தமிழ்த்திரைப்பாடல்கள் – 2009

இந்த வருடத்தில் வெளியான தமிழ் திரைப்படப் பாடல்களில் என் மனதிற்குப் பிடித்த பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன். இது முற்றிலும் என் ரசனை சார்ந்தது. ஒரு இசையமைப்பாளருக்கு ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு பாடல்கள் என்ற விகித்த்தில் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

ஜி.வி.பிரகாஷ்குமார்

ஜி.வி.பிக்கு இந்த வருடம் இரண்டு ஜாக்பாட் திரைப்படங்கள் கிடைத்திருந்தன. இரண்டுமே இன்னும் வெளிவராவிட்டாலும் பாடல்கள் அனைத்தும் பெரும் அமர்க்களமாக இருந்தன.

தாய் தின்ற மண்ணே –ஆயிரத்தில் ஒருவன் – விஜய் யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் – வைரமுத்து, வெட்டூரி சுந்தரமூர்த்தி

“Song of the year” என்று பெரிய எழுத்துக்களில் போட்டாலும் தகும். பெரும் துயரத்தை உணர வைக்கிற வரிகளும், வாத்தியங்களும் இணைந்து செய்யும் குழைவு மகா அற்புதம். ஜி.வி. பிரகாஷ் போடும் பிற டப்பாங்குத்துப்பாடல்களை யாரேனும் குறை சொல்ல முனையும்போது இந்த ஒரே ஒரு பாடலையே அவர் பிரம்மாஸ்திரமாக உபயோகித்துக்கொள்ளலாம்.

உன்பேரை சொல்லும்போதே – அங்காடித் தெரு – நரேஷ் ஐயர், ஷ்ரேயே கோஷல், ஹரிசரண் -நா.முத்துகுமார்

புல்லாங்குழல், கீபோர்ட் மற்றும் நரம்பு இசைக்கருவிகளிலிருந்து மொத்தமாக வழியும் இசையுடன் இணையும் மிதமான அதிர்வு வாத்தியஙள். எழுதும்போதெ எவ்வளவு இதமாக இருக்கிறது. முதன்முதலில் இந்த பாடலைக்கேட்டபோது தளர்வான ஒரு மாலையில் முகத்தில் இதமாக காற்று உரசுவதுபோல இருந்தது. அற்புதமான பாடல்.

இதைத்தவிர ஆனந்ததாண்டவம் திரைப்படப்பாடல்களும் எனக்கு பிடித்திருந்தன.

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி இந்த வருடத்தில் ஒரு பெரிய ஏணியில் ஏறி வந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். விதவிதமான வாய்ப்புகள் அவர் கதவைத்தட்டி அழைத்தன. அவரும் அவருடைய ஸ்டைலை ஓரளவிற்கு இயக்குனர்களுக்கேற்ப மாற்றிக்கொண்ட விதம் ரசிக்க வைத்தது. அவரின் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தன இந்த வருடத்தில்.

நீ ஒத்த சொல்லு சொல்லு… – ராகுல் நம்பியார், ப்ரீதாஅவள் பெயர் தமிழரசி – ஏகாதசி

இந்த ஆல்பத்தில் முதலில் உள்ள் பாடல். எனக்கு மிகவும் பிடித்தது.  சாதாரண வரிகள்தான் என்றாலும் இந்த சூழ்நிலைக்கு இது பெரிதும் பொருந்துவனவாக இருந்தது. ப்ரீதாவின் குரல் சற்றே கீச்சுக்குரலாக இருந்தாலும் இந்த பாடலைத் திரையில் பார்க்கும்போது  (ஆம் துபாய் திரைப்பட விழாவில் இதன் compressed version பார்த்தேன்.) கதாநாயகியின் குரலுக்கு ஒத்து வருகிறது. நல்ல பாடல்.

கரிகாலன் காலைப்போல – வேட்டைக்காரன் – சுர்ஜித், சங்கீதா ராஜேஸ்வரன் – கபிலன்

கபிலனிடமிருந்து மறக்கமுடியாத இன்னொரு டூயட்.  தாளம் போடவைக்கும் மெட்டுக்கள், ரசிக்க வைக்கும் வரிகள் என்ன அருமையான ஜோடிப்பாடல். சங்கீதா ராஜேஸ்வரனின் குரல் பாவங்கள் அருமை.

