புத்தகக்கண்காட்சி குறிப்புகள் – 2023

புத்தகக்கண்காட்சிக்கு மூன்றாவது முறையாக நேற்று சென்றுவந்து இந்த வருடக்கொள்முதலையும், நிறைய நல்நினைவுகளையும், இந்த குறிப்புகளையும் சேர்த்துக்கொண்டுவந்தேன்.

  1. கோவிட் காலத்திற்கு பின் வந்த சென்னை புத்தகக்கண்காட்சியில் சென்ற வருடமும், அதற்கு முந்தைய வருடமும் அரங்கம், பாதை, கூரை, காற்றோட்டம் முதலியன நன்கு தேறி வந்தன (சிறப்பு என்றெல்லாம் இல்லை, அதற்கு முந்தைய வருடங்களுக்கு அது மேல்). இனி எல்லாம் இப்படியே சிறப்பாகவே இருக்கும் என்று நம்பிக்கொண்டிருந்ததில் இடியைத்தூக்கி இந்த வருடமே போட்டிருந்தது பபாசி. அரங்கங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அகலத்தைக்குறைத்து, நடைபாதையை சின்னாபின்னாப்படுத்தி, காற்றோட்டத்தை ஏனோதானோவென்று வைத்து, முறையாக நடக்கும் பாதைகளை தடுத்து, “மவனே நான் சொல்றபடிதாண்டா நீ போவணும்” என்று அராஜகம் செய்து சொதப்பிவைத்திருக்கின்றான்கள்.

ஆயினும் என்ன, புத்தகங்கள் அல்லவா. எல்லாவற்றையும் தாண்டி அந்த இனிப்பான நிகழ்வு இந்தக்கசப்புகளை மறக்கத்தான் வைத்தது.

