ஆனந்தபைரவியெனும் ஆழ்மனமுருக்கி

அந்த பழங்கோவிலின் எல்லா முனைகளையும் தட்டி எழுப்புகிறது இந்த ஆனந்தபைரவி. பல நூறு ஆண்டுகளாய் மந்திரங்களில் பண்பட்டுப்போயிருந்த தூண்களின் மேலேறி நாகஸ்வரத்துளைகளின் வழி எழும் ஆனந்த கீதம் அதன் அதிர்வுகளை இன்னும் அதிகரிக்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாய் உளியின் ஓசைகளாயும், சிற்பிகளின் உரையாடற்சத்தங்களாயும் உறைந்த போயிருந்த சத்தங்கள் யாவும், ஆனந்த பைரவியின் விரல்கோத மோட்சம் பெறுகின்றன

யாரோ ஒருவரின் அலைபேசியின் வழி என் கணினிக்கு வந்திறங்கும் இந்த இசை செவிப்புலனங்களத்தாண்டி ஆழ்மனதில் இறங்கி எல்லா செல்களையும் நிரப்பி மகிழ்கிறது. அதிர்வுகளைக் கேட்டகணத்தில் மனம் சட்டென்று அப்பழங்கோவிலாகி, ஆனந்தபைரவியை ஆழ அணைத்துக்கொள்கிறது.

இணைப்புகள்:

புளிக்காய்ச்சல் திருநாசிச்சேவை:

ஹனுமத்ஜெயந்தி புளியோதரைக்காக, வீட்டில் இரவு புளிக்காய்ச்சல் செய்திருக்கிறார்கள். இந்த அதிகாலையில் அதன் வாசனை வீடு முழுவதும் பரவி இம்மார்கழிக் குளிர்க்காலைக்கு புதிய வண்ணம் தீட்டுகிறது.

காரமும் புளிப்பும் ஒரு அடர் மாம்பழ நிறப்புடவை மீது அமைந்த சிவப்புச்சரிகை போல மிகப்பாந்தமாகப்படிந்து சிந்தை முழுவதையும் தன் பால் இழுக்கிறது. புளிப்பு, புளிப்பு என மனம் அதன் திசை நோக்கி புன்னகையோடு கைகுலுக்குகிறது.

வெந்தயமும், பெருங்காயமும் அதன் கூட இணைந்து நாங்களும் கூடவே இருக்கிறோமே என குழைந்த அழைப்பின்வழி இன்னும் தங்களின் மீதான கவனத்தைக் கோருகின்றன.

நாசியின் அத்தனை நரம்புகளும் செய்வதறியாது இவ்வாசனை தரும் மயக்கத்தில் ஆழ்ந்து அறிவின் அத்தனை ஆழத்திலும் புளிக்காய்ச்சலின் இருப்பை பதிவு செய்து உமிழ் நீர் அருவியொன்றை உடனடியாக உற்பத்தி செய்ய ஆணையிடுகிறது.

வெறும் ஒலியை மட்டுமே வெளியிட்டு எங்கள் இல்லத்தின் நற்சகுனத்தை பேணிவந்த அதோ அந்த வெள்ளைப்பல்லி இடுக்கிலிருந்து தலையை அடிக்கடி நீட்டி சற்றே இம்மணத்தை உள்வாங்கி மறைகிறது.

வீட்டின் மூலையில் ஒரு சின்ன எண்ணெய்ச்செட்டிக்குள் பாந்தமாய்ப்படுத்திருக்கும் புளிக்காய்ச்சலை பாற்கடலில் படுத்திருக்கும் பரந்தாமனுக்கிணையாய்ப்பார்க்கவைத்த இத்திருக்காலையை மகிழ்வோடு ஆசீர்வதித்து மனம் எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என முணுமுணுக்கிறது

புத்தாண்டு 2022


இன்னொரு புத்தாண்டு பிறந்திருக்கிறது. கடந்தகால சோதனைகளை சற்றே மட்டுப்படுத்திச்சென்ற வருடம் என்ற வகையில் எனக்கு 2021 பெரும்பலமான வருடமே. வருடம் முழுவதும் சம்பளம் வந்தது என்பதே சாதனையாகப்பார்க்கும் மன நிலை வாய்த்திருப்பது சற்றே வருத்தத்திற்குரியதுதான் என்றாலும் தெய்வம் எந்த நிலையிலும் கைவிடுவதில்லை என்ற மனோதிடம் இருக்கிறது.

