேட் பெயரால் வழங்கப்படும் நீலகண்டனை இவ்வளவு ஆழமாகக் காதலிப்பேன் என்று ஒருவருடம் முன்பு என்னிடம் யாரேனும் சொல்லியிருந்தால் அவர்களை கொன்றேயிருப்பேன்.

அவனை பார்த்திராத நாள்களுக்கு முன்னால், ”ப்ளூஃபாக்ஸ்” என்ற சக பணியாளர்களின் வழங்குபெயரால்தான் அவனை அறிந்திருந்தேன். அதி தீவிர முசுடு. யார் அவன் ப்ராஜெக்டுக்குபோனாலும் மன அழுத்தமின்றி திரும்பியதில்லை, ஏதேனும் கோடிங் பிரச்னையென்றால் தாட்சண்யமேயின்றி ப்ராஜக்டை விட்டு வெளியேற்றும் குரூரன், கார்பரேட்டின் நகாசுகள் தெரியாத கோபக்காரன் என்றெல்லாம்தான் அவனைப்பற்றிய செய்திகள் எங்கெங்கும் விரவியிருந்தன. ஒருவகையில் எனக்கும் அவன் குணங்களில் பாதி உண்டென்பதால், இயல்பாகவே அவனைப்பார்க்கும் ஆர்வமும் இருந்தது. ஒரே கார்பரேட்தான் என்றாலும், எங்களின் இரண்டு அலுவகங்களுக்கும் சில கிலோமீட்டர்தான் தூரம் என்றாலும், அவனை சந்திக்கும் வாய்ப்பு வாய்த்ததில்லை.

ஒரு பெரிய பன்னாட்டு ஃபைனான்ஸ் ப்ராஜக்ட்டின் மாட்யூல்களை சேர்ந்து மேலாண்மை செய்யும் பொறுப்பில் அவனுடன் சேர்த்து நியமிக்கப்பட்டபோதுதான், அவனின் அறிமுகமும், அணுக்கமும் கிடைத்தது. அதுவரையில் கேள்விப்பட்டிருந்ததை வைத்து அவனை கருப்பாய், குண்டாய், சொட்டைத்தலையாய் ஒரு கிழம் போன்ற தோற்றம்தான் மனதில் இருந்தது. அவனைப்பார்த்த கணம், அவன் தோற்றத்தினாலேயே இந்த மனத்தடை உடைந்தது.

“ஹாய், ஐம் நீல்”

என்று கைகுலுக்கியபோது, அந்தக்கையின் மென்மை என்னைத்தாக்கியது .தினமும் ஜிம்முக்குப்போகிறேன் என்று பார்த்தவுடனேயே சொல்லிவிடும் உடல்வாகு, ஈரானியச்சிவப்பு, இன் செய்யாது அலட்சியமாக விடப்பட்ட சட்டை, நீள் நாசி, சிறிய உதடுகள், கூர்க்கண்கள்,  எல்லாவற்றிற்கும் மேலாக அந்தக்கழுத்து, எல்லோருக்கும் இருக்கும் சராசரிக்கழுத்தை விட சற்றே உயரம் கூடிய, முறையாக மழிக்கப்பட்ட, ஒரு  மென் – வெண்வாழைத்தண்டு போன்ற நீள்கழுத்து. 

ஒரு சண்டைக்கோழியோடு சேர்ந்து முழு நேரமும் சவடாலாகத்தெரியலாம் என்றிருந்த அவனுக்கு அவன் தோற்றம் தந்து ஈர்ப்புதான் முதல் சுமையாக இருந்தது. போலவே இன்னொரு சக முசுடு என்ற வகையிலோ என்னவோ அவனுடன் எனக்கு எந்தப்பிரச்னையுமே எழவில்லை.

இயல்பாகவே எரிச்சலுடன் திரியும் எனக்கு அவனின் அர்த்தமுள்ள கோபங்களும்,  மிகத் தேர்ந்த வார்த்தைகளில் தவறுகளை கண்டிக்கும் பாணியும், ஏதேனும் பொறுக்கவே முடியாத குறையென்றால் மட்டுமே கீபோர்ட்டை விட்டெறிவதும், காலால் சிபியூவை எட்டி உதைத்தலுமாக கார்ப்பரேட்டின் எந்த வித டெட்டால் தடவலுமற்ற எதேச்சாதிகாரத்தை பெருமளவு ரசித்தேன். அதுவுமில்லாமல் குரூரம் மிகும்போதெல்லாம் அதனைத்தொட்டுத்தழுவிக்கொண்டு வெளிவரும் நகைச்சுவை உணர்வு ஒன்று இருக்கிறது. அதுதான் என்னை அவன் பக்கம் ஈர்த்த பெருங்காரணி. அங்கேதான் விழுந்தேனா தெரியவில்லை. அதிசீக்கிரமே அவன் மேல் காதலில் விழுந்தேன்.

நாங்கள் எடுத்துக்கொண்டிருந்த ப்ராஜக்ட் பெரிய வெற்றி பெற்றது. அமெரிக்க விற்பனையாளன், தன் மொத்த வணிகத்தையும் எங்கள் நிறுவனம் சார்ந்து கவனிக்கச்சொல்லிப்பணித்தான். பெரும்பணம். கார்பரேட் எங்களை தலை மேல் தூக்கிவைத்தது. அந்த வெற்றியைக்கொண்டாட ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி வைத்தபோது அவனை மட்டும் காணவில்லை.

எனக்கு அவனோடு கொண்டாட வேண்டும் என்பதுதான் பேரவாவாக இருந்தது. பொதுவாக அவனுக்கு யார் அழைத்தாலும் ஃபோனை எடுக்க மாட்டான் என்பதே வழக்கம். எங்கே என்று ஒரு மெசேஜ் அனுப்பினேன். நெடு நேரம் கழித்து ”தனித்த கொண்டாட்டத்தில் இருக்கிறேன்” என்று ரிப்ளை வந்திருந்தது. நான் வரலாமா? என்ற கேள்விக்கு அதன்பின்பு சற்றேறக்குறைய இரண்டு நிமிடங்களுக்குப்பிறகு பதிலின்றி ஒரு லொகேஷன் மட்டும் வந்திருந்தது.

எல்லாவற்றையும் அப்படியே நிராகரித்துக்கிளம்பினேன். கிழக்குக்கடற்கரைச்சாலையின் ஒரு முனையில், கூட்டமே இல்லாது இருந்தது அந்த க்ளப். ரூஃப் டாப்பின் ஒரு மூலையில் கடல் பார்த்து அமர்ந்திருந்தான்.

”உங்க தனிக்கொண்டாட்டத்துல கரடி போல் நுழைஞ்சுட்டேனா” என்றேன்

“திருத்தம், நுழைய அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்றான்.

நீ இப்படியெல்லாம் பேசி நான் கேட்டதே இல்லையேப்பா, என்று மனதுக்குள் சினிமா வசனம் ஓடியது. அன்று இரவில் வெகு நேரம் அவனுடன் பேசினேன். உள்ளே சென்றிருந்த ஆல்கஹால் பேச வைத்ததா தெரியாது. அப்போதும் அந்த சீரியசான முகத்துடந்தான் கேட்டுக்கொண்டிருந்தான், எந்த வித்தியாசமும் தெரியாத, எந்தத்தொந்தரவும் செய்யாத அதே “நான் நீ பேசுவதைக் கேட்கிறேன்” முகம். ஒரு கட்டத்தில் அவன் சிறிய உதடுகள் செய்த மெளனப்புரட்சித்தாளாது நெருங்கி அதனை முத்தமிட்டேன். அவன் அதை எதிர்பார்த்திருந்ததாகவே தோன்றியது. அந்த இரவின் முடிவில் நிகழ்ந்த சங்கமம் எங்களின் நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. உலகிற்கு எங்கள் இணைவை அறிவிக்கத்தயாரானேன்.

