நாசியைத் தீண்டாத வாசனைகள்

தீபாவளி வாரயிறுதியில் தென்காசி-மதுரைக்குப்போய்விட்டு மழையில் தள்ளாடிக்கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தேன். அடுத்த நாளே ஜலதோஷம் பிடித்துக்கொண்டது.

இரண்டு நாள் தற்சார்பு மருந்துகளுடன் போராடிவிட்டு மருத்துவரிடம் சென்றபோது தொண்டை தொடர்பான பிரச்னைகள் இல்லாததாலும், ஜூரம் இல்லாததாலும் சளியைக்கரைக்கும் மருந்துகளை எழுதிக்கொடுத்திருந்தார். அதற்குப்பிறகுதான் இந்த உண்மையான சோதனை தொடங்கியது. நாசிக்கு எந்த வாசனையும் வரவில்லை.

கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ என ஆண்டாளை அடியொற்றி சோப்பு மணக்குமா, ஷாம்பு மணக்குமோ, என்றுமே நாறாத வேல்ஸ் சாம்பிராணியின் மணமும்தான் வந்து தீண்டுமோ என வரிசையாக வீட்டில் எனக்குப்பிடித்த அத்தனை வாசனை விஷயங்களையும் ஒவ்வொன்றாக முகர்ந்துகொண்டேயிருந்தேன். எதற்கும் பலனில்லை.

வெந்நீர் போடுவதற்காக கொல்லை அடுப்புகளில் மூட்டப்படும் தீயிலிருந்து எழும் அதிகாலைப்புகை மணம் ஒன்று இருக்குமே, அது போல ஏதோவொரு பெயர் சொல்லா புகைமணம் மட்டும் அடி நாசியில் குடிகொண்டிருந்தது. இந்த புகைமணம் சட்டென்று ஏறும், இறங்கும் வீட்டின் வாசனைகளுக்கொப்ப. உதாரணமாக சமையறையில் ஏதேனும் அதீத மணம் எழுந்தால், இந்த புகை நாற்றம் அதன் உச்சத்தைத்தொடும், அதன் மூலமாக வயிற்றுப்பிரட்டல் வேறு.

இதற்குப்பிறகு சுவை நரம்புகளும் காணாமற்போயின. காஃபி, பொங்கல், கருவேப்பிலை கொத்தமல்லி தொடங்கி பூண்டு,வெங்காயம் வரையிலா எல்லாச்சுவைகளும் மட்டுப்பட்டு வெந்நீர் மட்டுமே தேவாமிர்தமாக இனித்தது. சுடச்சுட உண்ணவேண்டும் என்ற அறிவுரையால் கிடைத்த எல்லா சூட்டுதிரவங்களிலும் லேசான புளிப்புச்சுவை ஒன்று மேலேறி வந்ததால், அதுவே முழு நாளுக்கும் போதும் என்று தோன்றியது.

வாசனையும், சுவையுமில்லாமல் ஒரு மனிதன் வாழ்வைக்கடப்பதென்பதுதான் துறவா என்று எண்ண வைத்தது. ஏதேனும் ஒரே ஒரு வாசனையையாவது இந்த நாசி கொண்டுவிடாதா என ஒரு சிறு நாய்க்குட்டி முகர்ந்து முகர்ந்து தன் உணவைத்தேடிக்கொண்டே இருப்பதுபோல இல்லம் முழுதும் வெகுண்டு வெறிகொண்டு மூக்கை உறிஞ்சி உறிஞ்சி தேடிக்கொண்டே இருந்தேன்.

நாட்கள் செல்லச்செல்ல பயமும் அதிகரித்தது. மருத்துவர் ஆறுதலளித்தார். இந்த அறிகுறி தொண்டையைத்தீண்டி கீழே செல்லாத வரையில் அவர் எழுதிக்கொடுத்த மருந்துகளும், நல்ல உணவும், ஆவிபிடித்தலும்தான் மருந்துகள் என்றார். எந்தச்சுவையும் இல்லாவிடினும், உணவுகொள்ளுதலுக்கான வேட்கை நிற்கவே இல்லை. ஏதேனும் உள்சென்றுகொண்டிருந்தது. ஆனால் மணமேதும் ஏறாமல், அந்த ஒற்றைப்புகை மணத்தை மட்டுமே கொண்டிருந்த நாசியைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏகப்பட்ட மனவழுத்தம்.

”எல்லாவற்றிற்கும் ஒரு ப்ரேக்கிக் பாயிண்ட் உள்ளது” என குருதிப்புனலில் கமலஹாசன் சொல்லியிருக்கிறார் இல்லையா? அது இந்த நாசியடைப்பிற்கும் வந்தது. இன்னொரு மழை நாள். இன்னொரு வீடடைப்பு. அந்த முற்பகலில், புகை வாசனை போக வேறு ஏதோ ஒன்று புலப்பட்டது. முதலில் லேசாக, பின்னர் மெதுவாக அதன் வீரியம் அதிகரித்தது. வழக்கம்போலவெ ஒரு சிறு நாய்க்குட்டியென முகர்ந்து முகர்ந்து சமயலறைக்குச்செல்லும் முன்னரே, நாசி சில நாட்களுக்குப்பின்னர் கண்டறியும் முதல் மணத்தை வெகு நாட்கள் கழிந்து பிரிந்த காதலியை அணைவது போல சட்டென உள்ளிழுத்துக்கொண்டது.

கத்திரிக்காய் செய்வதற்காக, தனியா+மிளகாய்+உ.பருப்பு இத்யாதிகளோடு செய்யப்பட்ட அந்தப்பொடிதான் இத்தனை நாள் புகை மணத்தோடு இருந்த நாசியை மீட்ட முதல் மணமாய் அமைந்தது. அந்த முதல் மூமெண்டுக்கு பிறகு மெள்ள மெள்ள நாசி ஒவ்வொரு வாசனையாய் மீட்டுக்கொண்டு வந்த தருணங்களை தஞ்சாவூர் கல்வெட்டுக்கு இணையாக மனதில் குறித்துவைத்துக்கொண்டே வந்திருக்கிறேன்.

கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மட்டுமே துறவறம் சென்ற இந்த சுவையும், வாசனையும் வாழ்விற்கு எத்தனை வசந்தங்களை என்னையறியாமலேயே கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன என்பதை அறியத்தந்த ஒரு பாடமாக இதனை எடுத்துக்கொள்கிறேன். ஒரு சிறுதுளையின் வழி செல்லும் காற்றை இசையாக மாற்றும் குழல் போலத்தான், நாசியின் இந்த இரு துளைகளும். எத்தனை மணங்களை மனதிற்கினியதாக மாற்றி வழங்கிக்கொண்டே இருந்திருக்கின்றன என எண்ணி எண்ணி வியக்கிறேன்.

பல வருடங்களாக கத்திரிக்காய் மீது என் உடலுக்கும் மனதுக்கும் இருந்த ஒவ்வாமையைக்கூட கடந்த அத்தருணத்தில் காதலாக மாற்றி வைத்திருக்கிறேன்.