வருட இறுதியில் நற்செய்தியாக சம்பள உயர்வும், இதே அலுவகலத்தில் நிரந்தரப்பணியும் அமைந்ததுதான் பெருமகிழ்வுக்குரிய விஷயம். இதே போன்ற ஒன்றை 2018 லேயே எதிர்பார்த்தேன். 3 வருடத்தாமதம் என்றாலும், எப்போதும், எங்கிருந்தும் வாழ்வை ஆரம்பிக்கலாம் என்பதால் இறையை வேண்டி துணிவுடன் பயணம் தொடர்கிறேன்!

நாசியைத் தீண்டாத வாசனைகள்

தீபாவளி வாரயிறுதியில் தென்காசி-மதுரைக்குப்போய்விட்டு மழையில் தள்ளாடிக்கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தேன். அடுத்த நாளே ஜலதோஷம் பிடித்துக்கொண்டது.

இரண்டு நாள் தற்சார்பு மருந்துகளுடன் போராடிவிட்டு மருத்துவரிடம் சென்றபோது தொண்டை தொடர்பான பிரச்னைகள் இல்லாததாலும், ஜூரம் இல்லாததாலும் சளியைக்கரைக்கும் மருந்துகளை எழுதிக்கொடுத்திருந்தார். அதற்குப்பிறகுதான் இந்த உண்மையான சோதனை தொடங்கியது. நாசிக்கு எந்த வாசனையும் வரவில்லை.

கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ என ஆண்டாளை அடியொற்றி சோப்பு மணக்குமா, ஷாம்பு மணக்குமோ, என்றுமே நாறாத வேல்ஸ் சாம்பிராணியின் மணமும்தான் வந்து தீண்டுமோ என வரிசையாக வீட்டில் எனக்குப்பிடித்த அத்தனை வாசனை விஷயங்களையும் ஒவ்வொன்றாக முகர்ந்துகொண்டேயிருந்தேன். எதற்கும் பலனில்லை.

வெந்நீர் போடுவதற்காக கொல்லை அடுப்புகளில் மூட்டப்படும் தீயிலிருந்து எழும் அதிகாலைப்புகை மணம் ஒன்று இருக்குமே, அது போல ஏதோவொரு பெயர் சொல்லா புகைமணம் மட்டும் அடி நாசியில் குடிகொண்டிருந்தது. இந்த புகைமணம் சட்டென்று ஏறும், இறங்கும் வீட்டின் வாசனைகளுக்கொப்ப. உதாரணமாக சமையறையில் ஏதேனும் அதீத மணம் எழுந்தால், இந்த புகை நாற்றம் அதன் உச்சத்தைத்தொடும், அதன் மூலமாக வயிற்றுப்பிரட்டல் வேறு.

இதற்குப்பிறகு சுவை நரம்புகளும் காணாமற்போயின. காஃபி, பொங்கல், கருவேப்பிலை கொத்தமல்லி தொடங்கி பூண்டு,வெங்காயம் வரையிலா எல்லாச்சுவைகளும் மட்டுப்பட்டு வெந்நீர் மட்டுமே தேவாமிர்தமாக இனித்தது. சுடச்சுட உண்ணவேண்டும் என்ற அறிவுரையால் கிடைத்த எல்லா சூட்டுதிரவங்களிலும் லேசான புளிப்புச்சுவை ஒன்று மேலேறி வந்ததால், அதுவே முழு நாளுக்கும் போதும் என்று தோன்றியது.

வாசனையும், சுவையுமில்லாமல் ஒரு மனிதன் வாழ்வைக்கடப்பதென்பதுதான் துறவா என்று எண்ண வைத்தது. ஏதேனும் ஒரே ஒரு வாசனையையாவது இந்த நாசி கொண்டுவிடாதா என ஒரு சிறு நாய்க்குட்டி முகர்ந்து முகர்ந்து தன் உணவைத்தேடிக்கொண்டே இருப்பதுபோல இல்லம் முழுதும் வெகுண்டு வெறிகொண்டு மூக்கை உறிஞ்சி உறிஞ்சி தேடிக்கொண்டே இருந்தேன்.

