ஓய் (oye)!

நான் தியேட்டருக்கு சென்று பார்த்த தெலுகு படம் ஒன்றே ஒன்றுதான். அது சிரஞ்சீவி நடித்த ‘அஞ்சி’ .அதுவும் . நான் பணிபுரிந்துகொண்டிருந்த நிறுவனம் அதற்கு digital animation & composition செய்திருந்த காரணத்தினால் ஓசி டிக்கெட் கொடுத்தது. படுதிராபையான படம் என்றாலும் எங்களின் கைவண்ணம் சாந்தம் ஸ்கிரீனில் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்பதற்காகவே சென்றதால் உற்சாகமான அனுபவமாகவே இருந்தது. அதற்கு பிறகு வேறு எந்த தெலுகு படத்திற்கும் நான் தியேட்டரில் சென்று பார்க்க முயற்சி செய்ததில்லை என்றே சொல்லவேண்டும்.

இந்த முறையும் அது திட்டமிட்டு நிகழவில்லை. நாடோடிகள் பார்க்க வேண்டும் என்ற ஆவலில்தான் திரையரங்கம் சென்றேன். ’இந்திரவிழா’ என்று போஸ்டர் சொல்லியது. அது எனக்கு மிகப்பிடித்த இரட்டை இயக்குனர்களின் தேறாத திரைப்படம் ஒன்றின் மறு உருவாக்கம் என்பதை அறிந்திருந்ததால் திரும்பிவிடவே எண்ணினேன். ஆனால் ஓய் பற்றி நான் ஏற்கனவே படித்திருந்த விமர்சனங்கள் என்னை சென்று பார்க்கலாமே என்று எண்ண வைத்தது.பார்த்தேன்.

ஓய்  உற்சாகமாக,சுவாரசியமாக சொல்லப்பட்ட ஒரு பழைய கதை. ’கீதாஞ்சலி’ கதைதான் இது என்று சொல்லிவிடமுடியாது. அதிலிருந்து ஒரே ஒரு இழையை உருவி வேறு பாதையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இயக்குனர் ஆனந்த் ரங்கா விற்கு இது முதல் படம். சற்றே தைரியமாகத்தான் இந்த கதையை எடுத்திருக்க வேண்டும். தயாரிப்பாளர்களிடம் சற்றே மெனக்கெட்டே சம்மதம் வாங்கியிருப்பார் என்று தோன்றுகிறது. பயணிகள் கப்பல், 12 வாழ்த்துப்பொருட்கள்,பீகார் உத்திரப்பிரதேச பயணங்கள் என்று நிறைய புதிய விஷயங்களைப்புகுத்தி திரைக்கதையை சுவாரசியமாக்கியிருக்கிறார். பெரிய குறை ஒன்றும் சொல்ல முடியாத திரைவாழ்வின் ஆரம்பம்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்தின் இரண்டாவது தூண். பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையும் பரவலாக மிக நன்றாகவே வந்திருக்கிறது.சித்தார்த் ஓகே. ஆனால் ஷாமிலியின் இருப்பு அவ்வளவு சிலாக்கியத்தைக்கொடுக்கவில்லை. ஷாலினி முதலில் அறிமுகமானபோது அவரிடம் இருந்த கரிஸ்மா இவரிடம் மிகவும் குறைவாக உள்ளது. பல இடங்களில் குழந்தை கதாபாத்திர முகபாவங்களையே அவர் கொடுப்பதாகவே பட்டது. அவருக்கு மேக்கப் போட்டவரைப் பார்த்து இயக்குனர் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. ஷாமிலி முதலில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து மலையாளத்தில் நடிப்பது நல்லது அல்லது தற்போது தமிழ் சினிமாவின் ட்ரெண்டான மேக்கப்போடாத கிராமத்துப்பெண்ணாக அவர் நடிக்க அழைக்கப்படலாம்.

மற்றபடி இன்னும் இரண்டு வருடங்களில் ராஜா-ரவி சகோதரர்கள் இதே பெயரில் தமிழில் இதனை  வெளியிடும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஆனால் சென்ற முயற்சிகள் போலல்லாமல் தமிழில் இது வெளிவரும்போது நிறைய கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்தே வெளியிட வேண்டியதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.