JUBILEE



ஹிமான்ஷூ ராய், தேவிகா ராணி என்னும் தம்பதிகள் பாம்பே டாக்கீஸ் என்ற பிரம்மாண்ட ஸ்டூடியோ ஒன்றை 1930 களில் மும்பையில் நடத்திக்கொண்டிருந்தனர். 1935ம் வருடம் ஹிமான்ஷூ தயாரிப்பில், தேவிகா ராணி ஹீரோயினாகவும், புதுமுக நடிகரான நஜ்முல் ஹசனும் இணைந்து நடித்த ”ஜவானி கி ஹவா” (இளமைக்காற்று) என்ற திரைப்படம் சில்வர் ஜுப்ளி கண்டது. அத்தனை கூட்டமும் பேரழகியான தேவிகாவைப்பார்க்கத்தான் வந்தன என்றாலும், நஜ்முல் – தேவிகா ஜோடியின் செண்டிமெண்ட் காரணமாக ஹிமான்ஷூ அடுத்த படத்தையும் இவ்விருவரையும் வைத்தே துவக்கினார்.

காலம் செய்த கோலம், ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே அவர்களிருவருக்கும் காதல் மலர்ந்தது. கோடீஸ்வர பார்ட்னரான ஹிமான்ஷூவை விட்டு, அறிமுக நடிகர் நஜ்முல் ஹஸனுடன் தேவிகா ஊரை விட்டே ஓடிப்போனார். படம் பாதியில் நின்ற வருத்தம் ஒருபுறம், மனைவி தான் வளர்த்த கடாவுடன் ஓடிப்போன கோபம் ஒருபுறமுமாக ஹிமான்ஷூ செய்வதறியாது தவித்தார்.

முதலாளியின் தவிப்பைத்தாளாத, ஷஷாதர் முகர்ஜி என்ற விசுவாச வேலைக்காரர் ஒருவர் கல்கத்தாவிற்குச்சென்று ஓடிப்போன காதல் ஜோடிகளை மீட்டு வந்து ஹிமான்ஷுவிடம் சேர்த்தார். நஜ்முல் ஹசன் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். சொந்தக்காரணமோ தொழிற்காரணமோ தெரியவில்லை ஏனோ தேவிகாவை எச்சரிக்கை செய்து தன்னுடன் மீண்டும் சேர்த்துக்கொண்டார் ஹிமான்ஷூ.

விசுவாச வேலைக்காரனான ஷஷாதரிடம் நஜ்முல் ஹசனுக்கு பதிலாக தன் புதிய கதாநாயகனைத்தேடும் பொறுப்பைக்கொடுத்தார்.  ஷஷாதர் அதற்கென பெரிதாக மெனெக்கெடாமல் தன் உறவினரான, குமுத்கால் கங்குலியை முதலாளியிடம் அறிமுகப்படுத்தினார்.

சற்றும் யோசிக்காமல், முகர்ஜி, கங்குலியைதனது புதிய திரைப்படத்திற்கு கதா நாயகனாக்கினார். அந்தப்படம் ”ஜீவன் நையா”. அந்த கங்குலிக்கு சூட்டப்பட்ட புதிய பெயர் – அஷோக்குமார். ஆம், நாம் அனைவரும் அறிந்த பின்னாளில் பாலிவுட் சூப்பர்ஸ்டாராக கோலோச்சிய அதே அஷோக்குமார்.

சரி மேலே சொன்ன நாலு பத்திக்கதைதான் JUBILEE இணையத்தொடரின் மொத்தக்கதையா என்றால், இல்லவே இல்லை. இதுதான் ஆரம்பமுடிச்சு.  இங்கே சொல்லப்பட்டது ஒரு பனிப்பாறையின் சிறிய முனை. தொடரின் முதல் அத்தியாயத்திலேயே இது உடைக்கப்படுகிறது. இந்த உண்மைக்கதைக்கு மேல் புனைந்து புனைந்து ஒரு காவியத்தை வைர ஜரிகளால் கோத்துக்கொடுத்திருக்கிறார் இதன் இயக்குநர் விக்ரமாதித்ய மோத்வானே.