நாட்கள் செல்லச்செல்ல பயமும் அதிகரித்தது. மருத்துவர் ஆறுதலளித்தார். இந்த அறிகுறி தொண்டையைத்தீண்டி கீழே செல்லாத வரையில் அவர் எழுதிக்கொடுத்த மருந்துகளும், நல்ல உணவும், ஆவிபிடித்தலும்தான் மருந்துகள் என்றார். எந்தச்சுவையும் இல்லாவிடினும், உணவுகொள்ளுதலுக்கான வேட்கை நிற்கவே இல்லை. ஏதேனும் உள்சென்றுகொண்டிருந்தது. ஆனால் மணமேதும் ஏறாமல், அந்த ஒற்றைப்புகை மணத்தை மட்டுமே கொண்டிருந்த நாசியைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏகப்பட்ட மனவழுத்தம்.

”எல்லாவற்றிற்கும் ஒரு ப்ரேக்கிக் பாயிண்ட் உள்ளது” என குருதிப்புனலில் கமலஹாசன் சொல்லியிருக்கிறார் இல்லையா? அது இந்த நாசியடைப்பிற்கும் வந்தது. இன்னொரு மழை நாள். இன்னொரு வீடடைப்பு. அந்த முற்பகலில், புகை வாசனை போக வேறு ஏதோ ஒன்று புலப்பட்டது. முதலில் லேசாக, பின்னர் மெதுவாக அதன் வீரியம் அதிகரித்தது. வழக்கம்போலவெ ஒரு சிறு நாய்க்குட்டியென முகர்ந்து முகர்ந்து சமயலறைக்குச்செல்லும் முன்னரே, நாசி சில நாட்களுக்குப்பின்னர் கண்டறியும் முதல் மணத்தை வெகு நாட்கள் கழிந்து பிரிந்த காதலியை அணைவது போல சட்டென உள்ளிழுத்துக்கொண்டது.

கத்திரிக்காய் செய்வதற்காக, தனியா+மிளகாய்+உ.பருப்பு இத்யாதிகளோடு செய்யப்பட்ட அந்தப்பொடிதான் இத்தனை நாள் புகை மணத்தோடு இருந்த நாசியை மீட்ட முதல் மணமாய் அமைந்தது. அந்த முதல் மூமெண்டுக்கு பிறகு மெள்ள மெள்ள நாசி ஒவ்வொரு வாசனையாய் மீட்டுக்கொண்டு வந்த தருணங்களை தஞ்சாவூர் கல்வெட்டுக்கு இணையாக மனதில் குறித்துவைத்துக்கொண்டே வந்திருக்கிறேன்.

கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மட்டுமே துறவறம் சென்ற இந்த சுவையும், வாசனையும் வாழ்விற்கு எத்தனை வசந்தங்களை என்னையறியாமலேயே கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன என்பதை அறியத்தந்த ஒரு பாடமாக இதனை எடுத்துக்கொள்கிறேன். ஒரு சிறுதுளையின் வழி செல்லும் காற்றை இசையாக மாற்றும் குழல் போலத்தான், நாசியின் இந்த இரு துளைகளும். எத்தனை மணங்களை மனதிற்கினியதாக மாற்றி வழங்கிக்கொண்டே இருந்திருக்கின்றன என எண்ணி எண்ணி வியக்கிறேன்.

பல வருடங்களாக கத்திரிக்காய் மீது என் உடலுக்கும் மனதுக்கும் இருந்த ஒவ்வாமையைக்கூட கடந்த அத்தருணத்தில் காதலாக மாற்றி வைத்திருக்கிறேன்.

நிஷாகந்தியின் குரல்

என் மனதுக்கு மிக நெருக்கமான “நித்திரை அழகியின் நிஷாகந்திப்பூ” நெடுங்கதைக்கு இது நாள் வரை என் குரல்தான் அடையாளம். என் குரல்வடிவில்தான் அதன் பாத்திரங்களை மனதுக்குள் பேசவிட்டு எழுதினேன். படித்தவர்களுக்கும் என் குரல்தான் அதில் பரிச்சியமாய் ஒலித்திருக்கும்.

