BABEL

‘பேபல் திரைப்படத்தின் டிவிடி என்னிடம் இருக்கிறது. இருக்கிறது’, என்கிற பிரயோகம் இருந்தது என்று ஆகிப்போகும் அளவிற்கு அதன் தேய்மானம் குறைந்துகொண்டே போகின்றது. என் மனதுக்கு மிக நெருக்கமான திரைப்படங்களில் பேபல் ஒரு முக்கியமான இடம் வகிக்கிறது. அதனைப்பற்றி எழுதும் அளவிற்கு என்னிடம் திறமை இல்லை என்பதை அறிவேன் ஆயினும் ஆர்வமெனும் பெருநெருப்பினை அணைக்கும் ஒரு சிறுநீர்த்துளியாகவே இதனை எண்ணிக்கொள்வேன்.

பைபிள் கதை ஒன்று உண்டாம். மொழிகளும், இனங்களும் பிறவாத காலத்தில் நிகழ்ந்த கதை அது, அகந்தையின் காரணமாக கடவுளுக்கே சவால் விடும் வண்ணம் விண்ணை முட்டி சொர்கத்தை அடையும் விதமாக கோபுரம் ஒன்றினை எழுப்ப முடிவு செய்கிறது மனிதகுலம். அதுதான் Tower of Babel . [Tower of Babel (Genesis 11:1-9)]. கோபம் கொண்ட கடவுள் மனித குலத்தினை பிரிக்கும் வண்ணமாய் வெவ்வேறு மொழிகளையும் இனங்களையும் உருவாக்கி உலகெங்கிலும் மனிதனை பல்வேறு இடங்களில் பரவ செய்வதாக சொல்கிறது அந்த கதை. ஆக மனிதனின் தவறு, கடவுளின் கோபம்தான் உலகமயமாக்கலின் முதல் வித்து என இந்த பைபிள் கதை நமக்கு உணர்த்துகிறது.

அதே போலதான் இந்த கதையில் ஒரு அமெரிக்க துப்பாக்கி, ஜப்பானிய பயணியின் வாயிலாக ஒரு மொரோக்கோ விவசாயிக்கு விற்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களில் உலகமெங்கிலும் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் நான்கு குடும்பங்கள் உருக்குலைகின்றன.

கேயாஸ் தியரியினை அடிப்படைப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட மிகச்சிறந்த திரைக்கதை பார்வையாளனை எங்கெங்கோ நிகழும் நான்கு வித்தியாசமான சம்பவங்களின் கோர்வை ஒரு மையப்புள்ளியினை சுற்றி சுழல்கிறது. நான்கு பிரிவுகளாக தொடங்கும் திரைக்கதை நான்கு பிரிவுகளையும் ஒட்டவைத்து அர்த்தம் புரிந்துகொள்ளும் வேலையை பார்வையாளனிடமே விட்டுவிட்டு தன் போக்கிற்கு நகர்கிறது. மொரொக்காவில் பெயர் தெரியாத ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்தில் – சொல்லப்போனால் அது கிராமமே இல்லை. மலை மேலுள்ள தனியான ஒரு வீடு 5 உறுப்பினர்களைக்கொண்ட ஒரே ஒரு வீடு அவ்வளவுதான். அந்த வீட்டில் 500 திர்ஹாம்களும் ஒரு ஆடும் கொடுத்து ஆடுகளைக்கொல்லும் ஒநாய்களை வேட்டையாடுவதற்காக ஒரு துப்பாக்கி விற்பனையில் துவங்குகிறது திரைப்படம். தனது சகோதரி குளிக்கும்போது துவாரம் வழி பார்க்கிற, வெயில் சுட்டெரிக்கும் மதியத்தில் சுயமைதுனம் செய்கிற, முதன் முறையிலேயே துப்பாக்கியால் இலக்கினை மிகச்சரியாக குறிபார்த்து சுடுகிற என வித்தியாசமான நடவடிக்கைகள் கொண்ட இளைய சகோதரன் யூசுப். அவன் செயல்களின் பால் பொறாமை கொண்டு அவனை கண்டிக்கிற மூத்த சகோதரன் அப்துல்லா. இவர்களின் துப்பாக்கியை கொடுத்து ஓநாய்களைக்கொல்லும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வேலைக்கு செல்கிறார் தந்தை. 3 கிலோமீட்டர்கள் பாய்ந்துசென்றும் தாக்கும் வல்லமை உள்ள துப்பாக்கி என்பதில் மூத்த சகோதரனுக்கு சந்தேகம். இளையவனுக்கோ மூத்தவனுக்கு சுடத்தெரியவில்லை என்ற எண்ணத்தில் அதனை பரிட்சித்துப்பார்க்க தொலைவில் வரும் ஒரு பேருந்தை நோக்கி சுடுகிறான். முதலில் எந்த மாற்றமும் தெரியாமல் வந்துகொண்டிருந்த பேருந்து சில நொடிகள் தாமதித்து சில பதற்றக்குரல்களுடன் நிற்கிறது. விபரீதம் உணர்ந்து அந்த இடத்திலிருந்து ஓடத்தொடங்குகின்றனர்.

