ராஜதரிசனம்

வேதமந்திரங்களாலும், வாசனை திரவியங்களாலும், யுகம் யுகமாய் மலர்ந்த மலர்களாலும், முற்றிலும் தீர்க்கமான ஆசாரங்களாலும் மெருகேற்றப்பட்ட பேரதிர்வு கொண்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு கோவில் கருவறை போலிருந்தது அந்த இடத்தின் அதிர்வு.

பன்னெடுங்காலத்திற்கு முன்பு முதன்முதலில் நுகர்ந்த காட்டு நிஷாகந்தியின் மணத்தை இன்றளவும் என்னால் மறு நினைவாக மீட்டெடுத்து அது இன்னவென்று சொல்லிவிடமுடியாத தத்தளிப்பு இருக்கிறது. அதே போன்ற ஒரு நறுமணம் அந்த இடத்தில் முற்றிலும் பல்கிப்பெருகியிருக்கிறது.

ஏற்கனவே தயக்கத்தாலும், பேரார்வத்தாலும் நடுங்கியிருந்த மனது அந்த மோனநிலைக்கு தன்னை சமர்ப்பித்திருந்தது. கதவைத்திறந்தவுடனேயே எந்த நந்தியின் இடையீடின்றி பெருமான் தரிசனம் சித்தித்தது.

இப்போதுதானா இவரை முதன்முதலில் பார்க்கிறேன். இல்லை. இல்லவே இல்லை. எத்தனை வருடங்கள், எத்தனை யுகங்கள் இவரை எனக்குத்தெரியும். எத்தனை மழைக்காலங்கள் இவரின் அணுக்கத்தில் ஈரமாக்கியிருக்கின்றன. எத்தனை வசந்தகள் இவரின் மலர்க்கரங்கள் பூ வாரிச்சொரிந்திருக்கின்றன. எத்தனை இலையுதிர்காலக்காற்றில் இவரின் சவாரி இதம் தந்திருக்கிறது. எத்தனை பனிக்காலக்குளிருக்கு இவரின் இசை வெம்மை கூட்டியிருக்கிறது. எத்தனை சோக நாள்களைத்தேற்றி மேலிழுத்துக்கொண்டு வந்திருக்கிறது, எத்தனை சந்தோஷ தினங்களுக்கு கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது.

அந்த ஒரு நொடிக்குள் அத்தனையும் நினைவுக்கு வந்தது. இருகரங்கள் கூப்பி யுகம் யுகமாய் பல நினைவுகளால் கூட்டிச்சேகரித்திருந்த இந்த கணத்தின் நிகழ்வின் பரிபூரணத்தை உணர்ந்து கைகூப்பினேன். கூப்பின கரங்களை கீழே இறக்கவிடாமல் செய்தது அவரின் அண்மை.

இந்திரன் ஒரு மின்னல்வடிவில் பூமிக்கு இறங்கிவந்து காட்சியளித்ததுபோல் அமர்ந்திருந்தார். வெள்ளை ஜிப்பா, லேசாக பச்சைக்கரை இறங்கிய வெண்வேட்டி, வெண்ணிறக்காலுறை என ஒரு பெருவெண்மலர் புன்னகையெனும் மகரந்தம் தூவி வணங்குகிறது.

ஆசிரியர் பாரா, லாசரா வை சந்தித்த கணத்தைப்பத்தி என்னிடம் ஒருமுறை சொன்னார். அவரின் கண்களின் தீக்ஷண்யத்தை நேரில் காணமுடியாது தவித்தேன் என்று. அதே கணம்தானா இது எனக்கு. ஐயனின் கண்கள் தீப்பிழம்புகள் அல்ல, ஊடுருவிச்செல்லும் ஒரு பேரொளிர்ச்சுடர்கள், அல்ல பல்லாயிரம் தீபச்சுடர்த்தொடர்களின் அணிவகுப்பை நொடிக்கொன்றாகச்செலுத்தும் அம்புகள். அத்தனை தீக்ஷண்யம், அத்தனை கருணை, அத்தனை ஞானம், அத்தனை பேரருள் தோய்ந்த கண்கள்.

`உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம்` என அமைந்த சிவந்த நெற்றிப்பொட்டு, சிறிய ருத்ராக்ஷங்கள் கோர்த்த மணிமாலை இவையெல்லாவற்றையும் தாண்டிய அணி நகையாகிய புன்னகை என தீர்க்கமாக வரவேற்றது அப்பேரொளி.

ரிபு கீதையின் வரிகள் அவர் குரலிலேயே ஒலிக்க, அவரருகில் அமர்ந்திருக்கும் பேறு வாய்த்தது. ஞானத்தின் உச்ச ஸ்தாயியை உணரும் கணம் அதுவென மனது சொல்லிக்கொண்டிருந்தது. லெளகீகத்தின் அத்தனை அக, புறச் சாத்தியங்களையும் குப்புறக்கவிழ்த்து அதன் மேலமர்ந்து சிரிக்கும் ஒரு ரிஷியின் கனிந்த முகம் எப்படி இருக்கும் என்பதை உணரமுடிந்தது. முற்றும் கனிந்த ஒரு ஞானியின் தரிசனத்தில் அமிழ்ந்து போயிருந்தோம்.

ஒரு கலைஞனுக்கே உரிய யோசனையுடன் அலைபாயும் பார்வை இருந்தது. ஆனால் அவற்றில் எதிலும் சற்றும் சிக்கல்களோ, தடங்கல்களோ இல்லாத தீர்க்கம் இருந்தது. மொத்த அமர்வின்போதும் அவரின் இரு கரங்களையும் கோர்த்து மடிமீது இருத்தியிருந்தார். ஒரு ஞானியின் கரங்களின் வாஞ்சையும், அனுபவமும் ஒருசேரக்கலந்திருந்தன.

அவரின் உரையாடல்கள் அனைத்திலும் அந்த extreme level of supremacy வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. கேள்விகளுக்கு பதில் வந்தது. ஆனால் அது போதவில்லை. அல்லது அதன் பொருள் தெரியவில்லை. சில கேள்விகளுக்கு மெளனமே பதிலாயிருந்தது. அது உள்ளே இன்னும் பயணம் செய்துவிட்டு வா என்று சொல்வதுபோலவே இருந்தது.

மெளனம், மந்திரம், பேச்சு, தியானம் எல்லாவற்றிலும் தீர்க்கமாய் இடையூடாடிக்கொண்டிருந்தது காலமெனும் பெருவெளியின் மீதமர்ந்து கொண்டிருந்த ஒரு ஒளிக்கற்றையின் பொன்னூஞ்சல். அது வருடங்களை முன்னும் பின்னும் அகழ்ந்து இவரால் நான் பெற்ற பேறுகளை கால நிர்ணயமின்றி அகழ்ந்து செலுத்திக்கொண்டேயிருந்தன.

அந்த பெரும்பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லான இன்றைய நிறைவை பெரும் பிரயத்தனப்பட்டு வார்த்தைகளாக்கி, நிறைந்த கண்ணீருடன் அவரிடம் சமர்ப்பித்தபோது சிறிய தலையசைப்புடன் அதைக்கேட்டுக்கொண்டார். `ஏன் மலைலேர்ந்து இறங்கிவந்தீங்க?’ என்பது மட்டுமே அவரிடமிருந்து எனக்கு வந்த ஒரே கேள்வி. என் லெளகீகக்காரணத்தைச்சொன்னேன். ஆனால் அந்தக்கேள்வி இனி என்றும் நினைவிலிருக்கும். என்றும் உறங்கவிடாத கேள்வியாய்.

பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு, தேர்ந்த பூக்களால் அர்ச்சிக்கப்பட்ட கல்வெட்டென நேற்றைய ஒரு மணி என்றென்றும் வாழ்ந்திருக்கும் எப்போதும்.

ஆனந்தம் என்னும் ஒற்றைச்சொல்லை எப்போதும் என்னுள் செலுத்தி, அதன் வழி என் செயலையும், உடலையும், மனதையும் மெருகேற்ற பயிற்சி செய்யும் குரு, யோக ஆசிரியர் Raguram Annur அவர்கள் அருகமர்ந்து இன்னொரு ஞான ஆசானை அனுபவிக்கும் தருணம் வாய்த்தது, காலம் எனக்களித்த இன்னொரு பரிசு. இந்த வாய்ப்புக்கு அவரையும் வணங்குகிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக