புத்தகக்கண்காட்சிக்கு மூன்றாவது முறையாக நேற்று சென்றுவந்து இந்த வருடக்கொள்முதலையும், நிறைய நல்நினைவுகளையும், இந்த குறிப்புகளையும் சேர்த்துக்கொண்டுவந்தேன்.
- கோவிட் காலத்திற்கு பின் வந்த சென்னை புத்தகக்கண்காட்சியில் சென்ற வருடமும், அதற்கு முந்தைய வருடமும் அரங்கம், பாதை, கூரை, காற்றோட்டம் முதலியன நன்கு தேறி வந்தன (சிறப்பு என்றெல்லாம் இல்லை, அதற்கு முந்தைய வருடங்களுக்கு அது மேல்). இனி எல்லாம் இப்படியே சிறப்பாகவே இருக்கும் என்று நம்பிக்கொண்டிருந்ததில் இடியைத்தூக்கி இந்த வருடமே போட்டிருந்தது பபாசி. அரங்கங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அகலத்தைக்குறைத்து, நடைபாதையை சின்னாபின்னாப்படுத்தி, காற்றோட்டத்தை ஏனோதானோவென்று வைத்து, முறையாக நடக்கும் பாதைகளை தடுத்து, “மவனே நான் சொல்றபடிதாண்டா நீ போவணும்” என்று அராஜகம் செய்து சொதப்பிவைத்திருக்கின்றான்கள்.
ஆயினும் என்ன, புத்தகங்கள் அல்லவா. எல்லாவற்றையும் தாண்டி அந்த இனிப்பான நிகழ்வு இந்தக்கசப்புகளை மறக்கத்தான் வைத்தது.
- இந்த வருடம் நடந்திருக்கும் மிக முக்கிய மாற்றம், சட்டென ஒரு ஆயிரம் பக்க புத்தகத்தை எடுத்தால் கூட அது காற்று போல மிருதுவாக இருக்கிறது. ஆச்சர்யத்தோடு புரட்டிப்பார்த்தால் காகித வெயிட்டேஜில் சமரசம் செய்துகொண்டு, எழுத்துருவைக்குறைத்து, வரிகளின் அளவையும் குறைத்து நுணுக்கி நுணுக்கி பதிக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள். ஆனால் படிக்கும் அனுபவத்தில் இது ஒரு பெரிய சமரசம். நுணுக்கி நுணுக்கி இருக்கும் எழுத்துகளை சிரமப்பட்டுதான் படிக்கவேண்டியிருக்கிறது. விலையென்னவோ ஒரு பக்கத்திற்கு 1:50-2:00 ரூபாய்க்கு போய்விட்டது. இருக்கும் பழைய ஸ்டாக்குகளை விற்றுவிட்டால், இனி இப்படித்தான் எல்லாமே வரும் என்று புளியைக்கரைக்கிறார்கள்.
- காலச்சுவடுதான் 20 வருடங்களுக்கு முன்பு புத்தகக்கண்காட்சியின் ஹீரோ ஸ்டால். அங்குதான் நல்ல பதிப்பில், நல்ல எழுத்தாளர்களின் நிறைய புத்தகங்கள் வாங்க முடியும் என்றிருந்தது. பின்பு மனுஷ்யபுத்திரன் அங்கிருந்து வெளியே வந்து உயிர்மையை தொடங்கியபோது ஒரே இரவில் அது மாறியது. பின்பு அவர் செய்த ராயல்டி குழப்படிகளில் கிழக்கு பல வருடங்கள் நட்சத்திரப்பதிப்பகமாக வாழ்ந்தது. இந்த மூன்றையும் ஒட்டுமொத்தமாக தூக்கி சாப்பிட்டுக்கொண்டிருப்பது ஸீரோ டிகிரி பதிப்பகம். இங்கே போனால் கொள்முதல் செய்யாமல் வரவே முடியாது என ஆல்மோஸ்ட் எல்லா நல்ல எழுத்துகளையும் உள்ளே வைத்துக்கொண்டிருக்கிறது. இவர்களின் இலக்கியப்போட்டிகள், அதனால் நுழைந்த புதிய எழுத்தாளர்கள், முறையான ராயல்டி ப்ளான், உடனடி ப்ரிண்டிங் என எக்கச்சக்கமாக வளர்ந்துவிட்டிருக்கிறது.