*

மனதிற்குப் பிடித்த திரைப்படங்களை நல்ல படைப்பு, சிறந்த படைப்பு, காவியம் என்று வரிசைப்படுத்துவோம். இந்த வரிசையில் முதல் இரண்டு இடங்களை அவ்வப்போது சில திரைப்படங்கள் நிரப்பிவிடுகின்றன. அந்த மூன்றாவது காவிய அனுபவம் அமைவதென்பது இந்த mediocre உலகத்தில் மிக மிக அரிதாகிவிட்டது. அப்படி ஒன்று அமையும்போது அது பெருமகிழ்வு தந்து, நம் ஆழ்மனதை அசைத்துப்பார்த்து, பலமுறை அசைபோடச்செய்து, நினைக்கும்போதெல்லாம் அதன் காவியத்தன்மை கொண்டு நம்மை கட்டிப்போடுகிறது.

Jubilee என்னும் இந்த இணையத்தொடர் அப்படிப்பட்ட ஒன்று. மிக நேர்த்தியாக, செம்மையாக, மிகப்பிரமாதமாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு நாவலை மெள்ள மெள்ள உள்வாங்கி அதன் ஒவ்வொரு தருணத்தையும் ரசிப்பது போல இதன் எல்லா கதாபாத்திரங்களும், தருணங்களும், காட்சிகளும், நினைவுகளும் நெடுநாள்கள் மனதை விட்டு நீங்காத செவ்வியல் தன்மை கொண்டன.

1940 க,ளில் பாம்பேயில் நிகழத்தொடங்கியிருந்த பாலிவுட் சினிமா புரட்சியின் ஆரம்ப நாள்களில்தான் இந்தக்கதை நிகழ்கிறது. திரைத்தொழில் சார்ந்து வாழும் மனிதர்கள். அவர்களின் உறவுச்சிக்கல்கள், காதல், துரோகம், வாழ்வியல் தருணங்கள் என ஒரு நல்ல நாவல் வாசிப்பது போன்ற மிக நிதானமாக ஒவ்வொரு கணத்தையும் நம் மனதிற்குள் மிக மென்மையாக ஆனால் அழுத்தமாக விதைத்துச்செல்கிறது.

நாடக மேடைகள் நலிந்து, பாக்ஸ் ஆஃபீஸ் எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த காலம், சுதந்திரம் கிடைத்து பிரிவினை கால கலவரங்கள் மேலெழெந்து கொண்டிருந்த காலம், புதிய நாட்டின் வண்ணக்கனவுகள் ஒருபுறம், பழைய பிரிவினையின் கசப்பான நினைவுகள் ஒருபுறமென மக்கள் தடுமாறிக்கொண்டிருந்த காலம். இதே காலத்தில் இன்னொரு இணை உலகில் புகழுக்கும், பணத்திற்கும் சினிமாவை முன்னிருத்தித் துரத்தும் ஜிகினாக்கனவுகளின் உலகத்தில் புகுந்து புறப்பட்டிருக்கிறது இந்தக் கதைக்களம்.

அந்த காலகட்டத்தை உருத்தாமல் பதிவு செய்யும் அரங்கங்கள், வண்ணங்கள், இவை கணினியில் புனையப்பட்டவைதானா என நம்பமுடியாத வரைகலைகள் என பார்த்துப்பார்த்து கோத்திருக்கிறார்கள், கதையின் தடம் வழுவாது.

ஒரு பெரிய களம் பற்றிய புனைவு என்றால், அதை முழுமையும் புனைவாக எழுதிவிட்டால் வெகு எளிதாக செயற்கைப்பூச்சின் பாய்ச்சல் தெரிந்துவிடும். ஆனால் இந்தத் தொடரின் எழுத்தாளர்கள் உண்மையிலேயே நாற்பதுகளில் நிகழ்ந்த ஒரு பாலிவுட் கதையை எடுத்துக்கொண்டு அதன் மேல் கற்பனைப்பூச்சை தவழவிட்டிருக்கிறார்கள்.

