Scoop by Kuldeep Nayar

ஸ்கூப் ( Scoop) இந்தியாவின் மிக மூத்த பத்திரிக்கையாளர்களுள் ஒருவரான குல்தீப் நய்யாரின் செய்தி சேகரிப்பு, ரிப்போர்டிங், அரசியல் தலைவர்களுடனான அவரது உறவு, அவரது ரிப்போர்டிங்கினால் இந்திய அரசியலிலும், நிர்வாகத்திலும் நிகழ்ந்த மாற்றங்கள் என பல தளங்களில் நடந்த சுவாரசியமான சில கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வந்திருக்கிறது.

ஆறு பெரும் பிரிவுகளாக முதலில் இந்த நூலை பிரித்துக்கொண்டுள்ளார்

1. பிரிவினை
2. நேருவின் ஆட்சிக்காலம்
3. லால் பகதூர் சாஸ்திரியின் ஆட்சிக்காலம்
4.இந்திரா காந்தியின் ஆட்சிக்க்காலம்
5. நெருக்கடி நிலை
6. துணைக்கண்டத்தை அதிர வைத்த சம்பவங்கள்

பிரிவினை:

தேசப்பிரிவினை பகுதியின் முதல் கட்டுரையாக தான் மகாத்மா காந்தி இறந்த அன்று செய்தி சேகரிக்கப்போன 1948 ஜனவரி 30ஐ நினைவிற்கொண்டு எழுதத்தொடங்குகிறார். தேசமே அதிர்ந்து போன அந்த நிகழ்வும், அதன் பின்னால் இருந்த தேசப்பிரிவினையின் பங்கையும் பற்றி விரிவாகப்பேசும் கட்டுரைகளை தன் பார்வையில் எழுதியிருக்கிறார். இந்தப்பகுதியில் அவர் ஜின்னா, மவுண்ட் பேட்டன், ரெட்கிளிஃப் ஆகியோரை பின்னாளில் பேட்டியளித்த நினைவுகளைத்தொகுத்து பிரிவினைக்காலத்தின் வெவ்வேறு
மனச்சித்திரங்களை கோடிட்டுக்காட்டியபடி செல்கிறார்.

நேரு:

நேருவின் ஆட்சிக்காலத்தைப்பற்றிய இரண்டு முக்கிய விஷயங்களை நீண்ட கட்டுரைகளை வடித்திருக்கிறார். முதலாவது நமக்கு மிகவும் பரிச்சியமா ஹிந்தித்திணிப்பும், அதன் பின்பு நடந்த கலவரங்களும் பற்றியது. ஹிந்தியை ஆட்சி மொழியாக்க பெரும் பிரயத்தனப்பட்ட அப்போதைய உள்துறை அமைச்சர் கோவிந்த் பல்லப பந்த் (Goving Ballabh Bant)தின் முயற்சிகளைப்பற்றி பெருமளவு இந்தக்கட்டுரை பேசுகிறது. ஆரம்பத்திலிருந்தே இந்த முயற்சியில் நேருவுக்கு இருந்த அசுவாரசியமும் வெளிப்படுகிறது. பிறகு அறைகுறையாகக்கொண்டு வரப்பட்ட ஒரு சுற்றறிக்கை ஏற்படுத்திய கலவரங்களின் பிரதிபலிப்பாகவே, ஹிந்தி ஆட்சிமொழியாக்கப்படாது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு அரசாங்கத்திடமிருந்து வந்திருக்கிறது

நேரு குளியலறையில் விழுந்து இறந்துபோன 1964 மே 27ந் தேதிக்கு முன்னதாகவே, அவருக்கு பக்கவாத பாதிப்பு இருந்த நாளிலிருந்தே நேருவுக்கு அடுத்தது யார் என்ற கேள்வி தேசத்தில் பிரதானமாக இருந்ததாகக் கூறுகிறார் நய்யார். இந்திராகாந்தியின் பெயர் சலசலக்கப்பட்டாலும், நேருவே அவளுக்கு பக்குவம் போதாது என்று சொன்னதாகவும் தகவல் வருகிறது. பிரதமர் பதவிக்கு மிக முக்கிய போட்டியாளர்களாக லால் பகதூர் சாஸ்திரியும், மொரார்ஜி தேசாயும் களத்தில் இருந்திருக்கிறார்கள். நய்யார் சாஸ்திரியின் உதவி அதிகாரியாக சில நாட்கள் வேலை பார்த்திருந்ததனால் அவர் மீது இவருக்கு சற்றே soft corner இருப்பது புரிகிறது. அதை மொரார்ஜி தேசாயும் நன்கு உணர்ந்து இவருக்க்கு சரியான பத்திரிகை ரீதியான ஒத்துழைப்பும் வழங்காதிருந்திருக்கிறார். பிரதமரை தேர்ந்தெடுக்கு தேர்தலில்லாமல் முடிவெடுக்க மொரார்ஜி தேசாய்க்கு அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் தூது விட்டிருக்கிறார். மொரார்ஜி அதை விரும்பவில்லை. தேர்தலுக்கு முதல் நாள் குல்தீப் சாஸ்திரிக்கு ஆதரவான ஒரு பெரிய பத்திரிகைச்செய்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் பல பேரை சாஸ்திரிக்கு ஆதரவாக முடிவெடுக்க வைத்திருக்கிறது. சாஸ்திரி பிரதமரானதும், காமராஜர் ரகசியமாக குல்தீப் நய்யாருக்கு நன்றியும் சொல்லியிருக்கிறார்.

சாஸ்திரி:

சாஸ்திரியின் ஆட்சிக்காலம் குறித்தும், அப்போது நடந்த இந்தோ-பாக் போரின்போது அவரின் புத்திசாலித்தனமான முடிவுகள் குறித்தும், நிர்வாகத்திறமை குறித்தும் மிக மிக உயர்வாக எழுதப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நான் கூறியபடி அவரின் மீது குல்தீப்புக்கு இருக்கும் soft corner இந்தக்கட்டுரைகளில் அதீதமாக வெளிப்படுகிறது. ஆனால் தாஷ்கெண்ட் ஒப்பந்தத்தின் காரணமாக தனக்கு தேசத்திலும், காங்கிரசிலும், குடும்பத்திலும் அவப்பெயர் வந்து விடுமோ என இறுதி நாளில் சாஸ்திரி கலங்கியதையும், அதன் காரணமாகவே மாரடைப்பில் இருந்தததையும் கோடிட்டுக்காட்டுகிறது. பின்னாளில் இம்மரணமே ஒரு சதிவேலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்ததும் வருகிறது.

இந்திரா மற்றும் எமர்ஜென்சி:

இந்தப்புத்தகத்தின் மிகப்பெரிய சுவாரசியம் இந்திராகாந்தி பகுதிகள்தான். காமராஜரின் ஆதரவில் பதவிக்கு வருவதும், பதவிக்கு வந்த நாளிலிருந்து சர்வாதிகாரப்போக்கை கடைபிடிப்பதும், சிண்டிகேட் மெம்பர்களை மதிக்காமல் நடப்பதும், தேவையில்லாத பொருளாதாரச்சீர்திருத்தங்கள் செய்து விலைவாசியை ஏற்றுவதும், ஒன் வுமன் ஷோவாக ஆட்சி நடத்துவதும், மூத்த தலைவர்களின் சொல் பேச்சு கேட்காமல் நடப்பதும் (காங்கிரஸ் நிறுத்திய குடியரசுத்தலைவர் வேட்பாளரையே தோற்கடிக்க வி வி கிரியை சுயேச்சையாக நிப்பாட்டுகிறார்) என சமகாலத்தின் ஏகப்பட்ட சுவடுகளைக்காண முடிகிறது. எமர்ஜென்சி கால சித்திரங்கள் அவசியம் வாசித்து அறிய வேண்டியன.

துணைக்கண்ட சம்பவங்கள்:

இந்தப்பகுதியில்

– பாகிஸ்தான் அணுகுண்டின் தந்தையான ஐ க்யூ கான் அணுகுண்டு தயாரிப்பு பற்றிய செய்தியைச்சொன்ன அவரின் முதல் பேட்டி
– வங்க தேச யுத்தம், அதில் அமெரிக்காவின் பங்கு
– புட்டோவின் தூக்கு
– ஜெயவர்தனே – விடுதலைப்புலிகள் மோதல் பற்றிய கட்டுரை
– லாகூருக்கு வாகா எல்லை வழியிலான பேருந்துப்பயணம் – வாஜ்பாய் பேட்டி

ஆகியவை பற்றிய கட்டுரைகள் உள்ளன.

ஒரு பெரிய வரலாற்றுப்புத்தகத்தின் சிறிய முக்கியமான பகுதிகள் அடங்கிய குறுகிய வடிவம் போல இந்தப்புத்தகம் இருந்தது. மிக மிக சுவாரசியமானதும் கூட

அமேசானில் வாங்க

சுகந்தமாலினி

கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பதுபோல், உன்னோடு வாழ்ந்திருக்க சாமி சொன்னதய்யா

என்ற பாடல் வரிகள் அதிகாலையிலேயே மனதின் அடியாழத்திலிருந்து மேலெழுந்து வந்து அழைத்தபடியே இருக்கின்றன.

“இனம்புரியாத ஆழ்மனக்கிறுக்கு இந்தப்பாட்டு மேல எனக்கு, பவதாவோட குரல் இந்தப்பாடலுக்குள்ள அவ்ளோ பாந்தமா சேர்ந்து ஒலிக்கும். இளையராஜாவே பெண் குரல்ல பாடினதோன்னு சமயத்துல நினைச்சுக்குவேன் “

வாக்மேனின் ஒரு முனையை என் காதிலும், மற்றொன்றை அவன் காதிலும் வைத்துக்கொண்டு சந்த்ரு பேசிய இந்த 13 வருட பழைய உரையாடலை இரண்டு நிமிடங்கள் முன்புதான் கேட்டது போல் இருக்கிறது. அப்போது கோர்த்துக்கொண்டிருந்த அவன் கரங்களில் வெம்மையை  இப்போது மீண்டும் உணர்ந்தேன்.  இத்தனை வருடங்கள் கழித்து அவனை சந்திக்கப்போகிறேன் என்ற உணர்வு எங்கிருந்தோ மேலெழுந்து வந்து என்னை அளவில்லா உற்சாகத்தில் தள்ளியது.

கூகுளில் தேடி “ஒரு சின்ன மணிக்குயிலு” பாடலை என் பாத்ரூம் ஷவர் எம்பி3 யில் இணைத்தேன். நீரோடு இசையும் வார்த்தைகளும் பின்னிப்பின்னி என்னை நனைத்தன – சந்த்ருவின் பழைய நினைவுகளும்.

*

ப்ராட்கேஜ் வராத மில்லினியப்புதுவருடங்கள் அவை.  மீட்டர் கேஜ் மின்சார ரயில்கள் மட்டும் சென்னையின் தண்டவாளங்களை இணைத்துக்கொண்டிருந்த காலம் அது.  நெரிசலைத்தவிர்க்கும்பொருட்டு தினமும் காலையில் 9:15 மணிக்கு பல்லாவரத்திலிருந்து புறப்படும் பல்லாவரம் ரிட்டர்னில்தான் என் அலுவலகத்திற்கான பயணம் துவங்கும். அங்குதான் முதன்முறையாக சந்த்ருவை சந்தித்தேன்.  

முதலில் அவன் கையில் வைத்திருந்த அந்த பெரிய பச்சை நிற புத்தக அட்டையை பார்ப்பதுதான் என்  நோக்கமாக இருந்தது. முன்னும் பின்னுமாகத் திரும்பி அந்த நூலின் பெயரை வாசிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன். கோடம்பாக்கம் ஸ்டேஷன் வந்து இறங்கப்போகும் தருவாயில் புத்தகத்தை என் கையில் கொடுக்கும் பாவனையில்

“இது ’காடு’, ஜெயமோகனோட புது நாவல்”

என்றான். இரண்டு நாள் ஷேவ் செய்யாத இளந்தாடி,  படிய வாரிய தலை, சம்பந்தமேயில்லாத நிறத்தில் சட்டையும், பேண்ட்டும். இப்படி எண்ணற்ற பெண்ணிடம் தோற்கும் பாவனைகள் இருந்தாலும், அந்தக்கண்களும், கள்ளமில்லா குறுஞ்சிரிப்பும் அவன் கேரக்டரை பறைசாற்றும் அற்புதக்குறியீடுகள். நேரே கண்களின் ஆழத்தை நோக்கிப்பேசுவான்.

