சொர்க்கம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம் என்னால் தயங்காமல் என் சுட்டுவிரலால் மிகத்தெளிவாக காட்ட முடியும். அது ஊட்டிக்கு 32 கிலோமீட்டர் தெற்கே மேலே இருக்கிறது. ‘குந்தா’ என்றால் அநேகருக்கு தெரியாமல் போகலாம். குந்தா நீர்மின் திட்டம் என்ற பதம் மிகச்சிலருக்கு பரிச்சிய்மாக இருக்கும். அங்கேதான் என் பள்ளி நாட்கள் கழிந்தன. கடந்துவிட்ட 29 வருட வாழ்வில் 10 பொன்னான வருடங்கள் அங்கே கழிந்தன. கலக்கமில்லாத, களங்கமில்லாத, எண்களின் பின்னால் ஓடும் எண்ணற்ற துயரங்கள் எதுவும் இல்லாத பருவத்தை நான் கழித்த பொழுதுகள் நிகழ்ந்த களம் ஆதலின் எனக்கு எப்போதுமே சொர்ககம் எது என்ற கேள்வி வரும்போது அதற்கு நேரே இரண்டு இணைகோடுகளைப்போட்டு குந்தா என்று என்னால் எளிதில் எழுதிவிட முடியும்.
நீலகிரி மாவட்டத்தின் தெற்கு பகுதியில் ஊட்டிக்கு மேலே 32 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கிறது குந்தாநீர்மின் திட்டம். குந்தா அணையில் வேலை செய்பவர்களின் குடும்பத்தினர் வசிக்கும் இடம் லோயர் கேம்ப் எனப்படும். அணையின் மின்பகிர்மான வட்டம் சார்ந்த மேற்பார்வை துறையில் வேலை பார்க்கும் மக்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் வசிக்கும் இடம் அப்பர் கேம்ப். இரண்டிற்கும் தூரம் 5 கிலோமீட்டர்கள்தான் அல்லது ஆறு கொண்டை ஊசி வளைவுகள்(Hair Pin Bends) தாண்டி வரவேண்டும்.
அதென்ன கொண்டை ஊசி வளைவுகள் (Hair Pin Bends)? அது ஒரு ஆங்கிலேயரின் இதமான கற்பனை. ஊரின் ஒரு எல்லையில் நின்று கொண்டு எதிரில் உள்ள மலையைப்பார்க்கும்போது அது ஒரு பெண்ணின் பெரிய கொண்டை போலவும் அதில் வளைந்து வளைந்து செல்லும் சாலைகள் அதில் செருகப்பெற்றுள்ள ஊசிகள் எனவும் கற்பனை செய்து கொண்டால் பயணம் செய்யும்போது ஏற்படும் தலைசுற்றல்களை அது ஓரளவு சீர்செய்யும்.
நாங்கள் வசித்தது அப்பர்கேம்ப் பகுதியில். ஒட்டுமொத்தமாக கூட்டிப்பார்த்தால் ஒரு 100 வீடுகளுக்கும் அடங்கிவிடும் ஒரு சிறிய காலனி அது. யூகலிப்டஸ் வாசம் காற்றில் எப்போதும் மிதந்துகொண்டே இருக்கும். ஜீன் முதல் பிப்ரவரி வரை மிதமான குளிரில் ஊரை வைத்துக்கொண்டே இருக்கும் காலநிலை.
முதல் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்பு செல்லவிருந்த கோடைவிடுமுறையில் நான் குந்தாவிற்கு முதலில் வந்தேன். என்னால் மறக்கமுடியாததாக இருக்கும் பொழுதுகளில் ஒன்று அந்த மதியவேளை. திருப்பூர்,மேட்டுப்பாளையம்,குன்னூர் வழியாக மஞ்சூர் செல்லும் சாலையில் பயணித்துக்கொண்டிருந்தோம். மேட்டுப்பாளையத்திலிருந்து செல்லும்போது குன்னூருக்குள் செல்லாமலேயே மஞ்சூருக்கு காட்டேரி வழியாக இடது பக்கத்தில் திரும்பவேண்டும்.
அவ்வளவு நேரம் தூங்கிக்கொண்டிருந்த நான் மிகச்சரியாக காட்டேரி வந்ததும் விழித்துக்கொண்டேன். காற்றில் டீத்தூளும், யூகலிப்டஸும் கலந்து வீசும் ஒரு ரம்மியமான வாசனை. மூன்று மணி இருக்கும். ஒரு பொட்டு கூட வெய்யில் இல்லாது கன்னங்கரேலென்ற வானமும், பச்சைப்பசேலென்ற செடிகளும், மலைகளும் ஏராளமான பட்டாம்பூச்சிகளை எனக்குள் பறக்கவிட்டது. மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி வந்தவர்கள் கவனித்திருப்பீர்கள். வலது புறமாக ஒரு பலகையில் ‘ மலைகளின் இளவரசி உங்களை வரவேற்கிறாள்’ என்று. என்னைப்பொறுத்த வரையில் நான் எப்போது காட்டேரியைக் கடக்கிறேனோ அப்போதுதான் அந்த இளவரசி என்னை உளமாற தழுவிக்கொள்வாள். பேருந்து மிக மிக மெதுவாக மலை ஏறும்போது அது வெளிப்படுத்தும் ஓசையும் அதற்கேற்றாற்போல மெல்ல வானத்திலிருந்து இறங்கி வரும் மெல்லிய மூடுபனியும் உங்களின் இதயங்களில் புதிய கவிதைகளை எழுதிக்கொண்டேயிருக்கும்.