பால்யத்திலிருந்தே தோழியும் ஹெச் ஆர் மேனேஜருமான சிநேகிதியிடம்தான் அதை முதலில் சொன்னேன். அவள் அதிர்ந்தாள். திட்டினாள். இதெல்லாம் ஒருவாரத்துல சரியாகிடும் என்று ஆறுதல்படுத்தினாள். ஆனால் அது சரியாகவில்லை என்றவுடன் கவலைப்பட்டாள். நான் உறுதியாய் இருப்பதைப்பார்த்தவுடன், “இது ஒரு கான்ஃபிடன்ஷியல் விஷயம்.  பெரும்பாலும் எங்கயும் சொல்லிடக்கூடாதுங்கறதுதான் கார்பரேட் விதி. ஆனா உனக்கும் தெரியாமப்போகக்கூடாதுங்கறதுக்காக சொல்றேன்” என்று ஆரம்பித்தாள்.

கூர்ந்து கவனித்தேன்.

”நீல் வந்த புதுசுல அவன் மேல தொடர்ந்து புகார்கள் வந்துட்டு இருந்ததால ஒரு பேக்ரவுண்ட் வெரிஃபிகேஷன் பண்ணோம். அதுல ஒரு திடுக்கிடும் விஷயம் தெரியவந்தது. இவன், சென்னை வர்றதுக்கு 4 வருஷத்துக்கு முன்னாடி நீலகிரி சேலாஸ் போலீஸ் ஸ்டேஷன்ல, அவன் மனைவி காணாமப்போயிட்டாங்கன்னு ஒரு புகார் கொடுத்திருந்தான். அந்த கேஸ் விசாரணை நடந்தப்ப,  ஒரு இன்ஸ்பெக்டர் இவன் மேலயும் சந்தேகம் இருக்குன்னு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்காரு. அது நடந்த மூணு மாசத்துல அந்த இன்ஸ்பெக்டரும் காணாமப்போயிட்டாரு. அந்த கேஸ் காணமற்போனவர்கள் லிஸ்ட்ல ரெண்டு பேரை சேர்த்ததோட முடிஞ்சுபோச்சு. ஆனா அந்த ஊர்ல அரசல் புரசலா இவனே இவன் மனைவியையும், அது கண்டுபுடிச்ச கோபத்துல இன்ஸ்பெக்டரையும் கொன்னிருப்பான்னு நிறைய பேர் பேசிகிட்டதாவும் சொல்றாங்க.” என்றாள் கவலையும், திகிலும் அப்பயிருந்த முகத்தோடு.

அத்தனை நேரம் உறைந்து போய்க்கேட்டுக்கொண்டிருந்த பின்னர், “இண்டெரெஸ்டிங்” என்றேன்.

”எத்தனை சுவாரசியமான ப்ரொஃபைல். முசுடு, கோபக்காரன், இப்போ கொலைகாரன். வாழ்க்கையில் சுவாரசியம் வேண்டாமோடி” என்றேன் சிரிப்போடு.

தலையில் அடித்துக்கொண்டு “உன்ன மாதிரி முசுட்டுக்கிறுக்குக்கு, கொலைகாரப்பயதான் கிடப்பான், ஒழி” என்றாள்.

”ஊர் சொல்றதையெல்லாம் நம்பணும்னா நீ ஒரு ஓடுகாலி, நான் புருஷனைக்கொன்னுட்டு அவன் சொத்தை எடுத்துக்கிட்ட திருடி. இது ரெண்டும் சரியா. நம்ம நியாயங்கள் நமக்குத்தானே தெரியும்” என்றேன்.

முறைத்தாள், பின்னர்
யோசித்தவாறே திரும்பிவந்து, ”அவனோட எங்க போனாலும் எங்கிட்ட ஒருவார்த்தை சொல்லிட்டு போ” என்றுவிட்டுப்போனாள்.

ஆனால் அப்படியொன்றும் நீல் என்னை பயமுறுத்தவில்லை. அவன் வாழ்க்கைக்குள் நான் போன பிறகு மிகுந்த கனிவுடந்தான் இருந்தான். என்ன எதுவுமே பேசமாட்டான். மற்றவர்களுக்கு இரண்டு வார்த்தை என்றால், எனக்கு 10 வார்த்தை. அவ்வளவே. உறவு கனிந்து அவன் அபார்ட்மெண்ட்டுக்கு போக வரத்தொடங்கி, உடல்கள் திறம்பட பேசிக்கொள்ளத்தொடங்கிய காலத்திற்குப் பிறகு கூட அதேதான். புன்னகை, பாவனை, கூடிப்போனால் நான்கைந்து வாக்கியங்கள், இவ்வளவுதான் உரையாடலின் மொத்த வடிவமே. மற்றபடி எனது வாரயிறுதி இரவுகள் அவனால் வண்ணமயமாக்கப்பட்டன. அவனின் தனித்த உலகத்தில், அவனைத் தொந்தரவு செய்யாது நான் வந்துபோவதை அவன் ரசித்தான் என்பதை உணர்ந்துகொண்டேன். எப்படி அவன் என்னைப்பற்றிய எந்த கடந்தகால விபரங்களும் கேட்கவில்லையோ, நானும் அந்த எல்லையிலேயே நின்றுகொண்டு அவன் பிரியங்களில் கால் நனைந்துக்கொண்டிருந்தேன்.

அவனாகவே போனவாரம் மெசேஜ் செய்தான்.

“வரும் நீண்ட வாரயிறுதிக்கு ஏதேனும் திட்டமிருக்கிறதா?”

குறுகுறுப்பு ஓங்க, “ஆமாம், மிகப்பிடித்த ஒருவருனுடன், ஹனிமூன் போகலாம் என்று திட்டம்” என்று மறுமொழி அனுப்பினேன்

முதன்முறையாக அவனிடமிருந்து ஒரு சிரிப்பான் பதிலாக வந்திருந்தது கூடவே ”வெள்ளி இரவு 11 மணிக்கு கிளம்பலாம்” என்ற செய்தியும்.

எங்கே போகிறோம் என்று நானும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. நள்ளிரவில் கிளம்பி, இதோ காலையில் நீலகிரி மலையேறிவிட்டோம். இந்தப்பயணம் இனிமையாகவே இருக்கிறது.

”எண்ணம் மீறுது, வண்ணம் மாறுது கண்ணோரம்” என்று ஜானகியோடு இணைந்து பாடினேன். அதே மில்லிமீட்டர் புன்னகை தந்துவிட்டு மீண்டும் டிரைவ் செய்துகொண்டிருந்தான்.

தோளில் சாய்ந்தவாறே,

“இப்பவாவது சொல்லுவியா, என்ன எந்த அதிதீவிர ரகசிய இடத்துக்கு கடத்திட்டுப்போறேன்னு” என்றேன் தோள்களைக்குலுக்கி என்னை உசுப்பினான், நிமிர்ந்து பார்த்தபோது. சுட்டு விரலை இடது பக்கம் நீட்டினான். சட்டென சிலிர்த்தது. ஒரு வினாடி நான் கனவில் இருப்பதாகவே நினைத்தேன்.

ஓங்கி நெடிந்திருந்த பெருமலைகளுக்கு கீழே ஒரு பெரிய நீரோடை, அதனை ஒட்டிய பெரும்புல்வெளி, அதன் ஓரத்தே ஒரு ஈரடுக்கு மரவீடு. ஒட்டி நீண்டு வளர்ந்த பெருமரங்கள். விழிக்குப் பெருஞ்சுவை கொடுத்த காட்சி.

“அது..”

“அதுதான் என் வீடு,ஹூம்ம், நம்ம வீடு” என்றான்

ஆச்சர்யமும், மகிழ்வும், ஒரு சேர எகிற, காரின் மேற்பக்க சிறு கதவைத்திறந்து தலையை வெளியே விட்டு, கைகளை அகல விரித்து “ஊ…” என்று கத்தினேன். அது மலையெங்கும் எதிரொலித்தது. நெருங்க, நெருங்க மனதின் குதூகலம் அதிகரித்தது.

