1. கவிஞர் சங்கரராமசுப்ரமணியன்
தனது “சிங்கத்துக்கு பல் துலக்கும் வேலை” என்கிற கவிதை மூலமாக சிற்றிதழ்களில் பிரபலமானவர். (அக்கவிதையினால் தனது வேலையை இழந்தார் என்றும் சொல்ல கேள்விப்பட்டதுண்டு.) நன்கு கணினி அலுவலக ஊழியர் போல உடை அணிந்திருப்பார். கடைசியாக ராஜ் டிவியில் ஊர்வசி நடத்திய ஒரு நிகழ்ச்சியின்போது இவரின் பெயரை தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம். கவிஞர் சங்கரராமசுப்ரமணியன் அவர்களை காணவில்லை.
2. ஜே.பி.சாணக்யா
தனது ஆண்களின் படித்துறை என்ற சிறுகதைக்காக காலச்சுவடு–கதா பரிசினை வென்றவர், குமுதம் அரசுவினால் தமிழில் சிறந்த porno எழுத்தாளர் என்ற சிறப்பை பெற்றவர், எனது வீட்டின் வரைபடம், அமராவதியின் பூனை போன்ற சிறந்த சிறுகதைகளுக்கு பரிச்சியமானவர், கர்நாடக சங்கீதத்தில் பரிச்சியம் உள்ளவர், முகம் நிறைய தாடியுடன் காணப்படுபவருமாகிய எழுத்தாளர் திரு.ஜே.பி.சாணக்யா அவர்களை காணவில்லை.
3. எழுத்தாளார் விஜய் மில்டன்.
AIBI இயக்குனரோ, ஆட்டோகிராப், தீபாவளி திரைப்படங்களின் ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளரோ அல்லர். இவர் “கொலுசுகள் பேசக்கூடும்“ என்ற மிக அழகிய கதையும் இல்லாது கவிதையும் இல்லாத புத்தகத்தின் ஆசிரியர். நான் நெடுநாட்களாக போற்றிப்பாதுகாத்து வரும் அவரது ஒரே புத்தகம் அதுதான். அதற்கு பிறகு எழுத்தாளர் பரிமாணம் காணக்கிடைக்காமல் போனது. எழுத்தாளார் திரு.விஜய் மில்டன் அவர்களை காணவில்லை.
4. கவிஞர் பழனிபாரதி
ஒரு காலத்தில் வைரமுத்துவுக்கு அடுத்தவராக சொல்லப்பட்டவர், இளையராஜா திரைப்படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தவர், மழைப்பெண் என்ற அற்புதமான கவிதை தொகுப்பினை எழுதியவர் சற்றே குள்ளமான உருவம், தாடியுடனும், கண்ணாடியுடனும் எப்போதும் காணப்படுவார். பா.விஜய், முத்துகுமார், யுகபாரதி வகையறாக்கள் வந்த பிறகு காணாமல் போய்விட்டார் கவிஞர் திரு.பழனிபாரதி.
5. பேச்சாளர் நெல்லை கண்ணன்
மிக நீண்ட இலக்கிய சொற்பொழிவுகளுக்கு பெயர் போனவர். ராமன், சுக்ரீவன்,விபீஷணன் மற்றும் இன்னபிற இதிகாச கதாபாத்திரங்களை ஒருமையில் (!)விளித்து பேசும் அளவிற்கு இதிகாச / இலக்கியங்களின்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்பட்டு காணாமல் போனார். சென்ற சட்டமன்ற தேர்தலின்போது பத்திரிக்கைகளில் படம் வந்தது. வெள்ளை சட்டை, வேட்டியுடன், நெற்றியில் திருநீற்றுக்கீற்றுடனும் காணப்படுவார் இலக்கிய சொற்பொழிவாளர் திரு.நெல்லை கண்ணன்
கவிஞர் பழனிபாரதி ,பேச்சாளர் நெல்லை கண்ணன்
இவுங்க இரண்டு பேரை மட்டும்தாங்க தெரியுது…
சரவணப்பிள்ளை அவர்களே, தங்களின் மேலான வருகைக்கு நன்றி. மத்தவங்களும் பெரிய ஆளுங்கதான் அல்லது ஆகியிருக்க வேண்டியவங்க..காலத்தின் கோலம். காணாமப்போய்ட்டாங்க.
நண்பர் ஜே.பி.சாணக்யா இரண்டு வருடங்கள் எழுதாமல் இருந்தார். தற்போது மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளார். கூடிய விரைவில் அவர் கதைகளை இலக்கிய பத்திரிகைகளில் வாசிக்கலாம். தேடலுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி உமாஷக்தி. சமீபத்தில் சென்னை வருகையின்போது அவரது புதிய புத்தகம் ஒன்றையும் வாங்கினேன். அவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவரும் என்பது மகிழ்வுக்குரிய செய்தி.