“ஓ, நன்றிங்க, ரொம்ப நேரமா அந்த அட்டை வாசகத்தை  படிக்க ட்ரை பண்ணி தோத்துப்போயிருந்தேன். எப்படி இருக்கு நாவல்.”

அடுத்த ஐந்தாவது நாளில் நாங்களிருவரும் காடு புத்தகத்தைப் பற்றி உரையாடலில் தொடங்கி நண்பர்களாகினோம். அன்று தொடங்கி எங்கள் காலைப்பொழுதுகள் உற்சாகம் கொப்பளிக்கத்தொடங்கின.  பல்லாவரம்  தொடங்கி கோடம்பாக்கம் வரையிலும் ரயில், பிறகு ரயில் நிலையத்திலிருந்து இறங்கி, முரசொலி அலுவலகம் வழியாக மஹாலிங்கபுரம் வரையிலும் எங்கள் நட்பும் உரையாடலும் தொடர்ந்தது. 

”ஏன் மெட்ராஸ்ல உள்ள பெரிய லேண்ட்மார்க்கெல்லாம் சிவப்பாவே இருக்குன்னு யோசிச்சிருக்கியா?”

“அவ்ளோல்லாம் கஷ்டப்பட்டு ஏன் யோசிக்கணும், வேணும்னா சன்னா சமோசா எங்க சிறப்பா இருக்கும்னு கேட்டா உடனே சொல்லிடுவேன்”

”வாஸ்தவம்தான்” குறுஞ்சிரிப்போடு சொன்னான்

”ஆனா சொன்னா கேட்டுப்பேன், உங்களுக்குத்தெரிஞ்சா சொல்லலாம்”

”பிரிட்டிஷ்காரங்க மெட்ராஸை கட்டுமானம் பண்றப்போ ஒரே ஒரு மோனோபோலி என்ஜினியரிங் காண்ட்ராக்டர்தான், அவர் பேர் நம்பெருமாள் செட்டி, அவர்கிட்ட நிறைய செங்கல் சூளைகளும் இருந்ததாம். அதுனால சிக்கனமா எல்லா கட்டிடத்துக்கும் செவப்பு கலர்லயே அமைச்சுட்டாருன்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு” என்றான். இப்படியெல்லாம் யோசிக்க வேண்டும் என்றுகூட எனக்குத்தோன்றியதில்லை. அது தொடங்கி வித விதமாக சென்னையின் முக்கியமான வரலாற்றுச்சிறப்புமிக்க இடங்களுக்கெல்லாம் பேருந்திலும், ரயிலிலுமாக சுற்ற ஆரம்பித்திருந்தோம்.

24 வயது இளைஞனுக்கான ஆதார கெட்டபழக்கங்களோ, சினிமா டிராமா இத்தியாதிகளோ இல்லாது வரலாறு, கவிதை, இலக்கியம், பயணம் என ஒரு தனிப்பிரதியாக இருந்தான். பேசும்போதெல்லாம் அருவியாகக் கொட்டும் தகவல்களுக்காகவே அவனுடன் இருப்பதை எப்போதும் விரும்பினேன். சில மாதங்களிலேயே எங்கள் நட்பு மிகப்பலமாக வளர்ந்தது. அது காதலாகிக் கனிந்த அந்த நன்னாளும் வந்தது.

”நாளைக்கு திருநீர்மலைக்கு போலாமா” என்றான் ஒரு நாள். பொதுவாக அவன் கோவில்களுக்குப்போவதில் ஆர்வம் காட்டுவதில்லை. போனாலும், அதன் வரலாறு பற்றிப்பேசுவானே ஒழிய, பக்தி கிடையவே கிடையாது. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

உடனேயே “போலாமே” என்றேன்.

பம்மலிலேயே இருந்தும், அவ்வளவு அருகில் இருக்கும் இந்த அற்புதமான கோவிலை எப்படித் தவறவிட்டேன் என்றே தெரியவில்லை. திவ்ய தரிசனமும் அவன் அருகாமையும் உள்ளத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக்கொண்டிருந்தது. அந்த கனிவான தருணத்தில்தான் அவன் அந்தப்பரிசை வழங்கினான்.

“உன் பேருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?”

“சுகந்தின்னா வாசமானவள்னு அர்த்தம், எவ்ளோ வியர்வை வாசமா இருக்கேன் பாத்தியா?”

“அவ்ளோதானா?”

“அப்புறம்”

”எனக்கு உன் பேர்லயே இருக்குற வண்ணம்தான் மனதுக்கு நெருக்கமான வண்ணம். சுகந்தின்னா லாவண்டர்னு ஒரு அர்த்தம் இருக்கு. ஏனோ பிறந்ததுலேர்ந்தே கத்திரிப்பூ வண்ணத்துமேல எனக்கு ஒரு இனம்புரியாத ஈர்ப்பு, என் வாழ்க்கைல எல்லா முக்கிய விஷயங்களின்போதும் அந்த வண்ணம் இயைஞ்சே வந்திருக்கு. உன் பேரைத் தெரிஞ்சுகிட்ட அந்த நிமிடத்துலேர்ந்து என் மனசுல நான் என் டெஸ்டினியைத் தேடிக்கண்டு புடிச்சுட்டேனோன்னு தோணுச்சு. அதான் உங்கிட்டயும் என் விருப்பத்தை சொல்லலாம்னு இங்க கூட்டிட்டு வந்தேன்.”

அவன் கண்கள் ஆழமானவை, கனிந்த பார்வை கொண்டு இதயம் துளைப்பவை, எப்போதுமே அன்று அது இரண்டு மடங்காயிருந்தது. சிரித்தேன், மனம் துள்ளிக்குதித்தது, ஒரு பறவையைப்போல பறக்க வேண்டும் போல இருந்தது. உள்ளே ஓடிப்போய் நீர்வண்ணப்பெருமாளுக்கு கண்ணீர் மல்க நன்றி சொல்ல வேண்டும் போல இருந்தது. சிரித்தேன், அவன் தோள் பற்றி அழுதேன். ஒரு கணம், ஒரே கணம்தான்.

“வா இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்.”

”லூஸ், பேசாம உக்காரு”

“இல்லை, எனக்கு மனசு நெறஞ்சு இருக்கு, இன்னிக்கே பண்ணிப்போம்” என்றேன்

இப்போது நினைத்துப்பார்த்தால் அசட்டுத்தனமாகதான் இருக்கிறது. ஆனால் அப்போதே அந்த உடனடி சந்தோஷத்தைக்கொண்டாடும் பொருட்டு பெரிய முட்டாள்தனத்தை செய்தேன், மலையிறங்கி, மாலைகளும், பூக்களும் வாங்கி, மஞ்சளில் கோர்த்த கயிறு வாங்கி ஆவணி மாதம் , சனிக்கிழமை, சதுர்த்தி நாளில் , யாருக்கும் தெரியாமல் விஷ்வக்சேனர் சன்னிதி முன்னால் நின்று கொண்டு எந்த மந்திரங்களும் ஒலிக்காமல், ஓங்கி ஒலித்த என் பிடிவாதக்குரலுக்கு செவிசாய்த்து எனக்கு சந்த்ரு தாலி கட்டினான்.

”எப்போ முடியுமோ எப்போ வீட்ல பேசி, மண்டபத்துல, மந்திரங்கள் முழங்க, கல்யாணம் பண்ணிக்கலாம். ”

என்று சமாதானப்படுத்திக்கொண்டோம்.

ஆனால் அது நடக்கவே நடக்காது என்ற நிலையை அடுத்த ஒரு வருடத்தில் எட்டினோம். ஜாதி, வருமானம், வேலை என பல காரணங்களைக்காட்டி சந்துருவை எங்கள் வீடு விரட்டிக்கொண்டே இருந்தது. தளராமல் போராடினோம் மாதக்கணக்கில். ஆனால் ஒரு கட்டத்தில் முதலில் தளர்ந்தது நாந்தான். வாழ்க்கை என்ற பெரிய உலகத்தில் என்னையும், சந்துருவையும் ஒரு எறும்பு போல உணர ஆரம்பித்தேன். அவனைத் திருமணம் செய்தால் வாழ்க்கை முழுதும் போராட வேண்டி வருமோ என்ற ஆழ்ந்த விஷ முள் எப்படியோ என் மனதிற்குள் விதை விட்டது.

எந்த பல்லாவரம் ரிட்டர்னில் எங்கள் காதல் தொடங்கியதோ, அங்கேயே அவனுக்கு விடை கொடுத்துவிட்டு வந்தேன். பெரிய ஆர்ப்பாட்டம் செய்வானோ, என்னைத்திட்டுவானோ, ஏமாற்றினாயே என்று புழுதி வாறித்தூற்றுவானோ என்றெல்லாம் எண்ணிப்போன எனக்கு, அவனின் அமைதி மிகுந்த அச்சமூட்டியது. திக்கித்திணறி வார்த்தைகள் கோர்த்து, நான் சொன்னதை இரண்டாவது நொடியில் உள்வாங்கிங்கொண்டு

“நீ போ சுகந்தா, உனக்கு அதுதான் சரி”

என்று கூறிவிட்டு, மீனம்பாக்கம் ஸ்டேஷனில் இறங்கிச்சென்றுவிட்டான்.

அதுதான் அவனைக்கடைசியாகப்பார்ப்பது என்று நான் உணரவேயில்லை. பின்னர் சமாதனப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தேனா அல்லது விட்டது சனி என்று அந்த தருணத்தில் நினைத்தேனா என்று தெரியவில்லை.

ஆனால் அதன்பிறகு அவனைக்காணவேயில்லை. எனக்குத்தெரிந்த அவன் ஒரே அலுவலக எண்ணில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் இல்லை என்றார்கள். வேலையை விட்டுப்போய் விட்டதாகச்சொல்லி விட்டார்கள். பல்லாவரம் ரிட்டர்ன் வரும்போதெல்லாம் எல்லா பெட்டிகளிலும் ஓடிப்போய்த்தேடிப்பார்த்திருக்கிறேன்.

அப்போது போனவன்தான், அதன் பிறகு அவனைப்பார்க்கவேயில்லை, அவனைப்பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை.

வருடங்கள் கடந்து, வாழ்க்கை வளர்ந்து நெடுந்தூரம் வந்தாலும், சின்னஞ்சிறிய பிரச்சனைகளின்போது கூட, நான் அவனுக்குச்செய்த ஊழின் பெருவலிதான் இது என்றே உள்மனது அறற்றாத நாளில்லை.

*

13 வருடங்கள் கழித்து இரண்டு நாட்கள் முன்னால் வந்த அந்த தொலைபேசி அழைப்பில் அவன் குரலைக்கேட்டவுடன், செய்துகொண்டிருந்த அத்தனை வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு வெளியே ஓடிவந்தேன்.

கம்மிய குரலில்

“எப்படி இருக்க சந்த்ரு, எங்க இருக்க” என்றேன்

அதற்கு பதிலேதும் இல்லை

“உன்னப்பாக்கணும், சனிக்கிழமை திருநீர்மலை வர்றியா?” இரண்டே வார்த்தைகள்தான். தொடர்பு அறுந்தது

அந்த அழைப்பே என் கற்பனைதானோ என்று நினைத்தேன். இல்லை, இன்கமிங் எண் ஒன்று இருந்தது, 27 நொடிகள் பேசிய லாக் இருக்கிறது. அந்த எண்ணுக்கு இரண்டு நாட்களில் 100 தடவை அழைத்திருப்பேன். ஸ்விட்ச் ஆப் என்கிறது.

ஆயினும் என்ன, சந்த்ரு பேசினான், திரு நீர்மலைக்கு வருகிறான் போதாது. இதோ உற்சாகமாக கிளம்பிவிட்டேன்.