- Having said that, வேலை நாளோ விடுமுறை நாளோ அதிகம் கூட்டம் உள்ள அரங்கு “விகடன்” அரங்குதான். பொன்னியின் செல்வனும், வேள்பாரியும், மனசே ரிலாக்ஸ் ப்ளீஸூம் ( இப்போது புதிய அடிஷன் இரண்டாம் பாகம் வந்திருக்கிறதாம்) எல்லா வீட்டிலும் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டதால், விற்றுக்கொண்டேயிருக்கிறது. இதில் புதிதாக சேர்ந்திருப்பது, பாபாயணம். இதைத்தாண்டி அவர்களின் தொடர்களாக வந்து புத்தகமானவை எல்லாம் படுசூப்பர் ஹிட்ஸ். இந்த வருடம் ஜூனியர்விகடனில் வந்த லஷ்மி சரவணகுமார், அகரமுதல்வனின் தொடர்களெல்லாம் கூட நன்கு விற்பனையாகின்றன போல.
- எழுதும் எல்லோருக்குமே எப்போதும் NCBH பதிப்பகம்தான் ஃபேவரைட். அவர்களின் இந்திய மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் எல்லாமே எக்காலத்திலும் பொருட்படுத்தி வாங்கத்தகுந்தன. விலையும் பக்க அளவைக் கம்பேர் செய்யும்போது மிகக்குறைவாகக்கிடைக்கும். இந்த வருடமும் முதலில் அங்குதான் சென்றேன். நல்ல கொள்முதல்.
- ஆசான் ஜெயமோகனின் புத்தகங்கள் அனைத்தும் இப்போது விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் வரத்தொடங்கிவிட்டது. அவரின் தொற்றுக்கால புனைவுக்களியாட்டு சிறுகதைகள் அனைத்தும் தனித்தனித்தொகுப்பாக வரத்தொடங்கியிருக்கிறது. வெண்முரசின் புதிய பதிப்புகளை (முதல் நான்கு செம்பதிப்புகள் இப்போது வந்திருக்கின்றன – எல்லாமே கொள்ளை விலை – மழைப்பாடல் நான் வாங்கியது 800 ரூபாய்க்கு வண்ணப்படங்களோடு – புதிய பதிப்பு 2000 ரூபாய்). இங்கு அறம் வருகிற எல்லோரும் வாங்கிச்செல்லும் புத்தகமாக இருக்கிறது.
- இதைத்தவிர வம்சி, யாவரும், எதிர், வாசகசாலை, நற்றிணை, தமிழினி ஆகிய ஸ்டால்கள் எனக்கு வருடாந்திர ஃபேவரைட்ஸ், இந்த வருடமும். வம்சியில் மொழிபெயர்ப்புகள்தான் வருகின்றன. ஆனால் வடிவமைப்பில் இந்த வருடமும் இவர்களை முந்த ஆளில்லை. நல்ல எழுத்துருவும், வரிகளின் இடைவெளியும், மிகுந்த மனம்கவரும் அட்டைப்படமுமாக மிக நல்ல பேக்கேஜ் வம்சியில் மட்டும்தான் கிடைக்கும். இவர்கள் மேலும் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப்பதிப்பித்தால் நன்றாக இருக்கும்.
- இந்தமுறை பெரிய ஆறுதல் நெட்வொர்க் கவரேஜும், பில்களில் குழப்பம் இல்லாததும். எல்லாக்கடைகளும் ஜிபே செய்வதை அமல்படுத்திவிட்டன. எந்தக்க்யூவில் நின்றாலும் இதனால் சட்டென நகர்ந்துவிட முடிந்தது.
- இந்தவருடம் உணவகங்களில் ஞானம்பிகா ஒரு ஸ்டார் இடத்தை தக்கவைத்துக்கொண்டது. அவர்களின் (கூட்டமில்லாதபோது) பொடி இட்லியும், பெஸரட் தோசையும், பிஸிபேளாபாத்தும் (மூன்று விசிட்டுகளில்…) இன்னமும் நாவில் நர்த்தனமாடுகின்றன. விலையைப்பற்றியெல்லாம் குறைசொல்வதாயில்லை. அவ்வளவு நேர நடை – களைப்புக்குப்பிறகு எது கொடுத்தாலும் தேவாமிர்தம்தான்.
- ஏற்பாடுகளின் போதாமை குறித்த சலிப்புகள் இருந்தாலும், முற்றிலும் கொண்டாட்டத்தருணமாய் அமைந்ததைப்பற்றி சந்தேகமேயில்லை. மாலை நேரங்களை வேலையிலிருந்து பிரிக்க முடியாத காரணத்தினால், சீக்கிரம் காலையில் சென்று, சீக்கிரம் கிளம்பி வந்ததால் நிறைய பயன்களும் இருந்தன. வழக்கம்போல அடுத்த ஜனவரிக்காக இப்போதிலிருந்தே காத்திருக்கிறேன்.