ஜேம்ஸ் வசந்தன்

நான் போகிறேன் மேலே மேலே – நாணயம் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா

80,90 களில் வந்த பாடலைக்கேட்பதுபோன்ற ஒரு பிரமை இருக்கிறது இந்த பாடலைக்கேட்கும்போதெல்லாம். அநாவசிய மேற்கத்திய இசைக்கோர்ப்புகள் இல்லாமல் இருந்தாலே ஜேம்ஸின் பாடல்கள் நல்ல தரத்தில் இருக்கின்றன.

கோடி கோடி ஆசைகள் – காவலர் குடியிருப்பு – சரத், ப்ரியாஹேமேஷ் – தாமரை

கானடா ராகப் பாடல். தமிழ் சினிமா செண்டிமெண்ட் படி கண்டிப்பாக ஹிட் ஆகும். அருமையான வரிகள். குரல்களும் இனிமை. ஆனால் இண்டர்லூட் சம்மந்தமே இல்லாமல் பொறுமையை சோதிக்கிறது. வேறு வாத்தியங்களை உபயோகித்திருக்கலாமோ?  ஆயினும் சிறப்பான அவுட்புட்.

யுவன்ஷங்கர் ராஜா

துளி துளிதுளி மழையாய் வந்தாளே – பையா – ஹரிசரண்,தன்வி – நா.முத்துகுமார்

மென்மையான காதல்பாடல். காதுக்கு அருகில் அமர்ந்து கொண்டு பாடுவது போல ஹரிசரண் தனது குரலை சற்றே குழைவாக்கிக்கொண்டிருப்பது அழகு. ரிதம் எதுவும் இல்லாமல் காதுகளில் படரும் அந்த இரண்டாவது இண்டர்லூட் (interlude) பாடலில் ஹைலைட்.

சொல்லப்போனால் இந்த வருட்த்தில் யுவனின் சிறந்த ஆல்பம் இது. அட்டா மழைடா, சுத்துதே சுத்துதே ஆகிய இரண்டு பாடல்களும் மற்ற சிறப்பான பாடல்கள்.

கடலோரம் ஒரு ஊரு – குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் – எஸ்.பி.சரண், யுவன் ஷங்கர் ராஜா – வாலி

யுவன்ஷங்கர் ராஜா பாடிய பாடல்தான் ஆல்பத்தில் முதலில் வரும். ஒரு நல்ல பாட்டு இவர் குரலால போச்சே என்று வருந்துவதற்கும் அதன் இரண்டாவது வெர்ஷன் இள வயது எஸ்.பி.பி குரல் போல எதிரொலிக்கும் எஸ்.பி.சரண் குரலில் வளைய வரும். அருமையான வரிகள். மென்மையான பைப் ஒலி சின்னச் சின்ன சங்கதிகள். சூப்பர்.

கார்த்திக் ராஜா

கண்ணில் தாகம் – அச்சமுண்டு அச்சமுண்டு – செளம்யா – ஆண்டாள் பிரியதர்ஷினி

என்றும் நினைவில் நிற்கின்ற, அழகான ஒலிகளினால் செறிவூட்டப்பட்ட பாடல். கார்த்திக்ராஜா வருடத்திற்கு இப்படி ஒரு பாட்டு போட்டாலே போதும். செளம்யாவின் முதல் பாடல். நிறைய பாவங்களை வெளிப்படுத்தியிருந்தார். நிச்சயமாக மிக நல்ல பாடல்.

சபேஷ்-முரளி

நிலா நீ வானம் காற்று – விஜய் யேசுதாஸ், சின்மயி – யுகபாரதி

இந்த பாடலையும், இதன் படமாக்கத்தையும் பார்த்துவிட்டுத்தான் முதல் நாளே திரைப்பட்த்திற்கு சென்றேன்.  நிறைய வார்த்தைகளை அர்த்தமுள்ள கோவையாக இணைத்திருக்கும் யுகபாரதியின் முயற்சி அருமை. சின்மயி குரல் மிகச்சரியாக இந்த பாடலுக்கு பொருந்தியது அழகு.

இளையராஜா

ஒளிதரும் சூரியனும் – வால்மீகி – இளையராஜா-பெலாஷிண்டே – வாலி

வால்மீகியில் இளையராஜா இசையமைத்திருந்த இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். மலையாள சினிமாவை விட்டுவிட்டால்  இந்த வருடத்தில் தமிழில் ராஜாவின் மிகச்சிறந்த பாடலாக இதனையே சொல்லத்தோன்றுகிறது. இந்த பாடலின் ஆண்குரலில் ஸ்ரீனிவாஸ் அல்லது கார்த்திக் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மிகவும் குழைவான பாடல். பெலா ஷிண்டே தமிழ் சினிமாவின் அடுத்த ஷ்ரேயா கோஷல்.