இன்று முதல் அதற்கு என்னைவிட பன்மடங்கு சிறப்பான மற்றுமொரு அடையாளமாக திருமதி. Fathima Babu அவர்களின் குரலும் சேர்ந்திருக்கிறது. இதனை அவர்கள் வாசித்துமுடித்தபோது இந்தக்கதை வாசித்தவர்களுக்கு கிடைத்த “haunting” அனுபவம் இன்னும் சில மடங்குகள் அதிகமாக கேட்டவர்களுக்கும் கிடைத்தது.

இது 40 நிமிடங்கள் வரை போகக்கூடிய ஒரு குறுநாவல். இதனை அவர்கள் வாசிக்கக்கேட்டபோது வாசிக்க அதிக நேரம் எடுக்குமே என்ற தயக்கத்துடனேயேதான் கொடுத்தேன். ஆனால் அவர்கள் அதனால் என்ன என்ற பெருந்தன்மையோடு எடுத்து, மிகச்சிறப்பாக வாசித்தார்கள்.

40 நிமிடங்களும் குரலில் எந்தத்தொய்வும் இன்றி, பாத்திரங்களுக்கு கனகச்சிதமான குரல் கொடுத்து, உணர்வுகளை சற்றும் பிசகாமல் நிலை நிறுத்தி ஒரு பேரற்புதமென இதனை நிகழ்த்தினார்கள்.அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.கீழ்க்கண்ட இணைப்படைச்சொடுக்கி கதை கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=ezW8UwsVyjY

கதையை இங்கு படிக்கலாம்

https://kundahmusicseries.wordpress.com/2014/11/15/nishagandhi/

பல்லாவரம் ரிட்டர்னும், சுகந்தமாலினியும்:

ஒரு மலைக்கிராமத்தில் இயற்கையும்,அமைதியும் சூழ வாழ்ந்த எனக்கு, பொருள்தேடி சென்னை வந்த முதல் சில மாதங்கள் கொடுத்த அலைதலையும், அயர்ச்சியையும் மறக்கவே இயலாது.

இரைச்சலும், நெரிசலும், வியர்வையும், அழுக்குமென ஏதோ ஒரு வேற்றுக்கிரகத்தில் தண்டனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட கைதியென உணர்ந்த ஆரம்ப நாட்கள் அவை. ஏற்கனவே நிரம்பிவிட்ட ஒரு பெரும்துணிப்பொதியை அழுத்தி அழுத்தி மேலும் துணிகளைச்சேர்ப்பதுபோல, காலை நேரப்பேருந்துகளில் பெருங்கூட்டத்தினூடே ஏறி, நுழைந்து, கூட்டத்தாலேயே நகர்த்தப்பட்டு வியர்வை மழையில் நனைந்து, கசக்கித்தூக்கியெறிந்த காகிதம் போல அலுவலகம் வந்து சேரும் அந்தக்கடுங்காலைகளை இன்னும் பல இரவுகளின் கொடுங்கனவுகள் நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தன.

பேருந்துகளில்தான் இந்தக்கதியென்று, ரயிலுக்கு மாறினால் (அந்தக்கால மீட்டர் கேஜ்) ரயில்கள் இன்னும் மின்சார ஆபத்தோடு கூடிய அதே நெரிசல்களையும், அயர்வுகளையும் சற்றும் மாறாமல் கொண்டிருந்தது. ஏனோ தாமதமாகி அவசர அவசரமாக ரயில் பிடிக்க வந்த ஒரு நாளில்தான் பல்லாவரத்திலிருந்தே தினமும் கிளம்பும் ஒரு சிறப்பு ரயில் ஒன்று உண்டென்று தெரியவந்தது. முதன்முதல் இருக்கையில் அமர்ந்து, சன்னல் வழிக்காற்று வாங்கி, ஆசுவாசமாக அலுவலகம் சென்ற அந்த நாளில் சென்னை அழகாகத்தெரிய ஆரம்பித்தது. மிகச்சரியாக சென்னை என்னை அடையாளம்கண்டுகொண்டது. நான் அதன் விரல்களைப்பற்றிக்கொண்டு பயணிக்க ஆரம்பித்த முதல் தருணம் அது. அப்படித்தான் பல்லாவரம் ரிட்டர்ன் எனக்கு அறிமுகமானது.