அந்த நொடி தொடங்கி நான் அங்கு இருந்த 10 வருடங்களும் ஒரு பெரிய திருவிழாவென என் வாழ்வை ரசித்திருந்தேன். என் வயதொத்த நண்பர்கள், தோழிகள். அன்பைப் பொழியும் சுற்றமென மகிழ்வுக்கு இடரேதுமின்றி இருந்த தருணங்கள் அவை.
தொலைக்காட்சிகள் மண்டாத காலமது. மருந்திற்கும் சினிமா வாசனை புகாத ஊராக இருந்தது. சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டியும் சினிமா பார்க்கவேண்டுமென்றால் ஊட்டிக்கோ கோயம்புத்தூருக்கோதான் செல்ல வேண்டும். (பிறகு என் மேனிலைப்பள்ளி இறுதி வருடங்களில் கோகுல் தியேட்டர் என்று ஒன்று திறக்கப்பட்டு லேட் ரிலீஸ் திரைப்படங்களை திரையிட்டுக்கொல்ல ஆரம்பித்த கதையும் நடந்தேறியது.) பொழுதுபோக்கிற்கான இடங்கள் குறைவு. ஒரே ஒரு விநாயகர் கோவில் உண்டு. 5 கிலோமீட்டர்கள் கெத்தை சாலையில் சென்றால் அன்னமலை என்ற குன்றின் மேல் இருக்கும் முருகன் கோவில் ஒன்றும் உண்டு. வார இறுதிகளில் சிற்றுலாவென ஊட்டிக்கு சென்றுவரவும் செய்வர். இதைத்தாண்டி பொழுதுபோக்குகள் ஏதும் கிடையாது.
அதனை ஈடுகட்டும் வகையில் சிறுவர்களாகிய எங்களுக்கு புதிய புதிய வழிகளும் வாய்த்துக்கொண்டேயிருந்தன. காடுபுகுதல் அல்லது பழம்பொறுக்குதல் அதில் வினோதமான ஒன்று. காலையில் கிளம்பி கால்போன போக்கில் அருகில் இருக்கும் காடுகளுக்கு செல்லல். மரம் ஏறுதல், பழமரங்க்களில் பழங்களை சேர்த்துக்கொண்டு மாலையில் வீடு திரும்புதல் என்ற இலக்கற்ற அந்த பயணங்களில் உள்ள சுவை வேறு எந்த விளையாட்டிற்கும் இல்லை என்பது என் தீர்மானம்.
உங்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் படுகர் இனம் சேர்ந்த நண்பர்கள் யாரேனும் இருக்கிறார்களா? நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். விருந்தோம்பல் என்றால் என்ன என்பதை எல்லா படகர் இல்லங்களிலும் கண்ணாற கண்டு கொள்வீர்கள். எந்த வீட்டிற்கும் சென்றுவிட்டு நீங்கள் சாப்பிடாமல் திரும்பிவிடமுடியாது. அன்பை பெரும் வெள்ளமென வடியவிடும் பெரும்சினேகிதர்கள். எனக்கு மஞ்சூர், கரியமலை, கீழ்குந்தா,பாக்கொரை என்று குந்தாவை சுற்றியிருந்த ஹட்டிகளில் சினேகிதர்கள் அனேகர்கள் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.
எல்லா விஷயங்களுக்கும் கண்டிப்பாக முடிவு உண்டு என்பது நியதி. என்னுடைய குந்தா வாழ்வும் என்னுடைய மேனிலைப்பள்ளி தேர்வு முடிவுகளோடு முடிந்து போனது. மதிப்பெண்கள் குறைந்த தாழ்வு மனப்பான்மையில் என் நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் ஒரு முற்றிலும் இருண்ட மாலைப்பொழுதில் கோயம்புத்தூர் பேருந்தில் ஏறிய அந்த தருணத்தில் இனிமேல் இங்கு வரவே கூடாது என்று என் அப்போதைய அறியாமையில் நினைத்துக்கொண்டேன்.
அத்தனை நாட்கள் நான் பொத்திப் பொத்தி சேர்த்து வைத்திருந்த என் எல்லா உற்சாக நிமிடங்களும் அந்த ஒரே நொடியில் சுக்கு நூறாக சிதறுவதைக் கண்டேன். குழந்தைகளுக்கு சொல்லப்படும் பழங்கதைகளில் எப்போதும் நல்லதே சொல்ல வேண்டும். அப்படி சொல்லும்போதெல்லாம் நமக்கு மேலே உள்ள தேவதைகள் அப்படியே ஆகுக என்று வழிமொழியும். ஆகவே தகாதன சொல்லல் நலம் என்று சொல்வார்கள். அது என் விஷயத்தில் உண்மையானது. அதன் பின்னர் என்னால் குந்தாவிற்கு போகவே முடியவில்லை.
