KAMINEY(2009)

உங்களைப்பொறுத்த வரையில் ’அட இன்னொரு தடவை பார்க்கலாம் போலருக்கே’ என்று சமீபத்தில் எண்ண வைத்த திரைப்படம் எப்போது வந்தது என நினைவுபடுத்திப்பாருங்கள். எனக்கு ஒரு இரண்டு வருடம் இருக்கலாம். ‘கமீனே’ உங்களை மறுபடியும் அப்படி எண்ண வைக்கும் சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. விமர்சனங்களை விட்டுவிடுங்கள். உங்கள் மனதுக்கியைந்த முற்றிலும் இந்தியத்தனமான சற்றே  பிளாக் காமெடி தோய்த்த ஒரு ஆக்‌ஷன் திரில்லர் பார்க்க ஆசைப்பட்டீர்களாயின் கண்டிப்பாக கமீனே உங்களுக்கான திரைப்படம்தான். 

kaminey-2009-2b

கமீனே என்ற சொல்லை rascals / scoundrels என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம். குட்டு(guddu), சார்லி என்ற இரட்டையர்கள்தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகர்கள். குட்டுவுக்கு பேசும்போது வாய் திக்கும். சார்லிக்கு பேச்சு நன்றாக வரும் என்றாலும் s என்ற உச்சரிக்கும் இடத்திலிலெல்லாம் f என்று உச்சரிப்பான்.(கேஸே என்பதற்கு ஃபேஸே, சலே என்பதற்கு ஃபலே). சார்லி குதிரை சூதாட்டங்கள் நடத்தும் ஒரு சிறு மாஃபியா குழுவில் ஆக்டிவ் உறுப்பினன். குட்டு ஒரு NGO நிறுவனத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரகன். ஆயினும் இருவரும் பல வருடங்களாய் பேச்சு வார்த்தையின்றி, மூன்று வருடங்களாய் சந்தித்தேயிராமல் வாழ்ந்து வருபவர்கள். ஒரு மழைநாள் இரவில் அவர்கள் வாழ்வில் நடைபெறும் தனித்தனி சம்பவங்கள் அவர்களை சந்திக்கவைக்கின்றன. அந்த முழுநாளில் என்ன நிகழ்ந்த்து என்பதுதான் முழுத்திரைக்கதையுமே. 

இந்த நான் – லீனியர் திரைக்கதைதான் திரைப்பட்த்தின் முழுபலமும். முதல் 15 நிமிடங்களுக்கு என்ன நிகழ்கிறது என்று தெரியாமலேயே பாதி இருட்டும் பாதி கேமரா ஆட்டமுமாய் ஒவ்வொரு கதாபாத்திரமும் வந்துபோகின்றன. ஆனால் முன்னேயும் பின்னேயுமாய் நகரும் காட்சிகளைப்புரிந்து கொண்டபின் சுவாரசியம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. 

’ஜப்வீமெட்’ திரைப்படத்தில் ஆபிசர் தோற்றத்தில் வந்த அதே ஷாகித் kaதான் இந்த இரட்டையர்கள் வேடத்திலும் நடித்திருக்கிறார். இந்தப்பையனுக்கு இவ்வளவு நடிக்க வருமா என அசரடித்திருக்கிறார்.  மராத்தியப்பெண்ணாக வரும் ப்ரியங்காசோப்ராவும் ஷாஹித்,பிரியங்கா இடையே கிளர்ந்தோடும் அன்னியோன்னியமான காட்சிகள் அடுத்த ஆச்சர்யம்.   