கீழே ஒரு சிறிய சமையலறையும், கழிவறையும் இருந்தன. படியேறி மேலே சென்றால் ஒரு பெரிய படுக்கையறை. சுற்றிலும் கண்ணாடி ஜன்னல்கள். ஜன்னலுக்கு வெளியே இயற்கையின் பச்சையாவர்த்தனம். மிகவும் ரசனை மிகுந்து வீட்டையும் அதன் உட்புறத்தையும் உருவாக்கியிருந்தான். 

“ஒரு எளிய சமையல் பண்ணிட்றேன், சாப்பிடலாம்” என்றான் பாதி வார்த்தைகளாவும், மீதி ஜாடைகளாகவும். கட்டை விரலைத்தூக்கிக்காட்டினேன்.

ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே வந்தபோது, சமையல் மேடையில் இருந்த, அந்தப் பெரிய பெரிய கத்திகள் கொண்ட ஸ்டாண்ட் கவனத்தை ஈர்த்தது.

“வெஜிடேரியன் சமையலுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய அசைவ கத்திகள்” என்றேன், சிரிப்பை சற்று கஷ்டப்பட்டு வரவழைத்துக்கொண்டே.

“யாரேனும் எதிரிகள் வந்தால்…” என்று சொல்லி, ஒரு கத்தியை வெளியில் இழுத்து, அவன் கழுத்தை வலது புறத்திலிருந்து, இடதிற்கு பாவனையாக இழுத்து ”க்ரீச்ச்…” என்று சொல்லி அவன் வழக்கமான மில்லி மீட்டர் புன்னகையைச் சிந்தினான். மேலும் கஷ்டப்பட்டு சிரித்தேன். அடி மனதிற்குள்ளும், அடி வயிற்றிற்குள்ளும் ஏதோ ஒன்று உருண்டது.

“நான் கொஞ்சம் வெளிய போய் சுத்திட்டு வரேனே” என்றேன்.

“ஆல் யுவர்ஸ்” என்றான் எதையோ காய்கறி பேடில் வெட்டிக்கொண்டே.

வெளியில் வந்தவுடன்தான்,  அந்த வீடு சவுண்ட் ப்ரூஃப் கொண்டிருக்கிறது என்பது உரைத்தது. சட்டென இயற்கையின் ஓசையும், ஸ்பரிசமும் வந்து தாக்கியது.

ஈரமும், குளிரும், நீரோடையின் ஒலியும், சுற்றமெங்கும் சூழ்ந்திருந்த பறவை , பூச்சிகளும் ஒலிகளும் என்னவோ செய்தன. அத்தனை செளந்தர்யங்களும் ஒரேசேர விழிகளைத் தாக்கின. எத்தனையோ கோடானு கோடி மகிழ்வுப்பாடல்கள் மனதிலிருந்து ஓடிவந்தன. கால்களுக்கு புது உத்வேகம் கிடைத்து உடனே அதன் அத்தனை சக்திகளையும் வெளிக்கொணரத்துடித்தது. நடந்தேன், ஓடினேன், அந்த ஓடையின் ஒலிச்சேர்க்கையை மனது அத்தனை விரும்பியது. அதன் கரையில் நீண்டு விரிந்தது புற்படுக்கையில் உடல் சாய்த்தேன். மனம் அது நாள் வரை காணாத மகிழ்வுடன் ஆனந்தக்கூத்தாடியது.  விழிகளை மூடி அந்தக்குளிரையும், ஓசைகளையும் உள்ளூர ஊற்றிக்கொண்டேன்.

எவ்வளவு நேரம் அப்படி இருந்தேன் என்று தெரியவில்லை.

“சாப்பிடலாமா”

என்ற குரல் கேட்டுத்தான் விழித்தேன். ஒரு ஆழ்கனவின் ஆக்கிரமிப்பிலிருந்து சட்டென்று தூக்கி வெளியே விட்டாற்போல திடுக்கிட்டு விழித்தேன். நீல் கைகளை நீட்டிக்கொண்டிருந்தான். அவன் கைகளைப்பிடித்து எழுந்தேன்.

மிளகும், சீரகமும் தட்டிப்போட்டு, பூண்டும் கொத்தமல்லியும் மணக்கும் ரசமும், நுனி நாக்கில் உரைத்து தொண்டையில் இறங்கும்போது லேசாக இனித்த பருப்புத்துவையலும் அத்தனை நேர உடற்களைப்புக்கு மிகவும் ஏதுவாக இருந்தது அந்த உணவு. சாப்பிடும்போது அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. நிமிர்ந்து, வலது கை கட்டைவிரலையும், ஆட்காட்டி விரலையும் இணைத்து இதயம் போல மாற்றிக் காட்டினேன். கண் சிமிட்டினான்.

நெருங்கி அணைத்துக்கொண்டேன்.

என் கண்களின் செருகலுக்குப்பொருள் தூக்கமா, காமமா என்பதை அவன் ஆலோசித்தான்.

அப்படியே தூக்கிக்கொண்டு போய் படுக்கையில் தள்ளினான். நெகிழ்ந்த உடைகளினூடே, முகம் புதைத்தான். மென்மையாய், மிக மென்மையாய் அவன் முகம் பரவியது. அவன் சட்டையை அவிழ்த்தேன். எங்கும் சதை சேராது மிக தீர்க்கமாய் வடிவமைந்த உடல். மேலேறிப்பார்வையை என் ஆதர்ச கழுத்தில் வைத்தேன்.

சில விநாடிகள் அதனையே உற்றுப்பார்த்தேன். மெல்லிய வாழைத்தண்டு, வளைவு நெளிவுகள் இல்லாத நீண்ட சங்கு, சற்றே அகலமான முள்ளங்கி, அத்தனை வெண்மையான நீண்ட கழுத்து அது. இடது கையால் அதனை வருடினேன்.

என் பார்வையின் லயம் புரியாது, புருவங்களை உயர்த்தி என்னவென்று பாவனையாய்க்கேட்டான். சிரித்தேன். சிரித்தான்.

என் சிரிப்பின் ஓசையின் டெசிபல் உயர்ந்தபோது, புரியாது யோசனையாய்ப்பார்த்தான், அந்த மில்லிமீட்டர் புன்னகை அப்படியே இருந்தது.

ஒளித்து வைத்திருந்த, அந்தப்பெரிய கத்தியை, மிக லாகவமாக அவன் கழுத்தில் இறக்கினேன். அந்த வாழைத்தண்டு கழுத்தை மிக அழகான ஒரு ரத்தக்கோடு கிழித்திருந்தது. கண்கள் செருகி இறந்து விழுமுன், ஏனோ ஒருமுறை வாய்கொள்ளாது சிரித்தான்.

*

JUBILEE



ஹிமான்ஷூ ராய், தேவிகா ராணி என்னும் தம்பதிகள் பாம்பே டாக்கீஸ் என்ற பிரம்மாண்ட ஸ்டூடியோ ஒன்றை 1930 களில் மும்பையில் நடத்திக்கொண்டிருந்தனர். 1935ம் வருடம் ஹிமான்ஷூ தயாரிப்பில், தேவிகா ராணி ஹீரோயினாகவும், புதுமுக நடிகரான நஜ்முல் ஹசனும் இணைந்து நடித்த ”ஜவானி கி ஹவா” (இளமைக்காற்று) என்ற திரைப்படம் சில்வர் ஜுப்ளி கண்டது. அத்தனை கூட்டமும் பேரழகியான தேவிகாவைப்பார்க்கத்தான் வந்தன என்றாலும், நஜ்முல் – தேவிகா ஜோடியின் செண்டிமெண்ட் காரணமாக ஹிமான்ஷூ அடுத்த படத்தையும் இவ்விருவரையும் வைத்தே துவக்கினார்.