  1. இந்த வருடம் நடந்திருக்கும் மிக முக்கிய மாற்றம், சட்டென ஒரு ஆயிரம் பக்க புத்தகத்தை எடுத்தால் கூட அது காற்று போல மிருதுவாக இருக்கிறது. ஆச்சர்யத்தோடு புரட்டிப்பார்த்தால் காகித வெயிட்டேஜில் சமரசம் செய்துகொண்டு, எழுத்துருவைக்குறைத்து, வரிகளின் அளவையும் குறைத்து நுணுக்கி நுணுக்கி பதிக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள். ஆனால் படிக்கும் அனுபவத்தில் இது ஒரு பெரிய சமரசம். நுணுக்கி நுணுக்கி இருக்கும் எழுத்துகளை சிரமப்பட்டுதான் படிக்கவேண்டியிருக்கிறது. விலையென்னவோ ஒரு பக்கத்திற்கு 1:50-2:00 ரூபாய்க்கு போய்விட்டது. இருக்கும் பழைய ஸ்டாக்குகளை விற்றுவிட்டால், இனி இப்படித்தான் எல்லாமே வரும் என்று புளியைக்கரைக்கிறார்கள்.
  2. காலச்சுவடுதான் 20 வருடங்களுக்கு முன்பு புத்தகக்கண்காட்சியின் ஹீரோ ஸ்டால். அங்குதான் நல்ல பதிப்பில், நல்ல எழுத்தாளர்களின் நிறைய புத்தகங்கள் வாங்க முடியும் என்றிருந்தது. பின்பு மனுஷ்யபுத்திரன் அங்கிருந்து வெளியே வந்து உயிர்மையை தொடங்கியபோது ஒரே இரவில் அது மாறியது. பின்பு அவர் செய்த ராயல்டி குழப்படிகளில் கிழக்கு பல வருடங்கள் நட்சத்திரப்பதிப்பகமாக வாழ்ந்தது. இந்த மூன்றையும் ஒட்டுமொத்தமாக தூக்கி சாப்பிட்டுக்கொண்டிருப்பது ஸீரோ டிகிரி பதிப்பகம். இங்கே போனால் கொள்முதல் செய்யாமல் வரவே முடியாது என ஆல்மோஸ்ட் எல்லா நல்ல எழுத்துகளையும் உள்ளே வைத்துக்கொண்டிருக்கிறது. இவர்களின் இலக்கியப்போட்டிகள், அதனால் நுழைந்த புதிய எழுத்தாளர்கள், முறையான ராயல்டி ப்ளான், உடனடி ப்ரிண்டிங் என எக்கச்சக்கமாக வளர்ந்துவிட்டிருக்கிறது.
  3. Having said that, வேலை நாளோ விடுமுறை நாளோ அதிகம் கூட்டம் உள்ள அரங்கு “விகடன்” அரங்குதான். பொன்னியின் செல்வனும், வேள்பாரியும், மனசே ரிலாக்ஸ் ப்ளீஸூம் ( இப்போது புதிய அடிஷன் இரண்டாம் பாகம் வந்திருக்கிறதாம்) எல்லா வீட்டிலும் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டதால், விற்றுக்கொண்டேயிருக்கிறது. இதில் புதிதாக சேர்ந்திருப்பது, பாபாயணம். இதைத்தாண்டி அவர்களின் தொடர்களாக வந்து புத்தகமானவை எல்லாம் படுசூப்பர் ஹிட்ஸ். இந்த வருடம் ஜூனியர்விகடனில் வந்த லஷ்மி சரவணகுமார், அகரமுதல்வனின் தொடர்களெல்லாம் கூட நன்கு விற்பனையாகின்றன போல.
  4. எழுதும் எல்லோருக்குமே எப்போதும் NCBH பதிப்பகம்தான் ஃபேவரைட். அவர்களின் இந்திய மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் எல்லாமே எக்காலத்திலும் பொருட்படுத்தி வாங்கத்தகுந்தன. விலையும் பக்க அளவைக் கம்பேர் செய்யும்போது மிகக்குறைவாகக்கிடைக்கும். இந்த வருடமும் முதலில் அங்குதான் சென்றேன். நல்ல கொள்முதல்.
  5. ஆசான் ஜெயமோகனின் புத்தகங்கள் அனைத்தும் இப்போது விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் வரத்தொடங்கிவிட்டது. அவரின் தொற்றுக்கால புனைவுக்களியாட்டு சிறுகதைகள் அனைத்தும் தனித்தனித்தொகுப்பாக வரத்தொடங்கியிருக்கிறது. வெண்முரசின் புதிய பதிப்புகளை (முதல் நான்கு செம்பதிப்புகள் இப்போது வந்திருக்கின்றன – எல்லாமே கொள்ளை விலை – மழைப்பாடல் நான் வாங்கியது 800 ரூபாய்க்கு வண்ணப்படங்களோடு – புதிய பதிப்பு 2000 ரூபாய்). இங்கு அறம் வருகிற எல்லோரும் வாங்கிச்செல்லும் புத்தகமாக இருக்கிறது.
  6. இதைத்தவிர வம்சி, யாவரும், எதிர், வாசகசாலை, நற்றிணை, தமிழினி ஆகிய ஸ்டால்கள் எனக்கு வருடாந்திர ஃபேவரைட்ஸ், இந்த வருடமும். வம்சியில் மொழிபெயர்ப்புகள்தான் வருகின்றன. ஆனால் வடிவமைப்பில் இந்த வருடமும் இவர்களை முந்த ஆளில்லை. நல்ல எழுத்துருவும், வரிகளின் இடைவெளியும், மிகுந்த மனம்கவரும் அட்டைப்படமுமாக மிக நல்ல பேக்கேஜ் வம்சியில் மட்டும்தான் கிடைக்கும். இவர்கள் மேலும் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப்பதிப்பித்தால் நன்றாக இருக்கும்.
  7. இந்தமுறை பெரிய ஆறுதல் நெட்வொர்க் கவரேஜும், பில்களில் குழப்பம் இல்லாததும். எல்லாக்கடைகளும் ஜிபே செய்வதை அமல்படுத்திவிட்டன. எந்தக்க்யூவில் நின்றாலும் இதனால் சட்டென நகர்ந்துவிட முடிந்தது.
  8. இந்தவருடம் உணவகங்களில் ஞானம்பிகா ஒரு ஸ்டார் இடத்தை தக்கவைத்துக்கொண்டது. அவர்களின் (கூட்டமில்லாதபோது) பொடி இட்லியும், பெஸரட் தோசையும், பிஸிபேளாபாத்தும் (மூன்று விசிட்டுகளில்…) இன்னமும் நாவில் நர்த்தனமாடுகின்றன. விலையைப்பற்றியெல்லாம் குறைசொல்வதாயில்லை. அவ்வளவு நேர நடை – களைப்புக்குப்பிறகு எது கொடுத்தாலும் தேவாமிர்தம்தான்.
  9. ஏற்பாடுகளின் போதாமை குறித்த சலிப்புகள் இருந்தாலும், முற்றிலும் கொண்டாட்டத்தருணமாய் அமைந்ததைப்பற்றி சந்தேகமேயில்லை. மாலை நேரங்களை வேலையிலிருந்து பிரிக்க முடியாத காரணத்தினால், சீக்கிரம் காலையில் சென்று, சீக்கிரம் கிளம்பி வந்ததால் நிறைய பயன்களும் இருந்தன. வழக்கம்போல அடுத்த ஜனவரிக்காக இப்போதிலிருந்தே காத்திருக்கிறேன்.

ஆனந்தபைரவியெனும் ஆழ்மனமுருக்கி

அந்த பழங்கோவிலின் எல்லா முனைகளையும் தட்டி எழுப்புகிறது இந்த ஆனந்தபைரவி. பல நூறு ஆண்டுகளாய் மந்திரங்களில் பண்பட்டுப்போயிருந்த தூண்களின் மேலேறி நாகஸ்வரத்துளைகளின் வழி எழும் ஆனந்த கீதம் அதன் அதிர்வுகளை இன்னும் அதிகரிக்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாய் உளியின் ஓசைகளாயும், சிற்பிகளின் உரையாடற்சத்தங்களாயும் உறைந்த போயிருந்த சத்தங்கள் யாவும், ஆனந்த பைரவியின் விரல்கோத மோட்சம் பெறுகின்றன

யாரோ ஒருவரின் அலைபேசியின் வழி என் கணினிக்கு வந்திறங்கும் இந்த இசை செவிப்புலனங்களத்தாண்டி ஆழ்மனதில் இறங்கி எல்லா செல்களையும் நிரப்பி மகிழ்கிறது. அதிர்வுகளைக் கேட்டகணத்தில் மனம் சட்டென்று அப்பழங்கோவிலாகி, ஆனந்தபைரவியை ஆழ அணைத்துக்கொள்கிறது.

இணைப்புகள்:

புளிக்காய்ச்சல் திருநாசிச்சேவை:

ஹனுமத்ஜெயந்தி புளியோதரைக்காக, வீட்டில் இரவு புளிக்காய்ச்சல் செய்திருக்கிறார்கள். இந்த அதிகாலையில் அதன் வாசனை வீடு முழுவதும் பரவி இம்மார்கழிக் குளிர்க்காலைக்கு புதிய வண்ணம் தீட்டுகிறது.