அமெரிக்காவின் பெயர் சொல்லப்படாத மாகாணம். இரண்டு சிறு குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கின்றனர் தங்களது இல்லத்தில். அவர்களின் பெற்றோர்கள் அந்த இல்லத்தில் இல்லை. அந்த குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பினை ஏற்றிருக்கும் பணிப்பெண் அவர்களுக்கு கதை சொல்லி தூங்கவைக்கிறார். அந்த குழந்தைகளின் தந்தை தொலைபேசி நலன் விசாரிக்கிறார். அவர் மனைவிக்கு ஏதோ பிரச்சனை என்று அவர்களின் உரையாடலிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. பணிப்பெண் அவரை கவலையில்லாது இருக்குமாறும் தான் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்து விட்டு, தனது மகனின் திருமணத்திற்கென ஒரு நாள் விடுமுறையும் கேட்கிறாள். அதனை நிதர்சனமாக மறுத்துவிடுகிற அந்த குடும்பத் தலைவர் குழந்தகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி பணிக்கிறார்.

இரண்டு தம்பதிகள். மொரக்கோ பாலைவனத்தில் உல்லாசப்பயணம் மேற்கொண்டுள்ள குழுவில் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது மணவாழ்க்கை அமைதியாக இல்லை எனவும், அவர்கள் இரண்டு பேரிடையே சொல்லவொணாத்துயரம் ஒன்று குடிகொண்டுள்ளதையும் அவர்களின் பேச்சினூடாக உணர முடிகின்றது. அமைதியில்லாத அவர்கள்து மண வாழ்க்கையில் அமைதி துளிர்விடவே அந்த கணவன் அந்த உல்லாசப்பயணத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதையும் அறிகிறோம். மிகவும் பாதுகாப்பின்மையை உணரும் அவனது மனைவியோ அமைதியில்லாது தவித்துக்கொண்டிருக்கிறாள். பிரயாணத்தினிடையே எங்கிருந்தோ சாளரம் வழியே பாய்ந்து வந்த குண்டொன்று அவள் தோளினை தைக்க ரத்த வெள்ளத்தில் மிதக்கிறாள். செய்வதறியாது தவிக்கிறான் கணவன்.

ஜப்பான். டோக்கியோ நகரம். வாய்பேசமுடியாத,காதுகேளாத பெண்ணொருத்தி. தனது தந்தை மீதும், தன்னை புறக்கணிக்கும் சமூகத்தின் மீதும் கோபம் கொண்டு நிகழ்த்தும் சில செய்கைகளைக் காண்கிறோம். அதுவும் அவளின் பாலுணர்வுக்கு தீனி போடும் செய்கைகள். உள்ளாடை அணியாமல் பொதுவிடங்களின் அலைவதும், பரிசோதனைக்கு சென்ற இடத்தில் ஒரு பல் மருத்துவனை படுக்கைக்கு அழைப்பதுமாய். அவள் அம்மா தற்கொலை செய்துகொண்டது அவளை மன ரீதியாக பெரிதும் பாதித்திருக்கிறது என்பதனை தொடர்ந்து வரும் காட்சிகளில் உணர்ந்துகொள்கிறோம்.

இவ்விதமாய் தொடங்குகிற நான்கு விதமான பார்வைகளுடன் தொடர்கிறது திரைப்படம். மொராக்கோ சகோதரர்கள் எதேச்சையாக செய்யும் தவறு அவர்கள் குடும்பம் உட்பட மொத்தம் நான்கு குடும்பங்களின் வீழ்ச்சிக்கு எவ்வாறு காரணமாகிறது என்பதுதான் ஒன்லைனர்.

கோர்வையற்ற காட்சிகள் (Non-linerar narration) தான் என்றாலும் மைய முடிச்சை நழுவ விடாத திரைக்கதை விதிகள்தான் இந்த திரைக்கதையின் சிறப்பம்சம்.இதில் நடித்திருக்கும் நடிகர்களைப்பற்றி கூற வேண்டும். அனைவருமே சிறப்பான தேர்வுகள்தான் என்றாலும் என் மனதுக்கு ஒத்த பாத்திரங்களாத மொராக்கோ இளைய சகோதரனும், ஜப்பானிய காதுகேளாத,பேசமுடியாத பெண்ணும்தான். மிக அரிய சிறந்த performance அவர்களுடையது. அவர்கள் நடித்திருக்கும் வேறு பாத்திரங்களையும் பார்க்க பெறும் ஆவல் கொண்டிருக்கிறேன். இத்திரைப்படத்தில் பிராட் பிட் நடித்திருக்கிறார்- சிறப்பாக என்றாலும் அவரையும் தாண்டிய திரைக்கதை, அவர் நடிப்பையும் விஞ்சுகிற மற்ற கதாபாத்திரங்களின் அழகியல் போன்றவை இதனை Brad Pitt திரைப்படம் என்கிற வாதத்திலிருந்து சற்றே நகர்ந்துதான் நிற்க வேண்டியிருக்கிறது.

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத திரைப்படம் babel எனக்கு. ஒருமுறையேனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைக்கதை அனைவருக்குமே.!

Direction : Alejandro González Iñárritu
Starring : Brad Pitt, Cate Blanchett, Gael Garcia Bernal, Koji Yakusho and Adriana Barraza

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s