எக்ஸலன்ட்- பா.ரா.

தீவிரவாதம் சீக்கிரம் அழிந்துவிடவேண்டும் என்று எண்ணாதவர் யார்? எல்லோருக்கும் அவ்வெண்ணம் இருப்பினும் எனக்கு அதன் சதவீதம் சற்று அதிகமே. காரணம் யாதெனக்கேட்டால் அன்றுதானே எழுத்தாளர் பாரா துப்பாக்கிகள், தோட்டாக்கள், பதுங்கு குழிகள் சதித்திட்டங்கள் மற்றும் அவைசார்ந்த இன்னபிற வஸ்துக்களை அறவே அப்புறப்படுத்திவிட்டு அவரின் பிரத்தியேக ஸ்டைலில் எழுதும் மற்ற நாவல்கள், சிறுகதைகள் மற்றும் எக்ஸலண்ட் போன்ற புத்தகங்களை நாம் தடையின்றி படிக்க முடியும்.!

சுயமுன்னேற்றப்புத்தகங்களின்பால் எனக்கிருந்த காதலெல்லாம் கல்லூரி முடிந்த ஒரு வருடத்தில் காணமற்போயிற்று. ஆனால் இவ்வருட துவக்கத்தில் பாரா போட்டிருந்த ஒரு பதிவின்போதே எக்ஸலண்ட் பற்றி குறித்துவைத்துக்கொண்டேன். 6 மாதங்கள் கழித்து சென்றவாரத்தில் ஸ்ரீரங்கம் யானைகட்டிச் சத்திரத்தில்தான் விமோசனம் ஆனது.

சுயமுன்னேறமா! என்று முகம் சுளிப்பீராயின் கவலைப்படேல். தனித்தனியாக வெவ்வேறு பெர்ஸனாலிட்டிகளைப்பற்றிய சுவாரசியமான புத்தகமாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம். பாராவின் குடும்ப டாக்டராகட்டும் இசைஞானி இளையராஜாவாகட்டும்,அவர்களிடத்திலிருந்த எந்த திறன் அவர்களை இந்த உயரத்திற்கு இட்டுச்சென்றிருக்கும் என்று ஆசிரியர் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இரண்டு குழந்தைகள் நல மருத்துவர்கள். பாராவின் குடும்ப டாக்டர்கள். இருவருமே நகரின் நல்ல மருத்துவர்கள். ஒருவர் மிக கனிவானவர். மற்றொருவர் சற்றே சிடுமூஞ்சி. ஆனால் பாராவின் 5 வயது மகளுக்கு சிடுமூஞ்சி டாக்டரைதான் மிகவும் பிடித்திருக்கிறது. ஏன்? அங்கேதான் உன்னதத்தின் சூட்சுமம் ஒளிந்துகிடக்கிறது என்கிறார் ஆசிரியர்.

 இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்ல. உன்னதமான இசையமைப்பாளர் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் ஒன்றைக்கொடுக்கிறார். அது உதாரணம் மட்டுமல்ல அந்த நிகழ்வு இல்லாது அந்த புத்தகமே முழுமையடையாது என்றும் எண்ணுகிறார். அது அப்படியே உண்மை. ஹேராம் திரைப்படம் தொடர்பான அந்த வெகு சுவாரசியமான நிகழ்வு என்ன என்பதை நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். அது உங்கள் சுயத்தினை முன்னேற்றுமா என்பதில் கவலை கொள்ளேல். அது சுயத்தை மகிழ்வுபடுத்தும். கட்டாயம் உத்வேகம் கொடுக்கும். அது போதும்.

கல்கி.கி.ராஜேந்திரன் அவர்களின் சித்திரகுப்தன் பேரேடு, விஸ்வநாதன் ஆனந்த்தின் தன் தவறுகளையும், மாற்றான் தவறுகளையும் மட்டுமே குறிப்பெடுத்துக்கொள்ளும் விர்சுவல் டேட்டாபேஸ், யானியின் லிட்டரலி தன்னையே உருக்கி இசை செதுக்கும் ஜாலம், எழுத்தாளர் ஜே.எஸ்.ராகவன் அவர்களின் செய்நேர்த்தி, ஜி.வி.ஐயர் என்கிற டைரக்டரின் குணாதிசியங்கள், பின்லேடனின் கர்மயோகம், காந்தி என்கிற உன்னதத்தின் உச்ச நட்சத்திரம் ஆகியவற்றோடு பாரா என்கிற என்ஜினியரிங் மாணவன் தேங்காய் உரிக்கும் மெஷின் கண்டுபிடிக்க முயற்சித்த கதையும் உண்டு.

நான் ஏற்கனவே சொன்னதுபோல இதனை சுயமுன்னேற்றப்புத்தகம் என்று கருதி வாங்காமல் இருக்கும் அன்பர்கள், தைரியமாக அந்த அஸ்பெக்ட்ஸ் தவிர்த்து மற்ற சுவாரசியமான விஷயங்களை பாராவின் எளிய அருவி போலோடும் தமிழில் படிக்க ஒரு அருமையான வாய்ப்பு

சுயமுன்னேற்றப்புத்தகம் என்றும் பார்த்துப் படிப்பவர்களுக்கு இது உண்மையான பொக்கிஷம். என் சுயத்தை மிகவும் மகிழ்வித்த புத்தகம்.

புத்தகம் : எக்ஸலன்ட்  ஆசிரியர் : பா.ராகவன்  பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் விலை : 70 ரூபாய்

பின்னூட்டமொன்றை இடுக