என்னவெல்லாம் பேசலாம், 13 வருடங்கள் எவ்வளவு தூரமானது. பல்லாவரம் ரிட்டன் இப்போது கிடையாது, மீட்டர் கேஜே கிடையாது, பிராட் கேஜில் நெரிசலில் நின்று கொண்டு போன காலங்கள் மலையேறிப்போயின, வேலை மாறியது, வாழ்க்கை மாறியது, மாருதி சென்னில் ஆரம்பித்து மூன்றாவது கார் மாற்றி இப்போது பலேனோவிற்கு வந்திருக்கிறேன்.

இரண்டு முறை ஆப் ஷோருக்காக அமெரிக்கா போய் வந்திருக்கிறேன், என் ஆங்கிலம் மேம்பட்டிருக்கிறது, ஓ எம் ஆர் சாலையில் பெரிய ஐ டி கம்பெனியின் நிர்வாகம் என் கையில் இருக்கிறது. லெபனானுக்கு போய் கலீல் கிப்ரான் வீட்டைப்பார்த்துவிட்டு வந்து அவன் முதலில் பரிசளித்த கிப்ரான் புத்தகத்தை படித்தது, அவனுக்குப்பிடிக்குமே என்று மாதா மாதம் லாவண்டர் கலரில் உடை வாங்கியது…இன்னும் எத்தனை இருக்கிறது.

ஆனால், சுகந்தமாலினி ராமகிருஷ்ணனாக இருந்த நான் சுகந்தமாலினி ரவிச்சந்திரனாக மாறி இல்லறம் கசந்து, விவாகரத்தாகி மீண்டும் சுகந்தமாலினி ராமகிருஷ்ணனாகவே மாறிவிட்டதை, சுகந்தமாலினி சந்திரசேகரனிடம் சொல்லக்கூடாது, சொல்லவே கூடாது, எல்லா காயங்களை விடவும் இது அவனுக்கு வலிக்கலாம்.

லாவண்டர் வண்ண சுடிதார், மீரா ஷீகாய் போட்டுக்குளிந்த கூந்தல், முல்லைப்பூ, கண்ணுக்கு மை. கைக்கடிகாரத்தை, கைக்கு உள்பக்கமாகக் கட்டி, மிகக்கவனமாக பெர்ஃயூம் தவிர்த்தேன். காரை ரிவர்ஸ் எடுத்து வீட்டுக்கு வெளியில் வந்ததும் ஏதோ ஞாபகம் வர, உள் சென்று துப்பட்டா ஒன்றை எடுத்துப்போர்த்தி தோள்களின் இரண்டு புறமும் பின் போட்டுக்கொண்டு எனக்கு நானே சிரித்துக்கொண்டேன்.

இனி 55A க்கென நிற்க வேண்டாம், நம் காரிலேயே போகலாமென மகிழ்வாக சொல்லலாம். இல்லை, அவனுக்கும் கார் இருக்கும். அவன் காரில் நான் போகலாம். ஏதேதோ எண்ணங்கள் மோத, சற்று வேகமாகவே காரைச்செலுத்தினேன்.

அடிவாரத்தில் எந்த காரையும் காணவில்லை. பார்க் செய்து கீழ் சன்னிதி முழுக்க ஓட்டமும் நடையுமாகச்சுற்றினேன். வந்தது வீணா?, ஒரு வேளை அது ப்ரான்க் காலாக இருந்ததால், உற்சாகம் வடிந்ததுபோலத்தான் இருந்தது. இல்லை நிச்சயம் இல்லை, அது சந்துருவின் குரல்தான், மலை மேல் வேகு வேகுவென ஏறினேன், நுழைவு மண்டபத்திற்கு சற்று அருகிலேயே அவனைப்பார்த்துவிட்டேன்.

அப்படியேதான் இருக்கிறான், சம்பந்தமேயில்லாத நிறத்தில் சட்டையும், பேண்ட்டும். முழுக்கையை மடித்துவிடும் அதே ஸ்டைல்,  தலை கலைந்திருக்கிறது. கையில் கடிகாரம் இல்லை. எங்கோ வெறித்த பார்வை. அப்போதே அவனைக்கட்டிக்கொள்ளும் பாவனையில் அருகில் சென்றேன். அதை தவிர்க்கும் விதமாக சற்றே நகர்ந்து என்னைப்பார்த்தான். அதே பார்வை, ஆழமாக மனதைத்துளைக்கும் பார்வை, ஆனால், ஆனால் அவன் கண்கள், கண்களில் என்ன அது……?

”ஆறாம் நூற்றாண்டுல திருமங்கையாழ்வார் இங்க வந்தப்ப, மலைக்கு கீழ வெள்ளம் வந்து சூழ்ந்துகிச்சாம், அப்புறம் நீர்வண்ணப்பெருமாள் வந்து ஏதோ மதகைத் திறந்துவிட்டு ஊரையும், ஆழ்வாரையும் காப்பாத்தினார்னு சொல்றாங்க” என்றான்.

எப்போதும் போல அந்தரத்தில் துவங்கும் உரையாடல், இவ்வளவு வருடம் கழித்தும் அவன் மாறவில்லை.

“எப்படி இருக்க சந்த்ரு?”

”பாக்குறியே அப்படியேதான்..”

என்னைப்பார்ப்பதைத் தவிர்க்கிறான், நியாயம்தான். என்னைத் தவிர்க்க அவனுக்கு எல்லா நியாயங்களும் இருக்கிறது.

“ஆனா திருமங்கையாழ்வார் பாத்ததுக்கப்புறம் அப்படி ஒரு வெள்ளத்தை சென்னை போன வருஷம்தான் பார்த்திருக்கும் இல்ல, சென்னையே மூழ்கிடுச்சாமே”

”நீ அப்போ எங்க இருந்த, சென்னைல இல்லையா சந்த்ரு?”

“உன்னை தேடிகிட்டே இருந்தேன், எங்கெங்கியோ?”

“நானும்தான், எப்படித்தேடினேன் தெரியுமா”

”அன்னைக்கு மீனம்பாக்கம் ஸ்டேஷன்ல நான் இறங்கிப்போனப்புறம் நீ பத்திரமா நேரத்துக்கு ஆபீஸ் போயிட்டியா சுகந்தா?”

இது என்ன கேள்வி, கேட்பதற்கு வேறொன்றுமா இல்லை, புரியாமல் பார்த்தேன். முறுவலுடன் திரும்பினான், ஆ, அந்தக்கண்கள்.

“எனக்கு 13 வருஷமா அந்த ஒரே கவலைதான், ரயில் பாதிலயே நின்னா, உனக்கு ஆபீஸ்க்கு லேட்டாகிடுமேன்னு”

சட்டென எதுவும் புரியவில்லை. அன்று ஏனோ ரயில் மீனம்பாக்கத்திற்கு சற்றுத்தள்ளி நின்று விட்டது, இருந்த குழப்பத்தில், அழுகையில் எனக்கு எதுவும் புரியவில்லை, எல்லா பயணிகளும் நடந்தே பழ்வந்தாங்கல் ரயில் நிலையத்திற்கு சென்று சற்று நேரம் கழித்து வேறு ரயில் பிடித்துப்போனோம்.

இதுவே இப்போதுதான் நினைவுக்கு வருகிறது.

இப்போது என்னை நேருக்கு நேராகப்பார்த்தான், அவன் பார்வை என்னை உலுக்கியது.

“அன்னைக்கு ஏன் ரயில் பாதில நின்னுச்சுன்னு இன்னும் தெரியலையா?”

நான் அவன் கண்களைப்பார்த்து கலவரப்பட்டுப்போனேன் இப்போது, அது சந்துருவின் கண்களல்ல, அவற்றில் இவ்வளவு குரூரம் இராது. நிச்சயமாக.

”அந்த பல்லாவரம் ரிட்டர்ந்தான் என் ரத்தத்தையும், சதையையும் மொத்தமா கொண்டு போச்சு சுகந்தா, ஆன்மா மட்டும் உன்னைத்தேடி அலைஞ்சுது”

சட்டென மயிர்க்கூர்ச்செறிந்தது, தலை சுற்றியது. அவன் உயரம் அதிகரித்தது போல இருந்தது, கால்களைப் பார்க்க எண்ணித்தோற்றேன், தோளில் அழுந்திய அவன் கை என் எடை மொத்தத்தையும் தாங்கியது போலிருந்தது,

“வா, திரும்பி இந்த திரு நீர்மலையிலிருந்தே புது வாழ்வு தொடங்கலாம், சுகந்தா”

என்று சொன்னபடி மலையிலிருந்து தள்ளிவிட்டான். லாவண்டர் நிற மலர்கள் என்னை வரவேற்றன, துப்பட்டா இறகுகளானது, முல்லை மலர் வாசம் உலகெங்கும் நிரம்பியது, தூரத்தில் எங்கேயோ பவதாவின் குரல் காற்றில் தேய்ந்து ஆன்மாவை நிரப்பிக்கொண்டிருந்தது.

”காற்றாக நான் கலந்து மூச்சாக உன் நினைவில் உன்னோடு வாழ்ந்திருக்க வாழ்த்து சொன்னதய்யா”!

ஒரு பெயர் மாற்றத்தின் கதை அல்லது Story of a ‘U’

ஆதெள கீர்த்தனாரம்பத்திலே ஜீலை 2009 ல் எங்களுக்கு மகன் பிறந்து அவனுக்கு அர்ஜீன் என்று நாமகரணம் சூட்டுவோம் என்று முடிவெடுத்த நேரம் ராகுகாலமா என்று நாங்கள் கவனிக்கவில்லை.

change

பிறந்து 20 நாட்கள் கழித்துதான் பர்த் செர்டிபிகேட் வந்த்து பெயர் தப்பாக அச்சாகியிருந்த்து. ஒரு U அதிகம். ARJUN க்கு பதிலாக AR’U’JUN.  இந்த்த் தவறை சரி செய்து பிறகு ,பாஸ்போர்ட் எடுத்து விசா எடுக்க வேண்டிய வேலைகளை செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இழுக்கும் என்பதால் இருக்கும் தவறான பர்த் செர்டிபிகேட்டைக்கொண்டே பாஸ்போர்ட் எடுப்பது என்றும் பிறகு பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றிக்கொள்வது என்றும் முடிவு செய்தோம். (எவ்வளவு தவறான முடிவு என்பது அப்போது தெரியவில்லை)

இந்தியாவில் இருக்கும் பிள்ளைக்கு பாஸ்போர்ட் எடுக்க இங்கே துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில், இன்ன பெயரில் உள்ள பிள்ளை துபாயில் ரெடிடென்ஸ் வைத்திருக்கும் என் பிள்ளைதான். அவனுக்கு பாஸ்போர்ட் தந்து உதவுங்கள் என்று ஒரு அஃபிடவிட் எடுத்து பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுக்கவேண்டும்

தூதரகம் என்னை அன்போடு வரவேற்றது. குழந்தை பிறந்திருக்கிறதா. வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வாய். பிள்ளையின் பர்த் செர்டிஃபிகேட் கொண்டு வந்தாயா. சரி. உன்னுடைய திருமண சான்றிதழ் அட்டெஸ்ட் செய்ததைக் கொண்டு வந்தாயா. சரி. ஒரு அப்ளிகேஷனை நிறைவு செய்து கொடுத்துவிட்டுப்போ என்றது முதல் சன்னல்.

வந்தாயா வா! அப்ளிகேஷன் எல்லாம் சரிதான். ஆனால் உன் பாஸ்போர்ட்டில் பெண்டாட்டியின் பெயரை சேர்த்துவிட்டு வா என்கிறது இரண்டாவது ஜன்னல். அது எதற்காக ஐயா! அதுதான் மேரேஜ் சர்டிபிகேட் இருக்கிறதே போறாதா..? ம்…அதெல்லாம் பேச்சில்லை. ரூல்ஸ் என்றால் ரூல்ஸ்தான். கிழிந்தது கீழ் அடையவளைஞ்சான் என்று எண்ணிக்கொண்டே முதலில் அதை செய்வதற்கு விண்ணப்பிக்க எத்தனித்தேன்.

