புளிக்காய்ச்சல் திருநாசிச்சேவை:

ஹனுமத்ஜெயந்தி புளியோதரைக்காக, வீட்டில் இரவு புளிக்காய்ச்சல் செய்திருக்கிறார்கள். இந்த அதிகாலையில் அதன் வாசனை வீடு முழுவதும் பரவி இம்மார்கழிக் குளிர்க்காலைக்கு புதிய வண்ணம் தீட்டுகிறது.

காரமும் புளிப்பும் ஒரு அடர் மாம்பழ நிறப்புடவை மீது அமைந்த சிவப்புச்சரிகை போல மிகப்பாந்தமாகப்படிந்து சிந்தை முழுவதையும் தன் பால் இழுக்கிறது. புளிப்பு, புளிப்பு என மனம் அதன் திசை நோக்கி புன்னகையோடு கைகுலுக்குகிறது.

வெந்தயமும், பெருங்காயமும் அதன் கூட இணைந்து நாங்களும் கூடவே இருக்கிறோமே என குழைந்த அழைப்பின்வழி இன்னும் தங்களின் மீதான கவனத்தைக் கோருகின்றன.

நாசியின் அத்தனை நரம்புகளும் செய்வதறியாது இவ்வாசனை தரும் மயக்கத்தில் ஆழ்ந்து அறிவின் அத்தனை ஆழத்திலும் புளிக்காய்ச்சலின் இருப்பை பதிவு செய்து உமிழ் நீர் அருவியொன்றை உடனடியாக உற்பத்தி செய்ய ஆணையிடுகிறது.

வெறும் ஒலியை மட்டுமே வெளியிட்டு எங்கள் இல்லத்தின் நற்சகுனத்தை பேணிவந்த அதோ அந்த வெள்ளைப்பல்லி இடுக்கிலிருந்து தலையை அடிக்கடி நீட்டி சற்றே இம்மணத்தை உள்வாங்கி மறைகிறது.

வீட்டின் மூலையில் ஒரு சின்ன எண்ணெய்ச்செட்டிக்குள் பாந்தமாய்ப்படுத்திருக்கும் புளிக்காய்ச்சலை பாற்கடலில் படுத்திருக்கும் பரந்தாமனுக்கிணையாய்ப்பார்க்கவைத்த இத்திருக்காலையை மகிழ்வோடு ஆசீர்வதித்து மனம் எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என முணுமுணுக்கிறது