இந்த வருடத்தில் வெளியான தமிழ் திரைப்படப் பாடல்களில் என் மனதிற்குப் பிடித்த பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன். இது முற்றிலும் என் ரசனை சார்ந்தது. ஒரு இசையமைப்பாளருக்கு ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு பாடல்கள் என்ற விகித்த்தில் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
ஜி.வி.பிரகாஷ்குமார்
ஜி.வி.பிக்கு இந்த வருடம் இரண்டு ஜாக்பாட் திரைப்படங்கள் கிடைத்திருந்தன. இரண்டுமே இன்னும் வெளிவராவிட்டாலும் பாடல்கள் அனைத்தும் பெரும் அமர்க்களமாக இருந்தன.
தாய் தின்ற மண்ணே –ஆயிரத்தில் ஒருவன் – விஜய் யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் – வைரமுத்து, வெட்டூரி சுந்தரமூர்த்தி
“Song of the year” என்று பெரிய எழுத்துக்களில் போட்டாலும் தகும். பெரும் துயரத்தை உணர வைக்கிற வரிகளும், வாத்தியங்களும் இணைந்து செய்யும் குழைவு மகா அற்புதம். ஜி.வி. பிரகாஷ் போடும் பிற டப்பாங்குத்துப்பாடல்களை யாரேனும் குறை சொல்ல முனையும்போது இந்த ஒரே ஒரு பாடலையே அவர் பிரம்மாஸ்திரமாக உபயோகித்துக்கொள்ளலாம்.
உன்பேரை சொல்லும்போதே – அங்காடித் தெரு – நரேஷ் ஐயர், ஷ்ரேயே கோஷல், ஹரிசரண் -நா.முத்துகுமார்
புல்லாங்குழல், கீபோர்ட் மற்றும் நரம்பு இசைக்கருவிகளிலிருந்து மொத்தமாக வழியும் இசையுடன் இணையும் மிதமான அதிர்வு வாத்தியஙள். எழுதும்போதெ எவ்வளவு இதமாக இருக்கிறது. முதன்முதலில் இந்த பாடலைக்கேட்டபோது தளர்வான ஒரு மாலையில் முகத்தில் இதமாக காற்று உரசுவதுபோல இருந்தது. அற்புதமான பாடல்.
இதைத்தவிர ஆனந்ததாண்டவம் திரைப்படப்பாடல்களும் எனக்கு பிடித்திருந்தன.
விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி இந்த வருடத்தில் ஒரு பெரிய ஏணியில் ஏறி வந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். விதவிதமான வாய்ப்புகள் அவர் கதவைத்தட்டி அழைத்தன. அவரும் அவருடைய ஸ்டைலை ஓரளவிற்கு இயக்குனர்களுக்கேற்ப மாற்றிக்கொண்ட விதம் ரசிக்க வைத்தது. அவரின் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தன இந்த வருடத்தில்.
நீ ஒத்த சொல்லு சொல்லு… – ராகுல் நம்பியார், ப்ரீதா – அவள் பெயர் தமிழரசி – ஏகாதசி
இந்த ஆல்பத்தில் முதலில் உள்ள் பாடல். எனக்கு மிகவும் பிடித்தது. சாதாரண வரிகள்தான் என்றாலும் இந்த சூழ்நிலைக்கு இது பெரிதும் பொருந்துவனவாக இருந்தது. ப்ரீதாவின் குரல் சற்றே கீச்சுக்குரலாக இருந்தாலும் இந்த பாடலைத் திரையில் பார்க்கும்போது (ஆம் துபாய் திரைப்பட விழாவில் இதன் compressed version பார்த்தேன்.) கதாநாயகியின் குரலுக்கு ஒத்து வருகிறது. நல்ல பாடல்.
கரிகாலன் காலைப்போல – வேட்டைக்காரன் – சுர்ஜித், சங்கீதா ராஜேஸ்வரன் – கபிலன்
கபிலனிடமிருந்து மறக்கமுடியாத இன்னொரு டூயட். தாளம் போடவைக்கும் மெட்டுக்கள், ரசிக்க வைக்கும் வரிகள் என்ன அருமையான ஜோடிப்பாடல். சங்கீதா ராஜேஸ்வரனின் குரல் பாவங்கள் அருமை.
ஜேம்ஸ் வசந்தன்
நான் போகிறேன் மேலே மேலே – நாணயம் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
80,90 களில் வந்த பாடலைக்கேட்பதுபோன்ற ஒரு பிரமை இருக்கிறது இந்த பாடலைக்கேட்கும்போதெல்லாம். அநாவசிய மேற்கத்திய இசைக்கோர்ப்புகள் இல்லாமல் இருந்தாலே ஜேம்ஸின் பாடல்கள் நல்ல தரத்தில் இருக்கின்றன.
கோடி கோடி ஆசைகள் – காவலர் குடியிருப்பு – சரத், ப்ரியாஹேமேஷ் – தாமரை
கானடா ராகப் பாடல். தமிழ் சினிமா செண்டிமெண்ட் படி கண்டிப்பாக ஹிட் ஆகும். அருமையான வரிகள். குரல்களும் இனிமை. ஆனால் இண்டர்லூட் சம்மந்தமே இல்லாமல் பொறுமையை சோதிக்கிறது. வேறு வாத்தியங்களை உபயோகித்திருக்கலாமோ? ஆயினும் சிறப்பான அவுட்புட்.