உன்னுடைய மேரேஜ் செர்டிபிகேட்டை ஏனப்பா மஹாராஷ்டிரத்தில் அட்டெஸ்ட் செய்திருக்கிறாய் என்று வினவியது மூன்றாவது சன்னல். மஹாராஷ்டிரமா. அங்கே எனக்கு சச்சின் டெண்டுல்கர் தவிர வேறு யாரையுமே தெரியாதே ஐயா!. இது என்ன புது கூத்து என்று கேட்டால் , நீ அச்சு அசல் தமிழன், முதலில் உன்னுடைய மேரேஜ் சர்டிபிகேட்டை தமிழ்நாடு அட்டெஸ்டேஷன் செய்துகொண்டு வா என்றார்கள். அடப்பாவிகளா!

திருமணம் செய்து துபாய் வந்து மனைவிக்கு விசா எடுத்து இரண்டு வருடம் குடும்பம் நடத்தி குழந்தை பெற்று, அதற்கு பாஸ்போர்ட் எடுக்க வரும்போது அதற்கு எதற்காக ஐயா எனது மேரேஜ் சர்டிபிகேட்டை அட்டெஸ்ட் செய்ய வேண்டும் என்று கேட்டால். மூச். அது இந்திய அரசாங்க்கத்தின் ஆணை. டாகுமெண்டேஷன் ரொம்ப முக்கியம் அமைச்சரே என்கிறது.

முன்பு மேரேஜ் சர்டிபிகேட்டை அட்டெஸ்ட் செய்யச்சொல்லிக்கொடுத்த ஏஜெண்ட் அப்போதைய விதிகளை சற்றே வளைத்து மஹாராஷ்டிரா செக்ரெட்ரியேட்டில் இருக்கும் மாமனையோ மச்சானையோ பிடித்து அட்டெஸ்டேஷன் வாங்கியிருக்கிறான். இப்போது நான் மாட்டிக்கொண்டேன். அவனைத்திரும்பவும் பிடித்து தமிழ்நாடு அட்டெஸ்டேஷன் வாங்குடா என்றால், அதெல்லாம் ஆகுற வேலை இல்லை சார் என்கிறான். நிறைய ‘பார்மாலிடீஸ்’ ஆகுது அதுனால தமிழ்நாடு மட்டும் பண்றதில்லை என்றான்.

கையைப் பிசைந்து கொண்டிருந்த நேரத்தில் வந்தான் நம் அத்யஞ்சய சேரநாட்டுப் பங்காளி. ”சாரே, 700 திர்ஹாம்ஸ்ஸெங்கில் செய்யாம் ” என்றான். அது எப்படிங்க அவன் முடியாதுங்குறானே என்றதற்கு சொன்னானே ஒரு பதில், ‘தமிழ்நாடு செக்ரெட்ரியேட் முழுவனும் கேரளாலாபி சாரே, கொள்ளாம்’.

கொண்டான். இரண்டே வாரங்களில் அபிடவிட்டை தமிழ்நாட்டு அட்டெஸ்டேஷனோடு கொண்டுவந்து இறக்கினான் என் சேர நாட்டு செல்லக்கிளி. அதனை வைத்து அஃபிடவிட் எடுத்து அனுப்பிவைத்தேன்

பிறகு தட்கல் பாஸ்போர்ட் அப்ளை செய்து அது வந்து சேர்ந்து, அதை இங்கு பெற்று, விசா எடுத்து ஒரு வழியாக பையனை ஷார்ஜா பார்க்க வைத்தாயிற்று. ஆச்சா. அவ்வளவுதானே கதை. இல்லையே. முக்கிய பிரச்சனை இன்னும் தீரவில்லையே?

இப்பொழுது அந்த பெயரில் இருக்கும் எக்ஸ்ட்ரா ‘u’ வை எடுக்க வேண்டுமே. எடுத்துவிடலாமே. எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமோ என்று மீண்டும் எம்பஸி, மீண்டும் அதே முதல் ஜன்னல். பேர் மாற்றணுமா? பேஷா பண்ணலாமே! முதல்ல உன்னோட பாஸ்போர்ட், பையனோட பாஸ்போர்ட், போட்டோ எல்லாம் கொண்டு வா. ஒரு அபிடவிட் (affidavit) தரோம். ஓக்கே டன்.

அபிடவிட்டை இரண்டாவது ஜன்னலுக்கு கொண்டு போனேன். சரி. இந்த அபிடவிட் சரிதான். இன்னும் ஒரே ஒரு ஒரு சின்ன விளையாட்டையும் முடித்து விட்டால் கோப்பை உனக்குதான். முதலில் உன் மகனுக்கு பெயர் மாற்றம் செய்கிறேன் என்று இந்தியாவிலும், அமீரகத்திலும் ஒரு நாளிதழில் விளம்பரம் கொடுத்துவிடு அவ்வளவுதான். உடனே மாற்றிவிடலாம் என்றார்கள்.

செய்துவிடலாமெ என்று உடனே அங்கே ‘The hindu’ வில் ஒன்றும், இங்கே ‘Gulf News’ ல் ஒன்றுமாக இரண்டு விளம்பரங்கள் கொடுத்தாகிவிட்ட்து. எல்லாம் தயார். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட்து. ஐந்தே நாட்களில் பெயர் மாற்றம் செய்து பாஸ்போர்ட் வந்த்து. ARJUN SIVARAMAN. மிகச்சரி. ஆஹா இதற்குத்தானே ஆசைப்பாட்டாய் சிவராமா, புளகாங்கிதம் தாங்கவில்லை.

இன்னும் ஒரு சின்ன வேலை பாக்கி. துபாய் விசாவில் இந்த பெயர் திருத்தம் செய்யவேண்டும். கண்டிப்பாக எளிய வேலைதான். அபிடவிட் வேண்டாம், பேப்பர்கள் வேண்டாம், வரிசை வேண்டாம், ஜன்னலுக்கு ஜன்னல் தாவ வேண்டாம். ஒரு எளிய விண்ணப்பம் போதும். மிகவும் நல்லவர்கள். சட்டென செய்வார்கள்.

அதிகாலையில் இமிக்ரேஷன் சென்று விண்ணப்பம் கொடுத்த இரண்டு வினாடிகளில் புதிய விசா பேப்பரை கிழித்து பாஸ்போர்ட்டில் ஒட்டி கையில் கொடுத்தார்கள். ARJUN… போதும். இனிமேல் இதையெல்லாம் பரிசோதிக்க வேண்டிய அவசியமே இல்லை. மகிழ்ச்சி. மகிழ்ச்சி.

வெளியில் வந்து கிடைத்த டாக்ஸியைப் பிடித்து, வேகமாகப்போகச்சொல்லி அரக்கப்பரக்க அழைப்புமணியடைத்து, மனைவியின் கையில் கொடுத்தேன்.  ‘Its done’. மலர்ந்த முகமாக வாங்கிப்பார்த்துக்கொண்டே…….இருங்கள் ஏன் அவள் முகம் மாறுகிறது, அதான் பெயர் சரிசெய்தாகிவிட்ட்தே….இல்லை ஏதோ குழப்பம், அவளாக சொல்வதற்கு முன்பாக நானே பார்த்துவிடுகிறேன்………..

ARJUN……. சரிதானே,,,,ஆ இதென்ன. எனக்கு லேசாக மயக்கம் வந்தது.  அந்த பிங்க் நிற விசா தாளில் அடிக்கப்பட்டிருந்த முழுப்பெயர் – ARJUN SIVARAM’U’N

 

மதராசபட்டினம் (2010)

’கிரீடம்’ என்கிற லோகித்தாஸின் அருமையான திரைக்கதையை சொதப்பி தன் திரைவாழ்வை துவக்கிய இயக்குனர் விஜய் மதராசபட்டினம் மூலம் புனர்ஜென்மம் பெற்றிருக்கிறார்.

சுதந்திரம் பெறாத இந்தியாவில் ஒரு ஆங்கில கவர்னரின் பெண்ணுக்கும், தமிழ் வண்ணான் பையனுக்கும் வரும் காதல் சுதந்திரம் பெற்ற பிறகு என்ன ஆனது என்பதுதான் மதராசபட்டினத்தின் அடிப்படை முடிச்சு. மல்யுத்தப்போட்டியில் வெற்றிபெற்றால் வண்ணாரப்பேட்டை நிலங்கள் திருப்பித்தரப்படும் என்று ஒரு லகான், வெள்ளைக்கார கமிஷனருக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணை அடைய வரும் அடிமைப்பையனின் டைட்டானிக் என்று இரண்டு பெரிய படங்களின் சாயல்களை எளிதில் நினைவுபடுத்தக்கூடிய கதைதான் என்றாலும் அதனையும் தாண்டி பிரத்தியேகக் காட்சிகளின் மூலமாக இதனை தனிமைப்படுத்தி காட்டியிருப்பது அருமை. தெளிவான திரைக்கதைதான் என்றாலும் இந்த நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் பயணப்படும் திரைக்கதை உத்தி எனக்கு ஏனோ பெரிய உறுத்தலாகவே இருந்தது.

இந்த திரைப்படத்திற்கு ஏன் போகக்கூடாது என்று யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்தது ஆர்யாவின் குரல்தான். அந்த சோதனை மிக அழகாக தவிர்க்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பெரும்பாலும் வசனமே கொடுக்கப்படவில்லை. பேசும் இடங்களிலும் ஒரே வாக்கியம் அல்லது வார்த்தைதான். அநேகமாக அவரது முதல் வசனமே முக்கால் மணி நேரம் கழித்துதான் வருகிறது என்று நினைவு. இந்த உத்தி ஒரு பெரிய வாழ்க்கைக்காவலன் (லைஃப் சேவர்).  இதற்கு பயந்தே இன்னும் திரைப்படம் பார்க்கப்போகாமல் தவிர்த்த நல்ல உள்ளங்கள் தைரியமாகப்போகலாம். கவலைப்படேல்.

எங்கும் உருத்தாத பழைய மதராசின் காட்சிகள் அருமை. அங்கங்கே இருக்கும் மிகச்சிறிய லோகேஷன் லாஜிக் உதறல்களையெல்லாம் தவிர்த்துவிடுதல் நலம். நீரவ் ஷாவின் கேமிரா மிகச்சிறந்த ஒன்று. செண்ட்ரல் முதலில் 3டி மாடலாக காட்டப்பட்டது போலவே இருந்தது. கடைசிக்காட்சிகளில்தான் செட் போடப்பட்டிருப்பதே தெரியவருகிறது. நல்ல காட்சிப்படுத்துதல்.

ஜி.வி.பிரகாஷின் அனைத்து பாடல்களுமே நன்றாக இருக்கின்றன. ’ஆருயிரே’ சைந்தவியும், ‘பூக்கள் பூக்கள் தருணம்’ ரூப் குமார் ரத்தோடும் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவனை விட இது பல மடங்கு பரவாயில்லை என்றாலும் ’ஜிவிபி’ யின் பின்னணி இசை இன்னும் நல்ல தரத்திற்கு வரவில்லை. சுமாரகத்தான் இருந்தது. பெரும்பாலான நேரங்களில் அடக்கி வாசித்திருப்பதே அழகுதான்.

நல்ல படம். பெரிய திரையில் பார்க்க பல அழகான காட்சிகள் இருக்கின்றன. Very Decent worth a watch

மனதில் நின்ற சிறுகதைகள் 2009

இந்த சென்ற வருடத்தில் நான் படித்து மனதில் நிற்கும் சிறுகதைகளை வகைப்படுத்தியிருக்கிறேன். எல்லா வார இதழ், மாத இதழ்களையும் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டுவதில்லை. ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் வார இதழ்களில் வெளியாகும் எல்லா சிறுகதைகளை படிக்கிறேன். வார்த்தை,உயிர்மை,உயிர் எழுத்து ஆகிய இதழ்களின் தலா 3 பிரதிகளும் காலச்சுவடு கதைகள் அவ்வப்போதும் இந்த சென்ற வருடத்தில் எனக்கு படிக்கக் கிடைத்தன. இதைத் தவிர்த்து இணையத்தில் வெளியிடப்படும் சிறுகதைகளில் சிலவும், புதிய கதைத் தளமாகிய http://www.tamilstory.in லும் க்தைகள் படித்திருக்கிறேன். இவற்றில் எனக்கு பிடித்த கதைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் இந்த பட்டியல் என் மனதைவிட்டு அகலாதன என்று ஸ்பெஷல் டைட்டில் வேண்டுமானால் கொடுத்துக்கொள்ளலாம். எழுத்தாளர் பெயர் சொன்னவுடனேயே இந்தக் கதை ஞாபகம் வருகிறது என்று சொல்வோமில்லையா அந்த வகையறாவாகக்கூட இருக்கலாம்.

1. நேற்று நடந்தது – ராஜீமுருகன்

ஆனந்தவிகடனில் 2009 புத்தகக்கண்காட்சியின்போதோ அல்லது அது முடிந்துவிட்ட மறு வாரமோ வந்த சிறுகதை. தமன்னாவுக்கு சிலை வைக்க பிளான் போடும் ஒரு பின்நவீனத்துவர், ரேஷன் என்கிற வார்த்தையை சொன்னால் அவன் குரல்வளையை நெறிப்போம் எனும் ஒரு ஜீன்ஸ் போட்ட தொங்குமீசை எழுத்தாளர், ”நண்பா! லெக்பீஸ் பிளாக்ஸ்பாட் களம் வந்து பாருங்க. இருக் கிறதுல எக்கச்சக்க பின்னூட்டம் நமக்குத்தான். என்கிற ஒரு வலைத்தள் சுனாமி ‘அர்த்த ஜாம காம ரூப அதிவதினியின் இருள்’ என்ற தலைப்பை சன் பிக்சர்சுக்கு சிபாரிசிக்கும் தோழர் என கிறுகிறுவென சுத்த வைக்கும் பலபட்டறைக்கதை. ஆனால் படித்துமுடித்து கீழே வைத்த பிறகு நான் என்ன படித்தோம் என்று குழப்பம் வர மீண்டும் எடுத்து படிக்க வைக்கிற ஒரு சுவாரசியமும் இருந்தது. ராஜீ முருகனின் நடை எனக்கு மிகவும் பிடித்தது. சிறுகதைத் தொகுப்பு ஏதேனும் வெளியிட்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. இருந்தால் கண்டிப்பாக வாங்க வேண்டும்.

2. A,B,C அல்லது D -சொக்கன்

www.tamilstory.in ல் வெளிவந்திருக்கும் இந்த சிறுகதை முன்பே எழுதப்பட்டிருக்கலாம். நான் இந்த வருடம்தான் படித்தேன். ஒரு aptitude test ற்கு தன்னை தயார் செய்யாது போய் விட்ட ஒரு மாணவன் தேர்வு தொடங்கியதிலிருந்து முடியும் நேரம் வரைக்கும் என்னென்ன நினைத்துக்கொள்வான், சிந்திப்பான், பக்கத்தில் உட்கார்ந்து தேர்வு எழுதுபவனைப்பற்றிய அவனது எண்ணங்கள் என மிக சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிறது. சொக்கனின் அபுனைவு கட்டுரைகளை நான் விரும்பி படிக்கிறேன். முத்தாரத்தில் வரும் அவரது தொடரை ஒரு வாரமும் விடுவதில்லை. அவரது வலைப்பக்கத்தில் அவர் எழுதும் ஹாஸ்யம் கொப்பளிக்கும் / குட் வில் போதனைகள் சொல்லும் பதிவுகளும் என் ஆத்மார்த்தமானவை. ஆயினும் அவர் கதை எழுதுவது பற்றி எனக்கு எந்த சிலாக்கியமும் இல்லை இந்த சிறுகதை படிக்கும் வரை. நல்ல கதை. இணையத்தில் படிக்க்க் கிடைக்கிறது. http://www.tamilstory.in/?p=23

3. கிணறு – ஆபிதீன்

ஆபிதீனின் ’தினம் ஒரு பூண்டு’ எனது எப்போதும் பிடித்த சிறுகதைகளுள் ஒன்று. இதுவரை நான் படித்த சிறுகதைகளை ஒரு வரிசையில் அடுக்கினால் கண்டிப்பாக ஆபிதீனின் தினம் ஒரு பூண்டு அதில் அடங்கிவிடும். அதே நாகூர் மொழி கதைசொல்ல்ல் பாணியில் வார்த்தை இதழில் (அநேகமாக ஏப்ரல்) வெளிவந்த கிணறு எனக்கு மிகவும் பிடித்த்து.

4. யார் அது அழுவது – ஆனந்த் ராகவ்

ஆனந்த் ராகவ் என்கிற இந்த எழுத்தாளரின் சிறுகதைகள் அவ்வப்போது ஆன்ந்தவிகடனில் வருவதை பார்த்திருக்கிறேன். படித்திருக்கிறேனா என்றே நினைவில்லை. ஆனால் இந்த சிறுகதை சட்டென்று மனதில் ஒட்டிக்கொண்ட்து. இணையத்தில் அவரது வேறு சிறுகதைகளும் வாசிக்க கிடைத்தன. ஒரு நல்ல எழுத்தாளரை மிஸ் செய்துவிட்ட குற்ற உணர்வு வாட்டியது. அவசியம் அனைத்து சிறுகதை விரும்பிகளும் வாசித்து அனுபவிக்க வேண்டிய கதை இது. ஆன்ந்தவிகடன் டிசம்பர் மாத இதழ் ஒன்றில் வெளியாகி இருக்கிறது.

5. வீடியோ மாரியம்மன் – இமையம்

இதுவும் ஒரு பழைய சிறுகதை. இந்த வருடம்தான் நான் படித்தேன். நான் இமையத்தின் சிறுகதைகளை படித்த்தில்லை. இதுதான் முதல் கதை. இரண்டு மூன்று முறை விட்டு விட்டு பத்தி பத்திகளாகத்தான் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்த்து. இது இணையத்தில் கிடைக்கிறது.

http://www.kalachuvadu.com/issue-87/sirukathai.htm

6. கைக்கிளை – சுதேசமித்திரன் சுதேசமித்திரனின் கைக்கிளை வருட இறுதியில் படிக்க்க்கிடைத்த அருமையான சிறுகதை. Soft horror என்று இதை வகைப்படித்தினாலும் அருமையான வர்ணனைகள் இந்த சிறுகதையை சிறப்பாக்குகின்றன. ஆன்ந்த விகடனில் வெளிவந்த்து.

7. உலை – இலவசக்கொத்தனார்

பதிவரும், என்னை மிகவும் கவர்ந்த வெண்பா எழுத்தாளரின் குங்குமம் சிறுகதை. ஒரே வார்த்தையில் சொன்னால் ‘அற்புதம்’ .இது இணையத்தில் அவரது வலைப்பதிவில் படிக்க்க் கிடைக்கிறது. http://elavasam.blogspot.com/2009/09/blog-post.html

8.ஹேப்பி தீபாவலி – ராஜீ முருகன்

மீண்டும் ராஜீமுருகன். பரபரவென போகும் வர்ணனைகளும், இறுதியில் வைக்கப்பட்ட அழுத்தமான முற்றுப்புள்ளிக்கு முந்தைய பத்தியும் கதைக்கு மெருகு சேர்க்கும் காரணிகள். அருமையான சிறுகதை. ஆன்ந்தவிகடன் தீபாவளி இதழில் வெளிவந்திருக்கிறது.

அவ்வளவுதான்.

மிகவும் குறைவாகத்தான் சிறுகதைகள் படித்திருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நிறைய நல்ல சிறுகதைகளை நான் படிக்காமல் விட்டிருப்பேன் என்பது திண்ணம். அன்பர்கள் அவ்வாறான சிறுகதைகளை மேற்கோளிட்டால் மிகவும் மகிழ்வேன். நன்றி.

தமிழ்த்திரைப்பாடல்கள் – 2009

இந்த வருடத்தில் வெளியான தமிழ் திரைப்படப் பாடல்களில் என் மனதிற்குப் பிடித்த பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன். இது முற்றிலும் என் ரசனை சார்ந்தது. ஒரு இசையமைப்பாளருக்கு ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு பாடல்கள் என்ற விகித்த்தில் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

ஜி.வி.பிரகாஷ்குமார்

ஜி.வி.பிக்கு இந்த வருடம் இரண்டு ஜாக்பாட் திரைப்படங்கள் கிடைத்திருந்தன. இரண்டுமே இன்னும் வெளிவராவிட்டாலும் பாடல்கள் அனைத்தும் பெரும் அமர்க்களமாக இருந்தன.

தாய் தின்ற மண்ணே –ஆயிரத்தில் ஒருவன் – விஜய் யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் – வைரமுத்து, வெட்டூரி சுந்தரமூர்த்தி

“Song of the year” என்று பெரிய எழுத்துக்களில் போட்டாலும் தகும். பெரும் துயரத்தை உணர வைக்கிற வரிகளும், வாத்தியங்களும் இணைந்து செய்யும் குழைவு மகா அற்புதம். ஜி.வி. பிரகாஷ் போடும் பிற டப்பாங்குத்துப்பாடல்களை யாரேனும் குறை சொல்ல முனையும்போது இந்த ஒரே ஒரு பாடலையே அவர் பிரம்மாஸ்திரமாக உபயோகித்துக்கொள்ளலாம்.

உன்பேரை சொல்லும்போதே – அங்காடித் தெரு – நரேஷ் ஐயர், ஷ்ரேயே கோஷல், ஹரிசரண் -நா.முத்துகுமார்

புல்லாங்குழல், கீபோர்ட் மற்றும் நரம்பு இசைக்கருவிகளிலிருந்து மொத்தமாக வழியும் இசையுடன் இணையும் மிதமான அதிர்வு வாத்தியஙள். எழுதும்போதெ எவ்வளவு இதமாக இருக்கிறது. முதன்முதலில் இந்த பாடலைக்கேட்டபோது தளர்வான ஒரு மாலையில் முகத்தில் இதமாக காற்று உரசுவதுபோல இருந்தது. அற்புதமான பாடல்.

இதைத்தவிர ஆனந்ததாண்டவம் திரைப்படப்பாடல்களும் எனக்கு பிடித்திருந்தன.

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி இந்த வருடத்தில் ஒரு பெரிய ஏணியில் ஏறி வந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். விதவிதமான வாய்ப்புகள் அவர் கதவைத்தட்டி அழைத்தன. அவரும் அவருடைய ஸ்டைலை ஓரளவிற்கு இயக்குனர்களுக்கேற்ப மாற்றிக்கொண்ட விதம் ரசிக்க வைத்தது. அவரின் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தன இந்த வருடத்தில்.

நீ ஒத்த சொல்லு சொல்லு… – ராகுல் நம்பியார், ப்ரீதாஅவள் பெயர் தமிழரசி – ஏகாதசி

இந்த ஆல்பத்தில் முதலில் உள்ள் பாடல். எனக்கு மிகவும் பிடித்தது.  சாதாரண வரிகள்தான் என்றாலும் இந்த சூழ்நிலைக்கு இது பெரிதும் பொருந்துவனவாக இருந்தது. ப்ரீதாவின் குரல் சற்றே கீச்சுக்குரலாக இருந்தாலும் இந்த பாடலைத் திரையில் பார்க்கும்போது  (ஆம் துபாய் திரைப்பட விழாவில் இதன் compressed version பார்த்தேன்.) கதாநாயகியின் குரலுக்கு ஒத்து வருகிறது. நல்ல பாடல்.

கரிகாலன் காலைப்போல – வேட்டைக்காரன் – சுர்ஜித், சங்கீதா ராஜேஸ்வரன் – கபிலன்

கபிலனிடமிருந்து மறக்கமுடியாத இன்னொரு டூயட்.  தாளம் போடவைக்கும் மெட்டுக்கள், ரசிக்க வைக்கும் வரிகள் என்ன அருமையான ஜோடிப்பாடல். சங்கீதா ராஜேஸ்வரனின் குரல் பாவங்கள் அருமை.