தினமும் காலை 09:20 க்கு பல்லாவரத்திலிருந்து கிளம்பி, கடற்கரை ரயில் நிலையம் செல்லும் அந்த மின்சார ரயிலின் பிரத்யேகங்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. 7-9 மணிக்கு பேருத்து பிடிக்க ஓடிவரும் மக்களின் பரபரப்பின் சாயல் ஏதுமின்றி இருந்தனர் இந்த வர்க்கத்தினர். பெரும்பாலும் 10 மணி அரசு அலுவலகங்களுக்குப்போவோர்தான் இதன் பிரதான பயணிகள். என்றாலும், சற்று நேரமானாலும் நெரிசலின்றி பயணிக்கலாம் என்று வருவோரும் உண்டு.

திருப்புகழ் கம்பார்ட்மெண்ட், திரைப்பாடல் கம்பார்ட்மெண்ட், சீட்டுக்கச்சேரி கம்பார்ட்மெண்ட், ட்ரேடிங் உரையாடல் கம்பார்ட்மெண்ட் என்று ஒவ்வொரு பெட்டிக்கும் ஒவ்வொரு குழுவினர் உண்டு. எவரவர்க்கு எது ஆர்வமோ அதைக்கேட்டபடி பயணிப்பது பெரும் சுவாரசியமாக இருந்தது. சென்னையில் பன்முகபிரவாகத்தை பல்லாவரம் ரிட்டர்னில்தான் கண்டுகொண்டேன், பின்பு அதனோடே பலவருடங்கள் பயணித்தேன்.

தினமும் பயணிக்க ஆரம்பித்தபிறகு அதே நேரத்தில் பயணிக்கும் பலரது முகங்களும் பரிச்சியமாகத்தொடங்கியபோதுதான் அவர்களிருவரையும் கவனிக்கத்தொடங்கியிருந்தேன்.

அவன்தான் எப்போதும் முதலில் வருவான், அவள் எப்போதும் மிகச்சரியாக 9:18 லிருந்து 9:19க்குள்தான் வருவாள். வியர்வையில் நனைந்திருப்பாள். இவன் கைக்குட்டையைக்கொடுத்து துடைத்துக்கொள்ளச்சொல்வான், வெட்கத்தோடு அவளும் துடைத்துக்கொள்வாள். மெல்லிய குரலில் அவர்களிருவருக்கும் கேட்கும்படி பேசிக்கொள்வார்கள்.

எப்போதும் புத்தகக்கடைக்கு எதிரே இருக்கும் ரயில்பெட்டியில் ஏறி கடைசி இரண்டு இருக்கைகளை அடைவார்கள். இணைந்து வாக்மேன் கேட்பார்கள், புத்தகம் படிப்பார்கள், வேடிப்பை பார்ப்பார்கள், நகைச்சுவைகளை அவர்கள் காதுகளுக்கும், மனங்களுக்குமென பகிர்ந்து கொண்டு சிரிப்பார்கள், வெள்ளி தோறும் ஆனந்தவிகடன் வாங்கி இருவரும் இணைந்து வாசித்தபடியே வருவார்கள், தாமஸ் மவுண்ட்டை கடக்கும்போது தவறாது அதனைப்பார்த்து ஏதோ சொல்லியபடியே வருவார்கள். என் கவனத்தை ஈர்த்த ஜோடிகள். சில நாட்கள் அவள் வராது இவன் வாடிப்போய் பயணித்தலை பார்த்திருக்கிறேன். அவள் மேல் கோபம் வந்திருக்கிறது. அடுத்த நாள் சிறு சலனமும் இன்றி அவள் முகம் பார்த்துப்பூப்பான்.

ஆனால் அவன் வராத நாட்களில் இவளிடம் எந்த வாடலும் இருப்பதில்லை. காத்திருத்தலும், தேடலும் கூட இருந்ததில்லை.  ஒருவேளை அவன் ஏற்கனவே தன் வாராதிருத்தலை இவளிடம் பகிர்ந்திருக்கலாமோ என்னவோ. நான் போகமுடியாத நாட்களிலும் கூட மிகச்சரியாக 9:20க்கு அவர்கள் நினைவு வரும் அளவிற்கு அவர்களை கவனிக்க ஆரம்பித்திருந்தேன்.

