
dubai metro 3d model
’he deserves this’ என்னருகில் நின்று கொண்டிருந்த ஒரு லெபானிய முதியவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். யூனியன் ஸ்கொயர் ஸ்டேஷனில் முதல் நாள் மெட்ரோ பயணத்திற்க்காக காலையில் காத்திருந்தேன். அந்த முதியவர் குறிப்பிட்டது ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதம மந்திரியும், துபாயின் மன்னருமாகிய பெருமதிப்பிற்குரிய ஷேக் முகம்மது அவர்களின் இந்த அருஞ்சாதனையைப்பற்றித்தான். அவரின் தொலைநோக்கும், திடமும், செயல்திறமும்தான் இந்த மெட்ரோ இரயில் திட்டத்தின் வெற்றிகரமான புறப்பாடு என்பது வளைகுடாவின் அனைத்துவிதமான மக்களின் எண்ணமுமாயும் இருக்கிறது.
நீண்டு நெளிந்து வளைந்து பல திருப்பங்களைக்கொண்டு ஒரு ரோலர்கோஸ்டர் போல காட்சியளித்துக்கொண்டிருந்த மெட்ரோ ரயில் சேவைக்கான உயர் பாலங்களில் இன்று முதல் பயணிகளை சுமந்து கொண்டு ரயில் சேவை தொடங்கிவிட்டிருக்கிறது. RTA என்கிற தரைவழிப்போக்குவரத்து ஆணையம் தொடங்கிவிட்ட நாளிலிருந்தே விறுவிறுப்பாக பணிகள் தொடங்கிவிட்டன. பாரசீக வளைகுடாவில் இதுதான் முதல் முயற்சி என்கிறார்கள். நீண்ட ஆளில்லாத ரயில் (driverless automated rail system) இயங்கும் முதல் பாதை என்ற பெருமைமையும் பெற்றுள்ளதாம்.
சிவப்பு வழித்தடம் பச்சை வழித்தடம் என்பதாக இரு வேறு ரயில்பாதைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது முக்கிய வணிக வளாகங்களையும், வணிகத் தடங்களையும் இணைக்கும் வண்ணமாக முதல் 10 ரயில் நிலையங்களை சிவப்பு தடத்தில் உபயோகத்திற்கெனெ திறந்து விட்டிருக்கிறது துபாய் மெட்ரோ.
யூனியன் ஸ்கொயர் ரயில் நிலையத்திலிருந்து எனது அலுவலகம் இயங்கும் ’துபாய் பன்னாட்டு வணிக மையம்’ (DIFC) வரையிலும் பயணம் செய்தேன். கூட்டம் குறைவுதான். வாரவிடுமுறைக்கு முதல்தினமான வியாழக்கிழமையாதலின் கொண்டாட்ட மனோபாவம் எல்லோர் உள்ளங்களிலும் குடிகொண்டிருந்தது. உற்சாகம், காத்திருப்பு, கூடிக்களித்தலில் மகிழ்ச்சி என ஆவலும் உவகையும் பொங்க ரயிலை எதிர்பார்த்திருந்தோம்.
முதல் நாளே நோல் (nol) எனப்படும் பயணச்சீட்டு பெறுவதற்கான அட்டையை வாங்கியிருந்தேன். ஆதலின் பயணச்சீட்டு பெறுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் பெரும்பான்மையொருக்கு சரியான விளக்கங்கள் கிடைத்திருக்காதலால் திண்டாடிப்போயினர். ஆயினும் மெட்ரோ ஊழியர்களின் சேவையினை சொல்ல வேண்டும். எல்லோரையும் தானே தேடிச்சென்று சேவை வழங்கினர்.
ரயில் நிலையங்கள் எப்போதும் போல்வே “dubai standard” என பொதுவில் வழங்கப்படுகிற வார்த்தைப்பிரயோகத்திற்கு தகுந்தவாறு மெழுகப்பட்ட சலவைக்கற்கள், ஒளிசிந்தும் விளக்குவரிசைகள், கடந்து வந்த தடங்களின் புகைப்படங்கள் என பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு நிலையத்திலும் ஆரம்பகட்ட பணிகள் முதல் இன்று வரையிலான முன்னேற்றங்கள் குறித்த காணொளியும் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. ரயில் நிலையத்தில் புகைப்படம் எடுக்க எத்தனித்தபோது புகைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது நண்பர் என்று அன்பொழுக சொன்னார் ஒரு பிலிப்பினி ஊழியர். அவருக்கு நன்றி. (நாளையிலிருந்து அதற்கும் அபராதம் விதிக்கும் நிலை வரலாம்.)
10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் ரயில் சென்றடைந்த சில நிமிடங்களில் வந்த்து. மெல்லிய ஒரு லாபி இசை ஒலிக்க வரவேற்றது துபாய் மெட்ரோ. இரு பக்கமும் போடப்பட்ட நீல இருக்கைகள். தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட நீல நிற வண்ணம் ரயில் முழுவதும் பளிச்சிடுகிறது. 35 நொடிகள் தாமத்தித்து கிளம்புகிறது ரயில். இரண்டே நிமிடங்களில் கடலுக்கடியில் செல்லும் பாதையைக்கடந்து பர்துபாய் காலித் பின் அல் வாலித் என்றழைக்கப்படுகிற பர்ஜுமான் நிலையத்தை அடைந்த்து. நிச்சயமாய் இது கனவல்ல. 2 நிமிடங்களில் மக்தூம் அல்லது கர்ஹீட் பாலங்களைக்கடந்தோ அல்லது ஆப்ரா எனப்படும் படகு சவாரி வழியாகவோ தேராவிலிருந்து பர்துபாயை கண்டிப்பாக அடையவே முடியாது. நேரத்தினை கண்டிப்பாக மிச்சப்படுத்தும்.
பர்ஜுமான் நிறுத்த்த்தில் ஏறிய குழந்தைகளிடம் முகம் கொள்ளா மகிழ்ச்சி. அதன் பின்னர் சரியாக இரண்டு நிறுத்தங்கள் கடந்து DIFC நிறுத்த்த்தில் இறங்க எடுத்துக்கொண்ட நிமிடங்கள் மொத்தம் 7. சரியாக ஏழு நிமிடங்கள். பேருந்துக்கு காத்திருந்து, வெய்யிலில் வாடி, போக்குவரத்து நெரிசலில் சிக்கி 45 நிமிடங்கள் எடுக்கும் பயணம் ஏழே நிமிடங்களில் முடிந்த மகிழ்வோடு அலுவலகம் வந்திருக்கிறேன்.
49 மாதங்கள், 30000 பணியாளர்கள், 28 பில்லியன் திர்ஹாம்கள் அனைத்தையும் தன்னகத்தே விழுங்கியிருக்கிற மெட்ரோ திட்டம் அதன் பலனாக என்போன்ற சாலைப்போக்குவரத்திற்கென பேருந்தையோ, வாடகை ஊர்தியையோ பயன்படுத்துவோரின் நேரத்திலும், பணப்பைகளிலும் பால் வார்த்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
மெட்ரோ வாழ்க! வளர்க!