ஜேம்ஸ் வசந்தன்

நான் போகிறேன் மேலே மேலே – நாணயம் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா

80,90 களில் வந்த பாடலைக்கேட்பதுபோன்ற ஒரு பிரமை இருக்கிறது இந்த பாடலைக்கேட்கும்போதெல்லாம். அநாவசிய மேற்கத்திய இசைக்கோர்ப்புகள் இல்லாமல் இருந்தாலே ஜேம்ஸின் பாடல்கள் நல்ல தரத்தில் இருக்கின்றன.

கோடி கோடி ஆசைகள் – காவலர் குடியிருப்பு – சரத், ப்ரியாஹேமேஷ் – தாமரை

கானடா ராகப் பாடல். தமிழ் சினிமா செண்டிமெண்ட் படி கண்டிப்பாக ஹிட் ஆகும். அருமையான வரிகள். குரல்களும் இனிமை. ஆனால் இண்டர்லூட் சம்மந்தமே இல்லாமல் பொறுமையை சோதிக்கிறது. வேறு வாத்தியங்களை உபயோகித்திருக்கலாமோ?  ஆயினும் சிறப்பான அவுட்புட்.

யுவன்ஷங்கர் ராஜா

துளி துளிதுளி மழையாய் வந்தாளே – பையா – ஹரிசரண்,தன்வி – நா.முத்துகுமார்

மென்மையான காதல்பாடல். காதுக்கு அருகில் அமர்ந்து கொண்டு பாடுவது போல ஹரிசரண் தனது குரலை சற்றே குழைவாக்கிக்கொண்டிருப்பது அழகு. ரிதம் எதுவும் இல்லாமல் காதுகளில் படரும் அந்த இரண்டாவது இண்டர்லூட் (interlude) பாடலில் ஹைலைட்.

சொல்லப்போனால் இந்த வருட்த்தில் யுவனின் சிறந்த ஆல்பம் இது. அட்டா மழைடா, சுத்துதே சுத்துதே ஆகிய இரண்டு பாடல்களும் மற்ற சிறப்பான பாடல்கள்.

கடலோரம் ஒரு ஊரு – குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் – எஸ்.பி.சரண், யுவன் ஷங்கர் ராஜா – வாலி

யுவன்ஷங்கர் ராஜா பாடிய பாடல்தான் ஆல்பத்தில் முதலில் வரும். ஒரு நல்ல பாட்டு இவர் குரலால போச்சே என்று வருந்துவதற்கும் அதன் இரண்டாவது வெர்ஷன் இள வயது எஸ்.பி.பி குரல் போல எதிரொலிக்கும் எஸ்.பி.சரண் குரலில் வளைய வரும். அருமையான வரிகள். மென்மையான பைப் ஒலி சின்னச் சின்ன சங்கதிகள். சூப்பர்.

கார்த்திக் ராஜா

கண்ணில் தாகம் – அச்சமுண்டு அச்சமுண்டு – செளம்யா – ஆண்டாள் பிரியதர்ஷினி

என்றும் நினைவில் நிற்கின்ற, அழகான ஒலிகளினால் செறிவூட்டப்பட்ட பாடல். கார்த்திக்ராஜா வருடத்திற்கு இப்படி ஒரு பாட்டு போட்டாலே போதும். செளம்யாவின் முதல் பாடல். நிறைய பாவங்களை வெளிப்படுத்தியிருந்தார். நிச்சயமாக மிக நல்ல பாடல்.

சபேஷ்-முரளி

நிலா நீ வானம் காற்று – விஜய் யேசுதாஸ், சின்மயி – யுகபாரதி

இந்த பாடலையும், இதன் படமாக்கத்தையும் பார்த்துவிட்டுத்தான் முதல் நாளே திரைப்பட்த்திற்கு சென்றேன்.  நிறைய வார்த்தைகளை அர்த்தமுள்ள கோவையாக இணைத்திருக்கும் யுகபாரதியின் முயற்சி அருமை. சின்மயி குரல் மிகச்சரியாக இந்த பாடலுக்கு பொருந்தியது அழகு.

இளையராஜா

ஒளிதரும் சூரியனும் – வால்மீகி – இளையராஜா-பெலாஷிண்டே – வாலி

வால்மீகியில் இளையராஜா இசையமைத்திருந்த இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். மலையாள சினிமாவை விட்டுவிட்டால்  இந்த வருடத்தில் தமிழில் ராஜாவின் மிகச்சிறந்த பாடலாக இதனையே சொல்லத்தோன்றுகிறது. இந்த பாடலின் ஆண்குரலில் ஸ்ரீனிவாஸ் அல்லது கார்த்திக் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மிகவும் குழைவான பாடல். பெலா ஷிண்டே தமிழ் சினிமாவின் அடுத்த ஷ்ரேயா கோஷல்.

வித்யாசாகர்

ஒருநாள் இரவில் – பென்னிதயாள், திப்பு – நா.முத்துகுமார்

இந்த வருடம் முழுவதிலும் என் ரசனை அடிப்படையில் வித்யாசாகருக்கு சொல்லுக்கொள்ளும்படியாக வந்த ஒரே பாடல் இது ஒன்றுதான். நல்ல வேகம், ரசிக்கவைக்கும் பீட்ஸ் எல்லாம் சேர்ந்து சிறப்பாக வந்திருக்கிறது.

இந்த வருடம் ARR ஆல்பம் ஒன்றும் தமிழில் வரவில்லை. ஹாரிஸ்,  தேவிஸ்ரீ பிரசாதின் பாடல்கள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.  ஹாரிஸ் நல்ல டியூன் போட்டிருந்தாலும்  பா.விஜயின் புண்ணியத்தில் பெரும் சொதப்பலாகும்  அந்த பாடல்களை எந்த கணக்கில் சேர்ப்பதென்றே தெரியவில்லை.

தாமரை, முத்துக்குமார், யுகபாரதி இந்த மூவர் கூட்டணிதான் தமிழ் திரைப்படப் பாடல்களை இன்னுமொரு உயரத்திற்கு எடுத்துச்சென்று கொண்டிருக்கின்றன. அடுத்த வருடம் இவர்களிடமிருந்து மேலும் நல்ல பாடல்களை எதிர்பார்ப்போம்.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகிய இருவரும் இந்த வருடத்தின் நம்பிக்கைக்குரிய இசையமைப்பாளர்கள் என்பேன். ஜி.வி.பி. பெரிய இயக்குனர்களிடம் சண்டை போடாமல் இருக்கவும், விஜய் ஆண்டனி இன்னும் பல நல்ல வாத்தியங்களை தனது இசைக்கோர்ப்பில் சேர்த்துக்கொள்ளவும் இடையறாது பிரார்த்திப்பேன். அதேபோல கபிலனுக்கு நிறைய காதல் பாடல்கள் வாய்ப்பு கிடைக்கவும்.

அவ்வளவுதான். நன்றி.

குந்தா (kundah)

சொர்க்கம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம் என்னால் தயங்காமல் என் சுட்டுவிரலால் மிகத்தெளிவாக காட்ட முடியும். அது ஊட்டிக்கு 32 கிலோமீட்டர் தெற்கே மேலே இருக்கிறது. ‘குந்தா’ என்றால் அநேகருக்கு தெரியாமல் போகலாம். குந்தா நீர்மின் திட்டம் என்ற பதம் மிகச்சிலருக்கு பரிச்சிய்மாக இருக்கும். அங்கேதான் என் பள்ளி நாட்கள் கழிந்தன. கடந்துவிட்ட 29 வருட வாழ்வில் 10 பொன்னான வருடங்கள் அங்கே கழிந்தன. கலக்கமில்லாத, களங்கமில்லாத, எண்களின் பின்னால் ஓடும் எண்ணற்ற துயரங்கள் எதுவும் இல்லாத பருவத்தை நான் கழித்த பொழுதுகள் நிகழ்ந்த களம் ஆதலின் எனக்கு எப்போதுமே சொர்ககம் எது என்ற கேள்வி வரும்போது அதற்கு நேரே இரண்டு இணைகோடுகளைப்போட்டு குந்தா என்று  என்னால் எளிதில் எழுதிவிட முடியும்.

நீலகிரி மாவட்டத்தின் தெற்கு பகுதியில் ஊட்டிக்கு மேலே 32 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கிறது குந்தாநீர்மின் திட்டம். குந்தா அணையில் வேலை செய்பவர்களின் குடும்பத்தினர் வசிக்கும் இடம் லோயர் கேம்ப் எனப்படும். அணையின் மின்பகிர்மான வட்டம் சார்ந்த மேற்பார்வை துறையில் வேலை பார்க்கும் மக்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் வசிக்கும் இடம் அப்பர் கேம்ப். இரண்டிற்கும் தூரம் 5 கிலோமீட்டர்கள்தான் அல்லது ஆறு கொண்டை ஊசி வளைவுகள்(Hair Pin Bends) தாண்டி வரவேண்டும்.

அதென்ன கொண்டை ஊசி வளைவுகள் (Hair Pin Bends)? அது ஒரு ஆங்கிலேயரின் இதமான கற்பனை. ஊரின் ஒரு எல்லையில் நின்று கொண்டு எதிரில் உள்ள மலையைப்பார்க்கும்போது அது ஒரு பெண்ணின் பெரிய கொண்டை போலவும் அதில் வளைந்து வளைந்து செல்லும் சாலைகள் அதில் செருகப்பெற்றுள்ள ஊசிகள் எனவும் கற்பனை செய்து கொண்டால் பயணம் செய்யும்போது ஏற்படும் தலைசுற்றல்களை அது ஓரளவு சீர்செய்யும்.

நாங்கள் வசித்தது அப்பர்கேம்ப் பகுதியில். ஒட்டுமொத்தமாக கூட்டிப்பார்த்தால் ஒரு 100 வீடுகளுக்கும் அடங்கிவிடும் ஒரு சிறிய காலனி அது. யூகலிப்டஸ் வாசம் காற்றில் எப்போதும் மிதந்துகொண்டே இருக்கும். ஜீன் முதல் பிப்ரவரி வரை மிதமான குளிரில் ஊரை வைத்துக்கொண்டே இருக்கும் காலநிலை.

முதல் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்பு செல்லவிருந்த கோடைவிடுமுறையில் நான் குந்தாவிற்கு முதலில் வந்தேன்.  என்னால் மறக்கமுடியாததாக இருக்கும் பொழுதுகளில் ஒன்று அந்த மதியவேளை. திருப்பூர்,மேட்டுப்பாளையம்,குன்னூர் வழியாக மஞ்சூர் செல்லும் சாலையில் பயணித்துக்கொண்டிருந்தோம். மேட்டுப்பாளையத்திலிருந்து செல்லும்போது குன்னூருக்குள் செல்லாமலேயே மஞ்சூருக்கு காட்டேரி வழியாக இடது பக்கத்தில் திரும்பவேண்டும்.

அவ்வளவு நேரம் தூங்கிக்கொண்டிருந்த நான் மிகச்சரியாக காட்டேரி வந்ததும் விழித்துக்கொண்டேன்.  காற்றில் டீத்தூளும், யூகலிப்டஸும் கலந்து வீசும் ஒரு ரம்மியமான வாசனை. மூன்று மணி இருக்கும். ஒரு பொட்டு கூட வெய்யில் இல்லாது கன்னங்கரேலென்ற வானமும், பச்சைப்பசேலென்ற செடிகளும், மலைகளும் ஏராளமான பட்டாம்பூச்சிகளை எனக்குள் பறக்கவிட்டது. மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி வந்தவர்கள் கவனித்திருப்பீர்கள். வலது புறமாக ஒரு பலகையில் ‘ மலைகளின் இளவரசி உங்களை வரவேற்கிறாள்’ என்று. என்னைப்பொறுத்த வரையில் நான் எப்போது காட்டேரியைக் கடக்கிறேனோ அப்போதுதான் அந்த இளவரசி என்னை உளமாற தழுவிக்கொள்வாள். பேருந்து மிக மிக மெதுவாக மலை ஏறும்போது அது வெளிப்படுத்தும் ஓசையும் அதற்கேற்றாற்போல மெல்ல வானத்திலிருந்து இறங்கி வரும் மெல்லிய மூடுபனியும் உங்களின் இதயங்களில் புதிய கவிதைகளை எழுதிக்கொண்டேயிருக்கும்.