இந்தக்கதைக்கும் திரைக்கதைக்கும் புனையப்பட்ட பாத்திரங்களுக்கும் தோதாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒளிப்பதிவும், இசையும் அதன் காவியத்தன்மையை இன்னும் ஒருபடி மேலே சென்று இருத்திவைக்கின்றன. இளைஞர்களின் மனதறிந்து சமகால ஹிந்தி இசையை வழங்கிக்கொண்டிருக்கும் அமித் திரிவேதி இதில் பழைய ஹிந்திப்பாடல்களின் சாயலோடு இசைத்து உருவாக்கியிருக்கும் மொத்த ஆல்பமும் செவியின்பத்தை வாரியிறைப்பன. தொடர் பார்க்க நேரமில்லாதவர்கள் கூட இந்த இசையைக்கேட்டு முடித்தபின், எப்படி இதைப்படமாக்கியிருப்பார்கள் என்ற ஆவலில் தொடரைப்பார்க்கத்தூண்டுமளவிற்கு இந்தப் பாடல்களின் தனித்தன்மை எல்லோரையும் ஈர்ப்பன.

இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நடிகர்கள், நடிகைகள் பெரும்பாலானோர் இதுவரை முறையான வாய்ப்புக்கிட்டாதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். (சுமித்ரா தேவி என்ற கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியிருக்கும் அதிதி ராவ் ஹயாத்ரி தவிர). ஆனால் ஒவ்வொருவரின் முகமும் பார்த்துமுடித்தபின் அவர்களின் கதாபாத்திரத்தைச்சார்ந்து இனி ஒருபோதும் மனதை விட்டு அகலாது இருக்கும்.

*

எப்படி இந்தத்தொடர் காவியத்தன்மையை அடைகிறது.

  1. களம் : சுதந்திரம் அடைந்த காலத்தில் கலவரங்கள், குழப்பங்கள், பிரிவினை என்று ஏகப்பட்ட அமர்க்களங்களுக்கிடையே இதன் சுவடே இல்லாமல், இந்த பாதிப்பின் சாயல் தீண்டாத உயரத்தில் ஒரு தனி உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்தக்களத்தை அதன் பழமை மாறாமல் எடுத்து அறிவித்து, தீர்க்கமாக அதனை வரையறை செய்து கேமராவுக்குள் அடக்கியிருப்பது பெரும்பலம்
  2. இசை: 40 களின் இசையை அச்சுப்பிசகாமல், பழைய பாடல்களை பழமை மாறாமலேயே மறு இசை அமைத்து மிக மிக இனிய பாடல்களை அதன் தேவைக்கேற்ப தொடரின் உபயோகப்படுத்தியிருப்பது.
  3. கதாபாத்திரங்கள் :  அடைந்த புகழை தக்கவைப்பது, திடீரெனக்கிடைத்த பெரும்புகழ் தாளாது தவிப்பது, பெரும்புகழைக்கனவுடன் பயணிப்பது என்று முன்னணிக்கதாபாத்திரங்கள் கதையின் மைய நீரோட்டத்தோடே பயணிக்கின்றன. இவர்களுக்கான துணை கதாபாத்திரங்களும், கதைக்குத்தேவையான, இந்த கதாபாத்திரங்களை பலப்படுத்தும் விதமாக மட்டுமே எழுதப்பட்டிருப்பது.
  4. ஒளிப்பதிவும், வரைகலையும் : இந்தக்கதை, காலத்திற்குத்தேவையான வண்ணங்கள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டு, பிரமாதமான ஒளியோடு உருவாக்க்கியிருப்பதும், துருத்திக்கொண்டு தெரியாமல், பின்னணியில் லாவகமாக இழைக்கப்பட்டிருக்கும் வரைகலைகளும்.
  5. நேர்த்தியும் நிதானமும்: எங்கேயும் அவசரப்படாமல், ஒரு நாவலில் கதை சொல்லும் நேர்த்தியுடனும், படு நிதானமாகவும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்வையும், பாதையையும் வரையறுத்துச்சொல்லும் பாங்கு.

இந்தத்தொடரின் முதல் அத்தியாயம் ஆரம்பித்தவுடனேயே நமக்கு நினைவுக்கு வருவது அசோக மித்திரனின் கரைந்த நிழல்கள் நாயகன் நடராஜன். மெள்ள கதை நகர நகர மானசரோவர் நாவலும் நினைவில் வருகிறது. மெட்ராஸில் ஸ்டூடியோ வளர்ந்த சரித்திரித்தின் பின்னணியில் எழுதி எடுக்க இன்னும் சுவாரசியமான கதைகள் இருக்கின்றன. என்றேனும் ஒருநாள் அது எடுக்கப்படும் என்று காத்திருப்போம்.

இந்தத்தொடர் அமேசன் ப்ரைம் ஓடிடியில் கிடைக்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக