கடிகை

வரலாற்றில் நாயகர்களின் கதைகளை கேட்கும் ஆர்வங்கள் போலவே வில்லன்களையும்  அவர்களின் negative energy வளர்ந்த விதங்களையும், அவர்களிடம் இருக்கும் ஆதர்ச மற்றும் ஆக்கபூர்வ குணாதிசயங்களை அறிந்து கொள்வதிலும் நமக்கு மிகப்பெரும் ஆர்வம் அல்லது inquisity இருந்துகொண்டேதான் இருக்கிறது. (ஆட்டோசங்கர் சீரியல்,  சதாம் ஹுசைன் புத்த்கம், ஹிட்லரின் கதாபாத்திரம் etc..)

பாலகுமாரன் அவர்களின் கடிகை (கடிகை என்றால் கல்லூரி என்பது நேரடிப்பொருள் – இந்த புத்தகத்தை பொருத்த வரை போர்பயிற்சி கல்லூரி) என்ற இந்த புத்தகம் தமிழ் மரபு சார்ந்த மன்னர் வரலாற்றில் முதல் ராஜ துரோகத்தை நிறைவேற்றியவர்களான ரவிதாசன், பரமேஸ்வரன் என்கிற சேரதேசத்து அந்தணர்களின் வாழ்க்கை முறையையும் வரலாற்றையும் அடியொட்டியது. பெருமைமிக்க – எல்லா பேரரசர்களாலும் போற்றப்பட்ட காந்தளூர்ச்சாலை கடிகை என்ற புகழ்மிக்க போர் பயிற்சி கல்லூரியில் பயிற்சிபெற்ற அவர்களின் அரசியல், கடிகையின் உபாத்யாயர்களினூடே நிகழ்ந்த ஆதிக்க சிந்தனை போட்டி, வீரபாண்டியனை ஆதரித்தது, ஆதித்த கரிகாலனுக்கு எதிராக அவர்கள் செய்த சதி என மிக விரிவான பார்வையுடன் விளக்குகிறது.

கதை நடக்கும் காலம் சோழ தேசத்தினை சுந்தர சோழரும் பாண்டிய தேசத்தை வீரபாண்டியனும் ஆண்டு கொண்டிருந்த காலத்திலிருந்து தொடங்குகிறது. (9 வது நூற்றாண்டு – 950-970 CE).

காந்தளூர்சாலை கடிகை என்பது சேர,சோழ, பாண்டிய மன்னர்களிடையே புகழ்வாய்ந்த போர்முறைகளை, ஆயுதங்கள் பயிற்சியினை மற்றும் இன்னபிற தந்திரங்களை பயிற்றுவிக்கும் கல்லூரி போல திகழ்ந்து வந்தது. அரச பரம்பரையில் வந்த பல்வேறு வாரிசுகளும் இங்கே தங்கி கல்வி கற்று திரும்புவது பெரும் பெருமைக்கும், பின்னாளில் அவர்களின் வளமைக்கும் ஏதுவாயிருந்திருக்கிறது.

இந்தக் கடிகையின் தலைமை உபாத்யாயரான கிருதபலி தனது பதவியினை துஷ்பிரயோகம் செய்வதாக கூறி மற்றும் ஒரு தலைமை உபாத்யாயரான “பானுகோபர்” தனக்கு வேண்டியவர்களுடனும், மாணவர்களுடனும் கோட்டைவாசல் என்கிற தனி ஜாகைக்கு குடி பெயர்வதுடன் தொடங்குகிறது கதை.

மிகவும் வலிவும், போர்த்திறங்களும், வித்தைகளும், தலைமைப்பண்பும் கூடிய பானுகோபரின் வளர்ச்சி தன் பதவிக்கு ஆபத்து விளைவிக்கும் என்று எண்ணி கிருதபலி பானுகோபரையும் அவர்களின் கூட்டத்தையும் அழிக்க திட்டமிடுகிறார். பிரசன்னம் மூலமாக இதனை அறிந்து கொண்ட பானுகோபரின் குழாம் தங்களின் இருப்பிடத்தை காலி செய்துகொண்டு பாண்டிய தேசத்திற்கு நகர்ந்து விடுகிறார்கள்.

கடிகையில் மூத்த மாணாக்கர்களும், பானுகோபரின் அன்பிற்கு பாத்திரமானவர்களுமாகிய ரவிதாஸன், பரமேஸ்வரன் என்கிற இரு சகோதரர்கள் தங்களின் தேசாடானம் முடிந்து திரும்பும் வழியில் அவர்களுடன் இணைந்து கொள்கின்றனர். பாண்டிய தேசத்தில் தங்களது திறமைகளை தக்க முறையில் வெளிப்படுத்தினால் தங்களது இருப்பு பலமாக அங்கீகரிப்படும் என்பதை உணர்ந்து வைத்தியம், ஜோதிடம், பிரசன்னம், போர் முறைகள், பயிற்சிகள் என பல்வேறு விதங்களில் வீரபாண்டியனையும் அவன் சபையையும் கவர்கின்றனர்.

வீரத்தில் சிறந்தவனாக இருந்தாலும் படபடப்பாகவும், மக்களையும், வீரர்களையும் வழிநடத்த தெரியாமலும் இருக்கும் வீரபாண்டியனை – தங்களை வாழ்வித்த பாண்டிய தேசத்தை நல்வழியில் காப்பது என்று முடிவு செய்கின்றனர். சோழ தேசத்தினை வெல்ல வேண்டும் என்கிற வீரபாண்டியனின் கனவினை நனவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பானுகோபரும், ரவிதாஸனும், பரமேஸ்வரனும் ஒரு சிறு கூட்டத்தினருடன் சென்று திருசீரகம் (திருச்சி), நாகை பெளத்தவிகாரம் ஆகிய இடங்களில் பெரும் கொள்ளை அடித்து திரும்புகின்றனர். இது வீரபாண்டியனின் மனதை குளிர்விக்க பானுகோபரை தலைமை உபாத்யாயராக நியமிக்கிறான்.