சில மாதங்களில் அவர்களின் உறவு கனிந்திருந்தது. நெருக்கத்தை உணரமுடிந்தது. மாம்பலத்தில் இறங்கும் அவர்கள், நான் கோடம்பாக்கத்தில் இறங்கிய பிறகும் பயணிக்கும் இடம் எது என்று எண்ணங்கள் ஓடின. அவர்களின் படிப்புகள், பாடல் கேட்கும் காலங்கள் தாண்டி, கைகோர்த்தல்கள், தோள்சாய்தல்களின் காலம் ஆரம்பித்திருந்தன.

என் கண்தான் பட்டிருக்கவேண்டும்.  அடுத்த சில மாதங்களிலேயே அவர்கள் உறவின் கார்காலத்தையும் நான் பார்க்க ஆரம்பித்திருந்தேன். இப்போதும் அந்தப்பையன் சலமற்றுத்தான் இருந்தான். ஒரு நாள் பயணத்தில் சட்டென பெருங்குரலெடுத்து எழுந்துஅவள்தான் ஏதோ கூறினாள், அவன் பதறி அவள் கையைப்பிடித்து அவளை அமர வைக்கப்பார்த்தான். லேசான அழுகையுடன் அவள் கிண்டியில் இறங்கிச்சென்றாள். இவன் பிந்தொடர்ந்து சென்றான். அடுத்தடுத்த நாட்களில் அவர்களின் முகங்கள் சரியில்லை. சில நாட்கள் பழையை மலர்ச்சியைப்பார்க்க முடிந்தாலும், அந்த நெருக்கத்தைக்காண முடிந்ததேயில்லை.

ஒரு வெள்ளிக்கிழமை. வழக்கத்துக்கு மாறாக அவள் முன்னதாக ஸ்டேஷனுக்கு வந்துவிட்டாள். அவனுக்காகக்காத்திருந்தாள், அலைபாய்ந்தாள். அவன் அவள் நேரத்திற்கு வந்தான். வந்த நேரம் முதலாய் வழியும் கண்ணீரை அவள் துடைக்கவேயில்லை என்பதைப்பார்த்தேன். அவன் அசையாது தலை குனிந்து தன் விரல்களை பரிசோதித்த வண்ணமாயும், சன்னல் வழி வெளியே பார்த்தவாருமே இருந்தான். 10 நிமிடங்கள் இருக்கலாம். வண்டி மீனம்பாக்கத்தில் நின்றபோது இறங்கிப்போய்விட்டான். அவளும் போவாளென நினைத்த என் எண்ணத்தை மாற்றினாள். வழிந்த கண்ணீரைத்துடைத்துக்கொண்டாள். சற்று சாய்ந்து அமர்ந்துகொண்டு கண்ணை மூடிக்கொண்டு வாக்மேனை காதுகளுக்குக்கொடுத்தாள்.

அன்றுதான் அவனைப்பார்த்த கடைசி நாள். பிறகு பல்லாவரம் ரிட்டர்னுக்கு அவன் வருவதேயில்லை. ஆனால் அடுத்த ஒரு வருடம் நான் பயணித்த நாட்கள் பெரும்பாலானவற்றில் இந்தப்பெண்ணை தொடர்ந்து பார்த்து வந்தேன். அவள் புத்தககடைக்கு அருகே நிற்கும் ரயில் பெட்டியில் பின்னர் ஏறுவதில்லை. அது ஒன்றுதான் மாற்றம். புத்தகம் படித்தாள், வாக்மேன் கேட்டாள், வெள்ளிக்கிழமை வாரம்தவறாது விகடன் வாங்கிப்படித்தாள், மவுண்ட் கடக்கும்போது தவறாது உச்சிமலையை அப்போதுதான் முதலில் பார்ப்பது போல வேடிக்கை பார்த்தாள்.

எனக்குத்தான் இவளுடன் பயணித்த அவன் நினைவு வாழ்வின் பல தருணங்கள் வரை கூடவே வந்துகொண்டிருந்தது. பல்லாவரம் ரிட்டர்ன் விட்டு பொருள் தேடி விமானமேறி வெளி நாடு பயணித்த பின்னும் நீங்காத நினைவென அவர்கள் இருவரின் நினைவு நீண்டுகொண்டே இருந்தது.