காலம் செய்த கோலம், ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே அவர்களிருவருக்கும் காதல் மலர்ந்தது. கோடீஸ்வர பார்ட்னரான ஹிமான்ஷூவை விட்டு, அறிமுக நடிகர் நஜ்முல் ஹஸனுடன் தேவிகா ஊரை விட்டே ஓடிப்போனார். படம் பாதியில் நின்ற வருத்தம் ஒருபுறம், மனைவி தான் வளர்த்த கடாவுடன் ஓடிப்போன கோபம் ஒருபுறமுமாக ஹிமான்ஷூ செய்வதறியாது தவித்தார்.

முதலாளியின் தவிப்பைத்தாளாத, ஷஷாதர் முகர்ஜி என்ற விசுவாச வேலைக்காரர் ஒருவர் கல்கத்தாவிற்குச்சென்று ஓடிப்போன காதல் ஜோடிகளை மீட்டு வந்து ஹிமான்ஷுவிடம் சேர்த்தார். நஜ்முல் ஹசன் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். சொந்தக்காரணமோ தொழிற்காரணமோ தெரியவில்லை ஏனோ தேவிகாவை எச்சரிக்கை செய்து தன்னுடன் மீண்டும் சேர்த்துக்கொண்டார் ஹிமான்ஷூ.

விசுவாச வேலைக்காரனான ஷஷாதரிடம் நஜ்முல் ஹசனுக்கு பதிலாக தன் புதிய கதாநாயகனைத்தேடும் பொறுப்பைக்கொடுத்தார்.  ஷஷாதர் அதற்கென பெரிதாக மெனெக்கெடாமல் தன் உறவினரான, குமுத்கால் கங்குலியை முதலாளியிடம் அறிமுகப்படுத்தினார்.

சற்றும் யோசிக்காமல், முகர்ஜி, கங்குலியைதனது புதிய திரைப்படத்திற்கு கதா நாயகனாக்கினார். அந்தப்படம் ”ஜீவன் நையா”. அந்த கங்குலிக்கு சூட்டப்பட்ட புதிய பெயர் – அஷோக்குமார். ஆம், நாம் அனைவரும் அறிந்த பின்னாளில் பாலிவுட் சூப்பர்ஸ்டாராக கோலோச்சிய அதே அஷோக்குமார்.

சரி மேலே சொன்ன நாலு பத்திக்கதைதான் JUBILEE இணையத்தொடரின் மொத்தக்கதையா என்றால், இல்லவே இல்லை. இதுதான் ஆரம்பமுடிச்சு.  இங்கே சொல்லப்பட்டது ஒரு பனிப்பாறையின் சிறிய முனை. தொடரின் முதல் அத்தியாயத்திலேயே இது உடைக்கப்படுகிறது. இந்த உண்மைக்கதைக்கு மேல் புனைந்து புனைந்து ஒரு காவியத்தை வைர ஜரிகளால் கோத்துக்கொடுத்திருக்கிறார் இதன் இயக்குநர் விக்ரமாதித்ய மோத்வானே.

*

மனதிற்குப் பிடித்த திரைப்படங்களை நல்ல படைப்பு, சிறந்த படைப்பு, காவியம் என்று வரிசைப்படுத்துவோம். இந்த வரிசையில் முதல் இரண்டு இடங்களை அவ்வப்போது சில திரைப்படங்கள் நிரப்பிவிடுகின்றன. அந்த மூன்றாவது காவிய அனுபவம் அமைவதென்பது இந்த mediocre உலகத்தில் மிக மிக அரிதாகிவிட்டது. அப்படி ஒன்று அமையும்போது அது பெருமகிழ்வு தந்து, நம் ஆழ்மனதை அசைத்துப்பார்த்து, பலமுறை அசைபோடச்செய்து, நினைக்கும்போதெல்லாம் அதன் காவியத்தன்மை கொண்டு நம்மை கட்டிப்போடுகிறது.

Jubilee என்னும் இந்த இணையத்தொடர் அப்படிப்பட்ட ஒன்று. மிக நேர்த்தியாக, செம்மையாக, மிகப்பிரமாதமாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு நாவலை மெள்ள மெள்ள உள்வாங்கி அதன் ஒவ்வொரு தருணத்தையும் ரசிப்பது போல இதன் எல்லா கதாபாத்திரங்களும், தருணங்களும், காட்சிகளும், நினைவுகளும் நெடுநாள்கள் மனதை விட்டு நீங்காத செவ்வியல் தன்மை கொண்டன.

1940 க,ளில் பாம்பேயில் நிகழத்தொடங்கியிருந்த பாலிவுட் சினிமா புரட்சியின் ஆரம்ப நாள்களில்தான் இந்தக்கதை நிகழ்கிறது. திரைத்தொழில் சார்ந்து வாழும் மனிதர்கள். அவர்களின் உறவுச்சிக்கல்கள், காதல், துரோகம், வாழ்வியல் தருணங்கள் என ஒரு நல்ல நாவல் வாசிப்பது போன்ற மிக நிதானமாக ஒவ்வொரு கணத்தையும் நம் மனதிற்குள் மிக மென்மையாக ஆனால் அழுத்தமாக விதைத்துச்செல்கிறது.

நாடக மேடைகள் நலிந்து, பாக்ஸ் ஆஃபீஸ் எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த காலம், சுதந்திரம் கிடைத்து பிரிவினை கால கலவரங்கள் மேலெழெந்து கொண்டிருந்த காலம், புதிய நாட்டின் வண்ணக்கனவுகள் ஒருபுறம், பழைய பிரிவினையின் கசப்பான நினைவுகள் ஒருபுறமென மக்கள் தடுமாறிக்கொண்டிருந்த காலம். இதே காலத்தில் இன்னொரு இணை உலகில் புகழுக்கும், பணத்திற்கும் சினிமாவை முன்னிருத்தித் துரத்தும் ஜிகினாக்கனவுகளின் உலகத்தில் புகுந்து புறப்பட்டிருக்கிறது இந்தக் கதைக்களம்.

அந்த காலகட்டத்தை உருத்தாமல் பதிவு செய்யும் அரங்கங்கள், வண்ணங்கள், இவை கணினியில் புனையப்பட்டவைதானா என நம்பமுடியாத வரைகலைகள் என பார்த்துப்பார்த்து கோத்திருக்கிறார்கள், கதையின் தடம் வழுவாது.

ஒரு பெரிய களம் பற்றிய புனைவு என்றால், அதை முழுமையும் புனைவாக எழுதிவிட்டால் வெகு எளிதாக செயற்கைப்பூச்சின் பாய்ச்சல் தெரிந்துவிடும். ஆனால் இந்தத் தொடரின் எழுத்தாளர்கள் உண்மையிலேயே நாற்பதுகளில் நிகழ்ந்த ஒரு பாலிவுட் கதையை எடுத்துக்கொண்டு அதன் மேல் கற்பனைப்பூச்சை தவழவிட்டிருக்கிறார்கள்.

இந்தக்கதைக்கும் திரைக்கதைக்கும் புனையப்பட்ட பாத்திரங்களுக்கும் தோதாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒளிப்பதிவும், இசையும் அதன் காவியத்தன்மையை இன்னும் ஒருபடி மேலே சென்று இருத்திவைக்கின்றன. இளைஞர்களின் மனதறிந்து சமகால ஹிந்தி இசையை வழங்கிக்கொண்டிருக்கும் அமித் திரிவேதி இதில் பழைய ஹிந்திப்பாடல்களின் சாயலோடு இசைத்து உருவாக்கியிருக்கும் மொத்த ஆல்பமும் செவியின்பத்தை வாரியிறைப்பன. தொடர் பார்க்க நேரமில்லாதவர்கள் கூட இந்த இசையைக்கேட்டு முடித்தபின், எப்படி இதைப்படமாக்கியிருப்பார்கள் என்ற ஆவலில் தொடரைப்பார்க்கத்தூண்டுமளவிற்கு இந்தப் பாடல்களின் தனித்தன்மை எல்லோரையும் ஈர்ப்பன.

இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நடிகர்கள், நடிகைகள் பெரும்பாலானோர் இதுவரை முறையான வாய்ப்புக்கிட்டாதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். (சுமித்ரா தேவி என்ற கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியிருக்கும் அதிதி ராவ் ஹயாத்ரி தவிர). ஆனால் ஒவ்வொருவரின் முகமும் பார்த்துமுடித்தபின் அவர்களின் கதாபாத்திரத்தைச்சார்ந்து இனி ஒருபோதும் மனதை விட்டு அகலாது இருக்கும்.

*

எப்படி இந்தத்தொடர் காவியத்தன்மையை அடைகிறது.

  1. களம் : சுதந்திரம் அடைந்த காலத்தில் கலவரங்கள், குழப்பங்கள், பிரிவினை என்று ஏகப்பட்ட அமர்க்களங்களுக்கிடையே இதன் சுவடே இல்லாமல், இந்த பாதிப்பின் சாயல் தீண்டாத உயரத்தில் ஒரு தனி உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்தக்களத்தை அதன் பழமை மாறாமல் எடுத்து அறிவித்து, தீர்க்கமாக அதனை வரையறை செய்து கேமராவுக்குள் அடக்கியிருப்பது பெரும்பலம்
  2. இசை: 40 களின் இசையை அச்சுப்பிசகாமல், பழைய பாடல்களை பழமை மாறாமலேயே மறு இசை அமைத்து மிக மிக இனிய பாடல்களை அதன் தேவைக்கேற்ப தொடரின் உபயோகப்படுத்தியிருப்பது.
  3. கதாபாத்திரங்கள் :  அடைந்த புகழை தக்கவைப்பது, திடீரெனக்கிடைத்த பெரும்புகழ் தாளாது தவிப்பது, பெரும்புகழைக்கனவுடன் பயணிப்பது என்று முன்னணிக்கதாபாத்திரங்கள் கதையின் மைய நீரோட்டத்தோடே பயணிக்கின்றன. இவர்களுக்கான துணை கதாபாத்திரங்களும், கதைக்குத்தேவையான, இந்த கதாபாத்திரங்களை பலப்படுத்தும் விதமாக மட்டுமே எழுதப்பட்டிருப்பது.
  4. ஒளிப்பதிவும், வரைகலையும் : இந்தக்கதை, காலத்திற்குத்தேவையான வண்ணங்கள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டு, பிரமாதமான ஒளியோடு உருவாக்க்கியிருப்பதும், துருத்திக்கொண்டு தெரியாமல், பின்னணியில் லாவகமாக இழைக்கப்பட்டிருக்கும் வரைகலைகளும்.
  5. நேர்த்தியும் நிதானமும்: எங்கேயும் அவசரப்படாமல், ஒரு நாவலில் கதை சொல்லும் நேர்த்தியுடனும், படு நிதானமாகவும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்வையும், பாதையையும் வரையறுத்துச்சொல்லும் பாங்கு.

இந்தத்தொடரின் முதல் அத்தியாயம் ஆரம்பித்தவுடனேயே நமக்கு நினைவுக்கு வருவது அசோக மித்திரனின் கரைந்த நிழல்கள் நாயகன் நடராஜன். மெள்ள கதை நகர நகர மானசரோவர் நாவலும் நினைவில் வருகிறது. மெட்ராஸில் ஸ்டூடியோ வளர்ந்த சரித்திரித்தின் பின்னணியில் எழுதி எடுக்க இன்னும் சுவாரசியமான கதைகள் இருக்கின்றன. என்றேனும் ஒருநாள் அது எடுக்கப்படும் என்று காத்திருப்போம்.

இந்தத்தொடர் அமேசன் ப்ரைம் ஓடிடியில் கிடைக்கிறது.

அக்கமாதேவியின் மல்லிகார்ஜூன தரிசனம்

பல நல்ல விஷயங்கள் மிகத் தாமதமாகத்தான் வந்து சேர்கின்றன. அப்படி வந்து சேர்ந்தனவற்றுள் ஒன்று இந்த வசனகவிதையும், பாடலும்.

பண்டிட் வெங்கடேஷின் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, இந்தப்பாடலும் எழுந்துவந்தது . கன்னடத்தில் இருந்தாலும், ஒரு வசன கவிதை போல மிக நேர்த்தியாக இருந்தது.

தேடிப்பார்த்தபோது அது அக்கமாதேவி எழுதியது என்று தெரிந்தது. அக்கமாதேவி பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்துறவி – கவிஞர். ஸ்ரீசைலத்தில் கோவில் கொண்டுள்ள மல்லிகார்ஜூனர் எனும் சிவ வடிவை தன் கணவராகவே கருதி அவர் மீது 430 வசன கவிதைகளை இயற்றியிருக்கிறார்.

அவற்றில் ஒன்றுதான் நான் முதலில் கேட்ட இந்த ”அக்கா கேளவா” எனும் அற்புதம். இதன் தோராயமான மொழிபெயர்ப்பு மட்டும் கீழே. மல்லிகார்ஜுனர் மீதான அன்பைப்பொழியும் அக்காவின் வரிகளுக்கு இது சற்றும் ஈடாகாது என்றாலும், நான் புரிந்துகொள்ளும் பொருட்டு எழுதிய எளிய வடிவம் மட்டுமே.

*

அக்கா கேள்!
அரிய கனவொன்றினைக்கண்டேன் கேள்!

அவனிடம்
அரிசி, வெற்றிலை பாக்கு
பனைஓலை, தேங்காய்
யாவும் இருந்தன.
சிற்சில சடைகளுடனும்
செரிந்த பற்களுடனும்
கொரவன் ஒருவன்
தானம் கேட்பதைக்கண்டு
மிகுந்த தாபத்தோடு அவனைத்தொடர்ந்து
அவன் கைத்தலம் பற்றினேன்

சென்ன மல்லிகார்ஜூனனைக்கண்டவுடன்
கண்மலர்ந்தேன்!

*

வாரணத்தேடல் – உபநயனக்காதை 1

எங்க வீட்டு விழாவை திட்டமிட்டு நடத்தினதுல ஏகப்பட்ட அனுபவங்கள். அதுல சுவாரசியமான ஒண்ணு இது. என் தங்கை திருமணம் ஸ்ரீரங்கத்துல நடந்தப்ப, அப்பா ஊர்வலத்துக்கு யானை வேணும்னு சொன்னாங்க. ஸ்ரீரங்கத்துல யானைகளுக்கு பஞ்சமில்ல. சில மணி நேரங்கள்ளயே ஒரு சிறுதொகைக்கு பேசி முடிவு பண்ணினோம்.

இப்ப அதே ஞாபகத்துல பையன் விழாவுக்கும் யானை கொண்டுவரலாம்னு சொல்லிட்டதால, கேட்டரர்கிட்டதான் முதல்ல பேசினேன். அவர் அதுக்கு முன்னாடி ஒரே ஒரு விழாவுக்கு கோவிடுக்கு முன்ன கொண்டு வந்ததாவும், 65000 ஆச்சுன்னும் , இப்ப அதுக்கு மேலயே ஆகும்னு சொன்னார். சற்றே கெதக்குன்னு இருந்தாலும், அப்பா கேட்டாங்க அதை ஏன் நிராசையாக்கணும்னு , ஓகே சொல்லிட்டோம். ஆனா கேட்டரர் பெரிய செய்தி ஒண்ணோட வந்தாரு. தமிழ் நாடு அரசோட உயிர்வதை தடைச்சட்டத்தின் அடிப்படைல யானைகளை இது மாதிரி கண்காட்சிக்கு அழைத்து வர்றது தடை செய்யப்பட்டுட்டதா.