வித்யாசாகர்

ஒருநாள் இரவில் – பென்னிதயாள், திப்பு – நா.முத்துகுமார்

இந்த வருடம் முழுவதிலும் என் ரசனை அடிப்படையில் வித்யாசாகருக்கு சொல்லுக்கொள்ளும்படியாக வந்த ஒரே பாடல் இது ஒன்றுதான். நல்ல வேகம், ரசிக்கவைக்கும் பீட்ஸ் எல்லாம் சேர்ந்து சிறப்பாக வந்திருக்கிறது.

இந்த வருடம் ARR ஆல்பம் ஒன்றும் தமிழில் வரவில்லை. ஹாரிஸ்,  தேவிஸ்ரீ பிரசாதின் பாடல்கள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.  ஹாரிஸ் நல்ல டியூன் போட்டிருந்தாலும்  பா.விஜயின் புண்ணியத்தில் பெரும் சொதப்பலாகும்  அந்த பாடல்களை எந்த கணக்கில் சேர்ப்பதென்றே தெரியவில்லை.

தாமரை, முத்துக்குமார், யுகபாரதி இந்த மூவர் கூட்டணிதான் தமிழ் திரைப்படப் பாடல்களை இன்னுமொரு உயரத்திற்கு எடுத்துச்சென்று கொண்டிருக்கின்றன. அடுத்த வருடம் இவர்களிடமிருந்து மேலும் நல்ல பாடல்களை எதிர்பார்ப்போம்.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகிய இருவரும் இந்த வருடத்தின் நம்பிக்கைக்குரிய இசையமைப்பாளர்கள் என்பேன். ஜி.வி.பி. பெரிய இயக்குனர்களிடம் சண்டை போடாமல் இருக்கவும், விஜய் ஆண்டனி இன்னும் பல நல்ல வாத்தியங்களை தனது இசைக்கோர்ப்பில் சேர்த்துக்கொள்ளவும் இடையறாது பிரார்த்திப்பேன். அதேபோல கபிலனுக்கு நிறைய காதல் பாடல்கள் வாய்ப்பு கிடைக்கவும்.

அவ்வளவுதான். நன்றி.

சில இசைக்குறிப்புகள்

கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு கிராமஃபோன் நிகழ்ச்சியை கேட்டேன். முன்பு போலில்லாது அமைதியான இரவை கிழித்துத்துவைக்கும் வண்ணம் விளம்பரதாரர்களின் இரைச்சல் அளவுக்கு அதிகமாக தொந்தரவு செய்கிறது. ஷாலுவின் குரல் என்னதான் குழைந்து கூப்பாடு போட்டாலும் ஒரு பாடலுக்கு ஒரு முறை இடையே வந்து ஒலிக்கும் ஜோய் ஆலுக்காஸின் ஆக்ரமணம்தான் அதிகம். பேசாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட நினைவுகளோடு நிறுத்தியிருக்க வேண்டுமோ என்னவோ?

ஜேம்ஸ் இசையமைக்க வந்தபோது அவரின் பழைய ஆல்பம் பாடல்களில் ’தேவாலய இசை’ மிகுந்திருப்பதாக நான் குறைபட்டுக்கொண்டேயிருந்தேன். அவரின் முதல் படத்தின் பாடல் வெளிவந்தபோது அவர் அந்த கட்டுக்களையெல்லாம் அவிழ்த்து வெளிவந்துவிட்டதாகவே உணர்ந்தேன். இப்போது அவரின் மூன்றாவது இசைத்தகடும் வெளியாகியிருக்கிறது. ‘கனகசபாபதிக்கு….என்று அடானாவில் ஆரம்பித்து அதை அப்படியே வேறு ஒரு இணைச்சாலையில் ’’யாரது யாரோ யாரோ.’’ என்று அழகாக ஒரு திருப்பத்தில் கொண்டு சேர்த்திருப்பதை பெரிதும் ரசித்தேன். அவர் மேலும் பல கர்நாடக சங்கீத – சினிமா க்ராஸ் ஓவர்களை இசையமைக்கவேண்டுமாய் பிரார்த்திப்பேன்.

அங்காடித்தெருவில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் ’’உன் பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்’’ பாடல் நெடுநாட்களுக்குப்பிறகு வந்திருக்கும் ஒரு அருமையான மெலடி. மிக அருமையான காம்போசீஷன். நா.முத்துக்குமாரின் வெகுசிறப்பான வரிகள், பிசிறில்லாமல் ஒலிக்கும் ஷ்ரேயா,நரேஷ் மற்றும் ஹரிசரண் குரல்கள் என் எல்லாமே ஒத்திசைந்திருக்கும் மிக அருமையான பாடலது. ரசியுங்கள்!

