ஒரு மறதி, ஒரு மிரட்சி

இந்த மாதம், மறதியால் Airtel க்கு மாதாந்திர கட்டணம் கட்ட மறந்துவிட்டேன் 😦 எப்போதும் ஒன்றாம்தேதிக்கென செக் லிஸ்டுகள் உண்டு. இந்த மாதம் இரண்டு முக்கிய அலுவலக வேலைகளின் தொடர் அழுத்தம் காரணமாக கணினி, தூக்கம் இரண்டை மட்டுமே கருத்தில் கொண்டு இதனை மறந்தே விட்டேன். அந்த இணைப்பு எங்கள் தொலைக்காட்சி, வீட்டிற்கான தரைவழி எண், என், அப்பா, மனைவி மூன்று பேரின் அலை பேசிகள் என யாவற்ருக்குமான ஒரு பொதுவான இணைப்பு. இந்தக்கட்டணம் கட்டாததில் எல்லாம் ஒரே நேரத்தில் வீழ்ந்தன.

இப்போது பணம் கட்ட எல்லா வழியும் அடைபட்டது. கம்பியில்லா தந்தி சேவை (WiFi) இணைப்பு இல்லை. அலைபேசி இணைப்பு இல்லை. சற்று யாரிடமாவது அழைத்து கட்டிவிடுங்கள் என்று சொல்வதற்கு வெளி அழைப்புகளும் போகவில்லை. சரி ஏர்டெல் அலுவகத்திற்குப்போகலாமென்றால் கொரோனா முழுஅடைப்பினால், கடைகள் பூட்டியிருந்தன. சட்டென சில நிமிடங்களுக்கு உலகமே இருண்டு போய்விட்டதைப்போல ஆகிவிட்டது.
இதை எப்படி தீர்ப்பதென்று சில நிமிடங்கள் கடும் மன உளைச்சலாகிப்போனது.

பிறகு பக்கத்துவீட்டு வை-ஃபை இணைப்பை சில நிமிடங்கள் கடன்வாங்கி, இந்த பணப்பரிமாற்றம் செய்து, அவர்கள் திரும்ப மறு இணைப்பு வழங்கிய நிமிடம் வரை இருந்த பதற்றத்தை நினைவு கூர்ந்தால்
சற்று சிரிப்பாகவும், நிறைய மிரட்சியாகவும் இருக்கிறது.

இணையம்தான் உலகமென்றாகிவிட்டபிறகு இந்த இணைப்பு சில நொடிகள் கவிழ்ந்தால் கூட ஏற்படும் கை நடுக்கத்தை கட்டுப்படுத்தவே முடிவதில்லை.

”கபடவேடதாரி” பற்றி…


தன் ”யதி” நாவலில் துறவிகளில் ஒருவனை, “மொழியின் குழந்தை” என பெயரிட்டு அழைத்திருப்பார். ஆசிரியர் பா.ரா. என்னைப்பொறுத்தவரை அவரே மொழியின் குழந்தைதான். ஆசீர்வதிக்கப்பட்ட ப்ரத்யேகக் குழந்தை. அவரின் புனைவுகள் வெளியாகும்போதெல்லாம், அவற்றின் உள்ளடக்கத்தை விட, அவற்றுக்கு மொழி வழி அவர் செய்திருக்கும் நியாயங்களை, சோதனைகளை, தீர்வுகளை, அழகியலைக்காண பெரிதும் காத்திருப்பேன்.

பூனைக்கதை, யதி, இறவானுக்கு அடுத்ததாக மொழிவழி, ”கபடவேடதாரி”யில் அவர் செய்திருக்கும் அற்புதங்கள் அத்தனை அளப்பரியன.Pa Raghavan எழுதிவரும் புதிய நாவலான கபடவேடதாரியின் 20 அத்தியாயங்கள் நேற்றோடு நிறைந்திருக்கின்றன. வழக்கம்போலவே அத்தியாயங்கள் வெளியாகும் அந்தந்த கணத்திலேயே படித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்..

மாய எதார்த்தம், அங்கதம், அவல நகைச்சுவை, கருப்பு எழுத்து என என்ன வேண்டுமானாலும் இதற்குப் பெயரிட்டுக்கொள்ளுங்கள். ஆனால் இது தரும் வாசிப்பின்பம் மட்டும் மிகப்புதிது, படிக்கப்படிக்க புதுப்புது அர்த்தங்களைக் கூட்டிக்கொண்டே இருப்பது.வாசிக்க வாசிக்க இன்னொரு கனவு உலகத்தை நம் சிந்தையில் பிரசவித்து, அதனை நாம் வாழும் இவ்வுலகத்தின் – இன்னின்ன கூறுகளைத்தான் தன் அங்கதத்தில் இப்படி மாற்றியிருக்கிறார் என்று நமக்குள்ளே ஒரு சிறிய விளையாட்டையும் ஏதுவாக்கிடும் படைப்பாகவும் இது உருவாகி வருகிறது.

அவ்வுலகில் மர்லின் மன்றோ உண்டு, முகம்முது அலி உண்டு, மகாமகக்குளம் உண்டு, மெரினா கடற்கரை உண்டு, மாண்புமிகு பாரதப்பிரதமர் உண்டு இன்னும் யூதாஸ், கண்ணதாசன், கிருஷ்ணன், கரசேவகர்கள், தமிழ்க்குடிமகன், பாண்டிச்சேரி கிரைப்வாட்டர் ஏன் பாரா வரைக்கும் அத்தனை நம்முலக நிகழ்காலப்பிரதிநிதிகள் பலரும் உண்டு.

ஆனால் காலமும், நிலமும் வேறு. அது பேசும் சங்கதிளும், சமாச்சாரங்களும் வேறு. இப்படி கலைத்துபோட்டு விளையாடும் இந்த சீட்டாட்டத்தினிடையே மொழி செய்யும் சித்துவேலைகளோடு ஒரு மிகப்பிரமாதமான மாய எதார்த்தக்களத்தில் அதிபிரமாதமாக எழுதப்பட்டு வருகிறது. “கபடவேடதாரி”.

இதுவரை படிக்கவில்லையென்றால் அவசியம் படியுங்கள். புத்தகமாக ஒரு வருடம் கழித்துவந்துவிடும்தான். ஆனால் ஒரு காவியம் உருவாகும்போது அதனூடே சேர்ந்து பயணிப்பது சுவாரசியம்தான் இல்லையா. ஆர்வமிருந்தால் அவசியம் வாசியுங்கள்.

PS:

இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்நாவலுக்கு தான் மனதில் ஒரு குறிப்பிட்ட தலைப்பை வைத்திருந்ததாகவும், அவரின் அத்யந்த நண்பர்கள் ”அந்தத்தலைப்பை வைத்தால் உங்களை வாழவிடமாட்டார்கள்” என்று தடுத்ததன் காரணமாக தலைப்பை மாற்றியதாகவும் குறிப்பொன்றை எழுதியிருந்தார். அப்போது எனக்கு எதுவும் தோன்றவில்லை. இப்போது நாவலின் போக்கில் பிரத்யட்சமாக அந்தத்தலைப்பு என்னவென்று என் மனதுக்குத் தெரிகிறது. அவர்தம் நண்பர்களுக்கு நன்றி.

வனம் பார்த்த வாசல்

தி.ஜானகிராமனின் நாவல்களில் கொல்லைக்கதவைத்திறந்தால் காவிரி ஆறு ஓடும் ஒரு படிமம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். போலவே குந்தாவில் எங்களுக்கு வாசற்கதவைத்திறந்தால் காட்டின் தோற்றமும்.முதல் 5 வருடங்கள் அடர்ந்த சோலையைப்பார்த்த வீட்டிலும், மீதியிருந்த வருடங்களில் எதிரே பெரிய புல்வெளி பிறகு தேயிலைத்தோட்டச்சரிவு, எதிரே பச்சை பொழியும் மலைகளென கதவைத்திறந்தால் காட்டின் தோற்றம் காட்டிக்கொண்டேயிருந்த வீடுகள் வாய்த்திருந்தன.

இன்று குந்தா மேல்முகாமில் , நாங்கள் இருந்த திசைக்கெதிர்திசையிலிருந்து Gireendran அண்ணா, தன் வீட்டினுள்ளிருந்து, வாசல் நோக்கிய இந்தப்புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

பார்த்த முதல் நொடியில் உளம் மலர்ந்த பூ இன்னும் ஈரமாய் செழித்து அமர்ந்துகொண்டிருக்கிறது.

EL INNOCENTE

El Inocente என்கிற ஸ்பானிஷ் மினி சீரீஸ் மிக சுவாரசியமாகவும், புத்திசாலித்தனமாகவும் எழுதபட்டு இயக்கபட்டிருக்கிறது. சமீபத்தில் பார்த்த மிகச்சிறந்த திரில்லர்களுள் ஒன்று. மிகக்குறிப்பாக இதன் வித்தியாசமான கதைசொல்லல் உத்தி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சுய அறிமுகமகத்தொடங்கி காலத்தை சற்றே நகர்த்தி ஆரம்பித்து பின்னர் கதையின் காலகட்டத்தில் வந்து இணைந்துகொண்டு ஆற்றொழுக்கில் இணைந்துகொள்ளும்படியான எழுத்து, மிகுந்த ஆர்வமூட்டுவதாக இருந்தது.

போலவே சிறிய சிறிய முடிச்சுகளை தொடர் முழுவதுமே உருவாக்கிக்கொண்டே வந்து, ஆங்காங்கே அதனை அவிழ்த்தும், பின் அதன்வழி அடுத்த திருபத்திற்கு வழி செய்தும், “யார் அது” என்ற கேள்வியை தொடர்நது பார்வையாளன் வசம் இறுதிவரை கடத்தியிருப்பது இதன் பெரும்பலம்.