அந்த நொடி தொடங்கி நான் அங்கு இருந்த 10 வருடங்களும் ஒரு பெரிய திருவிழாவென என் வாழ்வை ரசித்திருந்தேன். என் வயதொத்த நண்பர்கள், தோழிகள். அன்பைப் பொழியும் சுற்றமென மகிழ்வுக்கு இடரேதுமின்றி இருந்த தருணங்கள் அவை.

தொலைக்காட்சிகள் மண்டாத காலமது. மருந்திற்கும் சினிமா வாசனை புகாத ஊராக இருந்தது. சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டியும் சினிமா பார்க்கவேண்டுமென்றால் ஊட்டிக்கோ கோயம்புத்தூருக்கோதான் செல்ல வேண்டும். (பிறகு என் மேனிலைப்பள்ளி இறுதி வருடங்களில் கோகுல் தியேட்டர் என்று ஒன்று திறக்கப்பட்டு லேட் ரிலீஸ் திரைப்படங்களை திரையிட்டுக்கொல்ல ஆரம்பித்த கதையும் நடந்தேறியது.) பொழுதுபோக்கிற்கான இடங்கள் குறைவு. ஒரே ஒரு விநாயகர் கோவில் உண்டு. 5 கிலோமீட்டர்கள் கெத்தை சாலையில் சென்றால் அன்னமலை என்ற குன்றின் மேல் இருக்கும் முருகன் கோவில் ஒன்றும் உண்டு. வார இறுதிகளில் சிற்றுலாவென  ஊட்டிக்கு சென்றுவரவும் செய்வர். இதைத்தாண்டி பொழுதுபோக்குகள் ஏதும் கிடையாது.

அதனை ஈடுகட்டும் வகையில் சிறுவர்களாகிய எங்களுக்கு புதிய புதிய வழிகளும் வாய்த்துக்கொண்டேயிருந்தன. காடுபுகுதல் அல்லது பழம்பொறுக்குதல் அதில் வினோதமான ஒன்று. காலையில் கிளம்பி கால்போன போக்கில் அருகில் இருக்கும் காடுகளுக்கு செல்லல். மரம் ஏறுதல், பழமரங்க்களில் பழங்களை சேர்த்துக்கொண்டு மாலையில் வீடு திரும்புதல் என்ற இலக்கற்ற அந்த பயணங்களில் உள்ள சுவை வேறு எந்த விளையாட்டிற்கும் இல்லை என்பது என் தீர்மானம்.

உங்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் படுகர் இனம் சேர்ந்த நண்பர்கள் யாரேனும் இருக்கிறார்களா? நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். விருந்தோம்பல் என்றால் என்ன என்பதை எல்லா படகர் இல்லங்களிலும் கண்ணாற கண்டு கொள்வீர்கள். எந்த வீட்டிற்கும் சென்றுவிட்டு நீங்கள் சாப்பிடாமல் திரும்பிவிடமுடியாது. அன்பை பெரும் வெள்ளமென வடியவிடும் பெரும்சினேகிதர்கள்.  எனக்கு மஞ்சூர், கரியமலை, கீழ்குந்தா,பாக்கொரை என்று குந்தாவை சுற்றியிருந்த ஹட்டிகளில் சினேகிதர்கள்  அனேகர்கள் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.

எல்லா விஷயங்களுக்கும் கண்டிப்பாக முடிவு உண்டு என்பது நியதி. என்னுடைய குந்தா வாழ்வும் என்னுடைய மேனிலைப்பள்ளி தேர்வு முடிவுகளோடு முடிந்து போனது. மதிப்பெண்கள்  குறைந்த தாழ்வு மனப்பான்மையில் என் நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் ஒரு முற்றிலும் இருண்ட மாலைப்பொழுதில் கோயம்புத்தூர் பேருந்தில் ஏறிய அந்த தருணத்தில் இனிமேல் இங்கு வரவே கூடாது என்று என் அப்போதைய அறியாமையில் நினைத்துக்கொண்டேன்.

அத்தனை நாட்கள் நான் பொத்திப் பொத்தி சேர்த்து வைத்திருந்த என் எல்லா உற்சாக நிமிடங்களும் அந்த ஒரே நொடியில் சுக்கு நூறாக சிதறுவதைக் கண்டேன். குழந்தைகளுக்கு சொல்லப்படும் பழங்கதைகளில் எப்போதும் நல்லதே சொல்ல வேண்டும். அப்படி சொல்லும்போதெல்லாம் நமக்கு மேலே உள்ள தேவதைகள் அப்படியே ஆகுக என்று வழிமொழியும். ஆகவே தகாதன சொல்லல் நலம் என்று சொல்வார்கள். அது என் விஷயத்தில் உண்மையானது. அதன் பின்னர் என்னால் குந்தாவிற்கு போகவே முடியவில்லை.

இப்போது 12 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 12 வருடங்களில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால் இன்னும் அழியாத சுவடுகளென பதிந்துவிட்ட என் குந்தா நினைவுகளை என்னால் மாற்றவே முடியவில்லை.

ஒன்றும் பெரிய விஷயமல்ல. வருட விடுமுறையில் கண்டிப்பாக இரண்டு நாட்களாவது ஒதுக்கி போய்விடமுடியும்தான். ஆனால் என்னுள் பதிந்துப்போன அந்த பழைய பிம்பங்கள் உடைந்துவிடுமே என்ற பயம் என்னை தடுத்துக்கொண்டே இருக்கிறது. அப்படியே போனாலும் உறுதியாக அங்கே பழைய குந்தா நிச்சயமாக இருக்காது. அது தொழில்நுட்பத்தால் வளர்ந்து பெரும் மாற்றங்கள் சந்தித்த ஒரு புதிய நகரமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும். என்னோடு சேர்ந்து விளையாடிய தோழர்களும் தோழிகளும் அவரவர் கவலைகள் தோய்ந்தபடி இல்லறத்தில் இணைந்திருப்பர். ஒரு புதிய தலைமுறைக்குழந்தைகள் அவர்களுக்கென அமைக்கப்பெற்றிருக்கும் புதிய குந்தாவினை ரசிக்கத்தொடங்கியிருக்கும்.

இவ்வளவு வருடங்களுக்கு பிறகு ஃபேஸ்புக் (face book) வழியாக என் பழைய பள்ளி நண்பன் ஒருவனை கண்டறிந்தேன். காசோலை என்னும் பகுதியில் வசிப்பவன். மேலாண்மையில் முதுகலை முடித்திருந்தாலும் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறான். கேட்டபோது சொன்னான். ’ஊரை விட்டு வர முடியலடா’.

இவ்வளவு பிடிவாதத்தோடு என்னால் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் என்னைச்சுற்றிப் படர்ந்தது.

நான் பிறந்தது தஞ்சாவூரில். என் கல்லூரிப்படிப்பும் தஞ்சையிலேயெ நிகழ்ந்தது. ஆனால் நான் ஒருபோதும் எனது சொந்த ஊர் எது என்று கேட்கப்படும்போதெல்லாம் குந்தாவையே குறிப்பிடுவது வழக்கம். என் வாழ்வில் எல்லா சந்தோஷமான நிமிடங்களையும் அது தன்னகத்தே கொண்டிருந்தது. ஏன்? கொண்டிருக்கிறது.    அது என் சந்தோஷ நினைவுகளிடையே பொதிந்து போய் பின் தொலைந்துபோய்விட்ட என் பள்ளித்தோழியென என்னை ஏங்கவிட்டுக்கொண்டேயிருக்கும். ஆனால் அந்த ஏக்கம் தரும் ஆனந்தத்தை எந்த இலக்கியமும் விவரிக்க முடியாது.

What’s your rashee? (2009)

ஏதோ ஒரு கத்துக்குட்டி இயக்குனரின் முதல் படம் போல கடுமையாக பல்லை இளிக்கிறது What’s Your Rashee. நீங்களுமா அஷுதோஷ்? மூன்றரை மணி நேரம் முழுதாக பிளேடு போடப்பட்ட முதல் திரைப்படத்தை நேற்றுதான் பார்த்தேன். லேசான லாஜிக் கூட பார்த்துவிடக்கூடாத கதை, மிக மிக மோசமான திரைக்கதை, மோசமான நடிப்பு, and what not?

WYR வழக்கமான அஷுதோஷின் கூட்டணி (மிக முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மான்) இல்லாமல் வந்திருக்கும் திரைப்படம். என்ன நினைத்து இதனை உருவாக்கினாரோ தெரியாது. எப்போதும் தனது நீண்ட நெடிய படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பவர் இந்த மூன்றரை மணி நேர திரைப்படத்தின் வாயிலாக அத்தனை பேரின் வயிற்றெரிச்சலையும், தியேட்டரின் பாப்கார்ன் வசூலையும் ஒருங்கே அதிகரித்துச் சென்றிருக்கிறார்.

இளைய மகனுக்கு திருமணம் செய்யும் நாளில் லக்‌ஷ்மி கடாட்சம் பெருகி குடும்ப கடன் தீரும் என்ற குடும்ப ஜோசியரின் அருள்வாக்கை நம்பி அமெரிக்காவின் இருக்கும் இளைய மகனை இந்தியா வருவிக்கிறார் தந்தை. இளைய மகன் இருபதே நாளில் திருமணம் செய்ய எண்ணி ராசிக்கு ஒன்றாக 12 பெண்களைப்பார்க்கிறான். அவர்களில் யாரை திருமணம் செய்து கொள்கிறான். கடன் தீர்ந்த்தா என்பது கதை?

சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கவேண்டிய இதனை எப்போது வீட்டிற்குப்போவோமோ என்று தியேட்டரில் எல்லோரும் எண்ணும் அளவிற்கு மெல்லிய ஜவ்வாக இழுத்திருக்கும் டைரக்டரையும் எடிட்டரையும் கட்டிப்போட்டு நாள் முழுதும் உன்னைப்போல் ஒருவன் பார்க்க வைக்க வேண்டும்.

ஹர்மன் பவேஜாவை சத்தியமாக இந்த திரைப்பட்த்தின் ஹீரோ ஆக்கி இருக்கவே கூடாது. 12 வேடங்களில் நடித்து கின்னஸில் இடம் பிடித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் ஒரளவிற்கு சிறந்த பெர்மான்ஸ் மட்டுமே ஆறுதல். அதுவும் 3-4 கதாபாத்திரங்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. ஒரு மியூசிகலாக சிறந்த பாடல்களாவது இருக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. இப்படி 13 பாடல்களைப்போட்டு தேவதாஸ் ஹரிதாஸ் வரிசையில் தனது படத்தை இணைக்க நினைத்தவர் ARR ஏன் விட்டார் என்றும் தெரியவில்லை.

ஆக தத்தமது ராசிக்கு நேரம் சரியில்லாத அனைவருமே what’s your raashee பார்க்கலாம். அவ்வளவுதான்.

Very very unexpected attempt from ashutosh. Better luck next time sir.

உன்னைப்போல் ஒருவன் (2009)

ஒரு மாற்றுமொழித்திரைப்படத்தினை அதன் ஜீவன் குலையாமல் தமிழாக்கம் செய்யும்போது சிறப்பான மொழியாடல்கள் ஒன்றைக்கொண்டே அதனை செய்ய முடியும் என்று நிரூபித்திருக்க்கிறது உன்னைப்போல் ஒருவன் குழு. கமலஹாசனும் இராமுருகனும் இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கும் உரையாடற்காட்சிகள், எள்ளல்களும் துள்ளல்களுமாய் இழைந்தோடும் ஜீவனுள்ள வசன்ங்கள் அனைத்திற்கும் திரையரங்கத்தில் விழும் கைதட்டல்களை கேட்க இன்னும் ஒரு ஜோடி காதுகள் வேண்டும்.

