ஒரு நாவலை முழுமையாக ரசிக்க முடிவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் content, சில எழுத்தாளர்களின் மொழிநடை, கதைகளில் களன், கதாநாயகர்களின் பிரமிக்கத்தக்க செய்கைகள் என இந்த பட்டியல் நீளும். இவற்றில் முக்கியமான ஒன்று நாவலில் நம்மையே நாம் பார்த்துக்கொள்ளும் தருணங்கள்தான். மூன்றுவிரல் நாவலில் அது சாத்தியமாயிற்று.
நானும் இங்கிலாந்தில் இருட்டிக்கொண்டு வரும் பனிபெய்யும் மாலையில் கிளையண்ட் சப்போர்ட்டிங்கிற்காக வயிற்றில் பந்துகள் உருள காத்துக்கொண்டிருந்திருக்கின்றேன், பத்து வியாபாரங்களோடு ஒன்றாக கணினி வழங்கலை வைத்துக்கொண்டிருந்த நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறேன், மளிகைக்கடை போல வாய்யா, போய்யா போட்டு பேசும் மேலாளரின் கீழே பணிபுரிந்திருக்கிறேன், வேலை நிகழ்தலின் அவசியங்களை புறம் தள்ளிவிட்டு வார இறுதிகள் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும் பெண் மேலதிகாரிகளை மனதிற்குள் சபித்திருக்கிறேன். இன்னும் இரண்டு காதல்களில் அலைபாய்தல்கள், சைவ உணவின்றி வாழப்பழகுதல்கள் என சுதர்சனுக்கும் சுய வாழ்விற்கும் இடையே இருந்த நெருக்கம்தான் எனக்கு மூன்று விரல் நாவலில் எனக்கு பிடித்த அம்சங்கள்.
நாவல்:
கீழாம்பூர் ரங்கநாதன் சுதர்சன் என்கிற சுதா லண்டனில் ஒரு நாய் விற்போர் சங்கத்திற்கான மென்பொருளை customization செய்து விற்பனை செய்ய வந்திருக்குக்கும் நிபுணன். வழக்கமான இந்திய மென்பொருளாளர்கள் ஐரோப்பிய தேசங்களில் சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகளை சந்தித்த வண்ணம் நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கையில் தொழில் நிமித்தமாக , சந்தியா என்ற பெண்ணை சந்திக்கிறான். அவள் மீது காதல் கொள்கிறான். பொறுப்பில்லாத அம்மா, அவளது இரண்டாவது கணவனின் வக்கிரம், போதிய ஆறுதல் கிடைக்காத தனிமை ஆகிய காரணிகள் முன்வைத்து அவளும் சுதர்சனை காதலிக்கத்தொடங்குகிறாள்.
வந்தவேலை முடிந்து காசோலையும் கையுமாக இந்தியா திரும்பும் வேளையில் அவனது நிறுவனம் இன்னொருவரிடம் கைமாறுவதையும் புதிய மேலாண்மை ஆட்குறைப்பு செய்யும் செய்தியும் வருகின்றன. சற்றே கனத்த மனத்துடன் விமானம் ஏறும் சுதர்சனுக்கு விமானத்தில் அவதார்சிங் என்கிற புதிய தொழிலதிபர் வாயிலாக புதிய வேலை கிடைக்கிறது. மகிழ்வுடன் மாயூரத்திற்கு அருகில் இருக்கும் சொந்த கிராமத்திற்கு செல்கிறான். பொறுப்பான, அமைதியான பெற்றோர்கள், அவனுக்கு சொந்தத்தில் பெண் பார்த்து நிச்சயித்து வைத்திருக்கின்றனர்.
அலர்மேலுவுக்கு சுதர்சனின் மீது ஆசை பொங்கி வழிகின்றது. உதட்டு முத்தம் வழங்குமளவுக்கு நெருக்கம் வாய்க்கும் தருணங்களில் சுதர்சனுக்கு லேசாக அவள்பால் பாசம் வருகிறது. இல்லம் சார்ந்த environment பற்றிய சுதாவின் கவலைகளுக்கு அலர்மேலு ஒரு சிறந்த வடிகால் என்று எண்ணுகிறான். ஆனால் சந்தியாவின் நினைவுகள் அவனை ஒருசேர மிரட்டவும்,பயம் கொள்ளவும் செய்கின்றன.சந்தியா பற்றி எதுவும் சொல்லாமலே புதிய நிறுவன வேலைகளுக்காக தாய்லாந்துக்கு பயணிக்கிறான்.
இந்தியாவிலிருந்து புதியதாக ஆட்களை தனது team ல் சேர்த்துக்கொள்கிறான். கண்ணாத்தா என்கிற பெண்ணையும் தேர்வு செய்கிறான். இருவருக்கும் இடையில் லேசான நட்பும் பூக்கிறது. வேலைகளும், வேலைகள் சார்ந்த பிரச்சனைகளும், இரு காதல் சார்ந்த அலைக்கழித்தல்களும், இல்லத்தில் சுதாவின் தந்தைக்கு சொத்து விவகாரங்களின் காரணமாக ஏற்படும் சட்ட சிக்கல்களும், deadline ம் சுதர்சனை பெரும் அயர்ச்சிக்குள்ளாக்குகின்றன. அலர்மேலு தொலைபேசும்போது அவளிடம் சந்தியா பற்றி கூறிவிடுகிறான். பெரும் அதிர்ச்சிக்குள்ளாகும் அவள் அதனை சற்று காலம் பொறுத்து நிதானமாக்கிக்கொண்டு அமெரிக்காவில் வாழ்க்கைப்பட்டு செல்கிறாள்.