காரமும் புளிப்பும் ஒரு அடர் மாம்பழ நிறப்புடவை மீது அமைந்த சிவப்புச்சரிகை போல மிகப்பாந்தமாகப்படிந்து சிந்தை முழுவதையும் தன் பால் இழுக்கிறது. புளிப்பு, புளிப்பு என மனம் அதன் திசை நோக்கி புன்னகையோடு கைகுலுக்குகிறது.

வெந்தயமும், பெருங்காயமும் அதன் கூட இணைந்து நாங்களும் கூடவே இருக்கிறோமே என குழைந்த அழைப்பின்வழி இன்னும் தங்களின் மீதான கவனத்தைக் கோருகின்றன.

நாசியின் அத்தனை நரம்புகளும் செய்வதறியாது இவ்வாசனை தரும் மயக்கத்தில் ஆழ்ந்து அறிவின் அத்தனை ஆழத்திலும் புளிக்காய்ச்சலின் இருப்பை பதிவு செய்து உமிழ் நீர் அருவியொன்றை உடனடியாக உற்பத்தி செய்ய ஆணையிடுகிறது.

வெறும் ஒலியை மட்டுமே வெளியிட்டு எங்கள் இல்லத்தின் நற்சகுனத்தை பேணிவந்த அதோ அந்த வெள்ளைப்பல்லி இடுக்கிலிருந்து தலையை அடிக்கடி நீட்டி சற்றே இம்மணத்தை உள்வாங்கி மறைகிறது.

வீட்டின் மூலையில் ஒரு சின்ன எண்ணெய்ச்செட்டிக்குள் பாந்தமாய்ப்படுத்திருக்கும் புளிக்காய்ச்சலை பாற்கடலில் படுத்திருக்கும் பரந்தாமனுக்கிணையாய்ப்பார்க்கவைத்த இத்திருக்காலையை மகிழ்வோடு ஆசீர்வதித்து மனம் எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என முணுமுணுக்கிறது

புத்தாண்டு 2022


இன்னொரு புத்தாண்டு பிறந்திருக்கிறது. கடந்தகால சோதனைகளை சற்றே மட்டுப்படுத்திச்சென்ற வருடம் என்ற வகையில் எனக்கு 2021 பெரும்பலமான வருடமே. வருடம் முழுவதும் சம்பளம் வந்தது என்பதே சாதனையாகப்பார்க்கும் மன நிலை வாய்த்திருப்பது சற்றே வருத்தத்திற்குரியதுதான் என்றாலும் தெய்வம் எந்த நிலையிலும் கைவிடுவதில்லை என்ற மனோதிடம் இருக்கிறது.

வருட இறுதியில் நற்செய்தியாக சம்பள உயர்வும், இதே அலுவகலத்தில் நிரந்தரப்பணியும் அமைந்ததுதான் பெருமகிழ்வுக்குரிய விஷயம். இதே போன்ற ஒன்றை 2018 லேயே எதிர்பார்த்தேன். 3 வருடத்தாமதம் என்றாலும், எப்போதும், எங்கிருந்தும் வாழ்வை ஆரம்பிக்கலாம் என்பதால் இறையை வேண்டி துணிவுடன் பயணம் தொடர்கிறேன்!

நாசியைத் தீண்டாத வாசனைகள்

தீபாவளி வாரயிறுதியில் தென்காசி-மதுரைக்குப்போய்விட்டு மழையில் தள்ளாடிக்கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தேன். அடுத்த நாளே ஜலதோஷம் பிடித்துக்கொண்டது.

இரண்டு நாள் தற்சார்பு மருந்துகளுடன் போராடிவிட்டு மருத்துவரிடம் சென்றபோது தொண்டை தொடர்பான பிரச்னைகள் இல்லாததாலும், ஜூரம் இல்லாததாலும் சளியைக்கரைக்கும் மருந்துகளை எழுதிக்கொடுத்திருந்தார். அதற்குப்பிறகுதான் இந்த உண்மையான சோதனை தொடங்கியது. நாசிக்கு எந்த வாசனையும் வரவில்லை.

கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ என ஆண்டாளை அடியொற்றி சோப்பு மணக்குமா, ஷாம்பு மணக்குமோ, என்றுமே நாறாத வேல்ஸ் சாம்பிராணியின் மணமும்தான் வந்து தீண்டுமோ என வரிசையாக வீட்டில் எனக்குப்பிடித்த அத்தனை வாசனை விஷயங்களையும் ஒவ்வொன்றாக முகர்ந்துகொண்டேயிருந்தேன். எதற்கும் பலனில்லை.

வெந்நீர் போடுவதற்காக கொல்லை அடுப்புகளில் மூட்டப்படும் தீயிலிருந்து எழும் அதிகாலைப்புகை மணம் ஒன்று இருக்குமே, அது போல ஏதோவொரு பெயர் சொல்லா புகைமணம் மட்டும் அடி நாசியில் குடிகொண்டிருந்தது. இந்த புகைமணம் சட்டென்று ஏறும், இறங்கும் வீட்டின் வாசனைகளுக்கொப்ப. உதாரணமாக சமையறையில் ஏதேனும் அதீத மணம் எழுந்தால், இந்த புகை நாற்றம் அதன் உச்சத்தைத்தொடும், அதன் மூலமாக வயிற்றுப்பிரட்டல் வேறு.