மஹாராஷ்டிரா மராத்தியர்களுக்கே என முழங்கும் ஒரு அரசியல்கட்சியின் தலைவன் (அமோல் குப்தே அசரடிக்கும் ஒரு நடிகர்). ஒரு கோகெயின் கும்பலுக்கு துணைபோகும் போலீஸ் அதிகாரி, குதிரை பேரங்களை நிர்ணயிக்கும் மூன்று பெங்காலி சகோதரர்கள், மழைக்கால மும்பையின் ராத்திரி நேரங்கள், அதிரவைக்கும் பின்னணி இசை, சோர்வடையச்செய்யாத திரைக்கதை, சிலீரென தென்றலாகவும் பளீரேன மின்னலாகவும் பலே வசனங்கள என எல்லா ஏரியாக்களிலும் விஷால் பரத்வாஜ் பின்னியிருக்கிறார்.

கட்டாயம் திரையரங்குகளில் சென்று பாருங்கள்.

இட்லி(ப்)பா!

அன்புமிகு அமீரக வாசத்தீர்!

மணக்க மணக்க மதுரா பொங்கல் உண்பீர்
சங்கீதாவில் சகலடிபனும் சரிக்கட்டு கட்டுவீர்
வசந்தம் சரவணன் என பவன்கள் பலவும் காண்பீர்

நினைத்தாலே மனம் குதூகலிக்கும்
எம் குசும்பர் படைத்த இட்லிகளை தவறவிட்டாலோ ஐயா
நீர் ஒருபிறவிப்பயனை இழப்பீரே!

இளமஞ்சள் நிறத்தினதாய்
இதயத்தை உருக்குவதாய்
பதமாய் வார்த்துவைத்த
இதமான இட்டிலிகள்
இரண்டேனும்
உண்டீரேல் அன்பரே
அமிர்த்தமதை பூமியில் உண்ட
ஆனந்தம் பெருவீரே!

அன்பு நண்பரின் இட்லிக்காகவும் அன்புக்காகவும் எழுதிய பா!

ஓய் (oye)!

நான் தியேட்டருக்கு சென்று பார்த்த தெலுகு படம் ஒன்றே ஒன்றுதான். அது சிரஞ்சீவி நடித்த ‘அஞ்சி’ .அதுவும் . நான் பணிபுரிந்துகொண்டிருந்த நிறுவனம் அதற்கு digital animation & composition செய்திருந்த காரணத்தினால் ஓசி டிக்கெட் கொடுத்தது. படுதிராபையான படம் என்றாலும் எங்களின் கைவண்ணம் சாந்தம் ஸ்கிரீனில் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்பதற்காகவே சென்றதால் உற்சாகமான அனுபவமாகவே இருந்தது. அதற்கு பிறகு வேறு எந்த தெலுகு படத்திற்கும் நான் தியேட்டரில் சென்று பார்க்க முயற்சி செய்ததில்லை என்றே சொல்லவேண்டும்.

இந்த முறையும் அது திட்டமிட்டு நிகழவில்லை. நாடோடிகள் பார்க்க வேண்டும் என்ற ஆவலில்தான் திரையரங்கம் சென்றேன். ’இந்திரவிழா’ என்று போஸ்டர் சொல்லியது. அது எனக்கு மிகப்பிடித்த இரட்டை இயக்குனர்களின் தேறாத திரைப்படம் ஒன்றின் மறு உருவாக்கம் என்பதை அறிந்திருந்ததால் திரும்பிவிடவே எண்ணினேன். ஆனால் ஓய் பற்றி நான் ஏற்கனவே படித்திருந்த விமர்சனங்கள் என்னை சென்று பார்க்கலாமே என்று எண்ண வைத்தது.பார்த்தேன்.