நினைவில் காடுள்ள மிருகத்தின் மலைப்பயணக்குறிப்புகள் சில…

”நினைவில் காடுள்ள மிருகம்” என்ற வாக்கியத்தைப் படித்து அறிந்துகொள்வதற்கு முன்பாகவே நான் அந்த பதத்தின் பிரதிநிதியாகிருந்தேன், என்னை அறியாமலேயே.

10 வருட குந்தா ”வாழ்தலுக்குப்பிறகு” கல்லூரிப்படிப்பிற்காக மலையிறங்கி முற்றிலும் ஒரு புதிய சூழலுக்குள் நுழைந்த பின், இவ்வுலகும், மனிதர்களும், வாழ்வும் எல்லாமே அந்நியமாத்தோன்றின. என் உலகில் இதற்கெல்லாம் இடம் என்ன என்ற கேள்வி தொடர்ந்து தொக்கி நின்றது. திரும்ப வந்து இறங்கியதுதான் பிறந்த ஊர் என்றாலும், வளர்ந்து பிணைந்த மலை, என் மனதை விட்டு விலகவேயில்லை.

உடல் சமவெளியில் நிலவினாலும் என் நினைவும், மனமும் மலை மேலேயே இருந்தன. விட்டு விலகமுடியாத ஒரு ஆழ்முடிச்சு அதோடு என்னை பிணைத்திருந்தது. மிகத்தீவிர அகச்சிக்கல்களில் அது கொண்டுபோய் விட்டது. வேறு வழியில்லை அதிலிருந்து மீண்டாகவேண்டும். புற உலகில் இதனை வெல்ல முடியாது. தவிர அகத்திற்குதான் சிகிச்சை அவசியம். ஆகவே அந்த மாய பால்ய உலகினை என் அக உலகில் சிருஷ்டித்துக்கொள்ளத்தொடங்கினேன்.

மெல்ல மெல்ல அது என்னை ஆக்கிரமிக்கத்துவங்கியது.இந்த அக உலகினை புறத்தில் கட்டியெழுப்பும் முயற்சியாகத்தான் #KundahMusicSeries எழுதத்துவங்கினேன். பால்யத்தின் என் அனைத்து சந்தோஷங்களையும், அந்த இனிய புவியியலையும், அற்புத மனிதர்களையும், அன்பையும், என் ஆழ்மன குதூகலங்களையும் எழுத்தின் வழி மீண்டும் பிரசவித்து இன்பம் கண்டேன். அவ்வுலகை இவ்வுலகில் நிறுத்தி இரண்டையும் மகிழ்வுபடுத்திக்கொண்டே இருந்தேன். என் அக-புறச்சிக்கல்களை இவ்வெழுத்துகள் பெருமளவு களைந்தன. மேலும் இதனைப்படித்து இதன் மூலம் அறிமுகமான நட்புக்களும் பெருகின.

புத்தகமாக வந்தபோது இந்த ஊரை, இந்த இடங்களை, இந்த மாந்தர்களை, இந்த அழகியலை ரசிக்கவேண்டும் என்று பெருமளவு நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். மிகக்குறிப்பாக, அமீரகத்தில் டிவிட்டர் வழியாக இணைந்த நண்பர்கள் ஆறு வருடங்களாக இந்தப்பயணத்தை திட்டமிட்டுக்கொண்டே இருந்தோம். ஆனால் அவ்வளவு எளிதாக அது வாய்க்கவில்லை. ஏகப்பட்ட தடைகள் வந்து கொண்டிருந்தன.

அத் தடைகள் யாவையும் களைந்து கடந்த வாரம் அமீரக நண்பர்களுடன் குந்தாபயணத்தை மேற்கொண்டோம். என்னதான் வளர்ந்த ஊர் எனக்கு தனிப்பெருமிதம் என்றாலும், ஊரின் பெருமை வானளாவியதுதான் என்றாலும், கூட்டிச்செல்லும் நண்பர்களின் உவகை எவ்விதம் இருக்கும் என்ற பதட்டம் உள்ளூர இருக்கத்தான் செய்தது. ”இதற்குத்தானா இவ்வளவு ஆர்ப்பாட்டம் சிவராமா” என்று அவர்களில் யாரேனும் ஒருவர் கூறிவிட்டால் கூட என் மனம் படும் ஆற்றாமையை நினைத்துக்கூட பார்த்தேனில்லை.

ஆனால் ஊர் எப்படி அவர்களை ஏமாற்றும். பரந்து விரிந்து செறிந்து மனங்களை மகிழ்த்தியே மகிழ்த்தியே உயர்ந்தததல்லவா. அது நண்பர்களையும் ஆட்கொண்டது. குன்னூரிலிருந்து பிரிந்து குந்தா போகும் பாதையிலேயே அது அவர்களை தன்வசப்படுத்தியது. முழுக்க மூடுபனியும், லேசான தூறலும், தூரத்துப்பச்சைகளை இன்னும் கண்ணுக்கினியதாய் காண்பித்தது. மலைவழி வழிந்துகொண்டேயிருந்து இயற்கை நீர்வீழ்ச்சிகளை வாகனம் நிறுத்தி கண்களால் பருகிக்கொண்டே மலையேறினோம்.

சாம்ராஜ் வளாகத்தில் நீலகிரியின் சிறந்த டீ ஒன்றைக்குடிக்கப்போகிறோம் என்று சொல்லி வாகனத்தை நிறுத்தினோம். நீலகிரியின் சாதாரண வேலை நேரம் தொடங்குவதற்கு முன்பே அங்குசென்றுவிட்டதால் கடை திறந்து தே நீர் வரத்தாமதமானபோது எழுந்த முனகல்கள் சற்றே மிரட்டின. ஆனால் முதல் மிடறு பருகியபோதே எழுந்த ஆனந்த ஒலிச்சிதறல்களை இந்த நொடி வரை மறக்கவில்லை செவி.இப்படியாக ஊர் சென்று சேர்ந்து, பரந்த மலைகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், ஏரிக்கரைகள், மலைக்கோவில், குறுகியும், நெடிந்தும் வளைந்த கொண்டை ஊசி வளைவுகள், மலையேற்றங்கள், ஆறை நிறுத்தி மின்சாரம் தயாரிக்கும் அணைகள் என எல்லாவற்றையும் பார்த்து மகிழ்ந்துகொண்டேயிருந்தோம்.

ஒன்றே ஒன்று மட்டும் தொக்கி நின்று கொண்டேயிருந்தது. இந்தப்பயணம் ஆரம்பிக்கும்போதே இதற்கு “நித்திரை அழகியைத்தேடி” என்றுதான் பெயர் வைத்தனர் நண்பர்கள். குந்தாவைப்பற்றி எவ்வளவோ எழுதியும், பேசியும் வந்தாலும் அதில் உச்சமாக என் நண்பர்கள் கருதுவது “நித்திரை அழகியும், நிஷாகந்தியும்” பதிவைத்தான். அதில் வரும், நித்திரை அழகி மலையைக் (Sleeping Beauty) காண்பதுதான் எங்கள் பயணத்தின் முதல் நோக்கமாயிருந்தது.ஆனால் கடும் மூடுபனியின் காரணமாக, முதல் நாள் பகல் வேளை முழுக்கக்காத்திருந்தும் அந்தக்காட்சி காணக்கிடைக்கவேயில்லை.

இதற்காகவே இந்த மலையின் நீள்கோணக்காட்சி ஒன்று தெரியும் ரிசார்ட் ஒன்றையே புக் செய்திருந்தோம், இரண்டு நாட்களும் பனி விலகவேயில்லையாதலால், அது வழியும் எங்களுக்கு நித்திரை அழகியின் தரிசனம் கிடைக்கவேயில்லை. இனி கிடைக்கவே கிடைக்காது என்று மனதைத்தேற்றிக்கொண்டு பயணத்தின் மற்ற சந்தோஷங்களில் திளைத்து இதனை மறந்திருந்தோம்.

இந்த முறை அவள் தரிசனம் இல்லை என்பது தனிப்பட்டமுறையில் எனக்கு ஒரு இழப்பே என்று நினைத்து மருகினேன். அவள் அருகில் இருக்கையில் ஏற்படும் ஆழ்மனதியான உணர்வு இந்த முறை வாய்க்காது என்ற ஏமாற்றத்தை சற்றே மறக்க முயன்றுவிட்டுதான் பயணத்தை தொடர்ந்துகொண்டிருந்தோம்.

கடும் மேகமூட்டம் மறைப்பதால், சற்று சீக்கிரமாக மலை இறங்கலாம் என்ற ஓட்டுநரின் கருத்தை ஆமோதித்து, 5 மணி சுமாருக்கே என் மனதிற்கியைந்த கெத்தை-முள்ளி-வெள்ளியங்காடு சாலையில் காரமடை நோக்கி பயணமானோம். சன்னல் வெளியெங்கும் மூடுபனி மிரட்டிக்கொண்டே இருக்க, நித்திரை அழகியின் மீதான தியானம் மட்டும் விலகவேயில்லை எனக்கு. ஒரே ஒரு கணமேனும் திரைவிலகி அவள் முகம் பார்க்க முடியாதா என்ற ஏக்கம் தொனிக்க நொடிகள், யுகமாககரைந்தபடி இருந்தத. ஏறக்குறைய 15 கொண்டைஊசிவளைவுகள் இறங்கியபிறகு வானமும், அவளின் மனமும் இறங்கின.