யுவன்ஷங்கர் ராஜா
துளி துளிதுளி மழையாய் வந்தாளே – பையா – ஹரிசரண்,தன்வி – நா.முத்துகுமார்
மென்மையான காதல்பாடல். காதுக்கு அருகில் அமர்ந்து கொண்டு பாடுவது போல ஹரிசரண் தனது குரலை சற்றே குழைவாக்கிக்கொண்டிருப்பது அழகு. ரிதம் எதுவும் இல்லாமல் காதுகளில் படரும் அந்த இரண்டாவது இண்டர்லூட் (interlude) பாடலில் ஹைலைட்.
சொல்லப்போனால் இந்த வருட்த்தில் யுவனின் சிறந்த ஆல்பம் இது. அட்டா மழைடா, சுத்துதே சுத்துதே ஆகிய இரண்டு பாடல்களும் மற்ற சிறப்பான பாடல்கள்.
கடலோரம் ஒரு ஊரு – குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் – எஸ்.பி.சரண், யுவன் ஷங்கர் ராஜா – வாலி
யுவன்ஷங்கர் ராஜா பாடிய பாடல்தான் ஆல்பத்தில் முதலில் வரும். ஒரு நல்ல பாட்டு இவர் குரலால போச்சே என்று வருந்துவதற்கும் அதன் இரண்டாவது வெர்ஷன் இள வயது எஸ்.பி.பி குரல் போல எதிரொலிக்கும் எஸ்.பி.சரண் குரலில் வளைய வரும். அருமையான வரிகள். மென்மையான பைப் ஒலி சின்னச் சின்ன சங்கதிகள். சூப்பர்.
கார்த்திக் ராஜா
கண்ணில் தாகம் – அச்சமுண்டு அச்சமுண்டு – செளம்யா – ஆண்டாள் பிரியதர்ஷினி
என்றும் நினைவில் நிற்கின்ற, அழகான ஒலிகளினால் செறிவூட்டப்பட்ட பாடல். கார்த்திக்ராஜா வருடத்திற்கு இப்படி ஒரு பாட்டு போட்டாலே போதும். செளம்யாவின் முதல் பாடல். நிறைய பாவங்களை வெளிப்படுத்தியிருந்தார். நிச்சயமாக மிக நல்ல பாடல்.
சபேஷ்-முரளி
நிலா நீ வானம் காற்று – விஜய் யேசுதாஸ், சின்மயி – யுகபாரதி
இந்த பாடலையும், இதன் படமாக்கத்தையும் பார்த்துவிட்டுத்தான் முதல் நாளே திரைப்பட்த்திற்கு சென்றேன். நிறைய வார்த்தைகளை அர்த்தமுள்ள கோவையாக இணைத்திருக்கும் யுகபாரதியின் முயற்சி அருமை. சின்மயி குரல் மிகச்சரியாக இந்த பாடலுக்கு பொருந்தியது அழகு.
இளையராஜா
ஒளிதரும் சூரியனும் – வால்மீகி – இளையராஜா-பெலாஷிண்டே – வாலி
வால்மீகியில் இளையராஜா இசையமைத்திருந்த இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். மலையாள சினிமாவை விட்டுவிட்டால் இந்த வருடத்தில் தமிழில் ராஜாவின் மிகச்சிறந்த பாடலாக இதனையே சொல்லத்தோன்றுகிறது. இந்த பாடலின் ஆண்குரலில் ஸ்ரீனிவாஸ் அல்லது கார்த்திக் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மிகவும் குழைவான பாடல். பெலா ஷிண்டே தமிழ் சினிமாவின் அடுத்த ஷ்ரேயா கோஷல்.
வித்யாசாகர்
ஒருநாள் இரவில் – பென்னிதயாள், திப்பு – நா.முத்துகுமார்
இந்த வருடம் முழுவதிலும் என் ரசனை அடிப்படையில் வித்யாசாகருக்கு சொல்லுக்கொள்ளும்படியாக வந்த ஒரே பாடல் இது ஒன்றுதான். நல்ல வேகம், ரசிக்கவைக்கும் பீட்ஸ் எல்லாம் சேர்ந்து சிறப்பாக வந்திருக்கிறது.
இந்த வருடம் ARR ஆல்பம் ஒன்றும் தமிழில் வரவில்லை. ஹாரிஸ், தேவிஸ்ரீ பிரசாதின் பாடல்கள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. ஹாரிஸ் நல்ல டியூன் போட்டிருந்தாலும் பா.விஜயின் புண்ணியத்தில் பெரும் சொதப்பலாகும் அந்த பாடல்களை எந்த கணக்கில் சேர்ப்பதென்றே தெரியவில்லை.
தாமரை, முத்துக்குமார், யுகபாரதி இந்த மூவர் கூட்டணிதான் தமிழ் திரைப்படப் பாடல்களை இன்னுமொரு உயரத்திற்கு எடுத்துச்சென்று கொண்டிருக்கின்றன. அடுத்த வருடம் இவர்களிடமிருந்து மேலும் நல்ல பாடல்களை எதிர்பார்ப்போம்.
ஜி.வி.பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகிய இருவரும் இந்த வருடத்தின் நம்பிக்கைக்குரிய இசையமைப்பாளர்கள் என்பேன். ஜி.வி.பி. பெரிய இயக்குனர்களிடம் சண்டை போடாமல் இருக்கவும், விஜய் ஆண்டனி இன்னும் பல நல்ல வாத்தியங்களை தனது இசைக்கோர்ப்பில் சேர்த்துக்கொள்ளவும் இடையறாது பிரார்த்திப்பேன். அதேபோல கபிலனுக்கு நிறைய காதல் பாடல்கள் வாய்ப்பு கிடைக்கவும்.
அவ்வளவுதான். நன்றி.