ஆனா கோவை, ஸ்ரீரங்கம் இந்த ரெண்டு ஊர்ல மட்டும் இதுக்கு கொஞ்சம் கொல்லைப்பக்கமான வழி இருக்கறதாவும் சொன்னாரு. யானைக்காக விழாவையா மாத்தமுடியும்னு, சரி விடுங்கன்னு அடுத்தடுத்த வேலைகளைப்பார்க்க ஆரம்பிச்சுட்டோம். மற்ற விஷயங்கள்ள கவனம் செலுத்த ஆரம்பிச்சு இதை ஆல்மோஸ்ட் மறந்துட்ட வேளைல ஒரு நாளைக்கு என்னோட கல்லூரி நண்பரோட இல்ல விழா ஒண்ணுல யானை ஒண்ணு ஜம்முன்னு நின்னுட்டு இருந்தது. ஆஹா, இவனுக்கு மட்டும் எப்படி உயிர்வதை தடைச்சட்டம் இல்லாமப்போச்சுதுன்னு பதறிப்போய் ஃபோனைப்போட்டேன்.

அந்த விழாவிலேயேதான் இருந்தான். உள்ளிக்கோட்டை கிராமத்துல. எங்கேருந்துடா யானையைப்புடிச்சேன்னதுக்கு, மெட்ராஸ்லேர்ந்துதான்றான். எப்பட்றா? இங்கதான் பெர்மிஷன் இல்லேன்றானுவளேன்னா, சிரிக்கிறான். விஷயம் என்னன்னா இந்த உயிர்வதை தடைச்சட்டத்தால யானை கிடைக்காத threat ஐ, ஒரு ஆளு ஆப்பர்சுனிடியாக்கி ஒரு செயற்கை யானையை வச்சு வியாபாரம் செஞ்சுட்டு இருக்காரு.

அச்சு அசல் ஒரிஜினல் யானை போலவே ஒரு பொம்மை, அங்கங்க மோட்டார் வச்சு, துதிக்கை அசைக்கும், காதை ஆட்டும், பின்னால் அவங்களே வாய்ஸ் ஓவர்லாம் வச்சு பிளிறல் சத்தம் போடறாங்க. ஊர்வலம் வேணும்னா (of course with extra money) கொஞ்ச தூரத்துக்கு பொம்மை மேலயே உக்கார வச்சு நவத்தி விடுறாங்க. சற்று தொலைவிலேர்ந்து பாத்தா அதை பொம்மை யானைன்னே சொல்ல முடியாத அளவுக்கு பெர்ஃபெக்‌ஷன்.

4 மணி நேரத்துக்கு 10000 ரூபாய். அப்புறம் என்ன, யானை இல்லாததுக்கு அங்குசமாவது கிடைச்சுதேன்னு ஒரு அந்த பொம்மையைக்கொண்டு வந்து நிப்பாட்டிட்டோம் 🙂

புத்தகக்கண்காட்சி குறிப்புகள் – 2023

புத்தகக்கண்காட்சிக்கு மூன்றாவது முறையாக நேற்று சென்றுவந்து இந்த வருடக்கொள்முதலையும், நிறைய நல்நினைவுகளையும், இந்த குறிப்புகளையும் சேர்த்துக்கொண்டுவந்தேன்.

  1. கோவிட் காலத்திற்கு பின் வந்த சென்னை புத்தகக்கண்காட்சியில் சென்ற வருடமும், அதற்கு முந்தைய வருடமும் அரங்கம், பாதை, கூரை, காற்றோட்டம் முதலியன நன்கு தேறி வந்தன (சிறப்பு என்றெல்லாம் இல்லை, அதற்கு முந்தைய வருடங்களுக்கு அது மேல்). இனி எல்லாம் இப்படியே சிறப்பாகவே இருக்கும் என்று நம்பிக்கொண்டிருந்ததில் இடியைத்தூக்கி இந்த வருடமே போட்டிருந்தது பபாசி. அரங்கங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அகலத்தைக்குறைத்து, நடைபாதையை சின்னாபின்னாப்படுத்தி, காற்றோட்டத்தை ஏனோதானோவென்று வைத்து, முறையாக நடக்கும் பாதைகளை தடுத்து, “மவனே நான் சொல்றபடிதாண்டா நீ போவணும்” என்று அராஜகம் செய்து சொதப்பிவைத்திருக்கின்றான்கள்.

ஆயினும் என்ன, புத்தகங்கள் அல்லவா. எல்லாவற்றையும் தாண்டி அந்த இனிப்பான நிகழ்வு இந்தக்கசப்புகளை மறக்கத்தான் வைத்தது.