இப்போது 12 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 12 வருடங்களில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால் இன்னும் அழியாத சுவடுகளென பதிந்துவிட்ட என் குந்தா நினைவுகளை என்னால் மாற்றவே முடியவில்லை.
ஒன்றும் பெரிய விஷயமல்ல. வருட விடுமுறையில் கண்டிப்பாக இரண்டு நாட்களாவது ஒதுக்கி போய்விடமுடியும்தான். ஆனால் என்னுள் பதிந்துப்போன அந்த பழைய பிம்பங்கள் உடைந்துவிடுமே என்ற பயம் என்னை தடுத்துக்கொண்டே இருக்கிறது. அப்படியே போனாலும் உறுதியாக அங்கே பழைய குந்தா நிச்சயமாக இருக்காது. அது தொழில்நுட்பத்தால் வளர்ந்து பெரும் மாற்றங்கள் சந்தித்த ஒரு புதிய நகரமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும். என்னோடு சேர்ந்து விளையாடிய தோழர்களும் தோழிகளும் அவரவர் கவலைகள் தோய்ந்தபடி இல்லறத்தில் இணைந்திருப்பர். ஒரு புதிய தலைமுறைக்குழந்தைகள் அவர்களுக்கென அமைக்கப்பெற்றிருக்கும் புதிய குந்தாவினை ரசிக்கத்தொடங்கியிருக்கும்.
இவ்வளவு வருடங்களுக்கு பிறகு ஃபேஸ்புக் (face book) வழியாக என் பழைய பள்ளி நண்பன் ஒருவனை கண்டறிந்தேன். காசோலை என்னும் பகுதியில் வசிப்பவன். மேலாண்மையில் முதுகலை முடித்திருந்தாலும் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறான். கேட்டபோது சொன்னான். ’ஊரை விட்டு வர முடியலடா’.
இவ்வளவு பிடிவாதத்தோடு என்னால் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் என்னைச்சுற்றிப் படர்ந்தது.
நான் பிறந்தது தஞ்சாவூரில். என் கல்லூரிப்படிப்பும் தஞ்சையிலேயெ நிகழ்ந்தது. ஆனால் நான் ஒருபோதும் எனது சொந்த ஊர் எது என்று கேட்கப்படும்போதெல்லாம் குந்தாவையே குறிப்பிடுவது வழக்கம். என் வாழ்வில் எல்லா சந்தோஷமான நிமிடங்களையும் அது தன்னகத்தே கொண்டிருந்தது. ஏன்? கொண்டிருக்கிறது. அது என் சந்தோஷ நினைவுகளிடையே பொதிந்து போய் பின் தொலைந்துபோய்விட்ட என் பள்ளித்தோழியென என்னை ஏங்கவிட்டுக்கொண்டேயிருக்கும். ஆனால் அந்த ஏக்கம் தரும் ஆனந்தத்தை எந்த இலக்கியமும் விவரிக்க முடியாது.
நான் பிறந்தது COIMBATORE. . ஆனால் நான் ஒருபோதும் எனது சொந்த ஊர் எது என்று கேட்கப்படும்போதெல்லாம் குந்தாவையே குறிப்பிடுவது வழக்கம். KUNDAH IS MY CHILDHOOD PLACE. I SPENT MY SCHOOL DAYS IN KUNDAH.LIVED IN LOWER CAMP DURING 1970-79.studied in manjoor hss. we cant get that kundah life again.memorable place . recently visited last year .so many changes.a wonderful location .
hai salim, i saw this comment after years. thanks for logging in and commented. Yes i am also planning this yearend.
//என்னைப்பொறுத்த வரையில் நான் எப்போது காட்டேரியைக் கடக்கிறேனோ அப்போதுதான் அந்த இளவரசி என்னை உளமாற தழுவிக்கொள்வாள். பேருந்து மிக மிக மெதுவாக மலை ஏறும்போது அது வெளிப்படுத்தும் ஓசையும் அதற்கேற்றாற்போல மெல்ல வானத்திலிருந்து இறங்கி வரும் மெல்லிய மூடுபனியும் உங்களின் இதயங்களில் புதிய கவிதைகளை எழுதிக்கொண்டேயிருக்கும்.// ஒவ்வொரு தடவையும் மஞ்சூருக்கு போகும் போதும் எனக்கு இதே உணர்வு ஏற்படும். அதுவுமல்லாது காட்டேரியை தாண்டியவுடன் நான் தான் ராஜா என்ற எண்ணம் ஏற்பட்டு விடும்.
இன்னும் குந்தாவோ மஞ்சூரோ பெரிய அளவில் மாற்றம் அடையவில்லை. ஒரு சில வீடுகள் சேர்ந்திருக்கின்றன என்பதை தவிர. போன மாதம் கூட போயிருந்தேன்.