இதற்குப்பிறகு சுவை நரம்புகளும் காணாமற்போயின. காஃபி, பொங்கல், கருவேப்பிலை கொத்தமல்லி தொடங்கி பூண்டு,வெங்காயம் வரையிலா எல்லாச்சுவைகளும் மட்டுப்பட்டு வெந்நீர் மட்டுமே தேவாமிர்தமாக இனித்தது. சுடச்சுட உண்ணவேண்டும் என்ற அறிவுரையால் கிடைத்த எல்லா சூட்டுதிரவங்களிலும் லேசான புளிப்புச்சுவை ஒன்று மேலேறி வந்ததால், அதுவே முழு நாளுக்கும் போதும் என்று தோன்றியது.

வாசனையும், சுவையுமில்லாமல் ஒரு மனிதன் வாழ்வைக்கடப்பதென்பதுதான் துறவா என்று எண்ண வைத்தது. ஏதேனும் ஒரே ஒரு வாசனையையாவது இந்த நாசி கொண்டுவிடாதா என ஒரு சிறு நாய்க்குட்டி முகர்ந்து முகர்ந்து தன் உணவைத்தேடிக்கொண்டே இருப்பதுபோல இல்லம் முழுதும் வெகுண்டு வெறிகொண்டு மூக்கை உறிஞ்சி உறிஞ்சி தேடிக்கொண்டே இருந்தேன்.

நாட்கள் செல்லச்செல்ல பயமும் அதிகரித்தது. மருத்துவர் ஆறுதலளித்தார். இந்த அறிகுறி தொண்டையைத்தீண்டி கீழே செல்லாத வரையில் அவர் எழுதிக்கொடுத்த மருந்துகளும், நல்ல உணவும், ஆவிபிடித்தலும்தான் மருந்துகள் என்றார். எந்தச்சுவையும் இல்லாவிடினும், உணவுகொள்ளுதலுக்கான வேட்கை நிற்கவே இல்லை. ஏதேனும் உள்சென்றுகொண்டிருந்தது. ஆனால் மணமேதும் ஏறாமல், அந்த ஒற்றைப்புகை மணத்தை மட்டுமே கொண்டிருந்த நாசியைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏகப்பட்ட மனவழுத்தம்.

”எல்லாவற்றிற்கும் ஒரு ப்ரேக்கிக் பாயிண்ட் உள்ளது” என குருதிப்புனலில் கமலஹாசன் சொல்லியிருக்கிறார் இல்லையா? அது இந்த நாசியடைப்பிற்கும் வந்தது. இன்னொரு மழை நாள். இன்னொரு வீடடைப்பு. அந்த முற்பகலில், புகை வாசனை போக வேறு ஏதோ ஒன்று புலப்பட்டது. முதலில் லேசாக, பின்னர் மெதுவாக அதன் வீரியம் அதிகரித்தது. வழக்கம்போலவெ ஒரு சிறு நாய்க்குட்டியென முகர்ந்து முகர்ந்து சமயலறைக்குச்செல்லும் முன்னரே, நாசி சில நாட்களுக்குப்பின்னர் கண்டறியும் முதல் மணத்தை வெகு நாட்கள் கழிந்து பிரிந்த காதலியை அணைவது போல சட்டென உள்ளிழுத்துக்கொண்டது.

கத்திரிக்காய் செய்வதற்காக, தனியா+மிளகாய்+உ.பருப்பு இத்யாதிகளோடு செய்யப்பட்ட அந்தப்பொடிதான் இத்தனை நாள் புகை மணத்தோடு இருந்த நாசியை மீட்ட முதல் மணமாய் அமைந்தது. அந்த முதல் மூமெண்டுக்கு பிறகு மெள்ள மெள்ள நாசி ஒவ்வொரு வாசனையாய் மீட்டுக்கொண்டு வந்த தருணங்களை தஞ்சாவூர் கல்வெட்டுக்கு இணையாக மனதில் குறித்துவைத்துக்கொண்டே வந்திருக்கிறேன்.

கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மட்டுமே துறவறம் சென்ற இந்த சுவையும், வாசனையும் வாழ்விற்கு எத்தனை வசந்தங்களை என்னையறியாமலேயே கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன என்பதை அறியத்தந்த ஒரு பாடமாக இதனை எடுத்துக்கொள்கிறேன். ஒரு சிறுதுளையின் வழி செல்லும் காற்றை இசையாக மாற்றும் குழல் போலத்தான், நாசியின் இந்த இரு துளைகளும். எத்தனை மணங்களை மனதிற்கினியதாக மாற்றி வழங்கிக்கொண்டே இருந்திருக்கின்றன என எண்ணி எண்ணி வியக்கிறேன்.

பல வருடங்களாக கத்திரிக்காய் மீது என் உடலுக்கும் மனதுக்கும் இருந்த ஒவ்வாமையைக்கூட கடந்த அத்தருணத்தில் காதலாக மாற்றி வைத்திருக்கிறேன்.

நிஷாகந்தியின் குரல்

என் மனதுக்கு மிக நெருக்கமான “நித்திரை அழகியின் நிஷாகந்திப்பூ” நெடுங்கதைக்கு இது நாள் வரை என் குரல்தான் அடையாளம். என் குரல்வடிவில்தான் அதன் பாத்திரங்களை மனதுக்குள் பேசவிட்டு எழுதினேன். படித்தவர்களுக்கும் என் குரல்தான் அதில் பரிச்சியமாய் ஒலித்திருக்கும்.

