மனதில் நின்ற சிறுகதைகள் 2009

இந்த சென்ற வருடத்தில் நான் படித்து மனதில் நிற்கும் சிறுகதைகளை வகைப்படுத்தியிருக்கிறேன். எல்லா வார இதழ், மாத இதழ்களையும் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டுவதில்லை. ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் வார இதழ்களில் வெளியாகும் எல்லா சிறுகதைகளை படிக்கிறேன். வார்த்தை,உயிர்மை,உயிர் எழுத்து ஆகிய இதழ்களின் தலா 3 பிரதிகளும் காலச்சுவடு கதைகள் அவ்வப்போதும் இந்த சென்ற வருடத்தில் எனக்கு படிக்கக் கிடைத்தன. இதைத் தவிர்த்து இணையத்தில் வெளியிடப்படும் சிறுகதைகளில் சிலவும், புதிய கதைத் தளமாகிய http://www.tamilstory.in லும் க்தைகள் படித்திருக்கிறேன். இவற்றில் எனக்கு பிடித்த கதைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் இந்த பட்டியல் என் மனதைவிட்டு அகலாதன என்று ஸ்பெஷல் டைட்டில் வேண்டுமானால் கொடுத்துக்கொள்ளலாம். எழுத்தாளர் பெயர் சொன்னவுடனேயே இந்தக் கதை ஞாபகம் வருகிறது என்று சொல்வோமில்லையா அந்த வகையறாவாகக்கூட இருக்கலாம்.

1. நேற்று நடந்தது – ராஜீமுருகன்

ஆனந்தவிகடனில் 2009 புத்தகக்கண்காட்சியின்போதோ அல்லது அது முடிந்துவிட்ட மறு வாரமோ வந்த சிறுகதை. தமன்னாவுக்கு சிலை வைக்க பிளான் போடும் ஒரு பின்நவீனத்துவர், ரேஷன் என்கிற வார்த்தையை சொன்னால் அவன் குரல்வளையை நெறிப்போம் எனும் ஒரு ஜீன்ஸ் போட்ட தொங்குமீசை எழுத்தாளர், ”நண்பா! லெக்பீஸ் பிளாக்ஸ்பாட் களம் வந்து பாருங்க. இருக் கிறதுல எக்கச்சக்க பின்னூட்டம் நமக்குத்தான். என்கிற ஒரு வலைத்தள் சுனாமி ‘அர்த்த ஜாம காம ரூப அதிவதினியின் இருள்’ என்ற தலைப்பை சன் பிக்சர்சுக்கு சிபாரிசிக்கும் தோழர் என கிறுகிறுவென சுத்த வைக்கும் பலபட்டறைக்கதை. ஆனால் படித்துமுடித்து கீழே வைத்த பிறகு நான் என்ன படித்தோம் என்று குழப்பம் வர மீண்டும் எடுத்து படிக்க வைக்கிற ஒரு சுவாரசியமும் இருந்தது. ராஜீ முருகனின் நடை எனக்கு மிகவும் பிடித்தது. சிறுகதைத் தொகுப்பு ஏதேனும் வெளியிட்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. இருந்தால் கண்டிப்பாக வாங்க வேண்டும்.

2. A,B,C அல்லது D -சொக்கன்

www.tamilstory.in ல் வெளிவந்திருக்கும் இந்த சிறுகதை முன்பே எழுதப்பட்டிருக்கலாம். நான் இந்த வருடம்தான் படித்தேன். ஒரு aptitude test ற்கு தன்னை தயார் செய்யாது போய் விட்ட ஒரு மாணவன் தேர்வு தொடங்கியதிலிருந்து முடியும் நேரம் வரைக்கும் என்னென்ன நினைத்துக்கொள்வான், சிந்திப்பான், பக்கத்தில் உட்கார்ந்து தேர்வு எழுதுபவனைப்பற்றிய அவனது எண்ணங்கள் என மிக சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிறது. சொக்கனின் அபுனைவு கட்டுரைகளை நான் விரும்பி படிக்கிறேன். முத்தாரத்தில் வரும் அவரது தொடரை ஒரு வாரமும் விடுவதில்லை. அவரது வலைப்பக்கத்தில் அவர் எழுதும் ஹாஸ்யம் கொப்பளிக்கும் / குட் வில் போதனைகள் சொல்லும் பதிவுகளும் என் ஆத்மார்த்தமானவை. ஆயினும் அவர் கதை எழுதுவது பற்றி எனக்கு எந்த சிலாக்கியமும் இல்லை இந்த சிறுகதை படிக்கும் வரை. நல்ல கதை. இணையத்தில் படிக்க்க் கிடைக்கிறது. http://www.tamilstory.in/?p=23