ஓய்  உற்சாகமாக,சுவாரசியமாக சொல்லப்பட்ட ஒரு பழைய கதை. ’கீதாஞ்சலி’ கதைதான் இது என்று சொல்லிவிடமுடியாது. அதிலிருந்து ஒரே ஒரு இழையை உருவி வேறு பாதையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இயக்குனர் ஆனந்த் ரங்கா விற்கு இது முதல் படம். சற்றே தைரியமாகத்தான் இந்த கதையை எடுத்திருக்க வேண்டும். தயாரிப்பாளர்களிடம் சற்றே மெனக்கெட்டே சம்மதம் வாங்கியிருப்பார் என்று தோன்றுகிறது. பயணிகள் கப்பல், 12 வாழ்த்துப்பொருட்கள்,பீகார் உத்திரப்பிரதேச பயணங்கள் என்று நிறைய புதிய விஷயங்களைப்புகுத்தி திரைக்கதையை சுவாரசியமாக்கியிருக்கிறார். பெரிய குறை ஒன்றும் சொல்ல முடியாத திரைவாழ்வின் ஆரம்பம்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்தின் இரண்டாவது தூண். பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையும் பரவலாக மிக நன்றாகவே வந்திருக்கிறது.சித்தார்த் ஓகே. ஆனால் ஷாமிலியின் இருப்பு அவ்வளவு சிலாக்கியத்தைக்கொடுக்கவில்லை. ஷாலினி முதலில் அறிமுகமானபோது அவரிடம் இருந்த கரிஸ்மா இவரிடம் மிகவும் குறைவாக உள்ளது. பல இடங்களில் குழந்தை கதாபாத்திர முகபாவங்களையே அவர் கொடுப்பதாகவே பட்டது. அவருக்கு மேக்கப் போட்டவரைப் பார்த்து இயக்குனர் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. ஷாமிலி முதலில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து மலையாளத்தில் நடிப்பது நல்லது அல்லது தற்போது தமிழ் சினிமாவின் ட்ரெண்டான மேக்கப்போடாத கிராமத்துப்பெண்ணாக அவர் நடிக்க அழைக்கப்படலாம்.

மற்றபடி இன்னும் இரண்டு வருடங்களில் ராஜா-ரவி சகோதரர்கள் இதே பெயரில் தமிழில் இதனை  வெளியிடும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஆனால் சென்ற முயற்சிகள் போலல்லாமல் தமிழில் இது வெளிவரும்போது நிறைய கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்தே வெளியிட வேண்டியதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.

சில இசைக்குறிப்புகள்

கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு கிராமஃபோன் நிகழ்ச்சியை கேட்டேன். முன்பு போலில்லாது அமைதியான இரவை கிழித்துத்துவைக்கும் வண்ணம் விளம்பரதாரர்களின் இரைச்சல் அளவுக்கு அதிகமாக தொந்தரவு செய்கிறது. ஷாலுவின் குரல் என்னதான் குழைந்து கூப்பாடு போட்டாலும் ஒரு பாடலுக்கு ஒரு முறை இடையே வந்து ஒலிக்கும் ஜோய் ஆலுக்காஸின் ஆக்ரமணம்தான் அதிகம். பேசாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட நினைவுகளோடு நிறுத்தியிருக்க வேண்டுமோ என்னவோ?

ஜேம்ஸ் இசையமைக்க வந்தபோது அவரின் பழைய ஆல்பம் பாடல்களில் ’தேவாலய இசை’ மிகுந்திருப்பதாக நான் குறைபட்டுக்கொண்டேயிருந்தேன். அவரின் முதல் படத்தின் பாடல் வெளிவந்தபோது அவர் அந்த கட்டுக்களையெல்லாம் அவிழ்த்து வெளிவந்துவிட்டதாகவே உணர்ந்தேன். இப்போது அவரின் மூன்றாவது இசைத்தகடும் வெளியாகியிருக்கிறது. ‘கனகசபாபதிக்கு….என்று அடானாவில் ஆரம்பித்து அதை அப்படியே வேறு ஒரு இணைச்சாலையில் ’’யாரது யாரோ யாரோ.’’ என்று அழகாக ஒரு திருப்பத்தில் கொண்டு சேர்த்திருப்பதை பெரிதும் ரசித்தேன். அவர் மேலும் பல கர்நாடக சங்கீத – சினிமா க்ராஸ் ஓவர்களை இசையமைக்கவேண்டுமாய் பிரார்த்திப்பேன்.