ஆஹா பண்பலை இணையத்தை விவாகரத்து செய்ததாக உணர்ந்தபோது பெரிதும் வருந்திக்கொண்டே இருந்தேன். பல நாட்களில் அலுவலக அயர்ச்சிகளை ஆஹா கேட்டு ஆற்றிக்கொள்வேன். சென்ற வாரங்களில் ஒருநாள் ட்விட்டர் மூலமாக கிடைத்தது http://www.loka.fm/என்ற இணைய முகவரி. இங்கே ஆஹாவுடன், சூரியன் மற்றும் ரேடியோ சிட்டி பண்பலைகளும் கிடைக்கின்றன. இந்த சுட்டி தந்த கணேஷ் சந்திரா அவர்களுக்கும் மறுட்வீட் செய்த சத்யா அவர்களுக்கும் என் நன்றிகள். நீங்களும் இனி சென்னை இணைய வானொலி கேட்கலாம்.

செம்மங்குடி மாமாவின் ஏர்போர்ட் கச்சேரியின் இணையப்பக்கத்தை குறித்துவைத்து பலமாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் முழுமையாக கேட்டபாடில்லை. இந்த சுவாரசியமான ஏர்போர்ட் கச்சேரி பற்றிய கதையை சிமுலேஷன் வலைப்பதிவில் நீங்கள் படிக்கலாம். கேட்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கலாம். நன்றி சிமுலேஷன்.

kundrakkudi :(

குன்னக்குடி வைத்திய நாதன் மறைவு செய்தி பெரும் துயர் அளித்தது. இடைவிடாமல் ஒரு நாள் முழுதும் குன்னக்குடி இசை கேட்டுக்கொண்டிருந்த காலங்கள் என் வாழ்வில் உண்டு. முதன் முதலாக கர்நாடக இசை ராகங்கள் கண்டு பிடிக்கும் விளையாட்டை குன்னக்குடியிடமிருந்துதான் தொடங்கியிருந்தேன். அவரும் வலையப்பட்டியும் இணைந்து ஆற்றிய கச்சேரிதான் எனக்கு எப்போதுமே ஆதர்சம். அவரின் ஹம்சகீதே என்ற தொகுப்பில் இருக்கும் ஹீமகிரி தனையே என் வாழ்வின் பெரும் துயர் மிகுந்த தருணம் ஒன்றில் பெரும் துணையாக இருந்து இக்கட்டான  ஒரு முடிவெடுக்கும் பாவனையில் இருந்த என்னை பிடித்து இழுத்து வந்து வெளிச்சத்துக்கு நிறுத்தியது.

துயர செய்தி கேட்டவுடன் கோர்வையாக வந்து போன நினைவுகளை எழுதுவது கூட சுமையாயிற்று. அவரின் ஆன்மா சாந்தி அடைய எனது மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.

Welldone James!

ஜேம்ஸ் வசந்தன் ஒரு சிறந்த கிதார் இசைக்கலைஞர் என்பதை அறிந்திருந்தேன். நல்ல சங்கீத ஞானமும் கொண்டவர்.  முதலில் அவர் வெளியிட்ட “வாசனை” என்கிற இசைத்தொகுப்பு (அதிகமான மேற்கத்திய வாசனை வீசியது!) பரவலான வரவேற்பு பெறாமல் போய்விட்டது.
 
திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் அதே பழைய வாசனை வீசக்கூடாதே என்ற எண்ணம் இருந்து வந்தது. எண்ணத்திற்கு மாறாக வெளிவந்திருக்கும் அவரது முதல் திரைப்பட இசையமைப்பு குறுவட்டான “சுப்ரமணியபுரம்” சிறந்த பாடல்களை கொண்டிருக்கிறது. 
 
“கண்கள் இரண்டால்” என்று தொடங்கும் “ரீதிகெளள” (அல்லது அதன் சாயலைப் பெரிதும் கொண்டிருக்கிற) பாடல் என்னை பெரிதும் கவர்ந்தது. கவிதாயினி தாமரை யின் நல்ல தமிழ் வரிகளை சிதைக்காமல், பெள்ளிராஜ், தீபாமரியம் பாடியிருக்கிறார்கள். இருவருக்குமே இது முதல் திரைப்பாடலாக இருக்கலாம் என்று கணிக்கிறேன். வளர வாழ்த்துக்கள்.
 
welldone james! 
 