இன்று முதல் அதற்கு என்னைவிட பன்மடங்கு சிறப்பான மற்றுமொரு அடையாளமாக திருமதி. Fathima Babu அவர்களின் குரலும் சேர்ந்திருக்கிறது. இதனை அவர்கள் வாசித்துமுடித்தபோது இந்தக்கதை வாசித்தவர்களுக்கு கிடைத்த “haunting” அனுபவம் இன்னும் சில மடங்குகள் அதிகமாக கேட்டவர்களுக்கும் கிடைத்தது.

இது 40 நிமிடங்கள் வரை போகக்கூடிய ஒரு குறுநாவல். இதனை அவர்கள் வாசிக்கக்கேட்டபோது வாசிக்க அதிக நேரம் எடுக்குமே என்ற தயக்கத்துடனேயேதான் கொடுத்தேன். ஆனால் அவர்கள் அதனால் என்ன என்ற பெருந்தன்மையோடு எடுத்து, மிகச்சிறப்பாக வாசித்தார்கள்.

40 நிமிடங்களும் குரலில் எந்தத்தொய்வும் இன்றி, பாத்திரங்களுக்கு கனகச்சிதமான குரல் கொடுத்து, உணர்வுகளை சற்றும் பிசகாமல் நிலை நிறுத்தி ஒரு பேரற்புதமென இதனை நிகழ்த்தினார்கள்.அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.கீழ்க்கண்ட இணைப்படைச்சொடுக்கி கதை கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=ezW8UwsVyjY

கதையை இங்கு படிக்கலாம்

https://kundahmusicseries.wordpress.com/2014/11/15/nishagandhi/

பல்லாவரம் ரிட்டர்னும், சுகந்தமாலினியும்:

ஒரு மலைக்கிராமத்தில் இயற்கையும்,அமைதியும் சூழ வாழ்ந்த எனக்கு, பொருள்தேடி சென்னை வந்த முதல் சில மாதங்கள் கொடுத்த அலைதலையும், அயர்ச்சியையும் மறக்கவே இயலாது.

இரைச்சலும், நெரிசலும், வியர்வையும், அழுக்குமென ஏதோ ஒரு வேற்றுக்கிரகத்தில் தண்டனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட கைதியென உணர்ந்த ஆரம்ப நாட்கள் அவை. ஏற்கனவே நிரம்பிவிட்ட ஒரு பெரும்துணிப்பொதியை அழுத்தி அழுத்தி மேலும் துணிகளைச்சேர்ப்பதுபோல, காலை நேரப்பேருந்துகளில் பெருங்கூட்டத்தினூடே ஏறி, நுழைந்து, கூட்டத்தாலேயே நகர்த்தப்பட்டு வியர்வை மழையில் நனைந்து, கசக்கித்தூக்கியெறிந்த காகிதம் போல அலுவலகம் வந்து சேரும் அந்தக்கடுங்காலைகளை இன்னும் பல இரவுகளின் கொடுங்கனவுகள் நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தன.

பேருந்துகளில்தான் இந்தக்கதியென்று, ரயிலுக்கு மாறினால் (அந்தக்கால மீட்டர் கேஜ்) ரயில்கள் இன்னும் மின்சார ஆபத்தோடு கூடிய அதே நெரிசல்களையும், அயர்வுகளையும் சற்றும் மாறாமல் கொண்டிருந்தது. ஏனோ தாமதமாகி அவசர அவசரமாக ரயில் பிடிக்க வந்த ஒரு நாளில்தான் பல்லாவரத்திலிருந்தே தினமும் கிளம்பும் ஒரு சிறப்பு ரயில் ஒன்று உண்டென்று தெரியவந்தது. முதன்முதல் இருக்கையில் அமர்ந்து, சன்னல் வழிக்காற்று வாங்கி, ஆசுவாசமாக அலுவலகம் சென்ற அந்த நாளில் சென்னை அழகாகத்தெரிய ஆரம்பித்தது. மிகச்சரியாக சென்னை என்னை அடையாளம்கண்டுகொண்டது. நான் அதன் விரல்களைப்பற்றிக்கொண்டு பயணிக்க ஆரம்பித்த முதல் தருணம் அது. அப்படித்தான் பல்லாவரம் ரிட்டர்ன் எனக்கு அறிமுகமானது.

தினமும் காலை 09:20 க்கு பல்லாவரத்திலிருந்து கிளம்பி, கடற்கரை ரயில் நிலையம் செல்லும் அந்த மின்சார ரயிலின் பிரத்யேகங்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. 7-9 மணிக்கு பேருத்து பிடிக்க ஓடிவரும் மக்களின் பரபரப்பின் சாயல் ஏதுமின்றி இருந்தனர் இந்த வர்க்கத்தினர். பெரும்பாலும் 10 மணி அரசு அலுவலகங்களுக்குப்போவோர்தான் இதன் பிரதான பயணிகள். என்றாலும், சற்று நேரமானாலும் நெரிசலின்றி பயணிக்கலாம் என்று வருவோரும் உண்டு.

திருப்புகழ் கம்பார்ட்மெண்ட், திரைப்பாடல் கம்பார்ட்மெண்ட், சீட்டுக்கச்சேரி கம்பார்ட்மெண்ட், ட்ரேடிங் உரையாடல் கம்பார்ட்மெண்ட் என்று ஒவ்வொரு பெட்டிக்கும் ஒவ்வொரு குழுவினர் உண்டு. எவரவர்க்கு எது ஆர்வமோ அதைக்கேட்டபடி பயணிப்பது பெரும் சுவாரசியமாக இருந்தது. சென்னையில் பன்முகபிரவாகத்தை பல்லாவரம் ரிட்டர்னில்தான் கண்டுகொண்டேன், பின்பு அதனோடே பலவருடங்கள் பயணித்தேன்.