அங்காடித்தெருவில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் ’’உன் பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்’’ பாடல் நெடுநாட்களுக்குப்பிறகு வந்திருக்கும் ஒரு அருமையான மெலடி. மிக அருமையான காம்போசீஷன். நா.முத்துக்குமாரின் வெகுசிறப்பான வரிகள், பிசிறில்லாமல் ஒலிக்கும் ஷ்ரேயா,நரேஷ் மற்றும் ஹரிசரண் குரல்கள் என் எல்லாமே ஒத்திசைந்திருக்கும் மிக அருமையான பாடலது. ரசியுங்கள்!

ஆஹா பண்பலை இணையத்தை விவாகரத்து செய்ததாக உணர்ந்தபோது பெரிதும் வருந்திக்கொண்டே இருந்தேன். பல நாட்களில் அலுவலக அயர்ச்சிகளை ஆஹா கேட்டு ஆற்றிக்கொள்வேன். சென்ற வாரங்களில் ஒருநாள் ட்விட்டர் மூலமாக கிடைத்தது http://www.loka.fm/என்ற இணைய முகவரி. இங்கே ஆஹாவுடன், சூரியன் மற்றும் ரேடியோ சிட்டி பண்பலைகளும் கிடைக்கின்றன. இந்த சுட்டி தந்த கணேஷ் சந்திரா அவர்களுக்கும் மறுட்வீட் செய்த சத்யா அவர்களுக்கும் என் நன்றிகள். நீங்களும் இனி சென்னை இணைய வானொலி கேட்கலாம்.

செம்மங்குடி மாமாவின் ஏர்போர்ட் கச்சேரியின் இணையப்பக்கத்தை குறித்துவைத்து பலமாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் முழுமையாக கேட்டபாடில்லை. இந்த சுவாரசியமான ஏர்போர்ட் கச்சேரி பற்றிய கதையை சிமுலேஷன் வலைப்பதிவில் நீங்கள் படிக்கலாம். கேட்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கலாம். நன்றி சிமுலேஷன்.

எக்ஸலன்ட்- பா.ரா.

தீவிரவாதம் சீக்கிரம் அழிந்துவிடவேண்டும் என்று எண்ணாதவர் யார்? எல்லோருக்கும் அவ்வெண்ணம் இருப்பினும் எனக்கு அதன் சதவீதம் சற்று அதிகமே. காரணம் யாதெனக்கேட்டால் அன்றுதானே எழுத்தாளர் பாரா துப்பாக்கிகள், தோட்டாக்கள், பதுங்கு குழிகள் சதித்திட்டங்கள் மற்றும் அவைசார்ந்த இன்னபிற வஸ்துக்களை அறவே அப்புறப்படுத்திவிட்டு அவரின் பிரத்தியேக ஸ்டைலில் எழுதும் மற்ற நாவல்கள், சிறுகதைகள் மற்றும் எக்ஸலண்ட் போன்ற புத்தகங்களை நாம் தடையின்றி படிக்க முடியும்.!

சுயமுன்னேற்றப்புத்தகங்களின்பால் எனக்கிருந்த காதலெல்லாம் கல்லூரி முடிந்த ஒரு வருடத்தில் காணமற்போயிற்று. ஆனால் இவ்வருட துவக்கத்தில் பாரா போட்டிருந்த ஒரு பதிவின்போதே எக்ஸலண்ட் பற்றி குறித்துவைத்துக்கொண்டேன். 6 மாதங்கள் கழித்து சென்றவாரத்தில் ஸ்ரீரங்கம் யானைகட்டிச் சத்திரத்தில்தான் விமோசனம் ஆனது.