***********************************************************************”

நேரா என்னோட கையப்பாரு, அந்த இடதுபக்க மிஸ்ட் கூட்டத்துக்கு மேல இருக்குற மலையை மட்டும் பாரு. அதுதான் அவளோட முகம். மத்த மலையை பாக்காத, மிஸ்ட்டை பாக்காத, ஒரே ஒரு ஆங்கிள்தான், நல்லா பாரு.”தெரிந்தது – சிலிர்த்தது. வயிற்றுக்கு அருகில் ஒரு சிறிய மின்னல் பூ மலர்ந்தது. எச்சில் விழுங்க முயன்று அது தொண்டைக்குக்கீழே செல்லாமல் சட்டென இருமல் வந்தது. தலையைத் தட்டிக்கொண்டேன் சில நாட்களாக கேள்விப்படிருந்த ஸ்லீப்பிங் ப்யூட்டி எனும் மலை – பெண் உருவில் ஒரு மலை – தலை முடியை விரித்துப்போட்டுக்கொண்டு, கண்மூடிப் படித்திருக்கும் ஒரு பெண்ணின் உருவம். மேடான நெற்றி, நேரான மூக்கு, சிறிய உதடு, வளைந்த மோவாய், கழுத்து, நேரான மார்பு, குழைந்த வயிறு என பார்த்த முதல் நொடியில் அச்சமும் பார்க்கப்பார்க்க பரவசமும் தோன்றும் தூங்கும் அழகி என்னும் மலை. அவ்வளவு குளிரிலும் லேசாக வியர்த்தது.

***********************************************

மேற்கண்டது நான் முதன்முதலில் ஸ்லீப்பிங் பியூட்டியைப்பார்த்தபோது ஏற்பட்ட உணர்வு. அதே பெருமிதம், அதே சிலிர்ப்பு, அதே உவகை அன்று மேகம் கலைந்தபோதும் வந்தது. வண்டியை ஓரம் நிறுத்தி கண்ணார அவளைப்பருகினோம். மலைகளுக்கிடையே படுத்திருக்கும் இன்னொரு மலையென எப்போதுமே அவளை என் கண்கள் கண்டதில்லை. என்றேனும் ஒரு நாள் எழுந்துவரக்காத்திருக்கும் யக்‌ஷியெனவே அவளைக்கொண்டிருக்கிறேன்.இவ்வளவு நேரம் கண்ணாமூச்சி விளையாடி பயணத்தின் இறுதித்தறுவாயில் அவளைக்காட்டியதும், இம்மலை எனக்குச்சொல்லும் சின்னஞ்சிறு ரகசியங்களில் ஒன்றென்றே கொள்வேன். மிகுந்த மன நிறைவோடு மலையிறங்கினோம்.

மோகமுள் – நாவல்

”மோகமுள்” நாவலை முதன்முதலில் கல்லூரிக்காலத்தில்தான் படித்திருந்தேன். முழுமையாக படித்திருக்கிறேன்தான்.
ஆனால் அந்த அனுபவத்தை முழுதும் உள்வாங்கவில்லை என்று இரண்டாவது முறை முழுமையான வாசிப்புக்குப்பிறகு
இப்போது உணர்ந்தேன்.

ஏற்கனவே படித்திருந்தாலும், சொந்தமாக என்னிடம் மோகமுள் புத்தகம் இல்லை என்ற காரணத்தினாலேயே 2015ல் காலச்சுவடு கிளாசிக் பதிப்பித்த புதிய பதிப்பை வாங்கி வைத்திருந்தேன். அவ்வப்போது கும்பகோணம் போர்ஷன்கள், தங்கம்மாவின் கதை, காவிரி வர்ணனைகள் என்று படித்துக்கொண்டிருந்தாலும் (2019) ஜனவரி 1ம் தேதி ஆரம்பித்து 8ம்தேதி வரை நாளொன்றுக்கு 60 பக்கம் வீதம் மிக மிக நிதானமாகப்படித்துமுடித்த இந்த முறை மிக மிக நிறைவாக இருந்தது.

இந்த நாவலில் கிளாசிக்தன்மையே அதன் பல்வேறு அடுக்குகளில்தான் அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

 • பாபுவிற்கும் வைத்திக்கும் இடையேயான புரிந்துணர்வு கொண்ட அப்பா, மகன் உறவு
 • பாவுவிற்கும், ராஜத்திற்கும் உள்ள பரிபூரண நட்பு
 • யமுனா மீதான அன்பு, காதல், காமம் என பாபுவின் முப்பரிமாணங்கள்
 • தங்கம்மாவிற்கு பாபு மீதான காமம்
 • ரங்கண்ணாவிற்கும், பாபுவிற்குமிடையேயான குரு-சீடன் உறவு
 • சங்குவுக்கும், பாபுவிற்கும் இடையே இருக்கும் சகோதர பாசம்
 • வீட்டு ஓனருக்கும், பாபுவுக்கும் இடையே சுவாரசியமற்று இருந்தாலும், கண்ணுக்குத்தெரியாத ஒரு அன்னியோன்யம்

என மேற்கண்ட எல்லா தலைப்புகளையும் மிக முழுமையாக ஆராயந்து அனுபவித்து எழுதப்பட்டிருக்கிறது நாவல். இதிலும் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தொடங்கி, சுதந்திரம் கிடைத்து, காந்தி இறந்து ஒரு வருடம் கழித்து கிட்டத்தட்ட 10+வருடங்கள் நீளும் நாவல் என்றாலும், எங்கும் தடையில்லாமல் வாசகனின் மனதை நீக்கமற நினைக்கிறது.

இவ்வளவு விரிவான எல்லைகள் இருந்தாலும், காதல், சங்கீதம் என்ற இரண்டு பிரதான துடுப்புகளுடந்தான் இந்த
நாவல் ஓடம் கால நதியில் நமக்கு முன்னே விரிகிறது. பாபுவின், யமுனாவின், ராஜத்தின், ரங்கண்ணாவின்,வைத்தியின், தங்கம்மாவின் விதவிதமான தேடல்களும், தவிப்புகளும் வெவ்வேறு திசையில் இருந்தாலும் இந்த எல்லா விழைவுகளும், தேடல்களும் காதல், சங்கீதம் என்ற இரண்டு பெரும் தலைப்புகளுக்குள் அடங்கிவிடக்கூடியவை.

ரங்கண்ணா வழியாகவும், ராஜம் வழியாகவும், வைத்தி வழியாகவும் பாபுவுக்கு போதிக்கப்படும் ”புலனொழுக்கம்
என்பது சங்கீதத்துக்கும், ஞானத்தும் மிக முக்கிய வழி” என்ற வாழ்வியல் போதனையை பாபு தன்னின்
தொடர்ந்த மனப்போராட்டங்களின் வழி எப்படிக்கடந்து போகிறானென்றும் இதை விவரிக்கலாம்.

முதிராக்காதல் என்று ஒற்றைவார்த்தையில் “மோகமுள்” நாவலை நிச்சயம் கடந்து சென்று விடமுடியாது.
”நான் உன்னை சாதாரண மனிதப்பிறவியாகவே நினைக்கவில்லை. நான் வணங்கும் தெய்வத்தின் வடிவம் நீ” என்ற தெய்வாம்ச நிலையிலிருந்து “அவளைப்பார்த்ததும் பெருமிதம் பொங்கிற்று, அவள் மேனி முழுவதும் கூடத்தில் தொங்கும் பதினைந்து காண்டில் பவர் விளக்கின் ஒளியில் தகதகவென மின்னிற்று” என்ற இச்சை நிலைக்குச்சென்று சேரும் கணம் வரைக்கும் பாபுவின் தேடலுக்கான விதை நாவலெங்கும் விதைக்கப்பட்டே வந்திருக்கிறது.

“இதுக்குத்தானே எல்லாம்?”

”இதுக்குதான்”

என்று யமுனா அவனின் மோகமுள்ளை விடுவித்ததும் அவன் ஞானத்தேடலை நீக்கி, சங்கீதம் கற்றுக்கொள்ள வட நாடு செல்கிறான். அந்த ஒரே ஒரு விடுபடலை நோக்கித்தானா இத்தனை கதையும் என்ற ஆசுவாசம் ஒற்றை வரியில் கிடைக்கலாம், ஆனால் காவேரியும், சங்கீதமும், மனிதர்களின் குணங்களும், பயணங்களும், அந்தக்கால கும்பகோணமும், திருவல்லிக்கேணியும், பாபுவும், தங்கம்மாவும் நம்மை புதிய உலகத்திற்கு கொண்டு சென்று மீட்பார்கள்.

இந்த நாவல் நிச்சயம் ஒரு பேரனுபவம். படிக்கத்தொடங்கி முடிக்கும் வரையில் அந்த காலகட்டத்திலேயே வாசகனை இருத்தி ஒரு மெல்லிய தியானத்தில் நம்மை உழலச்செய்யும் அற்புதப்படைப்பிது. இதுவரை வாசிக்கவில்லையென்றால் அவசியம் வாசித்து இன்புறவும்

பின்னிணைப்புகள்

 1. மோகமுள் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு முழுமையுறாத திரைப்பட வடிவம். இளையராஜா தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலுக்காக
  இசையமைக்கப்பட்ட பாடல்களும், ஆங்காங்கே வருடும் பின்னணி இசை மட்டும் ஆறுதல்
 1. நீலமலை பனிமலர் என்ற இதழில் வெளிவந்த தி.ஜானகிராமனின் பேட்டி, வெங்கட் சாமி நாதன் எடுத்தது – https://solvanam.com/2011/05/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/

Scoop by Kuldeep Nayar

ஸ்கூப் ( Scoop) இந்தியாவின் மிக மூத்த பத்திரிக்கையாளர்களுள் ஒருவரான குல்தீப் நய்யாரின் செய்தி சேகரிப்பு, ரிப்போர்டிங், அரசியல் தலைவர்களுடனான அவரது உறவு, அவரது ரிப்போர்டிங்கினால் இந்திய அரசியலிலும், நிர்வாகத்திலும் நிகழ்ந்த மாற்றங்கள் என பல தளங்களில் நடந்த சுவாரசியமான சில கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வந்திருக்கிறது.