தினமும் பயணிக்க ஆரம்பித்தபிறகு அதே நேரத்தில் பயணிக்கும் பலரது முகங்களும் பரிச்சியமாகத்தொடங்கியபோதுதான் அவர்களிருவரையும் கவனிக்கத்தொடங்கியிருந்தேன்.

அவன்தான் எப்போதும் முதலில் வருவான், அவள் எப்போதும் மிகச்சரியாக 9:18 லிருந்து 9:19க்குள்தான் வருவாள். வியர்வையில் நனைந்திருப்பாள். இவன் கைக்குட்டையைக்கொடுத்து துடைத்துக்கொள்ளச்சொல்வான், வெட்கத்தோடு அவளும் துடைத்துக்கொள்வாள். மெல்லிய குரலில் அவர்களிருவருக்கும் கேட்கும்படி பேசிக்கொள்வார்கள்.

எப்போதும் புத்தகக்கடைக்கு எதிரே இருக்கும் ரயில்பெட்டியில் ஏறி கடைசி இரண்டு இருக்கைகளை அடைவார்கள். இணைந்து வாக்மேன் கேட்பார்கள், புத்தகம் படிப்பார்கள், வேடிப்பை பார்ப்பார்கள், நகைச்சுவைகளை அவர்கள் காதுகளுக்கும், மனங்களுக்குமென பகிர்ந்து கொண்டு சிரிப்பார்கள், வெள்ளி தோறும் ஆனந்தவிகடன் வாங்கி இருவரும் இணைந்து வாசித்தபடியே வருவார்கள், தாமஸ் மவுண்ட்டை கடக்கும்போது தவறாது அதனைப்பார்த்து ஏதோ சொல்லியபடியே வருவார்கள். என் கவனத்தை ஈர்த்த ஜோடிகள். சில நாட்கள் அவள் வராது இவன் வாடிப்போய் பயணித்தலை பார்த்திருக்கிறேன். அவள் மேல் கோபம் வந்திருக்கிறது. அடுத்த நாள் சிறு சலனமும் இன்றி அவள் முகம் பார்த்துப்பூப்பான்.

ஆனால் அவன் வராத நாட்களில் இவளிடம் எந்த வாடலும் இருப்பதில்லை. காத்திருத்தலும், தேடலும் கூட இருந்ததில்லை.  ஒருவேளை அவன் ஏற்கனவே தன் வாராதிருத்தலை இவளிடம் பகிர்ந்திருக்கலாமோ என்னவோ. நான் போகமுடியாத நாட்களிலும் கூட மிகச்சரியாக 9:20க்கு அவர்கள் நினைவு வரும் அளவிற்கு அவர்களை கவனிக்க ஆரம்பித்திருந்தேன்.

சில மாதங்களில் அவர்களின் உறவு கனிந்திருந்தது. நெருக்கத்தை உணரமுடிந்தது. மாம்பலத்தில் இறங்கும் அவர்கள், நான் கோடம்பாக்கத்தில் இறங்கிய பிறகும் பயணிக்கும் இடம் எது என்று எண்ணங்கள் ஓடின. அவர்களின் படிப்புகள், பாடல் கேட்கும் காலங்கள் தாண்டி, கைகோர்த்தல்கள், தோள்சாய்தல்களின் காலம் ஆரம்பித்திருந்தன.

என் கண்தான் பட்டிருக்கவேண்டும்.  அடுத்த சில மாதங்களிலேயே அவர்கள் உறவின் கார்காலத்தையும் நான் பார்க்க ஆரம்பித்திருந்தேன். இப்போதும் அந்தப்பையன் சலமற்றுத்தான் இருந்தான். ஒரு நாள் பயணத்தில் சட்டென பெருங்குரலெடுத்து எழுந்துஅவள்தான் ஏதோ கூறினாள், அவன் பதறி அவள் கையைப்பிடித்து அவளை அமர வைக்கப்பார்த்தான். லேசான அழுகையுடன் அவள் கிண்டியில் இறங்கிச்சென்றாள். இவன் பிந்தொடர்ந்து சென்றான். அடுத்தடுத்த நாட்களில் அவர்களின் முகங்கள் சரியில்லை. சில நாட்கள் பழையை மலர்ச்சியைப்பார்க்க முடிந்தாலும், அந்த நெருக்கத்தைக்காண முடிந்ததேயில்லை.

ஒரு வெள்ளிக்கிழமை. வழக்கத்துக்கு மாறாக அவள் முன்னதாக ஸ்டேஷனுக்கு வந்துவிட்டாள். அவனுக்காகக்காத்திருந்தாள், அலைபாய்ந்தாள். அவன் அவள் நேரத்திற்கு வந்தான். வந்த நேரம் முதலாய் வழியும் கண்ணீரை அவள் துடைக்கவேயில்லை என்பதைப்பார்த்தேன். அவன் அசையாது தலை குனிந்து தன் விரல்களை பரிசோதித்த வண்ணமாயும், சன்னல் வழி வெளியே பார்த்தவாருமே இருந்தான். 10 நிமிடங்கள் இருக்கலாம். வண்டி மீனம்பாக்கத்தில் நின்றபோது இறங்கிப்போய்விட்டான். அவளும் போவாளென நினைத்த என் எண்ணத்தை மாற்றினாள். வழிந்த கண்ணீரைத்துடைத்துக்கொண்டாள். சற்று சாய்ந்து அமர்ந்துகொண்டு கண்ணை மூடிக்கொண்டு வாக்மேனை காதுகளுக்குக்கொடுத்தாள்.