ஏதோ ஒருவகையில் அதை இறக்கி வைக்க எண்ணிதான் ”சுகந்தமாலினி” எனும் இப்புனைவை எழுதினேன். இதில் எனக்கு மிகவும் பிடித்த அமானுஷயத்தை இறுதியாக இணைத்ததை பெரும்பாலானோர் விரும்பவில்லை. ஆயினும் எனக்குப்பிடித்த முடிவு இதுதான் என்பதால் அதை மாற்றிக்கொள்ளவும் எண்ணவில்லை.

நேற்று இக்கதையை தன்னுடைய அற்புதமான குரலினாலும், பிரமாதமான பாவங்களினாலும் இன்னொரு உயரத்திற்கு கொண்டுசென்றார்கள்
திருமதி.ஃபாத்திமா பாபு அவர்கள். அவர்கள் குரலில் சுகந்தமாலினி கதையைக்கேட்க

https://www.youtube.com/watch?v=3KGkVxfoP-w

கதையின் இணைப்பு இங்கே

https://sivaramang.wordpress.com/…/%E0%AE%9A%E0%AF%81…/

உயிர்மை 200வது இதழ்

உயிர்மையின் 200வது இதழ் சற்று தாமதமாக நேற்றுதான் வந்து சேர்ந்தது.

வெளிவந்த முதல் இதழைக்காத்திருந்து வாங்கியதிலிருந்து, கிட்டத்தட்ட 5 வருடங்கள் தொடர்ந்து வீட்டுக்கு வருவிக்கப்பட்டு, சில மாதங்கள் இடைவெளிவிட்டு துபாய்க்கு அனுப்பப்பட்டு படித்து ருசித்த அனுபவங்களெல்லாம் இருக்கின்றன.

இடையில் முற்றிலும் சிறுகதைகள் , சூழியல் கட்டுரைகள் துறந்து, தரம் குன்றி, முழுக்க அரசியல் சார்பிதழாகிப்போனபோது படிப்பதை நிறுத்தினேன்.

இப்போது மீண்டும் முதலிதழின் அதே வாசனையோடு, காத்திரத்தோடு, நற்கலைஞர்களின் நல்ல படைப்புகளோடு சுவாரசியமான இதழாக வந்திருக்கிறது.

அவசியம் வாசித்து பத்திரப்படுத்த வேண்டிய இதழ்.

உயிர்மை 200வது இதழ்

ஒரு பால்ய நதிக்கரை

ஒவ்வொரு வருடமும் தவறாது மேலெழுந்து வருகிறது இப்புகைப்படம். பால்யத்தின் மகிழ்வு மிகு இத்தருணத்தைப்பற்றி ஒவ்வொரு வருடமும் ஏதேனும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆயினும் என்றும் தீரா மகிழ்வையும், குதூகலத்தையும், எல்லா அரும்பெருஞ்செயல்களை விடவும் வாழ்வில் இத்தருணம் விஞ்சி நிற்பதையும் நினைந்து நினைந்து மகிழவும், வியக்கவும் நேரமும் வார்த்தைகளும் இருந்துகொண்டே இருக்கிறது.

அதோ அந்த தூரமலை, அந்தப்புல்வெளி, கூடாரம், அங்கே கூடி நிற்கும் என் பள்ளித்தோழர், தோழியர், அண்மைப்பூங்கா, அந்தச்சாலை இன்னும் எல்லாமும் அப்படியே அங்கே இருக்கின்றன என்னைப்போலவே இந்தத்தருணத்தைப்பார்த்து மகிழ்ந்த மெளனசாட்சியென. இத்திரு நாளில் 30 வருடங்களுக்கு முன்பு அங்கிருந்தேன். இன்னும் அங்கேயே இருக்கிறேன் நினைவுகள் வழி.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

குந்தா சுதந்திர தின விழா – 1989 ஆகஸ்ட் 15

அதிகாரமும் மூடமதியும்

எனக்கு மிகவும் பிடித்த, சமூக வலைதளங்கள் மூலமும், தனது பேச்சுகள்மூலமும் அறிமுகமான ஒரு ஐ ஆர் எஸ் அதிகாரி – எழுத்தாளார் மீது பல பெண்கள் இணைந்து பாலியல் குற்றச்சாட்டு விடுத்திருக்கிறார்கள்.
தனிப்பட்ட வகையில் மிகவும் வலியும் ஏமாற்றமும் கொடுத்திருக்கும் நிகழ்விது.