கொள்ளை விபரங்கள் அறிந்து கோபம் கொள்ளும் ஆதித்த கரிகாலன் 3 லட்சம் பேர் கொண்ட பெரும் படையுடன் பாண்டிய தேசத்தினை அழிக்கத்தொடங்குகிறான். முதலில் வீரத்தோடு போரிட்ட வீரபாண்டியன் சோழர்களின் படைபலத்தினைப்பார்த்து பயந்து சேவூர் காடுகளுக்குள் ஓடி ஒளிகிறான். மன்னன் ஓடிவிட்டான் என்று தெரிந்ததும் படை வீரர்களின் தன்னம்பிக்கை அறவே குறைய சோழம் எளிதாக மதுரையை தன் வசப்படுத்தியது.

ஓடி ஒளிந்த பாண்டியனின் செய்கை பானுகோபரையும் சோர்வடையச் செய்ய அவர் தனது குடிகளை சோழதேசம் உடையார்குடிக்கு தப்பித்துச் செல்ல ஆலோசனை சொல்கிறார். ரவிதாசனும், பரமேஸ்வரனும் ஓளியப்போன பாண்டியனைத்தேடி செல்கின்றனர். விஷ அம்பு ஒன்று பட்டதால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வீரபாண்டியனை தேடி வரும் ஆதித்த கரிகாலன் அவன் தலையை கொய்து கொண்டு போய் தஞ்சை கோட்டையின் வாசலில் வேல் கம்பில் நட்டு வைக்கிறான். பாண்டியனை காக்க முடியாத பரமேஸ்வரனும், ரவிதாஸனும் ஆதித்த கரிகாலனை கொல்வதாக சபதம் செய்கின்றனர்.

உடையார்குடியில் (காட்டுமன்னார்குடி ) வடதேசத்திலிருந்து வந்திருக்கும் அந்தணர்களென வேடம் பூண்டு உத்தமசோழனைக் கரைக்கின்றனர். சுந்தரசோழருக்கு பிறகு ஆட்சிப்பீடத்தை அவனுக்கு வழங்குவதாகவும், தங்களுக்கு மந்திரிபதவிகள் வேண்டும் என்றும் பேரம் பேசுகின்றனர்.
பதவி ஆசையில் இருக்கும் உத்தமசோழனும் அதற்கு சம்மதிக்க, அவர்களின் தெளிவான திட்டப்படி கடம்பூர் அரண்மனையில் ஆதித்த கரிகாலனை கொல்கின்றனர்.

அவர்களது திட்டப்படியே சோழஅரசில் பிரம்மராயர்களாக பதவி வகிக்கின்றனர். பெரும் பிரயத்தனங்களுக்கு பிறகு தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர். தனது கலைகளை கடல் கடந்து பயிற்றுவிக்க ஆசைகொண்டு கடாரம் (மலேசியா) நோக்கி நகர்கிறார் பானுகோபர்.

புத்தகத்தில் எனக்கு பிடித்த தகவல்கள் , சுவாரசியங்கள்

*  தனது வசியமான எழுத்து நடை மற்றும் பிரமிக்கத்தக்க வரலாற்றுச்செய்திகளின் வாயிலாக மிக சிறப்பானதொரு நூலாக இதனை படைத்திருக்கிறார் பாலகுமாரன்.

* சேரர், சோழர், பாண்டியர்களின் வாழ்க்கை முறையையும், உணவு, பழக்க வழக்கங்களையும் மிக உன்னிப்பாக கவனித்து பதிவு செய்திருக்கிறார்.

* பொன்னியின் செல்வனில் மிக சிறிய கதாபாத்திரங்களாக வந்த ரவிதாஸன், பரமேஸ்வரனின் பூர்வாஸ்ரமங்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

* சேரதேசத்தில் தானியங்களை உண்பதை விரும்பாத அந்தணர்களுக்கு சோழ தேசத்தில் இட்டிலி சாப்பிடுகிறார்கள் என்ற செய்தி ஆச்சர்யத்தை அளிப்பது.

* நம்பியாண்டார் நம்பிக்கு தேவார திருவாசகங்களை கொடுக்க மறுக்கும் அந்தணர்களின் வரலாற்றினை கதையோடு இணைத்திருப்பது

* ராஜராஜசோழன், குந்தவை போன்றோரை அவர்களின் பாத்திரப்படைப்புகளை சிதைக்காமல், அதே நேரம் அவர்களின் பங்களிப்புகளையும் ஒதுக்காமல் மிக நளினமாக செதுக்கியிருப்பது

* பிரசன்னம், ஜோதிடம் போன்றவை அந்தணர்களின் வாழ்வோடு ஒன்றியிருந்த விஷயங்களாகவும் அவை 100% நம்பிக்கைக்கு உரியதாக இருந்திருப்பதும்…

இன்னும் நிறைய சுவாரசியமான வரலாற்று உண்மைகளும் பொதிந்திருக்கின்றன. என்னைப்பொறுத்த வரை மிகவும் முக்கியமான நாவலாக நான் கடிகையை கருதுகிறேன்.

புத்தகம் : கடிகை
ஆசிரியர் : பாலகுமாரன்
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
விலை : INR 58.

இணையத்தில் வாங்க இங்கே சொடுக்கவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s