சுயமுன்னேறமா! என்று முகம் சுளிப்பீராயின் கவலைப்படேல். தனித்தனியாக வெவ்வேறு பெர்ஸனாலிட்டிகளைப்பற்றிய சுவாரசியமான புத்தகமாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம். பாராவின் குடும்ப டாக்டராகட்டும் இசைஞானி இளையராஜாவாகட்டும்,அவர்களிடத்திலிருந்த எந்த திறன் அவர்களை இந்த உயரத்திற்கு இட்டுச்சென்றிருக்கும் என்று ஆசிரியர் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இரண்டு குழந்தைகள் நல மருத்துவர்கள். பாராவின் குடும்ப டாக்டர்கள். இருவருமே நகரின் நல்ல மருத்துவர்கள். ஒருவர் மிக கனிவானவர். மற்றொருவர் சற்றே சிடுமூஞ்சி. ஆனால் பாராவின் 5 வயது மகளுக்கு சிடுமூஞ்சி டாக்டரைதான் மிகவும் பிடித்திருக்கிறது. ஏன்? அங்கேதான் உன்னதத்தின் சூட்சுமம் ஒளிந்துகிடக்கிறது என்கிறார் ஆசிரியர்.

 இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்ல. உன்னதமான இசையமைப்பாளர் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் ஒன்றைக்கொடுக்கிறார். அது உதாரணம் மட்டுமல்ல அந்த நிகழ்வு இல்லாது அந்த புத்தகமே முழுமையடையாது என்றும் எண்ணுகிறார். அது அப்படியே உண்மை. ஹேராம் திரைப்படம் தொடர்பான அந்த வெகு சுவாரசியமான நிகழ்வு என்ன என்பதை நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். அது உங்கள் சுயத்தினை முன்னேற்றுமா என்பதில் கவலை கொள்ளேல். அது சுயத்தை மகிழ்வுபடுத்தும். கட்டாயம் உத்வேகம் கொடுக்கும். அது போதும்.

கல்கி.கி.ராஜேந்திரன் அவர்களின் சித்திரகுப்தன் பேரேடு, விஸ்வநாதன் ஆனந்த்தின் தன் தவறுகளையும், மாற்றான் தவறுகளையும் மட்டுமே குறிப்பெடுத்துக்கொள்ளும் விர்சுவல் டேட்டாபேஸ், யானியின் லிட்டரலி தன்னையே உருக்கி இசை செதுக்கும் ஜாலம், எழுத்தாளர் ஜே.எஸ்.ராகவன் அவர்களின் செய்நேர்த்தி, ஜி.வி.ஐயர் என்கிற டைரக்டரின் குணாதிசியங்கள், பின்லேடனின் கர்மயோகம், காந்தி என்கிற உன்னதத்தின் உச்ச நட்சத்திரம் ஆகியவற்றோடு பாரா என்கிற என்ஜினியரிங் மாணவன் தேங்காய் உரிக்கும் மெஷின் கண்டுபிடிக்க முயற்சித்த கதையும் உண்டு.

நான் ஏற்கனவே சொன்னதுபோல இதனை சுயமுன்னேற்றப்புத்தகம் என்று கருதி வாங்காமல் இருக்கும் அன்பர்கள், தைரியமாக அந்த அஸ்பெக்ட்ஸ் தவிர்த்து மற்ற சுவாரசியமான விஷயங்களை பாராவின் எளிய அருவி போலோடும் தமிழில் படிக்க ஒரு அருமையான வாய்ப்பு

சுயமுன்னேற்றப்புத்தகம் என்றும் பார்த்துப் படிப்பவர்களுக்கு இது உண்மையான பொக்கிஷம். என் சுயத்தை மிகவும் மகிழ்வித்த புத்தகம்.

புத்தகம் : எக்ஸலன்ட்  ஆசிரியர் : பா.ராகவன்  பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் விலை : 70 ரூபாய்

துபாய் பதிவர் சந்திப்பு – 05-06-09

(இடையில் ஏற்பட்டுவிட்ட ஒரு எதிர்பாராத பயணத்தின் காரணமாக மிகத் தாமதமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.)