அத்தனை அறிவு, படிப்பு, நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நடை எல்லாமும் அதிகாரம் என்று ஒன்று வந்தபிறகு எல்லாவற்றையும் துச்சமென மதித்து, தனக்குக்கீழே பணிபுரிகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பெண்பால் மீது
தன் ஆழ்மன வக்கிரங்களை பிரயோகிப்பதை என்னவென்று சொல்வது 😦

மனுஷ்யபுத்திரனின் “தோழர் ஹிட்லர்” என்னும் கவிதை நினைவுக்கு வருகிறது. ஹிட்லருக்கு ஒரு பெரிய அதிகாரம் இருந்தது. அதை வைத்து உலகை தன் குடைக்குக்கீழ் கொண்டுவர விரும்பினான். மக்களை அடிமைப்படுத்தினான். தன் அரசியல் சதுரங்கத்தில் எதிர்பட்ட காய்களை எல்லாம் விதியின்றி வெட்டினான். அவனுக்கு பெரிய அதிகாரம். அதே போன்று
எளிய மனிதன் ஒருவனுக்கும் ஒரு சிறிய ப்ளேடை உபயோகிக்கிற அதிகாரம் இருந்தால் அவனும் அவன் அதிகாரத்திற்குட்பட்ட அளவிற்கு வன்முறைகளை செய்துதான் கொண்டிருப்பான் என்ற வகையில் அமைந்த ஒரு கவிதை அது (வரிகள் நினைவில்லை, பொருள் மட்டும் நினைவிருக்கிறது)

இது போன்ற சம்பவங்களில்தான் அதிகாரம் எப்படி ஒருவனின் நல்மதியை மழுக்குகிறது என்பது தெரியவருகிறது.

#கலி #அதிகாரமமதை

ஒரு மறதி, ஒரு மிரட்சி

இந்த மாதம், மறதியால் Airtel க்கு மாதாந்திர கட்டணம் கட்ட மறந்துவிட்டேன் 😦 எப்போதும் ஒன்றாம்தேதிக்கென செக் லிஸ்டுகள் உண்டு. இந்த மாதம் இரண்டு முக்கிய அலுவலக வேலைகளின் தொடர் அழுத்தம் காரணமாக கணினி, தூக்கம் இரண்டை மட்டுமே கருத்தில் கொண்டு இதனை மறந்தே விட்டேன். அந்த இணைப்பு எங்கள் தொலைக்காட்சி, வீட்டிற்கான தரைவழி எண், என், அப்பா, மனைவி மூன்று பேரின் அலை பேசிகள் என யாவற்ருக்குமான ஒரு பொதுவான இணைப்பு. இந்தக்கட்டணம் கட்டாததில் எல்லாம் ஒரே நேரத்தில் வீழ்ந்தன.

இப்போது பணம் கட்ட எல்லா வழியும் அடைபட்டது. கம்பியில்லா தந்தி சேவை (WiFi) இணைப்பு இல்லை. அலைபேசி இணைப்பு இல்லை. சற்று யாரிடமாவது அழைத்து கட்டிவிடுங்கள் என்று சொல்வதற்கு வெளி அழைப்புகளும் போகவில்லை. சரி ஏர்டெல் அலுவகத்திற்குப்போகலாமென்றால் கொரோனா முழுஅடைப்பினால், கடைகள் பூட்டியிருந்தன. சட்டென சில நிமிடங்களுக்கு உலகமே இருண்டு போய்விட்டதைப்போல ஆகிவிட்டது.
இதை எப்படி தீர்ப்பதென்று சில நிமிடங்கள் கடும் மன உளைச்சலாகிப்போனது.

பிறகு பக்கத்துவீட்டு வை-ஃபை இணைப்பை சில நிமிடங்கள் கடன்வாங்கி, இந்த பணப்பரிமாற்றம் செய்து, அவர்கள் திரும்ப மறு இணைப்பு வழங்கிய நிமிடம் வரை இருந்த பதற்றத்தை நினைவு கூர்ந்தால்
சற்று சிரிப்பாகவும், நிறைய மிரட்சியாகவும் இருக்கிறது.

இணையம்தான் உலகமென்றாகிவிட்டபிறகு இந்த இணைப்பு சில நொடிகள் கவிழ்ந்தால் கூட ஏற்படும் கை நடுக்கத்தை கட்டுப்படுத்தவே முடிவதில்லை.