அன்றுதான் அவனைப்பார்த்த கடைசி நாள். பிறகு பல்லாவரம் ரிட்டர்னுக்கு அவன் வருவதேயில்லை. ஆனால் அடுத்த ஒரு வருடம் நான் பயணித்த நாட்கள் பெரும்பாலானவற்றில் இந்தப்பெண்ணை தொடர்ந்து பார்த்து வந்தேன். அவள் புத்தககடைக்கு அருகே நிற்கும் ரயில் பெட்டியில் பின்னர் ஏறுவதில்லை. அது ஒன்றுதான் மாற்றம். புத்தகம் படித்தாள், வாக்மேன் கேட்டாள், வெள்ளிக்கிழமை வாரம்தவறாது விகடன் வாங்கிப்படித்தாள், மவுண்ட் கடக்கும்போது தவறாது உச்சிமலையை அப்போதுதான் முதலில் பார்ப்பது போல வேடிக்கை பார்த்தாள்.

எனக்குத்தான் இவளுடன் பயணித்த அவன் நினைவு வாழ்வின் பல தருணங்கள் வரை கூடவே வந்துகொண்டிருந்தது. பல்லாவரம் ரிட்டர்ன் விட்டு பொருள் தேடி விமானமேறி வெளி நாடு பயணித்த பின்னும் நீங்காத நினைவென அவர்கள் இருவரின் நினைவு நீண்டுகொண்டே இருந்தது.

ஏதோ ஒருவகையில் அதை இறக்கி வைக்க எண்ணிதான் ”சுகந்தமாலினி” எனும் இப்புனைவை எழுதினேன். இதில் எனக்கு மிகவும் பிடித்த அமானுஷயத்தை இறுதியாக இணைத்ததை பெரும்பாலானோர் விரும்பவில்லை. ஆயினும் எனக்குப்பிடித்த முடிவு இதுதான் என்பதால் அதை மாற்றிக்கொள்ளவும் எண்ணவில்லை.

நேற்று இக்கதையை தன்னுடைய அற்புதமான குரலினாலும், பிரமாதமான பாவங்களினாலும் இன்னொரு உயரத்திற்கு கொண்டுசென்றார்கள்
திருமதி.ஃபாத்திமா பாபு அவர்கள். அவர்கள் குரலில் சுகந்தமாலினி கதையைக்கேட்க

https://www.youtube.com/watch?v=3KGkVxfoP-w

கதையின் இணைப்பு இங்கே

https://sivaramang.wordpress.com/…/%E0%AE%9A%E0%AF%81…/

உயிர்மை 200வது இதழ்

உயிர்மையின் 200வது இதழ் சற்று தாமதமாக நேற்றுதான் வந்து சேர்ந்தது.

வெளிவந்த முதல் இதழைக்காத்திருந்து வாங்கியதிலிருந்து, கிட்டத்தட்ட 5 வருடங்கள் தொடர்ந்து வீட்டுக்கு வருவிக்கப்பட்டு, சில மாதங்கள் இடைவெளிவிட்டு துபாய்க்கு அனுப்பப்பட்டு படித்து ருசித்த அனுபவங்களெல்லாம் இருக்கின்றன.

இடையில் முற்றிலும் சிறுகதைகள் , சூழியல் கட்டுரைகள் துறந்து, தரம் குன்றி, முழுக்க அரசியல் சார்பிதழாகிப்போனபோது படிப்பதை நிறுத்தினேன்.

இப்போது மீண்டும் முதலிதழின் அதே வாசனையோடு, காத்திரத்தோடு, நற்கலைஞர்களின் நல்ல படைப்புகளோடு சுவாரசியமான இதழாக வந்திருக்கிறது.

அவசியம் வாசித்து பத்திரப்படுத்த வேண்டிய இதழ்.

உயிர்மை 200வது இதழ்

இரண்டு தாலிக்காட்சிகள்

திருமணமாகி மனைவிக்கு துபாய் வந்த புதிதில் மெடிகல் டெஸ்ட் எடுப்பதற்காக நாலேட்ஜ் வில்லேஜில் (Knowledge village) ல் இருக்கும் க்ளீனிக்குக்கு கூட்டிச்சென்றிருந்தேன். புதிய இடம், புதிய நாடு, மொழி போதாமை போன்ற கவலைகளால் ஏற்கனவே மிரட்சியாக இருந்த அவரை சற்று பதவுசாகத்தான் ஒவ்வொரு விஷயமாகப்பழக்கிக்கொண்டிருந்தேன்.

இந்த மெடிகல் டெஸ்ட் எடுக்கச்சென்ற இடத்தில் எக்ஸ்-ரே வுக்கான அறையின் வெளியே காத்த்துக்கொண்டிருந்த சில நிமிடங்களில் கிட்டத்தட்ட கலங்கிய விழிகளுடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தார். என்னவோ ஏதோ என்று ரொம்பவும் பயந்து போனேன். பிறகு மெல்ல காதுக்கருகில், ”எக்ஸ் ரே எடுக்கறதுக்காக தாலியையும் கழட்டணும்கிறாங்க” என்றார் பெருங்கவலை தோய்ந்த முகத்துடனும், கண்ணீர் பெருகிய விழிகளுடன்.

