தமிழில் இது வரையிலும் ஒரு சிறந்த திகில் / அமானுஷ்ய திரைப்படங்கள் (horror / evil thrillers) வரவில்லை என்று உறுதியாக நம்புபவர்கள் குழுவில் நானும் உண்டு. இப்படி சொல்பவர்கள் உதாரணம் சொல்லும்போது முதலில் கை காட்டுவது ஆல்பிரட் ஹிட்ச்சாக் (Alfred Hitchcock) திரைப்படங்கள்தான் எனபதும் திண்ணம். நானும் அவ்விதமே.
திகில் திரைப்படங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவன அரங்கம் அதிரும் இசையும், கும்மிருட்டும், கோரமான உருவங்களும் இன்னபிற செயற்கை அம்சங்களுமே. ஆனால் ஹிட்ச்சாக் கூற்றுப்படி சத்தத்தை நிறுத்திவிட்டாலும் கூட திரையில் என்ன நிகழ்கிறது என்பது பார்வையாளனுக்கு தெளிவாக புரிந்தால்தான் அதனை சிறந்த திரைப்படமாக கருத முடியும் என்கிறார். அவர் திரைப்படங்களைப் பார்க்கும்போது நமக்கு இந்த லாவகம் எளிதாக புரியும்.
தி பேர்ட்ஸ் திரைப்படம் முழுமையாக திகில் திரைப்பட வகையறாவிற்குள் வருமா என்பதே எனக்கு திரைப்படம் பார்த்து முடித்த பிறகு பெரும் சந்தேகமாகவே இருக்கிறது. ஆனால் அமானுஷ்யங்கள் உண்டு. விடை கிடைக்காத கேள்விகள் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக ஆல்பிரட் ஹிட்ச்சாக் உண்டு. வேறென்ன வேண்டும். தைரியமாக இதனை ஒரு வித்தியாசமான திகில் படம் என்ற வகையறாவிற்குள் கொண்டு வந்துவிடலாம்.சான் பிரான்ஸிஸ்கோ (san fransisco) வின் வட மேற்கே உள்ள ஒரு கடற்கரை நகரில் திடீரென்று மக்களை பறவைகள் தாக்கத்தொடங்குகின்றன என்ற மிக மிக சாதாரணமான இழைதான். ஆனால் அதனை நுண்ணிய ஆக்கவியலுடனும் மிக நேர்த்தியான திரைக்கதை வாயிலாகவும், பறவைகளையும், மனிதர்களையும் தேர்ந்த அழகியலுடன் குறியீடுகளாக இணைத்திருக்கும் விதமும் திரைப்படம் பார்க்கும் ரசிகனுக்கு வசீகரித்தின் அத்தனை பரிமாணங்களையும் உணர்த்திச் செல்வதுதான் ஹிட்ச்சாக்கின் வெற்றி என்று சொல்வேன். ஒரு பறவைநிலையத்தில் (pet shop or birds’ shop) சந்திக்கும் மெலைன் டேனியல்ஸ் மற்றும் மிட்ச் பர்னர் ஆகியோரிடையே நடைபெரும் லேசான விவாதம் நிறைந்த சந்திப்புடன் தொடங்குகிறது திரைப்படம். மிட்ச் பர்னர் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அவர் தேடி வந்த காதல் பறவைகள் (love birds) இணையினை mitch burner ன் இளைய சகோதரிக்கு ஒரு இன்ப அதிர்ச்சியுடன் கூடிய பரிசாக அளிக்க முடிவு செய்யும் டேனியல்ஸ் அவர்களின் குடும்பம் வசிக்கும் ஒரு கடற்கரை நகருக்கு செல்கிறார். அங்கே அவர்களின் குடும்பம் இவளை அரவணைத்துக்கொள்கிறது, மிட்ச் பர்னரின் – மகன் மீது கண்மூடித்தனமான பாசம் கொண்ட அம்மாவைத் தவிர. இத்துடன் மிட்சின் முன்னாள் காதலியான ஆனியின் நட்பையும் பெறுகிறார் டேனியல்ஸ்.இந்த கதாபாத்திரங்களிடையே நடைபெறும் உணர்வுப்போராட்டங்களின் பின்னணியில் திடீரென தாக்கத்துவங்கும் காரணமற்ற பறவைகளின் ஆர்ப்பாட்டத்தை வெகு நேர்த்தியாக காட்சிக்கோர்வைகளாக செதுக்கியிருக்கிறார் ஆல்fரெட் ஹிட்ச்சாக்.
படம் முழுக்க வளையவரும் பறவைகளின் ஆர்ப்பாட்டங்களை 1963 ம் வருட special effects காட்சிகள் மூலம் மிக திறமையாக இணைத்திருக்கிறார். இந்த திரைப்ப்டம் அந்த ஆண்டுக்கான சிறந்த special effects ற்கான ஆஸ்கர் விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டது.ஆனால் க்ளியோபாட்ரா அதனை தட்டி சென்று விட்டது.
கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய வித்தியாசமான திகில் திரைப்படம்.