3. கிணறு – ஆபிதீன்

ஆபிதீனின் ’தினம் ஒரு பூண்டு’ எனது எப்போதும் பிடித்த சிறுகதைகளுள் ஒன்று. இதுவரை நான் படித்த சிறுகதைகளை ஒரு வரிசையில் அடுக்கினால் கண்டிப்பாக ஆபிதீனின் தினம் ஒரு பூண்டு அதில் அடங்கிவிடும். அதே நாகூர் மொழி கதைசொல்ல்ல் பாணியில் வார்த்தை இதழில் (அநேகமாக ஏப்ரல்) வெளிவந்த கிணறு எனக்கு மிகவும் பிடித்த்து.

4. யார் அது அழுவது – ஆனந்த் ராகவ்

ஆனந்த் ராகவ் என்கிற இந்த எழுத்தாளரின் சிறுகதைகள் அவ்வப்போது ஆன்ந்தவிகடனில் வருவதை பார்த்திருக்கிறேன். படித்திருக்கிறேனா என்றே நினைவில்லை. ஆனால் இந்த சிறுகதை சட்டென்று மனதில் ஒட்டிக்கொண்ட்து. இணையத்தில் அவரது வேறு சிறுகதைகளும் வாசிக்க கிடைத்தன. ஒரு நல்ல எழுத்தாளரை மிஸ் செய்துவிட்ட குற்ற உணர்வு வாட்டியது. அவசியம் அனைத்து சிறுகதை விரும்பிகளும் வாசித்து அனுபவிக்க வேண்டிய கதை இது. ஆன்ந்தவிகடன் டிசம்பர் மாத இதழ் ஒன்றில் வெளியாகி இருக்கிறது.

5. வீடியோ மாரியம்மன் – இமையம்

இதுவும் ஒரு பழைய சிறுகதை. இந்த வருடம்தான் நான் படித்தேன். நான் இமையத்தின் சிறுகதைகளை படித்த்தில்லை. இதுதான் முதல் கதை. இரண்டு மூன்று முறை விட்டு விட்டு பத்தி பத்திகளாகத்தான் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்த்து. இது இணையத்தில் கிடைக்கிறது.

http://www.kalachuvadu.com/issue-87/sirukathai.htm

6. கைக்கிளை – சுதேசமித்திரன் சுதேசமித்திரனின் கைக்கிளை வருட இறுதியில் படிக்க்க்கிடைத்த அருமையான சிறுகதை. Soft horror என்று இதை வகைப்படித்தினாலும் அருமையான வர்ணனைகள் இந்த சிறுகதையை சிறப்பாக்குகின்றன. ஆன்ந்த விகடனில் வெளிவந்த்து.

7. உலை – இலவசக்கொத்தனார்

பதிவரும், என்னை மிகவும் கவர்ந்த வெண்பா எழுத்தாளரின் குங்குமம் சிறுகதை. ஒரே வார்த்தையில் சொன்னால் ‘அற்புதம்’ .இது இணையத்தில் அவரது வலைப்பதிவில் படிக்க்க் கிடைக்கிறது. http://elavasam.blogspot.com/2009/09/blog-post.html

8.ஹேப்பி தீபாவலி – ராஜீ முருகன்

மீண்டும் ராஜீமுருகன். பரபரவென போகும் வர்ணனைகளும், இறுதியில் வைக்கப்பட்ட அழுத்தமான முற்றுப்புள்ளிக்கு முந்தைய பத்தியும் கதைக்கு மெருகு சேர்க்கும் காரணிகள். அருமையான சிறுகதை. ஆன்ந்தவிகடன் தீபாவளி இதழில் வெளிவந்திருக்கிறது.

அவ்வளவுதான்.

மிகவும் குறைவாகத்தான் சிறுகதைகள் படித்திருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நிறைய நல்ல சிறுகதைகளை நான் படிக்காமல் விட்டிருப்பேன் என்பது திண்ணம். அன்பர்கள் அவ்வாறான சிறுகதைகளை மேற்கோளிட்டால் மிகவும் மகிழ்வேன். நன்றி.