ஆறு பெரும் பிரிவுகளாக முதலில் இந்த நூலை பிரித்துக்கொண்டுள்ளார்

1. பிரிவினை
2. நேருவின் ஆட்சிக்காலம்
3. லால் பகதூர் சாஸ்திரியின் ஆட்சிக்காலம்
4.இந்திரா காந்தியின் ஆட்சிக்க்காலம்
5. நெருக்கடி நிலை
6. துணைக்கண்டத்தை அதிர வைத்த சம்பவங்கள்

பிரிவினை:

தேசப்பிரிவினை பகுதியின் முதல் கட்டுரையாக தான் மகாத்மா காந்தி இறந்த அன்று செய்தி சேகரிக்கப்போன 1948 ஜனவரி 30ஐ நினைவிற்கொண்டு எழுதத்தொடங்குகிறார். தேசமே அதிர்ந்து போன அந்த நிகழ்வும், அதன் பின்னால் இருந்த தேசப்பிரிவினையின் பங்கையும் பற்றி விரிவாகப்பேசும் கட்டுரைகளை தன் பார்வையில் எழுதியிருக்கிறார். இந்தப்பகுதியில் அவர் ஜின்னா, மவுண்ட் பேட்டன், ரெட்கிளிஃப் ஆகியோரை பின்னாளில் பேட்டியளித்த நினைவுகளைத்தொகுத்து பிரிவினைக்காலத்தின் வெவ்வேறு
மனச்சித்திரங்களை கோடிட்டுக்காட்டியபடி செல்கிறார்.

நேரு:

நேருவின் ஆட்சிக்காலத்தைப்பற்றிய இரண்டு முக்கிய விஷயங்களை நீண்ட கட்டுரைகளை வடித்திருக்கிறார். முதலாவது நமக்கு மிகவும் பரிச்சியமா ஹிந்தித்திணிப்பும், அதன் பின்பு நடந்த கலவரங்களும் பற்றியது. ஹிந்தியை ஆட்சி மொழியாக்க பெரும் பிரயத்தனப்பட்ட அப்போதைய உள்துறை அமைச்சர் கோவிந்த் பல்லப பந்த் (Goving Ballabh Bant)தின் முயற்சிகளைப்பற்றி பெருமளவு இந்தக்கட்டுரை பேசுகிறது. ஆரம்பத்திலிருந்தே இந்த முயற்சியில் நேருவுக்கு இருந்த அசுவாரசியமும் வெளிப்படுகிறது. பிறகு அறைகுறையாகக்கொண்டு வரப்பட்ட ஒரு சுற்றறிக்கை ஏற்படுத்திய கலவரங்களின் பிரதிபலிப்பாகவே, ஹிந்தி ஆட்சிமொழியாக்கப்படாது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு அரசாங்கத்திடமிருந்து வந்திருக்கிறது

நேரு குளியலறையில் விழுந்து இறந்துபோன 1964 மே 27ந் தேதிக்கு முன்னதாகவே, அவருக்கு பக்கவாத பாதிப்பு இருந்த நாளிலிருந்தே நேருவுக்கு அடுத்தது யார் என்ற கேள்வி தேசத்தில் பிரதானமாக இருந்ததாகக் கூறுகிறார் நய்யார். இந்திராகாந்தியின் பெயர் சலசலக்கப்பட்டாலும், நேருவே அவளுக்கு பக்குவம் போதாது என்று சொன்னதாகவும் தகவல் வருகிறது. பிரதமர் பதவிக்கு மிக முக்கிய போட்டியாளர்களாக லால் பகதூர் சாஸ்திரியும், மொரார்ஜி தேசாயும் களத்தில் இருந்திருக்கிறார்கள். நய்யார் சாஸ்திரியின் உதவி அதிகாரியாக சில நாட்கள் வேலை பார்த்திருந்ததனால் அவர் மீது இவருக்கு சற்றே soft corner இருப்பது புரிகிறது. அதை மொரார்ஜி தேசாயும் நன்கு உணர்ந்து இவருக்க்கு சரியான பத்திரிகை ரீதியான ஒத்துழைப்பும் வழங்காதிருந்திருக்கிறார். பிரதமரை தேர்ந்தெடுக்கு தேர்தலில்லாமல் முடிவெடுக்க மொரார்ஜி தேசாய்க்கு அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் தூது விட்டிருக்கிறார். மொரார்ஜி அதை விரும்பவில்லை. தேர்தலுக்கு முதல் நாள் குல்தீப் சாஸ்திரிக்கு ஆதரவான ஒரு பெரிய பத்திரிகைச்செய்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் பல பேரை சாஸ்திரிக்கு ஆதரவாக முடிவெடுக்க வைத்திருக்கிறது. சாஸ்திரி பிரதமரானதும், காமராஜர் ரகசியமாக குல்தீப் நய்யாருக்கு நன்றியும் சொல்லியிருக்கிறார்.

சாஸ்திரி:

சாஸ்திரியின் ஆட்சிக்காலம் குறித்தும், அப்போது நடந்த இந்தோ-பாக் போரின்போது அவரின் புத்திசாலித்தனமான முடிவுகள் குறித்தும், நிர்வாகத்திறமை குறித்தும் மிக மிக உயர்வாக எழுதப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நான் கூறியபடி அவரின் மீது குல்தீப்புக்கு இருக்கும் soft corner இந்தக்கட்டுரைகளில் அதீதமாக வெளிப்படுகிறது. ஆனால் தாஷ்கெண்ட் ஒப்பந்தத்தின் காரணமாக தனக்கு தேசத்திலும், காங்கிரசிலும், குடும்பத்திலும் அவப்பெயர் வந்து விடுமோ என இறுதி நாளில் சாஸ்திரி கலங்கியதையும், அதன் காரணமாகவே மாரடைப்பில் இருந்தததையும் கோடிட்டுக்காட்டுகிறது. பின்னாளில் இம்மரணமே ஒரு சதிவேலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்ததும் வருகிறது.

இந்திரா மற்றும் எமர்ஜென்சி:

இந்தப்புத்தகத்தின் மிகப்பெரிய சுவாரசியம் இந்திராகாந்தி பகுதிகள்தான். காமராஜரின் ஆதரவில் பதவிக்கு வருவதும், பதவிக்கு வந்த நாளிலிருந்து சர்வாதிகாரப்போக்கை கடைபிடிப்பதும், சிண்டிகேட் மெம்பர்களை மதிக்காமல் நடப்பதும், தேவையில்லாத பொருளாதாரச்சீர்திருத்தங்கள் செய்து விலைவாசியை ஏற்றுவதும், ஒன் வுமன் ஷோவாக ஆட்சி நடத்துவதும், மூத்த தலைவர்களின் சொல் பேச்சு கேட்காமல் நடப்பதும் (காங்கிரஸ் நிறுத்திய குடியரசுத்தலைவர் வேட்பாளரையே தோற்கடிக்க வி வி கிரியை சுயேச்சையாக நிப்பாட்டுகிறார்) என சமகாலத்தின் ஏகப்பட்ட சுவடுகளைக்காண முடிகிறது. எமர்ஜென்சி கால சித்திரங்கள் அவசியம் வாசித்து அறிய வேண்டியன.

துணைக்கண்ட சம்பவங்கள்:

இந்தப்பகுதியில்

– பாகிஸ்தான் அணுகுண்டின் தந்தையான ஐ க்யூ கான் அணுகுண்டு தயாரிப்பு பற்றிய செய்தியைச்சொன்ன அவரின் முதல் பேட்டி
– வங்க தேச யுத்தம், அதில் அமெரிக்காவின் பங்கு
– புட்டோவின் தூக்கு
– ஜெயவர்தனே – விடுதலைப்புலிகள் மோதல் பற்றிய கட்டுரை
– லாகூருக்கு வாகா எல்லை வழியிலான பேருந்துப்பயணம் – வாஜ்பாய் பேட்டி

ஆகியவை பற்றிய கட்டுரைகள் உள்ளன.

ஒரு பெரிய வரலாற்றுப்புத்தகத்தின் சிறிய முக்கியமான பகுதிகள் அடங்கிய குறுகிய வடிவம் போல இந்தப்புத்தகம் இருந்தது. மிக மிக சுவாரசியமானதும் கூட

அமேசானில் வாங்க

சுகந்தமாலினி

கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பதுபோல், உன்னோடு வாழ்ந்திருக்க சாமி சொன்னதய்யா

என்ற பாடல் வரிகள் அதிகாலையிலேயே மனதின் அடியாழத்திலிருந்து மேலெழுந்து வந்து அழைத்தபடியே இருக்கின்றன.