ஓரளவுக்கு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்ட நிலையில் இருப்பதாக இருக்கும் சுதர்சனுக்கு இடிபோல் காத்திருக்கின்றன இரண்டு பெரிய சோகசெய்திகள், அவனை ஒட்டுமொத்தமாக செயலிழக்கச்செய்யும் அணுகுண்டுகள். அதனை சுதா எப்படி எதிர்கொண்டான் என்பதனை கதையின் முடிவு சொல்கிறது.
என் குறிப்புகள்
நாவலுக்கு பெரிய பலமே இதன் மொழிநடையும் நகைச்சுவை இழையோடும் வார்த்தைகளும்தான். மென்பொருளாளர்களை அடிப்படையாக கொண்டு வரும் நாவல் என்று சொன்னாலும், சாதாரண வாசகனை குழப்பும் மென்பொருள் குழப்பங்கள் எதுவும் இல்லை. அவை இடம்பெற்றிருக்கும் சிற்சில இடங்களையும் வெகு சாதாரணமாக கடந்து போகலாம். பாதகம் எதுவும் இல்லை. ஒவ்வொரு படைப்புக்குமே பொருத்தமான தலைப்புகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று எப்போதுமே நினைப்பேன். அது வெகு சாதாரண கதைக்கும் சற்று extra weightage கொடுக்கிறது என்பது எனது தனிப்பட்ட கருத்து.(உ.ம். பச்சைக்கிளி முத்துச்சரம்).
ஆனால் “மூன்றுவிரல்“ என்கிற கணிப்பொறியிலாளர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு செய்கையை அவர்களின் வாழ்க்கையோடு பிணைத்து புனையப்பட்டிருப்பது மிகவும் சிறப்பு. எனக்கு முடிவு பிடிக்கவில்லை. ஆனால் நாவலின் தலைப்புக்கு ஏற்ற முடிவு வேண்டும் என்பதாலேயே அது வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் எனக்கு புரிகிறது. நிச்சயம் படிக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் படிக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவம் காத்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
நாவல் : மூன்றுவிரல்
ஆசிரியர் : இரா.முருகன்
பதிப்பகம் : கிழக்கு
நான் படித்திருக்கிறேன். நல்ல ஒரு நாவல். அந்தத் துறையிலேயே இருப்பதால் இயல்பாக வந்திருக்கின்றன பல விஷயங்கள்.
ஆமாம் சேவியர். நிறைந்த வாசிப்பனுபவம். நன்றி.:)
நல்ல விமர்சனம். சாப்ட்வேர் பீல்ட்+லண்டன் காம்போல சினிமா, புக் இருக்கான்னு தேடுனேன். அப்போ கிடைச்சுச்சு இந்தெ போஸ்டு. 45 நாள் தேவுடு காத்து கப்பல்ல வாங்கினேன். பிரமாதமா படிச்சேன்.
//நானும் இங்கிலாந்தில் இருட்டிக்கொண்டு வரும் பனிபெய்யும் மாலையில் கிளையண்ட் சப்போர்ட்டிங்கிற்காக வயிற்றில் பந்துகள் உருள காத்துக்கொண்டிருந்திருக்கின்றேன், பத்து வியாபாரங்களோடு ஒன்றாக கணினி வழங்கலை வைத்துக்கொண்டிருந்த நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறேன், மளிகைக்கடை போல வாய்யா, போய்யா போட்டு பேசும் மேலாளரின் கீழே பணிபுரிந்திருக்கிறேன், வேலை நிகழ்தலின் அவசியங்களை புறம் தள்ளிவிட்டு வார இறுதிகள் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும் பெண் மேலதிகாரிகளை மனதிற்குள் சபித்திருக்கிறேன்.//
எப்படி சொல்லிருக்கீங்க. ஆச்சர்யமா இது எல்லாமும் எனக்கும் நடக்குது 🙂 😦
தனிம மாதிரி கொடும இல்லங்க, அதுவும் முழு நேரமும் பனி ஊத்துற இந்த ஊர்ல தனியாருக்குற மாதிரி வேற பனிஷ்மெண்ட் எதுவுமேல்ல. 😦
இந்த புக் கொடுத்த உற்சாகத்தை மறக்கவே மாட்டேன். இண்ட்ரொடுயூஸ் உங்களையும். நன்றி.
நன்றி நாராயண். இந்த blog இருக்குறதயே மறந்துட்டேன். 🙂 சில வருஷங்களுக்கு முன்னாடி இதுல எதை எதையோ கிறுக்கிட்ருந்தேன். இப்போ அதை விட்டுட்டேன்.
இந்த நாவலை கிட்டத்தட்ட உங்க சூழல்ல மாட்டிட்டு இருக்கும்போதுதான் படிச்சு முடிச்சேன். இன்னைக்கு வரைக்கும் மனசுக்கு நெருக்கமான நாவல்கள்ள, இந்த புத்தகத்தும் ஒரு முக்கியமான இடம் உண்டு. நிறைய படிங்க, அது உங்க தனிமையை கண்டிப்பா விரட்டியடிக்கும். வாழ்த்துகள்.