  1. இந்த வருடம் நடந்திருக்கும் மிக முக்கிய மாற்றம், சட்டென ஒரு ஆயிரம் பக்க புத்தகத்தை எடுத்தால் கூட அது காற்று போல மிருதுவாக இருக்கிறது. ஆச்சர்யத்தோடு புரட்டிப்பார்த்தால் காகித வெயிட்டேஜில் சமரசம் செய்துகொண்டு, எழுத்துருவைக்குறைத்து, வரிகளின் அளவையும் குறைத்து நுணுக்கி நுணுக்கி பதிக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள். ஆனால் படிக்கும் அனுபவத்தில் இது ஒரு பெரிய சமரசம். நுணுக்கி நுணுக்கி இருக்கும் எழுத்துகளை சிரமப்பட்டுதான் படிக்கவேண்டியிருக்கிறது. விலையென்னவோ ஒரு பக்கத்திற்கு 1:50-2:00 ரூபாய்க்கு போய்விட்டது. இருக்கும் பழைய ஸ்டாக்குகளை விற்றுவிட்டால், இனி இப்படித்தான் எல்லாமே வரும் என்று புளியைக்கரைக்கிறார்கள்.
  2. காலச்சுவடுதான் 20 வருடங்களுக்கு முன்பு புத்தகக்கண்காட்சியின் ஹீரோ ஸ்டால். அங்குதான் நல்ல பதிப்பில், நல்ல எழுத்தாளர்களின் நிறைய புத்தகங்கள் வாங்க முடியும் என்றிருந்தது. பின்பு மனுஷ்யபுத்திரன் அங்கிருந்து வெளியே வந்து உயிர்மையை தொடங்கியபோது ஒரே இரவில் அது மாறியது. பின்பு அவர் செய்த ராயல்டி குழப்படிகளில் கிழக்கு பல வருடங்கள் நட்சத்திரப்பதிப்பகமாக வாழ்ந்தது. இந்த மூன்றையும் ஒட்டுமொத்தமாக தூக்கி சாப்பிட்டுக்கொண்டிருப்பது ஸீரோ டிகிரி பதிப்பகம். இங்கே போனால் கொள்முதல் செய்யாமல் வரவே முடியாது என ஆல்மோஸ்ட் எல்லா நல்ல எழுத்துகளையும் உள்ளே வைத்துக்கொண்டிருக்கிறது. இவர்களின் இலக்கியப்போட்டிகள், அதனால் நுழைந்த புதிய எழுத்தாளர்கள், முறையான ராயல்டி ப்ளான், உடனடி ப்ரிண்டிங் என எக்கச்சக்கமாக வளர்ந்துவிட்டிருக்கிறது.
  3. Having said that, வேலை நாளோ விடுமுறை நாளோ அதிகம் கூட்டம் உள்ள அரங்கு “விகடன்” அரங்குதான். பொன்னியின் செல்வனும், வேள்பாரியும், மனசே ரிலாக்ஸ் ப்ளீஸூம் ( இப்போது புதிய அடிஷன் இரண்டாம் பாகம் வந்திருக்கிறதாம்) எல்லா வீட்டிலும் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டதால், விற்றுக்கொண்டேயிருக்கிறது. இதில் புதிதாக சேர்ந்திருப்பது, பாபாயணம். இதைத்தாண்டி அவர்களின் தொடர்களாக வந்து புத்தகமானவை எல்லாம் படுசூப்பர் ஹிட்ஸ். இந்த வருடம் ஜூனியர்விகடனில் வந்த லஷ்மி சரவணகுமார், அகரமுதல்வனின் தொடர்களெல்லாம் கூட நன்கு விற்பனையாகின்றன போல.
  4. எழுதும் எல்லோருக்குமே எப்போதும் NCBH பதிப்பகம்தான் ஃபேவரைட். அவர்களின் இந்திய மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் எல்லாமே எக்காலத்திலும் பொருட்படுத்தி வாங்கத்தகுந்தன. விலையும் பக்க அளவைக் கம்பேர் செய்யும்போது மிகக்குறைவாகக்கிடைக்கும். இந்த வருடமும் முதலில் அங்குதான் சென்றேன். நல்ல கொள்முதல்.
  5. ஆசான் ஜெயமோகனின் புத்தகங்கள் அனைத்தும் இப்போது விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் வரத்தொடங்கிவிட்டது. அவரின் தொற்றுக்கால புனைவுக்களியாட்டு சிறுகதைகள் அனைத்தும் தனித்தனித்தொகுப்பாக வரத்தொடங்கியிருக்கிறது. வெண்முரசின் புதிய பதிப்புகளை (முதல் நான்கு செம்பதிப்புகள் இப்போது வந்திருக்கின்றன – எல்லாமே கொள்ளை விலை – மழைப்பாடல் நான் வாங்கியது 800 ரூபாய்க்கு வண்ணப்படங்களோடு – புதிய பதிப்பு 2000 ரூபாய்). இங்கு அறம் வருகிற எல்லோரும் வாங்கிச்செல்லும் புத்தகமாக இருக்கிறது.
  6. இதைத்தவிர வம்சி, யாவரும், எதிர், வாசகசாலை, நற்றிணை, தமிழினி ஆகிய ஸ்டால்கள் எனக்கு வருடாந்திர ஃபேவரைட்ஸ், இந்த வருடமும். வம்சியில் மொழிபெயர்ப்புகள்தான் வருகின்றன. ஆனால் வடிவமைப்பில் இந்த வருடமும் இவர்களை முந்த ஆளில்லை. நல்ல எழுத்துருவும், வரிகளின் இடைவெளியும், மிகுந்த மனம்கவரும் அட்டைப்படமுமாக மிக நல்ல பேக்கேஜ் வம்சியில் மட்டும்தான் கிடைக்கும். இவர்கள் மேலும் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப்பதிப்பித்தால் நன்றாக இருக்கும்.
  7. இந்தமுறை பெரிய ஆறுதல் நெட்வொர்க் கவரேஜும், பில்களில் குழப்பம் இல்லாததும். எல்லாக்கடைகளும் ஜிபே செய்வதை அமல்படுத்திவிட்டன. எந்தக்க்யூவில் நின்றாலும் இதனால் சட்டென நகர்ந்துவிட முடிந்தது.
  8. இந்தவருடம் உணவகங்களில் ஞானம்பிகா ஒரு ஸ்டார் இடத்தை தக்கவைத்துக்கொண்டது. அவர்களின் (கூட்டமில்லாதபோது) பொடி இட்லியும், பெஸரட் தோசையும், பிஸிபேளாபாத்தும் (மூன்று விசிட்டுகளில்…) இன்னமும் நாவில் நர்த்தனமாடுகின்றன. விலையைப்பற்றியெல்லாம் குறைசொல்வதாயில்லை. அவ்வளவு நேர நடை – களைப்புக்குப்பிறகு எது கொடுத்தாலும் தேவாமிர்தம்தான்.
  9. ஏற்பாடுகளின் போதாமை குறித்த சலிப்புகள் இருந்தாலும், முற்றிலும் கொண்டாட்டத்தருணமாய் அமைந்ததைப்பற்றி சந்தேகமேயில்லை. மாலை நேரங்களை வேலையிலிருந்து பிரிக்க முடியாத காரணத்தினால், சீக்கிரம் காலையில் சென்று, சீக்கிரம் கிளம்பி வந்ததால் நிறைய பயன்களும் இருந்தன. வழக்கம்போல அடுத்த ஜனவரிக்காக இப்போதிலிருந்தே காத்திருக்கிறேன்.

ஆனந்தபைரவியெனும் ஆழ்மனமுருக்கி

அந்த பழங்கோவிலின் எல்லா முனைகளையும் தட்டி எழுப்புகிறது இந்த ஆனந்தபைரவி. பல நூறு ஆண்டுகளாய் மந்திரங்களில் பண்பட்டுப்போயிருந்த தூண்களின் மேலேறி நாகஸ்வரத்துளைகளின் வழி எழும் ஆனந்த கீதம் அதன் அதிர்வுகளை இன்னும் அதிகரிக்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாய் உளியின் ஓசைகளாயும், சிற்பிகளின் உரையாடற்சத்தங்களாயும் உறைந்த போயிருந்த சத்தங்கள் யாவும், ஆனந்த பைரவியின் விரல்கோத மோட்சம் பெறுகின்றன

யாரோ ஒருவரின் அலைபேசியின் வழி என் கணினிக்கு வந்திறங்கும் இந்த இசை செவிப்புலனங்களத்தாண்டி ஆழ்மனதில் இறங்கி எல்லா செல்களையும் நிரப்பி மகிழ்கிறது. அதிர்வுகளைக் கேட்டகணத்தில் மனம் சட்டென்று அப்பழங்கோவிலாகி, ஆனந்தபைரவியை ஆழ அணைத்துக்கொள்கிறது.

இணைப்புகள்:

புளிக்காய்ச்சல் திருநாசிச்சேவை:

ஹனுமத்ஜெயந்தி புளியோதரைக்காக, வீட்டில் இரவு புளிக்காய்ச்சல் செய்திருக்கிறார்கள். இந்த அதிகாலையில் அதன் வாசனை வீடு முழுவதும் பரவி இம்மார்கழிக் குளிர்க்காலைக்கு புதிய வண்ணம் தீட்டுகிறது.

காரமும் புளிப்பும் ஒரு அடர் மாம்பழ நிறப்புடவை மீது அமைந்த சிவப்புச்சரிகை போல மிகப்பாந்தமாகப்படிந்து சிந்தை முழுவதையும் தன் பால் இழுக்கிறது. புளிப்பு, புளிப்பு என மனம் அதன் திசை நோக்கி புன்னகையோடு கைகுலுக்குகிறது.

வெந்தயமும், பெருங்காயமும் அதன் கூட இணைந்து நாங்களும் கூடவே இருக்கிறோமே என குழைந்த அழைப்பின்வழி இன்னும் தங்களின் மீதான கவனத்தைக் கோருகின்றன.

நாசியின் அத்தனை நரம்புகளும் செய்வதறியாது இவ்வாசனை தரும் மயக்கத்தில் ஆழ்ந்து அறிவின் அத்தனை ஆழத்திலும் புளிக்காய்ச்சலின் இருப்பை பதிவு செய்து உமிழ் நீர் அருவியொன்றை உடனடியாக உற்பத்தி செய்ய ஆணையிடுகிறது.

வெறும் ஒலியை மட்டுமே வெளியிட்டு எங்கள் இல்லத்தின் நற்சகுனத்தை பேணிவந்த அதோ அந்த வெள்ளைப்பல்லி இடுக்கிலிருந்து தலையை அடிக்கடி நீட்டி சற்றே இம்மணத்தை உள்வாங்கி மறைகிறது.

வீட்டின் மூலையில் ஒரு சின்ன எண்ணெய்ச்செட்டிக்குள் பாந்தமாய்ப்படுத்திருக்கும் புளிக்காய்ச்சலை பாற்கடலில் படுத்திருக்கும் பரந்தாமனுக்கிணையாய்ப்பார்க்கவைத்த இத்திருக்காலையை மகிழ்வோடு ஆசீர்வதித்து மனம் எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என முணுமுணுக்கிறது

புத்தாண்டு 2022


இன்னொரு புத்தாண்டு பிறந்திருக்கிறது. கடந்தகால சோதனைகளை சற்றே மட்டுப்படுத்திச்சென்ற வருடம் என்ற வகையில் எனக்கு 2021 பெரும்பலமான வருடமே. வருடம் முழுவதும் சம்பளம் வந்தது என்பதே சாதனையாகப்பார்க்கும் மன நிலை வாய்த்திருப்பது சற்றே வருத்தத்திற்குரியதுதான் என்றாலும் தெய்வம் எந்த நிலையிலும் கைவிடுவதில்லை என்ற மனோதிடம் இருக்கிறது.