“இனம்புரியாத ஆழ்மனக்கிறுக்கு இந்தப்பாட்டு மேல எனக்கு, பவதாவோட குரல் இந்தப்பாடலுக்குள்ள அவ்ளோ பாந்தமா சேர்ந்து ஒலிக்கும். இளையராஜாவே பெண் குரல்ல பாடினதோன்னு சமயத்துல நினைச்சுக்குவேன் “

வாக்மேனின் ஒரு முனையை என் காதிலும், மற்றொன்றை அவன் காதிலும் வைத்துக்கொண்டு சந்த்ரு பேசிய இந்த 13 வருட பழைய உரையாடலை இரண்டு நிமிடங்கள் முன்புதான் கேட்டது போல் இருக்கிறது. அப்போது கோர்த்துக்கொண்டிருந்த அவன் கரங்களில் வெம்மையை  இப்போது மீண்டும் உணர்ந்தேன்.  இத்தனை வருடங்கள் கழித்து அவனை சந்திக்கப்போகிறேன் என்ற உணர்வு எங்கிருந்தோ மேலெழுந்து வந்து என்னை அளவில்லா உற்சாகத்தில் தள்ளியது.

கூகுளில் தேடி “ஒரு சின்ன மணிக்குயிலு” பாடலை என் பாத்ரூம் ஷவர் எம்பி3 யில் இணைத்தேன். நீரோடு இசையும் வார்த்தைகளும் பின்னிப்பின்னி என்னை நனைத்தன – சந்த்ருவின் பழைய நினைவுகளும்.

*

ப்ராட்கேஜ் வராத மில்லினியப்புதுவருடங்கள் அவை.  மீட்டர் கேஜ் மின்சார ரயில்கள் மட்டும் சென்னையின் தண்டவாளங்களை இணைத்துக்கொண்டிருந்த காலம் அது.  நெரிசலைத்தவிர்க்கும்பொருட்டு தினமும் காலையில் 9:15 மணிக்கு பல்லாவரத்திலிருந்து புறப்படும் பல்லாவரம் ரிட்டர்னில்தான் என் அலுவலகத்திற்கான பயணம் துவங்கும். அங்குதான் முதன்முறையாக சந்த்ருவை சந்தித்தேன்.  

முதலில் அவன் கையில் வைத்திருந்த அந்த பெரிய பச்சை நிற புத்தக அட்டையை பார்ப்பதுதான் என்  நோக்கமாக இருந்தது. முன்னும் பின்னுமாகத் திரும்பி அந்த நூலின் பெயரை வாசிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன். கோடம்பாக்கம் ஸ்டேஷன் வந்து இறங்கப்போகும் தருவாயில் புத்தகத்தை என் கையில் கொடுக்கும் பாவனையில்

“இது ’காடு’, ஜெயமோகனோட புது நாவல்”

என்றான். இரண்டு நாள் ஷேவ் செய்யாத இளந்தாடி,  படிய வாரிய தலை, சம்பந்தமேயில்லாத நிறத்தில் சட்டையும், பேண்ட்டும். இப்படி எண்ணற்ற பெண்ணிடம் தோற்கும் பாவனைகள் இருந்தாலும், அந்தக்கண்களும், கள்ளமில்லா குறுஞ்சிரிப்பும் அவன் கேரக்டரை பறைசாற்றும் அற்புதக்குறியீடுகள். நேரே கண்களின் ஆழத்தை நோக்கிப்பேசுவான்.

“ஓ, நன்றிங்க, ரொம்ப நேரமா அந்த அட்டை வாசகத்தை  படிக்க ட்ரை பண்ணி தோத்துப்போயிருந்தேன். எப்படி இருக்கு நாவல்.”

அடுத்த ஐந்தாவது நாளில் நாங்களிருவரும் காடு புத்தகத்தைப் பற்றி உரையாடலில் தொடங்கி நண்பர்களாகினோம். அன்று தொடங்கி எங்கள் காலைப்பொழுதுகள் உற்சாகம் கொப்பளிக்கத்தொடங்கின.  பல்லாவரம்  தொடங்கி கோடம்பாக்கம் வரையிலும் ரயில், பிறகு ரயில் நிலையத்திலிருந்து இறங்கி, முரசொலி அலுவலகம் வழியாக மஹாலிங்கபுரம் வரையிலும் எங்கள் நட்பும் உரையாடலும் தொடர்ந்தது. 

”ஏன் மெட்ராஸ்ல உள்ள பெரிய லேண்ட்மார்க்கெல்லாம் சிவப்பாவே இருக்குன்னு யோசிச்சிருக்கியா?”

“அவ்ளோல்லாம் கஷ்டப்பட்டு ஏன் யோசிக்கணும், வேணும்னா சன்னா சமோசா எங்க சிறப்பா இருக்கும்னு கேட்டா உடனே சொல்லிடுவேன்”

”வாஸ்தவம்தான்” குறுஞ்சிரிப்போடு சொன்னான்

”ஆனா சொன்னா கேட்டுப்பேன், உங்களுக்குத்தெரிஞ்சா சொல்லலாம்”

”பிரிட்டிஷ்காரங்க மெட்ராஸை கட்டுமானம் பண்றப்போ ஒரே ஒரு மோனோபோலி என்ஜினியரிங் காண்ட்ராக்டர்தான், அவர் பேர் நம்பெருமாள் செட்டி, அவர்கிட்ட நிறைய செங்கல் சூளைகளும் இருந்ததாம். அதுனால சிக்கனமா எல்லா கட்டிடத்துக்கும் செவப்பு கலர்லயே அமைச்சுட்டாருன்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு” என்றான். இப்படியெல்லாம் யோசிக்க வேண்டும் என்றுகூட எனக்குத்தோன்றியதில்லை. அது தொடங்கி வித விதமாக சென்னையின் முக்கியமான வரலாற்றுச்சிறப்புமிக்க இடங்களுக்கெல்லாம் பேருந்திலும், ரயிலிலுமாக சுற்ற ஆரம்பித்திருந்தோம்.

24 வயது இளைஞனுக்கான ஆதார கெட்டபழக்கங்களோ, சினிமா டிராமா இத்தியாதிகளோ இல்லாது வரலாறு, கவிதை, இலக்கியம், பயணம் என ஒரு தனிப்பிரதியாக இருந்தான். பேசும்போதெல்லாம் அருவியாகக் கொட்டும் தகவல்களுக்காகவே அவனுடன் இருப்பதை எப்போதும் விரும்பினேன். சில மாதங்களிலேயே எங்கள் நட்பு மிகப்பலமாக வளர்ந்தது. அது காதலாகிக் கனிந்த அந்த நன்னாளும் வந்தது.

”நாளைக்கு திருநீர்மலைக்கு போலாமா” என்றான் ஒரு நாள். பொதுவாக அவன் கோவில்களுக்குப்போவதில் ஆர்வம் காட்டுவதில்லை. போனாலும், அதன் வரலாறு பற்றிப்பேசுவானே ஒழிய, பக்தி கிடையவே கிடையாது. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

உடனேயே “போலாமே” என்றேன்.

பம்மலிலேயே இருந்தும், அவ்வளவு அருகில் இருக்கும் இந்த அற்புதமான கோவிலை எப்படித் தவறவிட்டேன் என்றே தெரியவில்லை. திவ்ய தரிசனமும் அவன் அருகாமையும் உள்ளத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக்கொண்டிருந்தது. அந்த கனிவான தருணத்தில்தான் அவன் அந்தப்பரிசை வழங்கினான்.

“உன் பேருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?”

“சுகந்தின்னா வாசமானவள்னு அர்த்தம், எவ்ளோ வியர்வை வாசமா இருக்கேன் பாத்தியா?”

“அவ்ளோதானா?”

“அப்புறம்”

”எனக்கு உன் பேர்லயே இருக்குற வண்ணம்தான் மனதுக்கு நெருக்கமான வண்ணம். சுகந்தின்னா லாவண்டர்னு ஒரு அர்த்தம் இருக்கு. ஏனோ பிறந்ததுலேர்ந்தே கத்திரிப்பூ வண்ணத்துமேல எனக்கு ஒரு இனம்புரியாத ஈர்ப்பு, என் வாழ்க்கைல எல்லா முக்கிய விஷயங்களின்போதும் அந்த வண்ணம் இயைஞ்சே வந்திருக்கு. உன் பேரைத் தெரிஞ்சுகிட்ட அந்த நிமிடத்துலேர்ந்து என் மனசுல நான் என் டெஸ்டினியைத் தேடிக்கண்டு புடிச்சுட்டேனோன்னு தோணுச்சு. அதான் உங்கிட்டயும் என் விருப்பத்தை சொல்லலாம்னு இங்க கூட்டிட்டு வந்தேன்.”

அவன் கண்கள் ஆழமானவை, கனிந்த பார்வை கொண்டு இதயம் துளைப்பவை, எப்போதுமே அன்று அது இரண்டு மடங்காயிருந்தது. சிரித்தேன், மனம் துள்ளிக்குதித்தது, ஒரு பறவையைப்போல பறக்க வேண்டும் போல இருந்தது. உள்ளே ஓடிப்போய் நீர்வண்ணப்பெருமாளுக்கு கண்ணீர் மல்க நன்றி சொல்ல வேண்டும் போல இருந்தது. சிரித்தேன், அவன் தோள் பற்றி அழுதேன். ஒரு கணம், ஒரே கணம்தான்.

“வா இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்.”