பதிவர் சந்திப்புகள் ஒன்றிலும் நான் இதுவரையில் கலந்துகொண்டதில்லை. ஆர்வம் நிறைய இருந்தது. ஆனால் பயணம்,நிகழ்வுக்கான நேரம் ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் காரணமாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதிய பதிவர்கள் அழைத்திருக்கிறார்கள் போகலாமா என்று குசும்பன் (என்றும் அழைக்கப்படுகிற சரவணன் ) கேட்டபோது மகிழ்வோடு ஒத்துக்கொண்டேன்.

 சுற்றிலும் வேப்பமரங்கள் அடர்ந்த புல்வெளியில் கராமா பார்க்கில் நிகழ்ந்த்து சந்திப்பு. அருகிலேயே வசிக்கும் திரு.சுந்தர் வலைப்பதிவு கூட்டத்திற்கெனவே பிரத்தியேகமாக எடுத்துவைத்திருந்த மசால்வடையும் சாஸீம் இன்னும் வெகுகாலத்திற்கு நினைவில் நிற்கும்.

 புதிய பதிவர்கள், தொடர் வாசகர்கள், ஆசாத் பாய், லியோ சுரேஷ், குசும்பன் மற்றும் அய்யனார் ஆகிய மூத்த பதிவர்கள் என ஒரு சுவாரசியமான உரையாடல் களமாக அமைந்த்து கூட்டம்.

தமிழ் திரட்டிகள் சிலவற்றினை வலைப்பதிவில் இணைப்பதின் மூலமாக வலைப்பதிவு ஒட்டுமொத்தமாக காணமல்போய்விடுவதாகத் தொடங்கியது பேச்சு. பதிவர் கெளதமின் பழைய பதிவில் ஒரு திரட்டியினை இணைத்தன் காரணமாக பதிவு ஒட்டுமொத்தமாக காணாமற்போய்விட்ட்தாகவும் தன்னால் அதனை மீட்க முடியாமற்போனது பற்றியும் பேசினார். இதனைப்பற்றிய awareness வலையில் பரப்புதல் நலம் என்றும் முடிவு செய்யப்பட்ட்து.

Continue reading

srirangam chronicles-2-திருவெறும்பூர் கரும்பு மக்கள்

2558 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று திருச்சி மக்களவைத்தொகுதியில் டெபாசிட் இழந்த லதிமுக வேட்பாளர் மன்சூர் அலிகானின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் இரண்டு.

Continue reading

srirangam chronicles 1 – முரளி காஃபி கடை

’முரளி கடையில ஒரு காபி சாப்பிட்டு போயிடலாம் தம்பி’. கிடைக்க கடினமான ஒரு முக்கியமான டாக்டர் அப்பாயின்மெண்ட்டிற்காக விடியற்காலையில் புறப்பட்ட நேரத்தில் ஆட்டோக்காரனிடம் அப்பா மேற்கண்ட வாக்கியத்தை சொன்னவுடன் சற்றே கோபம் வந்தது முதலில். ஆனால் அந்த நொடியில் நினைத்திருக்கவில்லை ஒவ்வொரு முறையும் அந்த கடையை எவ்வளவு அவசரமாய் கடந்து சென்றாலும் நிதானித்து ஒரு காபி சாப்பிடமால் போவதில்லை என்பதை.

Continue reading

விண்ணை தாண்டி வருவாயா promos

அனேகமாக கெளதம் மேனன் படமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இயக்குனர், மற்ற எந்த விபரங்களும் இல்லாமல் கடந்த வாரம் முழுவதும் வந்துகொண்டிருந்த pre launch விளம்பரங்கள் எல்லாமே பிரமாதமாக இருக்கின்றன. யாராக இருந்தாலும் சின்ன சின்ன விபரங்களை கூட அழகாக பார்த்து வடிவமைத்ததற்கு பாராட்டுக்கள். எனினும் சிம்பு நடிக்கிறார் என்றாலே வரும் final outputபற்றிய பயங்களில்  இருந்து விடுபட முடியவில்லை.

Continue reading