பிறகு அந்த லெபானிய நர்ஸை அணுகி (என்ன ஒரு சருமம் அவருக்கு!! அல்லது ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு) தாலி என்பது தமிழ்ப்பெண்களுக்கு எவ்வளவு பெரிய செண்டிமெண்டல் விஷயம் என்பதையும், புனிதம் என்பதையும், எப்படி திருமண மோதிரத்தை மேற்கு போற்றுகிறதோ அதைப்போன்றே இது தென்னிந்தியாவின் பண்பாடு என்பதையும் வி.சேகர் திரைப்படக்காட்சி போல விவரித்துச்சொன்னேன். மிகுந்த வாஞ்சையோடு அணைத்துக்கொண்டு (மனைவியைத்தான்), வெரி சாரி டியர். என்றார்.

அந்த எக்ஸ்ரே வைபவம் அங்கே நல்லபடியாக நிறைந்தது.

ஆச்சா

இன்றைக்கு காலையில் பெரும்பாக்கம் பஞ்சாயத்தில் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ளச்சென்றோம். 310 தடுப்பூசிகள் அலாட் ஆகியிருந்தன அந்த மையத்திற்கு. கிட்டத்தட்ட 10 பேர்தான் இருந்தோம். அங்கே இருந்த செயலாளர் யாரேனும் சுற்றத்தில் செலுத்திக்கொள்ளாதவர்கள் இருந்தால் தகவல் சொல்லுங்கள் என்றார். 3 மாதங்களுக்கு முன்னால் திருமணமாகி பெரும்பாக்கத்தில் செட்டில் ஆகியிருந்த மனைவியின் தூரத்து அக்கா பெண்ணை அழைத்து மனைவி விபரம் சொன்னார். சற்று நேரத்தில் அந்தப்பெண்ணும் வந்தது.

சாதாரண முகமன்களுக்குப்பிறகு மனைவி அந்தப்பெண்ணின் காதோரமாக கிசுகிசுப்பாக ( இந்த கிசுகிசுப்புகளையெல்லாம் கேட்பதற்குத்தானே செவிச்செல்வம் எனக்கு வழங்கப்பட்டிருக்கிற்து!) ”தாலி எங்கடி” என்றார் சற்றே பல்லைக்கடித்தவாறே. அதற்கு 97ல் பிறந்த குழந்தை “இந்த வெயில்ல இவ்ளோ டிரஸ்ஸைப்போடறதே எரிச்சலா வர்றது சித்தி இதுல அது வேறயா, சரியான வெயிட் வேற, அதான் வெளில போகும்போது கழட்டி வச்சுட்றது.” என்றது.

சுபம்.

குமாஸ்தா பணியும், எரிச்சலும்

சிறிய வயதிலிருந்தே குமாஸ்தா பணியில் இருப்பவர்களுக்கு கூடேயே இருக்கும் ஒருவித எரிச்சலை பார்த்தே வளர்ந்திருக்கிறேன். அரசுப்பணியில் இருப்பார்கள், நல்ல சம்பளம் இருக்கும், கடினமான பணி என்றெல்லாம் சொல்லிவிடமுடியாத, புதிதாக ஒன்றை உருவாக்குகிற கிரியேட்டிவ் பணிகளாகவும் இருக்காது. ஆனால் பணி சார்ந்து எரிச்சல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். நிறைய யோசித்திருக்கிறேன் ஏன் இந்தப்பணிக்கு இவ்வளாவு எரிச்சலென்று. புதிரான பகுதியாகவே இருந்தது இது நாள் வரைக்கும்.

கடந்த இரு நாட்களாக அலுவலகத்தின் இப்போதிருக்கும் ஒரு ப்ராஜக்டின் உரிமையாளருக்கு அவருடைய கனடா installers க்கென இருக்கும் இணையச்செயலியை புதிதாக வடிவமைக்கும் ஒரு POC பணி. சற்றே பெரிய பில் என்பதாலும், ப்ராஜக்ட் நமக்கே கிடைக்க வேண்டுமென்பதாலும் குழுவில் பணிகளை பங்கிட்டு எல்லாருமாகச்செய்கிறோம்.

அதில் இப்போது இருக்கும் மென்பொருளில் இருக்கும் ரிப்போர்ட்களைத்தொகுக்கும் பணி எனக்கு வந்தது. இப்போதைய மென்பொருளில் இருக்கும் ரிப்போர்ட்களை தொகுத்து ஒரு word கோப்பாக மாற்ற வேண்டும். மேலோட்டமாக எளிதான பணியாகத்தோன்றினாலும் அவர்களிடம் இருக்கும் 500+ ரிப்போர்ட்களை படியெடுத்து விபரங்கள் எழுதி அதனை கோப்பாக மாற்றிய இந்த இரண்டு நாட்களும் எரிச்சலின் உச்சத்தில் இருந்தேன்.

எந்த கிரியேட்டிவ் பிராசஸும் இல்லாத இந்த வெட்டி ஒட்டல் பணி அவ்வளவு அழுததத்தையும், கடும் மன உளச்சலையும், முதுகு வலி முதலான இத்யாதிகளையும் எளிதில் கொண்டுவந்தது.

”சும்மா இருக்கறது ஒண்ணும் அவ்வளவு ஈசி இல்லை” என்று சொன்ன வடிவேலுவும், எளிய பணி செய்வதற்கு ஏன் எரிச்சற்படுகிறார்கள் என்றெண்ணிய என் சிறுவயது குமாஸ்தா மாமாக்களும் கண்முன் தோன்றினார்கள்.

எப்போதும் வாழ்வில் இக்கரைக்கு அக்கரை பச்சையாகவேதான் இருக்கிறது.