”லூஸ், பேசாம உக்காரு”

“இல்லை, எனக்கு மனசு நெறஞ்சு இருக்கு, இன்னிக்கே பண்ணிப்போம்” என்றேன்

இப்போது நினைத்துப்பார்த்தால் அசட்டுத்தனமாகதான் இருக்கிறது. ஆனால் அப்போதே அந்த உடனடி சந்தோஷத்தைக்கொண்டாடும் பொருட்டு பெரிய முட்டாள்தனத்தை செய்தேன், மலையிறங்கி, மாலைகளும், பூக்களும் வாங்கி, மஞ்சளில் கோர்த்த கயிறு வாங்கி ஆவணி மாதம் , சனிக்கிழமை, சதுர்த்தி நாளில் , யாருக்கும் தெரியாமல் விஷ்வக்சேனர் சன்னிதி முன்னால் நின்று கொண்டு எந்த மந்திரங்களும் ஒலிக்காமல், ஓங்கி ஒலித்த என் பிடிவாதக்குரலுக்கு செவிசாய்த்து எனக்கு சந்த்ரு தாலி கட்டினான்.

”எப்போ முடியுமோ எப்போ வீட்ல பேசி, மண்டபத்துல, மந்திரங்கள் முழங்க, கல்யாணம் பண்ணிக்கலாம். ”

என்று சமாதானப்படுத்திக்கொண்டோம்.

ஆனால் அது நடக்கவே நடக்காது என்ற நிலையை அடுத்த ஒரு வருடத்தில் எட்டினோம். ஜாதி, வருமானம், வேலை என பல காரணங்களைக்காட்டி சந்துருவை எங்கள் வீடு விரட்டிக்கொண்டே இருந்தது. தளராமல் போராடினோம் மாதக்கணக்கில். ஆனால் ஒரு கட்டத்தில் முதலில் தளர்ந்தது நாந்தான். வாழ்க்கை என்ற பெரிய உலகத்தில் என்னையும், சந்துருவையும் ஒரு எறும்பு போல உணர ஆரம்பித்தேன். அவனைத் திருமணம் செய்தால் வாழ்க்கை முழுதும் போராட வேண்டி வருமோ என்ற ஆழ்ந்த விஷ முள் எப்படியோ என் மனதிற்குள் விதை விட்டது.

எந்த பல்லாவரம் ரிட்டர்னில் எங்கள் காதல் தொடங்கியதோ, அங்கேயே அவனுக்கு விடை கொடுத்துவிட்டு வந்தேன். பெரிய ஆர்ப்பாட்டம் செய்வானோ, என்னைத்திட்டுவானோ, ஏமாற்றினாயே என்று புழுதி வாறித்தூற்றுவானோ என்றெல்லாம் எண்ணிப்போன எனக்கு, அவனின் அமைதி மிகுந்த அச்சமூட்டியது. திக்கித்திணறி வார்த்தைகள் கோர்த்து, நான் சொன்னதை இரண்டாவது நொடியில் உள்வாங்கிங்கொண்டு

“நீ போ சுகந்தா, உனக்கு அதுதான் சரி”

என்று கூறிவிட்டு, மீனம்பாக்கம் ஸ்டேஷனில் இறங்கிச்சென்றுவிட்டான்.

அதுதான் அவனைக்கடைசியாகப்பார்ப்பது என்று நான் உணரவேயில்லை. பின்னர் சமாதனப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தேனா அல்லது விட்டது சனி என்று அந்த தருணத்தில் நினைத்தேனா என்று தெரியவில்லை.

ஆனால் அதன்பிறகு அவனைக்காணவேயில்லை. எனக்குத்தெரிந்த அவன் ஒரே அலுவலக எண்ணில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் இல்லை என்றார்கள். வேலையை விட்டுப்போய் விட்டதாகச்சொல்லி விட்டார்கள். பல்லாவரம் ரிட்டர்ன் வரும்போதெல்லாம் எல்லா பெட்டிகளிலும் ஓடிப்போய்த்தேடிப்பார்த்திருக்கிறேன்.

அப்போது போனவன்தான், அதன் பிறகு அவனைப்பார்க்கவேயில்லை, அவனைப்பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை.

வருடங்கள் கடந்து, வாழ்க்கை வளர்ந்து நெடுந்தூரம் வந்தாலும், சின்னஞ்சிறிய பிரச்சனைகளின்போது கூட, நான் அவனுக்குச்செய்த ஊழின் பெருவலிதான் இது என்றே உள்மனது அறற்றாத நாளில்லை.

*

13 வருடங்கள் கழித்து இரண்டு நாட்கள் முன்னால் வந்த அந்த தொலைபேசி அழைப்பில் அவன் குரலைக்கேட்டவுடன், செய்துகொண்டிருந்த அத்தனை வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு வெளியே ஓடிவந்தேன்.

கம்மிய குரலில்

“எப்படி இருக்க சந்த்ரு, எங்க இருக்க” என்றேன்

அதற்கு பதிலேதும் இல்லை

“உன்னப்பாக்கணும், சனிக்கிழமை திருநீர்மலை வர்றியா?” இரண்டே வார்த்தைகள்தான். தொடர்பு அறுந்தது

அந்த அழைப்பே என் கற்பனைதானோ என்று நினைத்தேன். இல்லை, இன்கமிங் எண் ஒன்று இருந்தது, 27 நொடிகள் பேசிய லாக் இருக்கிறது. அந்த எண்ணுக்கு இரண்டு நாட்களில் 100 தடவை அழைத்திருப்பேன். ஸ்விட்ச் ஆப் என்கிறது.

ஆயினும் என்ன, சந்த்ரு பேசினான், திரு நீர்மலைக்கு வருகிறான் போதாது. இதோ உற்சாகமாக கிளம்பிவிட்டேன்.

என்னவெல்லாம் பேசலாம், 13 வருடங்கள் எவ்வளவு தூரமானது. பல்லாவரம் ரிட்டன் இப்போது கிடையாது, மீட்டர் கேஜே கிடையாது, பிராட் கேஜில் நெரிசலில் நின்று கொண்டு போன காலங்கள் மலையேறிப்போயின, வேலை மாறியது, வாழ்க்கை மாறியது, மாருதி சென்னில் ஆரம்பித்து மூன்றாவது கார் மாற்றி இப்போது பலேனோவிற்கு வந்திருக்கிறேன்.

இரண்டு முறை ஆப் ஷோருக்காக அமெரிக்கா போய் வந்திருக்கிறேன், என் ஆங்கிலம் மேம்பட்டிருக்கிறது, ஓ எம் ஆர் சாலையில் பெரிய ஐ டி கம்பெனியின் நிர்வாகம் என் கையில் இருக்கிறது. லெபனானுக்கு போய் கலீல் கிப்ரான் வீட்டைப்பார்த்துவிட்டு வந்து அவன் முதலில் பரிசளித்த கிப்ரான் புத்தகத்தை படித்தது, அவனுக்குப்பிடிக்குமே என்று மாதா மாதம் லாவண்டர் கலரில் உடை வாங்கியது…இன்னும் எத்தனை இருக்கிறது.

ஆனால், சுகந்தமாலினி ராமகிருஷ்ணனாக இருந்த நான் சுகந்தமாலினி ரவிச்சந்திரனாக மாறி இல்லறம் கசந்து, விவாகரத்தாகி மீண்டும் சுகந்தமாலினி ராமகிருஷ்ணனாகவே மாறிவிட்டதை, சுகந்தமாலினி சந்திரசேகரனிடம் சொல்லக்கூடாது, சொல்லவே கூடாது, எல்லா காயங்களை விடவும் இது அவனுக்கு வலிக்கலாம்.

லாவண்டர் வண்ண சுடிதார், மீரா ஷீகாய் போட்டுக்குளிந்த கூந்தல், முல்லைப்பூ, கண்ணுக்கு மை. கைக்கடிகாரத்தை, கைக்கு உள்பக்கமாகக் கட்டி, மிகக்கவனமாக பெர்ஃயூம் தவிர்த்தேன். காரை ரிவர்ஸ் எடுத்து வீட்டுக்கு வெளியில் வந்ததும் ஏதோ ஞாபகம் வர, உள் சென்று துப்பட்டா ஒன்றை எடுத்துப்போர்த்தி தோள்களின் இரண்டு புறமும் பின் போட்டுக்கொண்டு எனக்கு நானே சிரித்துக்கொண்டேன்.

இனி 55A க்கென நிற்க வேண்டாம், நம் காரிலேயே போகலாமென மகிழ்வாக சொல்லலாம். இல்லை, அவனுக்கும் கார் இருக்கும். அவன் காரில் நான் போகலாம். ஏதேதோ எண்ணங்கள் மோத, சற்று வேகமாகவே காரைச்செலுத்தினேன்.

அடிவாரத்தில் எந்த காரையும் காணவில்லை. பார்க் செய்து கீழ் சன்னிதி முழுக்க ஓட்டமும் நடையுமாகச்சுற்றினேன். வந்தது வீணா?, ஒரு வேளை அது ப்ரான்க் காலாக இருந்ததால், உற்சாகம் வடிந்ததுபோலத்தான் இருந்தது. இல்லை நிச்சயம் இல்லை, அது சந்துருவின் குரல்தான், மலை மேல் வேகு வேகுவென ஏறினேன், நுழைவு மண்டபத்திற்கு சற்று அருகிலேயே அவனைப்பார்த்துவிட்டேன்.

அப்படியேதான் இருக்கிறான், சம்பந்தமேயில்லாத நிறத்தில் சட்டையும், பேண்ட்டும். முழுக்கையை மடித்துவிடும் அதே ஸ்டைல்,  தலை கலைந்திருக்கிறது. கையில் கடிகாரம் இல்லை. எங்கோ வெறித்த பார்வை. அப்போதே அவனைக்கட்டிக்கொள்ளும் பாவனையில் அருகில் சென்றேன். அதை தவிர்க்கும் விதமாக சற்றே நகர்ந்து என்னைப்பார்த்தான். அதே பார்வை, ஆழமாக மனதைத்துளைக்கும் பார்வை, ஆனால், ஆனால் அவன் கண்கள், கண்களில் என்ன அது……?