…Sung by JJ

1999 ம் வருடம் சிமிகேர்வலின் பேட்டி ஒன்றின்போது (Rendezvous with simi garewell) ஜெயலலிதா அவர்கள் ஒரு ஹிந்தி பாடலை பாடகேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது அவரது குரல் ஏனோ என்னை ஈர்க்கவில்லை. அண்மைய நாட்களில் அடிமைப்பெண் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவரது குரலில் ஒலித்தஅம்மா என்றால் அன்பு” (இப்போதுதான் முதன் முறையாக கேட்கிறேன்..) என்னை மிகவும் கவர்ந்தது. . பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்

ஏன் அவர் திரைப்படங்களில் தொடர்ந்து பாடவில்லை என்ற விபரம் தெரியவில்லை.

இசைமுத்துக்கள் மூன்று

1. Tera Mera Milna

திரைப்படம் :  ஆப் கா சுரூர் (Aap ka suroor)

இசை : ஹிமேஷ் ரேஷமிய்யா 

குரல்கள் : ஹிமேஷ் ரேஷமிய்யா ,ஷ்ரேயா

 அட ஹிமேஷ் ரேஷமிய்யா குரலிலும்  ஒரு அருமையான மெலோடி -அதுவும் ஷ்ரேயா கோஷல் மெலடி பாடுகிறார் என்றால் கேட்கவா வேண்டும். சர்க்கரை பந்தலில் தேன்மாரி. hats off ஷ்ரேயா கோஷல்   . 

தான் ஹீரோவாக நடிக்கும் படமென்பதால் பார்த்து பார்த்து பாடல்கள் போட்டிருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது. கேளுங்கள் இங்கே

Continue reading

பலே!

முனைவர் நா.முத்துக்குமாரின் இனிய வரிகளில் வெளியாகியிருக்கும் இரண்டு இசைத்தொகுப்புகளைக்கேட்டேன். ஒன்று சத்தம்போடாதே இன்னொன்று கிரீடம். இரண்டு தொகுப்புகளிலும் இசையை விடவும் பாடல் வரிகள் விஞ்சி நிற்பதை காணமுடிகிறது. மிக வளமான கற்பனை வளம், மீட்டரை விட சற்றும் விலகிவிடாத வார்த்தைகளிம் ஒட்டவைப்புகள், சிறந்த vocabulary என எல்லா சிறப்புகளையும் ஒருங்கே அமையப்பெற்றிருக்கின்றன முத்துக்குமாரின் பாடல்களில். இவருக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்புகளில் இருக்கும் versatility யும் இவரது சிறப்பான வெளிப்பாட்டிற்கு முக்கிய காரணம் என எண்ணுகிறேன்.

Continue reading

Jhoom barabar jhoom

1.KK, சுக்விந்தர் சிங், மஹாலக்ஷ்மி ஐயர் கூட்டணி இப்படி வொர்க் அவுட் ஆகும் என்று கணித்த இசையமைப்பாளர்களுக்கு ஒரு பெரிய ஓ! Hats off SEL!

 

2. இதனை அடிக்கடி ஒளிபரப்பி எரிச்சலடைய செய்யாத radio 4 kku நன்றிகள்.

 

3. எல்லா நல்ல பாட்டுகளையும் விட்டுவிட்டு ஹிமேஷ் ரேஷமிய்யாவையும் மட்டும் தலையில் வைத்துக்கொண்டு ஆடும் வட இந்தியா மீடியாவை பசித்த சிங்கம் உண்ணட்டும். (நன்றி தலைவர்)

 

 
JHOOM BARABAR JHOO…

Gramaphone on 96.7

நீங்கள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வசிப்பவரா? உங்களுக்கு தொலைக்காட்சியை விட வானொலி மீது அதிக பிரியம் இருக்கிறதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குதான். தினமும் இரவு 10 மணிக்கு 96.7 என்ற மலையாள பண்பலை வரிசையில் ஒலிபரப்பாகும்கிராமபோன்என்ற மிக அழகியல் கலந்த நிகழ்வை தவறவிடாதீர்கள். மொழி புரியவில்லை என்ற தயக்கம் ஏதும் இல்லாமல் மற்ற பண்பலைகளில் வரும்காட்டுக்கத்தல்கள் இல்லாமல், அழகிய கோர்வையுடன், மிக நளினமான குரல் வளமுள்ள, வசீகரமான வர்ணனையுடன் பேசும் வர்ணனையாளர் ( hats off ஷாலு Faisal), தேர்ந்தெடுத்த மென்குரல் பாடல்கள், நல்லிரவில் மயிலிறகால் இமைகளை வருடும் இசை என மிக அருமையான நிகழ்ச்சி. அவசியம் கேளுங்கள்.பலே 96.7 & ஷாலு Faisal!