பொன்னியின் செல்வன் புதினத்தை திரைப்படமாக எடுப்பது என்பது எல்லா இயக்குனர்களுக்குமே இருக்கும் முக்கியமான கனவுகளுள் ஒன்று. கமலஹாசன் இதனை வெளிப்படையாகவே தெரிவித்தாலும் அவரது ஆரம்பிக்கப்பட்டு hold செய்யப்பட்டிருக்கும் மருதநாயகம் அனுபவங்களே அவரை இப்போதெல்லாம் பொன்னியின் செல்வன் குறித்து பேசவிடாமல் செய்து விட்டது என எண்ணுகிறேன். மணிரத்னமும் மூன்று மணி நேரத்திற்குள் அடங்குகிற திரைக்கதையாக பொன்னியின் செல்வனை எழுதி வைத்திருப்பதாக சுஜாதா ஒரு பேட்டியின்போது தெரிவித்திருக்கிறார்.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க இந்த புதினத்தினை தொலைக்காட்சித்தொடராகவும் எடுக்க சென்ற வருடமே சில நிறுவனங்கள் முயன்றன. சன் டிவிக்கு ஒன்று, ஜெயா டிவிக்கு ஒன்று என இரண்டு தயாரிப்புகள் ஆரம்பித்த வேதனையான நகைச்சுவையும் நிகழ்ந்தது. அவையெல்லாம் நகைச்சுவைகள்தான் என்றாலும், அப்படிப்பட்ட சிறந்த புதினம் திறமை மிக்கவர்களின் கையில் படாமல் எடுப்பார் கையில் பட்டு output சிறப்பாக அமையவேண்டுமே என்று பெரும் கவலைகளாகவும் இருந்தது. நல்ல வேளையாக ஆரம்பிக்கப்பட்ட அந்த திட்டங்கள் முழு வடிவம் பெறாமலே இருக்கின்றன.
இப்போது இது தொடர்பான நல்ல செய்தி ஒன்றும் வந்திருக்கிறது. அது, பொன்னியின் செல்வனை பிரபல திரைப்பட நிறுவனமான NIC ஆர்ட்ஸ் தயாரிக்க சின்னத்திரையின் சிறப்பான இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் நாகா அவர்கள் இயக்குவதற்கான ஒப்பந்தம் சில நாட்களுக்கு முன்பு போடப்பட்டிருக்கிறது. இந்த தொலைக்காட்சித்தொடரில் பயிற்றுவிக்கப்ப்ட்ட புதிய முகங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
படிக்கும்போது வெகு சுமாராக இருந்த ரகசியம் பரம ரகசியம், விட்டு விடு கருப்பா போன்ற நாவல்களையே தனது தேர்ந்த teleplay காரணமாக மிக சிறப்பான தொலைக்காட்சித்தொடர்களாக உருவாக்கியவர் ஆதலின் பொன்னியின் செல்வனையும் திறம்பட கையாளுவார் என நம்பலாம்.
நல்ல செய்திதானே!