”ஆறாம் நூற்றாண்டுல திருமங்கையாழ்வார் இங்க வந்தப்ப, மலைக்கு கீழ வெள்ளம் வந்து சூழ்ந்துகிச்சாம், அப்புறம் நீர்வண்ணப்பெருமாள் வந்து ஏதோ மதகைத் திறந்துவிட்டு ஊரையும், ஆழ்வாரையும் காப்பாத்தினார்னு சொல்றாங்க” என்றான்.

எப்போதும் போல அந்தரத்தில் துவங்கும் உரையாடல், இவ்வளவு வருடம் கழித்தும் அவன் மாறவில்லை.

“எப்படி இருக்க சந்த்ரு?”

”பாக்குறியே அப்படியேதான்..”

என்னைப்பார்ப்பதைத் தவிர்க்கிறான், நியாயம்தான். என்னைத் தவிர்க்க அவனுக்கு எல்லா நியாயங்களும் இருக்கிறது.

“ஆனா திருமங்கையாழ்வார் பாத்ததுக்கப்புறம் அப்படி ஒரு வெள்ளத்தை சென்னை போன வருஷம்தான் பார்த்திருக்கும் இல்ல, சென்னையே மூழ்கிடுச்சாமே”

”நீ அப்போ எங்க இருந்த, சென்னைல இல்லையா சந்த்ரு?”

“உன்னை தேடிகிட்டே இருந்தேன், எங்கெங்கியோ?”

“நானும்தான், எப்படித்தேடினேன் தெரியுமா”

”அன்னைக்கு மீனம்பாக்கம் ஸ்டேஷன்ல நான் இறங்கிப்போனப்புறம் நீ பத்திரமா நேரத்துக்கு ஆபீஸ் போயிட்டியா சுகந்தா?”

இது என்ன கேள்வி, கேட்பதற்கு வேறொன்றுமா இல்லை, புரியாமல் பார்த்தேன். முறுவலுடன் திரும்பினான், ஆ, அந்தக்கண்கள்.

“எனக்கு 13 வருஷமா அந்த ஒரே கவலைதான், ரயில் பாதிலயே நின்னா, உனக்கு ஆபீஸ்க்கு லேட்டாகிடுமேன்னு”

சட்டென எதுவும் புரியவில்லை. அன்று ஏனோ ரயில் மீனம்பாக்கத்திற்கு சற்றுத்தள்ளி நின்று விட்டது, இருந்த குழப்பத்தில், அழுகையில் எனக்கு எதுவும் புரியவில்லை, எல்லா பயணிகளும் நடந்தே பழ்வந்தாங்கல் ரயில் நிலையத்திற்கு சென்று சற்று நேரம் கழித்து வேறு ரயில் பிடித்துப்போனோம்.

இதுவே இப்போதுதான் நினைவுக்கு வருகிறது.

இப்போது என்னை நேருக்கு நேராகப்பார்த்தான், அவன் பார்வை என்னை உலுக்கியது.

“அன்னைக்கு ஏன் ரயில் பாதில நின்னுச்சுன்னு இன்னும் தெரியலையா?”

நான் அவன் கண்களைப்பார்த்து கலவரப்பட்டுப்போனேன் இப்போது, அது சந்துருவின் கண்களல்ல, அவற்றில் இவ்வளவு குரூரம் இராது. நிச்சயமாக.

”அந்த பல்லாவரம் ரிட்டர்ந்தான் என் ரத்தத்தையும், சதையையும் மொத்தமா கொண்டு போச்சு சுகந்தா, ஆன்மா மட்டும் உன்னைத்தேடி அலைஞ்சுது”

சட்டென மயிர்க்கூர்ச்செறிந்தது, தலை சுற்றியது. அவன் உயரம் அதிகரித்தது போல இருந்தது, கால்களைப் பார்க்க எண்ணித்தோற்றேன், தோளில் அழுந்திய அவன் கை என் எடை மொத்தத்தையும் தாங்கியது போலிருந்தது,

“வா, திரும்பி இந்த திரு நீர்மலையிலிருந்தே புது வாழ்வு தொடங்கலாம், சுகந்தா”

என்று சொன்னபடி மலையிலிருந்து தள்ளிவிட்டான். லாவண்டர் நிற மலர்கள் என்னை வரவேற்றன, துப்பட்டா இறகுகளானது, முல்லை மலர் வாசம் உலகெங்கும் நிரம்பியது, தூரத்தில் எங்கேயோ பவதாவின் குரல் காற்றில் தேய்ந்து ஆன்மாவை நிரப்பிக்கொண்டிருந்தது.

”காற்றாக நான் கலந்து மூச்சாக உன் நினைவில் உன்னோடு வாழ்ந்திருக்க வாழ்த்து சொன்னதய்யா”!

ஒரு பெயர் மாற்றத்தின் கதை அல்லது Story of a ‘U’

ஆதெள கீர்த்தனாரம்பத்திலே ஜீலை 2009 ல் எங்களுக்கு மகன் பிறந்து அவனுக்கு அர்ஜீன் என்று நாமகரணம் சூட்டுவோம் என்று முடிவெடுத்த நேரம் ராகுகாலமா என்று நாங்கள் கவனிக்கவில்லை.

change

பிறந்து 20 நாட்கள் கழித்துதான் பர்த் செர்டிபிகேட் வந்த்து பெயர் தப்பாக அச்சாகியிருந்த்து. ஒரு U அதிகம். ARJUN க்கு பதிலாக AR’U’JUN.  இந்த்த் தவறை சரி செய்து பிறகு ,பாஸ்போர்ட் எடுத்து விசா எடுக்க வேண்டிய வேலைகளை செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இழுக்கும் என்பதால் இருக்கும் தவறான பர்த் செர்டிபிகேட்டைக்கொண்டே பாஸ்போர்ட் எடுப்பது என்றும் பிறகு பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றிக்கொள்வது என்றும் முடிவு செய்தோம். (எவ்வளவு தவறான முடிவு என்பது அப்போது தெரியவில்லை)

இந்தியாவில் இருக்கும் பிள்ளைக்கு பாஸ்போர்ட் எடுக்க இங்கே துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில், இன்ன பெயரில் உள்ள பிள்ளை துபாயில் ரெடிடென்ஸ் வைத்திருக்கும் என் பிள்ளைதான். அவனுக்கு பாஸ்போர்ட் தந்து உதவுங்கள் என்று ஒரு அஃபிடவிட் எடுத்து பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுக்கவேண்டும்

தூதரகம் என்னை அன்போடு வரவேற்றது. குழந்தை பிறந்திருக்கிறதா. வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வாய். பிள்ளையின் பர்த் செர்டிஃபிகேட் கொண்டு வந்தாயா. சரி. உன்னுடைய திருமண சான்றிதழ் அட்டெஸ்ட் செய்ததைக் கொண்டு வந்தாயா. சரி. ஒரு அப்ளிகேஷனை நிறைவு செய்து கொடுத்துவிட்டுப்போ என்றது முதல் சன்னல்.

வந்தாயா வா! அப்ளிகேஷன் எல்லாம் சரிதான். ஆனால் உன் பாஸ்போர்ட்டில் பெண்டாட்டியின் பெயரை சேர்த்துவிட்டு வா என்கிறது இரண்டாவது ஜன்னல். அது எதற்காக ஐயா! அதுதான் மேரேஜ் சர்டிபிகேட் இருக்கிறதே போறாதா..? ம்…அதெல்லாம் பேச்சில்லை. ரூல்ஸ் என்றால் ரூல்ஸ்தான். கிழிந்தது கீழ் அடையவளைஞ்சான் என்று எண்ணிக்கொண்டே முதலில் அதை செய்வதற்கு விண்ணப்பிக்க எத்தனித்தேன்.

உன்னுடைய மேரேஜ் செர்டிபிகேட்டை ஏனப்பா மஹாராஷ்டிரத்தில் அட்டெஸ்ட் செய்திருக்கிறாய் என்று வினவியது மூன்றாவது சன்னல். மஹாராஷ்டிரமா. அங்கே எனக்கு சச்சின் டெண்டுல்கர் தவிர வேறு யாரையுமே தெரியாதே ஐயா!. இது என்ன புது கூத்து என்று கேட்டால் , நீ அச்சு அசல் தமிழன், முதலில் உன்னுடைய மேரேஜ் சர்டிபிகேட்டை தமிழ்நாடு அட்டெஸ்டேஷன் செய்துகொண்டு வா என்றார்கள். அடப்பாவிகளா!

திருமணம் செய்து துபாய் வந்து மனைவிக்கு விசா எடுத்து இரண்டு வருடம் குடும்பம் நடத்தி குழந்தை பெற்று, அதற்கு பாஸ்போர்ட் எடுக்க வரும்போது அதற்கு எதற்காக ஐயா எனது மேரேஜ் சர்டிபிகேட்டை அட்டெஸ்ட் செய்ய வேண்டும் என்று கேட்டால். மூச். அது இந்திய அரசாங்க்கத்தின் ஆணை. டாகுமெண்டேஷன் ரொம்ப முக்கியம் அமைச்சரே என்கிறது.