”இதெல்லாம் எங்க முன்னோர்கள் சார். வேணும்னா அபிவாதயே சொல்லி ட்ரை பண்றேன்”” கமிஷனர் ஆபீஸில் இருக்கும் பழைய கம்ப்யூட்டர்களை சுட்டிக்காட்டி ஹேக்கர் இளைஞன் பேசும் வசனம் இது. ””என்னோட இன் – லாஸ் நாலு பேர் ரிலீஸ் பண்ணனும்”” கமிஷனரிடம் தொலைபேசியில் தீவிரவாதிகள் சிலரை விடுவிக்கக்கோரும் கமலின் வசனத்தின் ஒரு துண்டு,””கேரண்டி,வாரண்டி எல்லாம் தர்றதுக்கு நான் என்ன ப்ரெஷர் குக்கரா விக்கறேன்”” கிளைமாக்ஸீக்கு வெகு அருகில் ஒரு சீரியஸான உரையாடலுக்கிடையில் கமல் பேசும் இன்னொரு வசனம். இவ்வளவுதான் என்றில்லை. படம் நெடுகிலும் இப்படி குறுக்கிலும் நெடுக்கிலும் ஒரு நல்ல வெண்பொங்கல் சாப்பிடும்போது வாயில் கடிபடும் முந்திரிப்பருப்பு போல அழகான ரசிக்கவைக்கிற வசனங்கள் – ’உன்னைப்போல் ஒருவ்ன்’ திரைப்படத்தினை மிகவும் ரசித்துப்பார்க்க வைக்கிற வினையூக்கிகள்.

எ வெட்னெஸ்டே ஹிந்தி திரைப்பட்த்தின் சேதாரப்படுத்தப்படாத அதே திரைக்கதைதான். ஒரு நல்ல நாளின் காலைப்பொழுதில் கமிஷனர் ராகவன் மராரின் அலைபேசிக்கு வரும் அழைப்பு நகர் முழுவதும் 5 இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்காமலிருக்க வேண்டுமானால் நான்கு முக்கிய தீவிரவாதிகளை விடுவிக்கவேண்டும் என்கிறது, குரலுக்கு சொந்தக்கார்ரான பெயர்பெறாத அந்த கதாபாத்திரம் புதிதாக எழும்பிக்கொண்டிருக்கும் பன்மாடிக்குடில் ஒன்றில் மொட்டைமாடியில் அமர்ந்துகொண்டு அன்றைய அந்த நிகழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறது. இறுதியில் தீவிரவாதிகளை கமிஷனர் ஒப்படைத்தாரா? தீவிரவாதிகளை விடுவிக்க்க்கோறும் இந்த சாதாரணன் யார் என்பதுதான் திரைப்பட்த்தின் மையக்கரு.

ராகவன் மரார் என்கிற மலையாளி கமிஷனராக மோகன்லால். மலையாளம் செறிந்த அவரது மொழியை பலமாகப்பார்த்தால் பலம். பலவீனமாகப்பார்த்தால் பலவீனம். அரசாங்கத்தின் மெத்தன்ங்கள் அதிகாரிகளின் தலையில் வந்து விடுவதை கூர்மையான வசன்ங்களில் வெளிப்படுத்துகிறார். ”சி.எம். இண்டர்வியூவை பார்ப்பார். அதனால் தமிழை நல்லா உச்சரிக்கணும்” என்று தன் உதவியாளரை தொலைகாட்சி முன் பேசவைப்பது, தலைமைச்செயலாளர் லக்‌ஷ்மியிடம் தன் அதிகார எல்லைகளைப்பற்றிப் பேசுவது,’அந்த செல்போனை துடைச்சுட்டு கொடுங்க.அவங்க ட்ரேஸ் இருக்கப்போகுது’ என்று நளினமான எள்ளல் பேசுவது என்று வழக்கமான லால் பெர்ஃபார்மென்ஸ்.

கமலைப்பற்றி பேச நிறைய இருக்கிறது. தாடைகள் துடிக்க, கண்கள் சிவக்க வசனம் பேசுவது என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஒரு நாற்காலியில் உட்கார்ந்து உடல்மொழியிலேயே மிரட்டுவது என்பது இந்தியாவிலேயே லால், கமல் என்ற இரண்டு கலைஞர்களுக்கும் இயல்பாக வரும் விஷயமாய் இருக்கிறது. மூன்று புத்திசாலித்தனமா மூவ்கள் எனக்கு பிடித்திருந்தன. ஒன்று இந்த திரைப்பட்த்திற்கான இசை ஆல்பத்தினை பட்த்தினுள் திணிக்காமல் இருந்த்து. இரண்டாவது லாலின் மொழியை அப்படியே தொடரவிட்ட்து. தமிழ் வசன்ங்கள் அவரது மொழியில் திண்றுமோ என்ற நேரங்களில் அப்படியே ஆங்கில வசன்ங்களாக அதனை மாற்றியது. மூன்றாவது இரா.முருகனின் தேவையை வேண்டுமென்ற இடங்க்ளில் அழகாக கோர்த்திருப்பது. மூன்றுமே மிக அழகாக பட்த்தோடு இயந்து சிறப்பாக வந்திருக்கிறது.

Hats off kamal, lal and Ira,murugan.

துபாய் மெட்ரோ பராக்!

dubai metro 3d model

dubai metro 3d model

’he deserves this’ என்னருகில் நின்று கொண்டிருந்த ஒரு லெபானிய முதியவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். யூனியன் ஸ்கொயர் ஸ்டேஷனில் முதல் நாள் மெட்ரோ பயணத்திற்க்காக காலையில் காத்திருந்தேன். அந்த முதியவர் குறிப்பிட்டது ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதம மந்திரியும், துபாயின் மன்னருமாகிய பெருமதிப்பிற்குரிய ஷேக் முகம்மது அவர்களின் இந்த அருஞ்சாதனையைப்பற்றித்தான். அவரின் தொலைநோக்கும், திடமும், செயல்திறமும்தான் இந்த மெட்ரோ இரயில் திட்டத்தின் வெற்றிகரமான புறப்பாடு என்பது வளைகுடாவின் அனைத்துவிதமான மக்களின் எண்ணமுமாயும் இருக்கிறது.

 நீண்டு நெளிந்து வளைந்து பல திருப்பங்களைக்கொண்டு ஒரு ரோலர்கோஸ்டர் போல காட்சியளித்துக்கொண்டிருந்த மெட்ரோ ரயில் சேவைக்கான உயர் பாலங்களில் இன்று முதல் பயணிகளை சுமந்து கொண்டு ரயில் சேவை தொடங்கிவிட்டிருக்கிறது. RTA என்கிற தரைவழிப்போக்குவரத்து ஆணையம் தொடங்கிவிட்ட நாளிலிருந்தே விறுவிறுப்பாக பணிகள் தொடங்கிவிட்டன. பாரசீக வளைகுடாவில் இதுதான் முதல் முயற்சி என்கிறார்கள். நீண்ட ஆளில்லாத ரயில் (driverless automated rail system) இயங்கும் முதல் பாதை என்ற பெருமைமையும் பெற்றுள்ளதாம்.

சிவப்பு வழித்தடம் பச்சை வழித்தடம் என்பதாக இரு வேறு ரயில்பாதைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது முக்கிய வணிக வளாகங்களையும், வணிகத் தடங்களையும் இணைக்கும் வண்ணமாக முதல் 10 ரயில் நிலையங்களை சிவப்பு தடத்தில் உபயோகத்திற்கெனெ திறந்து விட்டிருக்கிறது துபாய் மெட்ரோ.

யூனியன் ஸ்கொயர் ரயில் நிலையத்திலிருந்து எனது அலுவலகம் இயங்கும் ’துபாய் பன்னாட்டு வணிக மையம்’ (DIFC) வரையிலும் பயணம் செய்தேன். கூட்டம் குறைவுதான். வாரவிடுமுறைக்கு முதல்தினமான வியாழக்கிழமையாதலின் கொண்டாட்ட மனோபாவம் எல்லோர் உள்ளங்களிலும் குடிகொண்டிருந்தது. உற்சாகம், காத்திருப்பு, கூடிக்களித்தலில் மகிழ்ச்சி என ஆவலும் உவகையும் பொங்க ரயிலை எதிர்பார்த்திருந்தோம்.

 முதல் நாளே நோல் (nol) எனப்படும் பயணச்சீட்டு பெறுவதற்கான அட்டையை வாங்கியிருந்தேன். ஆதலின் பயணச்சீட்டு பெறுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் பெரும்பான்மையொருக்கு சரியான விளக்கங்கள் கிடைத்திருக்காதலால் திண்டாடிப்போயினர். ஆயினும் மெட்ரோ ஊழியர்களின் சேவையினை சொல்ல வேண்டும். எல்லோரையும் தானே தேடிச்சென்று சேவை வழங்கினர்.

ரயில் நிலையங்கள் எப்போதும் போல்வே “dubai standard” என பொதுவில் வழங்கப்படுகிற வார்த்தைப்பிரயோகத்திற்கு தகுந்தவாறு மெழுகப்பட்ட சலவைக்கற்கள், ஒளிசிந்தும் விளக்குவரிசைகள், கடந்து வந்த தடங்களின் புகைப்படங்கள் என பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு நிலையத்திலும் ஆரம்பகட்ட பணிகள் முதல் இன்று வரையிலான முன்னேற்றங்கள் குறித்த காணொளியும் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. ரயில் நிலையத்தில் புகைப்படம் எடுக்க எத்தனித்தபோது புகைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது நண்பர் என்று அன்பொழுக சொன்னார் ஒரு பிலிப்பினி ஊழியர். அவருக்கு நன்றி. (நாளையிலிருந்து அதற்கும் அபராதம் விதிக்கும் நிலை வரலாம்.)

10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் ரயில் சென்றடைந்த சில நிமிடங்களில் வந்த்து. மெல்லிய ஒரு லாபி இசை ஒலிக்க வரவேற்றது துபாய் மெட்ரோ. இரு பக்கமும் போடப்பட்ட நீல இருக்கைகள். தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட நீல நிற வண்ணம் ரயில் முழுவதும் பளிச்சிடுகிறது. 35 நொடிகள் தாமத்தித்து கிளம்புகிறது ரயில். இரண்டே நிமிடங்களில் கடலுக்கடியில் செல்லும் பாதையைக்கடந்து பர்துபாய் காலித் பின் அல் வாலித் என்றழைக்கப்படுகிற பர்ஜுமான் நிலையத்தை அடைந்த்து. நிச்சயமாய் இது கனவல்ல. 2 நிமிடங்களில் மக்தூம் அல்லது கர்ஹீட் பாலங்களைக்கடந்தோ அல்லது ஆப்ரா எனப்படும் படகு சவாரி வழியாகவோ தேராவிலிருந்து பர்துபாயை கண்டிப்பாக அடையவே முடியாது. நேரத்தினை கண்டிப்பாக மிச்சப்படுத்தும்.

பர்ஜுமான் நிறுத்த்த்தில் ஏறிய குழந்தைகளிடம் முகம் கொள்ளா மகிழ்ச்சி. அதன் பின்னர் சரியாக இரண்டு நிறுத்தங்கள் கடந்து DIFC நிறுத்த்த்தில் இறங்க எடுத்துக்கொண்ட நிமிடங்கள் மொத்தம் 7. சரியாக ஏழு நிமிடங்கள். பேருந்துக்கு காத்திருந்து, வெய்யிலில் வாடி, போக்குவரத்து நெரிசலில் சிக்கி 45 நிமிடங்கள் எடுக்கும் பயணம் ஏழே நிமிடங்களில் முடிந்த மகிழ்வோடு அலுவலகம் வந்திருக்கிறேன்.

49 மாதங்கள், 30000 பணியாளர்கள், 28 பில்லியன் திர்ஹாம்கள் அனைத்தையும் தன்னகத்தே விழுங்கியிருக்கிற மெட்ரோ திட்டம் அதன் பலனாக என்போன்ற சாலைப்போக்குவரத்திற்கென பேருந்தையோ, வாடகை ஊர்தியையோ பயன்படுத்துவோரின் நேரத்திலும், பணப்பைகளிலும் பால் வார்த்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மெட்ரோ வாழ்க! வளர்க!