வருட இறுதியில் நற்செய்தியாக சம்பள உயர்வும், இதே அலுவகலத்தில் நிரந்தரப்பணியும் அமைந்ததுதான் பெருமகிழ்வுக்குரிய விஷயம். இதே போன்ற ஒன்றை 2018 லேயே எதிர்பார்த்தேன். 3 வருடத்தாமதம் என்றாலும், எப்போதும், எங்கிருந்தும் வாழ்வை ஆரம்பிக்கலாம் என்பதால் இறையை வேண்டி துணிவுடன் பயணம் தொடர்கிறேன்!

நாசியைத் தீண்டாத வாசனைகள்

தீபாவளி வாரயிறுதியில் தென்காசி-மதுரைக்குப்போய்விட்டு மழையில் தள்ளாடிக்கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தேன். அடுத்த நாளே ஜலதோஷம் பிடித்துக்கொண்டது.

இரண்டு நாள் தற்சார்பு மருந்துகளுடன் போராடிவிட்டு மருத்துவரிடம் சென்றபோது தொண்டை தொடர்பான பிரச்னைகள் இல்லாததாலும், ஜூரம் இல்லாததாலும் சளியைக்கரைக்கும் மருந்துகளை எழுதிக்கொடுத்திருந்தார். அதற்குப்பிறகுதான் இந்த உண்மையான சோதனை தொடங்கியது. நாசிக்கு எந்த வாசனையும் வரவில்லை.

கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ என ஆண்டாளை அடியொற்றி சோப்பு மணக்குமா, ஷாம்பு மணக்குமோ, என்றுமே நாறாத வேல்ஸ் சாம்பிராணியின் மணமும்தான் வந்து தீண்டுமோ என வரிசையாக வீட்டில் எனக்குப்பிடித்த அத்தனை வாசனை விஷயங்களையும் ஒவ்வொன்றாக முகர்ந்துகொண்டேயிருந்தேன். எதற்கும் பலனில்லை.

வெந்நீர் போடுவதற்காக கொல்லை அடுப்புகளில் மூட்டப்படும் தீயிலிருந்து எழும் அதிகாலைப்புகை மணம் ஒன்று இருக்குமே, அது போல ஏதோவொரு பெயர் சொல்லா புகைமணம் மட்டும் அடி நாசியில் குடிகொண்டிருந்தது. இந்த புகைமணம் சட்டென்று ஏறும், இறங்கும் வீட்டின் வாசனைகளுக்கொப்ப. உதாரணமாக சமையறையில் ஏதேனும் அதீத மணம் எழுந்தால், இந்த புகை நாற்றம் அதன் உச்சத்தைத்தொடும், அதன் மூலமாக வயிற்றுப்பிரட்டல் வேறு.

இதற்குப்பிறகு சுவை நரம்புகளும் காணாமற்போயின. காஃபி, பொங்கல், கருவேப்பிலை கொத்தமல்லி தொடங்கி பூண்டு,வெங்காயம் வரையிலா எல்லாச்சுவைகளும் மட்டுப்பட்டு வெந்நீர் மட்டுமே தேவாமிர்தமாக இனித்தது. சுடச்சுட உண்ணவேண்டும் என்ற அறிவுரையால் கிடைத்த எல்லா சூட்டுதிரவங்களிலும் லேசான புளிப்புச்சுவை ஒன்று மேலேறி வந்ததால், அதுவே முழு நாளுக்கும் போதும் என்று தோன்றியது.

வாசனையும், சுவையுமில்லாமல் ஒரு மனிதன் வாழ்வைக்கடப்பதென்பதுதான் துறவா என்று எண்ண வைத்தது. ஏதேனும் ஒரே ஒரு வாசனையையாவது இந்த நாசி கொண்டுவிடாதா என ஒரு சிறு நாய்க்குட்டி முகர்ந்து முகர்ந்து தன் உணவைத்தேடிக்கொண்டே இருப்பதுபோல இல்லம் முழுதும் வெகுண்டு வெறிகொண்டு மூக்கை உறிஞ்சி உறிஞ்சி தேடிக்கொண்டே இருந்தேன்.

நாட்கள் செல்லச்செல்ல பயமும் அதிகரித்தது. மருத்துவர் ஆறுதலளித்தார். இந்த அறிகுறி தொண்டையைத்தீண்டி கீழே செல்லாத வரையில் அவர் எழுதிக்கொடுத்த மருந்துகளும், நல்ல உணவும், ஆவிபிடித்தலும்தான் மருந்துகள் என்றார். எந்தச்சுவையும் இல்லாவிடினும், உணவுகொள்ளுதலுக்கான வேட்கை நிற்கவே இல்லை. ஏதேனும் உள்சென்றுகொண்டிருந்தது. ஆனால் மணமேதும் ஏறாமல், அந்த ஒற்றைப்புகை மணத்தை மட்டுமே கொண்டிருந்த நாசியைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏகப்பட்ட மனவழுத்தம்.

”எல்லாவற்றிற்கும் ஒரு ப்ரேக்கிக் பாயிண்ட் உள்ளது” என குருதிப்புனலில் கமலஹாசன் சொல்லியிருக்கிறார் இல்லையா? அது இந்த நாசியடைப்பிற்கும் வந்தது. இன்னொரு மழை நாள். இன்னொரு வீடடைப்பு. அந்த முற்பகலில், புகை வாசனை போக வேறு ஏதோ ஒன்று புலப்பட்டது. முதலில் லேசாக, பின்னர் மெதுவாக அதன் வீரியம் அதிகரித்தது. வழக்கம்போலவெ ஒரு சிறு நாய்க்குட்டியென முகர்ந்து முகர்ந்து சமயலறைக்குச்செல்லும் முன்னரே, நாசி சில நாட்களுக்குப்பின்னர் கண்டறியும் முதல் மணத்தை வெகு நாட்கள் கழிந்து பிரிந்த காதலியை அணைவது போல சட்டென உள்ளிழுத்துக்கொண்டது.

கத்திரிக்காய் செய்வதற்காக, தனியா+மிளகாய்+உ.பருப்பு இத்யாதிகளோடு செய்யப்பட்ட அந்தப்பொடிதான் இத்தனை நாள் புகை மணத்தோடு இருந்த நாசியை மீட்ட முதல் மணமாய் அமைந்தது. அந்த முதல் மூமெண்டுக்கு பிறகு மெள்ள மெள்ள நாசி ஒவ்வொரு வாசனையாய் மீட்டுக்கொண்டு வந்த தருணங்களை தஞ்சாவூர் கல்வெட்டுக்கு இணையாக மனதில் குறித்துவைத்துக்கொண்டே வந்திருக்கிறேன்.

கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மட்டுமே துறவறம் சென்ற இந்த சுவையும், வாசனையும் வாழ்விற்கு எத்தனை வசந்தங்களை என்னையறியாமலேயே கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன என்பதை அறியத்தந்த ஒரு பாடமாக இதனை எடுத்துக்கொள்கிறேன். ஒரு சிறுதுளையின் வழி செல்லும் காற்றை இசையாக மாற்றும் குழல் போலத்தான், நாசியின் இந்த இரு துளைகளும். எத்தனை மணங்களை மனதிற்கினியதாக மாற்றி வழங்கிக்கொண்டே இருந்திருக்கின்றன என எண்ணி எண்ணி வியக்கிறேன்.

பல வருடங்களாக கத்திரிக்காய் மீது என் உடலுக்கும் மனதுக்கும் இருந்த ஒவ்வாமையைக்கூட கடந்த அத்தருணத்தில் காதலாக மாற்றி வைத்திருக்கிறேன்.