முன்பு மேரேஜ் சர்டிபிகேட்டை அட்டெஸ்ட் செய்யச்சொல்லிக்கொடுத்த ஏஜெண்ட் அப்போதைய விதிகளை சற்றே வளைத்து மஹாராஷ்டிரா செக்ரெட்ரியேட்டில் இருக்கும் மாமனையோ மச்சானையோ பிடித்து அட்டெஸ்டேஷன் வாங்கியிருக்கிறான். இப்போது நான் மாட்டிக்கொண்டேன். அவனைத்திரும்பவும் பிடித்து தமிழ்நாடு அட்டெஸ்டேஷன் வாங்குடா என்றால், அதெல்லாம் ஆகுற வேலை இல்லை சார் என்கிறான். நிறைய ‘பார்மாலிடீஸ்’ ஆகுது அதுனால தமிழ்நாடு மட்டும் பண்றதில்லை என்றான்.

கையைப் பிசைந்து கொண்டிருந்த நேரத்தில் வந்தான் நம் அத்யஞ்சய சேரநாட்டுப் பங்காளி. ”சாரே, 700 திர்ஹாம்ஸ்ஸெங்கில் செய்யாம் ” என்றான். அது எப்படிங்க அவன் முடியாதுங்குறானே என்றதற்கு சொன்னானே ஒரு பதில், ‘தமிழ்நாடு செக்ரெட்ரியேட் முழுவனும் கேரளாலாபி சாரே, கொள்ளாம்’.

கொண்டான். இரண்டே வாரங்களில் அபிடவிட்டை தமிழ்நாட்டு அட்டெஸ்டேஷனோடு கொண்டுவந்து இறக்கினான் என் சேர நாட்டு செல்லக்கிளி. அதனை வைத்து அஃபிடவிட் எடுத்து அனுப்பிவைத்தேன்

பிறகு தட்கல் பாஸ்போர்ட் அப்ளை செய்து அது வந்து சேர்ந்து, அதை இங்கு பெற்று, விசா எடுத்து ஒரு வழியாக பையனை ஷார்ஜா பார்க்க வைத்தாயிற்று. ஆச்சா. அவ்வளவுதானே கதை. இல்லையே. முக்கிய பிரச்சனை இன்னும் தீரவில்லையே?

இப்பொழுது அந்த பெயரில் இருக்கும் எக்ஸ்ட்ரா ‘u’ வை எடுக்க வேண்டுமே. எடுத்துவிடலாமே. எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமோ என்று மீண்டும் எம்பஸி, மீண்டும் அதே முதல் ஜன்னல். பேர் மாற்றணுமா? பேஷா பண்ணலாமே! முதல்ல உன்னோட பாஸ்போர்ட், பையனோட பாஸ்போர்ட், போட்டோ எல்லாம் கொண்டு வா. ஒரு அபிடவிட் (affidavit) தரோம். ஓக்கே டன்.

அபிடவிட்டை இரண்டாவது ஜன்னலுக்கு கொண்டு போனேன். சரி. இந்த அபிடவிட் சரிதான். இன்னும் ஒரே ஒரு ஒரு சின்ன விளையாட்டையும் முடித்து விட்டால் கோப்பை உனக்குதான். முதலில் உன் மகனுக்கு பெயர் மாற்றம் செய்கிறேன் என்று இந்தியாவிலும், அமீரகத்திலும் ஒரு நாளிதழில் விளம்பரம் கொடுத்துவிடு அவ்வளவுதான். உடனே மாற்றிவிடலாம் என்றார்கள்.

செய்துவிடலாமெ என்று உடனே அங்கே ‘The hindu’ வில் ஒன்றும், இங்கே ‘Gulf News’ ல் ஒன்றுமாக இரண்டு விளம்பரங்கள் கொடுத்தாகிவிட்ட்து. எல்லாம் தயார். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட்து. ஐந்தே நாட்களில் பெயர் மாற்றம் செய்து பாஸ்போர்ட் வந்த்து. ARJUN SIVARAMAN. மிகச்சரி. ஆஹா இதற்குத்தானே ஆசைப்பாட்டாய் சிவராமா, புளகாங்கிதம் தாங்கவில்லை.

இன்னும் ஒரு சின்ன வேலை பாக்கி. துபாய் விசாவில் இந்த பெயர் திருத்தம் செய்யவேண்டும். கண்டிப்பாக எளிய வேலைதான். அபிடவிட் வேண்டாம், பேப்பர்கள் வேண்டாம், வரிசை வேண்டாம், ஜன்னலுக்கு ஜன்னல் தாவ வேண்டாம். ஒரு எளிய விண்ணப்பம் போதும். மிகவும் நல்லவர்கள். சட்டென செய்வார்கள்.

அதிகாலையில் இமிக்ரேஷன் சென்று விண்ணப்பம் கொடுத்த இரண்டு வினாடிகளில் புதிய விசா பேப்பரை கிழித்து பாஸ்போர்ட்டில் ஒட்டி கையில் கொடுத்தார்கள். ARJUN… போதும். இனிமேல் இதையெல்லாம் பரிசோதிக்க வேண்டிய அவசியமே இல்லை. மகிழ்ச்சி. மகிழ்ச்சி.

வெளியில் வந்து கிடைத்த டாக்ஸியைப் பிடித்து, வேகமாகப்போகச்சொல்லி அரக்கப்பரக்க அழைப்புமணியடைத்து, மனைவியின் கையில் கொடுத்தேன்.  ‘Its done’. மலர்ந்த முகமாக வாங்கிப்பார்த்துக்கொண்டே…….இருங்கள் ஏன் அவள் முகம் மாறுகிறது, அதான் பெயர் சரிசெய்தாகிவிட்ட்தே….இல்லை ஏதோ குழப்பம், அவளாக சொல்வதற்கு முன்பாக நானே பார்த்துவிடுகிறேன்………..

ARJUN……. சரிதானே,,,,ஆ இதென்ன. எனக்கு லேசாக மயக்கம் வந்தது.  அந்த பிங்க் நிற விசா தாளில் அடிக்கப்பட்டிருந்த முழுப்பெயர் – ARJUN SIVARAM’U’N

 

மதராசபட்டினம் (2010)

’கிரீடம்’ என்கிற லோகித்தாஸின் அருமையான திரைக்கதையை சொதப்பி தன் திரைவாழ்வை துவக்கிய இயக்குனர் விஜய் மதராசபட்டினம் மூலம் புனர்ஜென்மம் பெற்றிருக்கிறார்.

சுதந்திரம் பெறாத இந்தியாவில் ஒரு ஆங்கில கவர்னரின் பெண்ணுக்கும், தமிழ் வண்ணான் பையனுக்கும் வரும் காதல் சுதந்திரம் பெற்ற பிறகு என்ன ஆனது என்பதுதான் மதராசபட்டினத்தின் அடிப்படை முடிச்சு. மல்யுத்தப்போட்டியில் வெற்றிபெற்றால் வண்ணாரப்பேட்டை நிலங்கள் திருப்பித்தரப்படும் என்று ஒரு லகான், வெள்ளைக்கார கமிஷனருக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணை அடைய வரும் அடிமைப்பையனின் டைட்டானிக் என்று இரண்டு பெரிய படங்களின் சாயல்களை எளிதில் நினைவுபடுத்தக்கூடிய கதைதான் என்றாலும் அதனையும் தாண்டி பிரத்தியேகக் காட்சிகளின் மூலமாக இதனை தனிமைப்படுத்தி காட்டியிருப்பது அருமை. தெளிவான திரைக்கதைதான் என்றாலும் இந்த நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் பயணப்படும் திரைக்கதை உத்தி எனக்கு ஏனோ பெரிய உறுத்தலாகவே இருந்தது.

இந்த திரைப்படத்திற்கு ஏன் போகக்கூடாது என்று யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்தது ஆர்யாவின் குரல்தான். அந்த சோதனை மிக அழகாக தவிர்க்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பெரும்பாலும் வசனமே கொடுக்கப்படவில்லை. பேசும் இடங்களிலும் ஒரே வாக்கியம் அல்லது வார்த்தைதான். அநேகமாக அவரது முதல் வசனமே முக்கால் மணி நேரம் கழித்துதான் வருகிறது என்று நினைவு. இந்த உத்தி ஒரு பெரிய வாழ்க்கைக்காவலன் (லைஃப் சேவர்).  இதற்கு பயந்தே இன்னும் திரைப்படம் பார்க்கப்போகாமல் தவிர்த்த நல்ல உள்ளங்கள் தைரியமாகப்போகலாம். கவலைப்படேல்.

எங்கும் உருத்தாத பழைய மதராசின் காட்சிகள் அருமை. அங்கங்கே இருக்கும் மிகச்சிறிய லோகேஷன் லாஜிக் உதறல்களையெல்லாம் தவிர்த்துவிடுதல் நலம். நீரவ் ஷாவின் கேமிரா மிகச்சிறந்த ஒன்று. செண்ட்ரல் முதலில் 3டி மாடலாக காட்டப்பட்டது போலவே இருந்தது. கடைசிக்காட்சிகளில்தான் செட் போடப்பட்டிருப்பதே தெரியவருகிறது. நல்ல காட்சிப்படுத்துதல்.

ஜி.வி.பிரகாஷின் அனைத்து பாடல்களுமே நன்றாக இருக்கின்றன. ’ஆருயிரே’ சைந்தவியும், ‘பூக்கள் பூக்கள் தருணம்’ ரூப் குமார் ரத்தோடும் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவனை விட இது பல மடங்கு பரவாயில்லை என்றாலும் ’ஜிவிபி’ யின் பின்னணி இசை இன்னும் நல்ல தரத்திற்கு வரவில்லை. சுமாரகத்தான் இருந்தது. பெரும்பாலான நேரங்களில் அடக்கி வாசித்திருப்பதே அழகுதான்.

நல்ல படம். பெரிய திரையில் பார்க்க பல அழகான காட்சிகள் இருக்கின்றன. Very Decent worth a watch